தொ.பரமசிவன்

பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்

இக்கட்டுரையின் முதல் இரண்டு பாகங்களை கீழ்காணும் இணைப்புகளில் படிக்கலாம்.

1. ‘மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

2. பாகம் 2 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்

பண்பாட்டாய்வின் பன்முகங்களும் முழுமையான பண்பாட்டாய்வும்...

அ.திராவிடப் பண்பாடும் தமிழகப் பண்பாடும்

தொபவைப் பொறுத்தவரையில் பண்பாட்டாய்வு என்பது இனத்தின் அடிப்படையிலான ஒன்றன்று. மொழியின் அடிப்படைக்குள்ளே மட்டுமே முற்றாக அடங்கிவிடக் கூடிய ஒன்றுமன்று. எனிலவர் எதனைத் தமிழகப் பண்பாடென அடையாளப்படுத்துகின்றார்?

திராவிடக் கருத்தியலை அவர் ஏற்பது என்பதே இனஅடிப்படையிலன்று. நான்கு மாநிலத்திற்குமான பண்பாட்டின் பொதுமூலக்கூறுகளைச் சுட்டிக்காட்டியே திராவிடப்பண்பாடு என இனங்கண்டு அவர் அடையாளப்படுத்துவார்.

தொபவின் பண்பாட்டாய்வென்பது எல்லா வகையிலும்  ஒரு முழுமை சார் அணுகுமுறையை (Wholystic approach) வலியுறுத்தக் கூடியதேயாகும்.

“பண்பாடு எனபது ஒரு முழுமையான பொருள். இந்த முழுமை  சார்ந்த பார்வை இல்லாது போன காரணத்தினாலே தான் பண்பாடு பற்றிய நமது பார்வை மிகவும் பலவீனமாக இருக்கிறது.” (‘சாளரம் இக்கியமலர்’ ஜன.2008)

இத்தகு பலவீனமான பார்வையால் தான் தொப பலராலும் பிறழவே உள்வாங்கப்படலாகின்றார்.

தமிழகப்பண்பாடு என்பதனை எவ்வாறவர் எந்த அடிப்படையில் அடையாளப்படுத்துகின்றார்? தமிழ்ப்பண்பாடா தமிழகப்பண்பாடா என வினா எழுப்பும் தொப அதற்கான விடையைத் தொல்காப்பியக் கோட்பாட்டுக்கு ஊடாக வந்தடைகின்றார் :

“ஒரு பண்பாடு என்பது ஒரு மொழிக்குள்ளாகவே முற்றாக அடங்கிவிடும் என்று சொல்லமுடியாது. எனவே மொழிக்கும் பண்பாட்டிற்குமான உறவு என்பது வலிமையானது, ஆனால் முழுமையானதன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்”

கருப்பொருள் என்னும் தொல்காப்பியர் கருவின் அடிக்கூறுகளில் முதன்மையானவை நிலமும் பொழுதும் என்பது நுட்பமான பார்வையாகும் என்னும் தொப,

“நிலம் என்பது மண்மட்டுமன்று, மண்ணின் தன்மை, அதற்கேற்ற விளைபொருட்கள், பருவகாலச் சூழ்நிலைகள், உணவுவவகைகள், நீர்நிலைகள், இந்தப் பின்னணியில் உயிர்வாழ்கின்ற பறவைகள், உயிரினங்கள், இவை அனைத்தும் சேர்ந்து உருவாக்கிய தெய்வங்கள், கதைகள், வந்தேறுகுடிகள், இசைக்கருவிகள், நிகழ்த்துகலை வடிவங்கள், மக்களின் இடப்பெயர்ச்சி ஆகிய அனைத்தும் நிலம் என்ற சொல்லால் உணர்த்தப்பெறுகின்றன..” 

எனச் சுட்டிக்காட்டி, இவ்வரையறையை மனங்கொண்டே தமிழக நிலப்பரப்பின் பண்பாட்டு வரலாற்றை ஆராயப்புகவேண்டும் என வலியுறுத்துகின்றார்.

கறிக்கோழி, ஈமுக்கோழி எனவும், புரோட்டா, சப்பாத்தி, பிசா எனவும் புதுவரத்துகள்; வட்டாரவாரியான நிகழ்த்துகலை மரணம் இத்தகு மாற்றங்களுக்குப் பெரிதும் முகங்கொடுக்காத ஏதேனுமொன்று உண்டெனிலது தமிழர்தம் ‘நாட்டார் தெய்வ வழிபாடு ‘மட்டுமே என்னும் தொப நாட்டார் தெய்வப் பெயர்களே வட்டாரத்தன்மையினைப் பாதுகாத்து வருகின்ற வட்டாரத்தன்மையின் தொகுப்பையே நாம் ‘தமிழகப்பண்பாடு’ என்றழைக்கிறோம் என்கின்றார்.

இத்தொடர்பிலவர் வழிபடு தெய்வங்களை அடிப்படை அலகாகக் கொண்டு பார்ப்பதன் வாயிலாக நம்புரிதல் ஓரளவு தெளிவுபெற வாய்ப்பு உண்டெனவும்; இத்தகு முறையே தமிழகப் பண்பாட்டு வரலாற்றை எழுத முன்தேவையும்,முதல் தேவையும் அதுவேயாகும் எனவும் எடுத்துரைக்கின்றார். (‘தமிழர் கண்ணோட்டம்’ பொங்கல் விழாமலர் -2007)

ஆ. எழலாகும் வினாக்களுக்குத் தொபவிடங் காணக்கிடக்கும் விடைகள்

1.பண்பாட்டு அசைவுகள் யாவை?

“பண்பாடு என்பது ஒரு சமூகத்தினுடைய வெளிப்பாடு. ஒரு மக்கள் திரள், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுகிற ஒரு முறை. சொல்லாலே, செயலாலே, கருத்தினாலே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுகிற முறைக்குத்தான் பண்பாடு என்று பெயர். நம்முடைய தெய்வங்கள், நம்முடைய இசை, நம்முடைய கலை, நம்முடைய உணவு, நம்முடைய உடை, நம்முடைய உடையை நாம் செய்கிற முறை, நம்முடைய உடையை நாம் உடுத்துகிற முறை எல்லாமே பண்பாடு சார்ந்த அசைவுகள்தான்.”

2.எப்போது நாம் பண்பாட்டை உணர்கின்றோம்?

“பண்பாடு என்பதை அது மீறப்படுகிற போது உணர்கிறோம். இன்னொரு கட்டமாக, தேவைப்படுகிறபோது பண்பாட்டை உணர்கிறோம். நம்முடைய வீட்டிற்குத் தண்ணீர் போதாது என்கிற போது நம்முடைய வீட்டிலே மண்ணிற்க்குக் கீழே தண்ணீர் இருக்கிறதே என்று எனக்குத் தோன்றும்.”

3.எது நம் பண்பாட்டின் பலம்?

“கிடைக்கிற எல்லா  புதிய அனுபவங்களையும் கொண்டு தனக்குத் தானே தகவமைத்துக் கொள்வது. அதுதான் பண்பாட்டின் பலம்.” 

“உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் கோதுமை விளையாது. ரொட்டி கோதுமையிலே செய்கிற உணவு. ரொட்டியை ஐரோப்பியர் கொண்டுவந்தனர்.. இந்த ரொட்டியை மட்டும் பிரசவித்த பெண்ணின் Poat natal. உணவாக மாற்றிக் கொண்டார்கள் இல்லையா? அதற்க்குப் பெயர்தான் Cultural Osmosis – கலாச்சாரத் தகவமைவு.”

இ. நமது பண்பாட்டில் மருத்துவம்

இத்தலைப்பிலான தொபவின் கட்டுரை பண்பாட்டாய்வில் மிக முகாமையானதாகும். அதிலவர் ‘தொகுக்கப்படாத அறிவு’ என்பாரே கார்ல் மார்க்ஸ் அந்த மக்கள் திரளின் அறிவு தொகுக்கப்பட வேண்டியதன் இன்றியமையாமை குறித்தும் துறைதோறும் பன்னாட்டு மூலதனத்தால் நம் பாரம்பரிய கொன்றொழிக்கப்படும் பண்பாட்டு வன்முறை குறித்தும் மீள மீள எடுத்துரைப்பார்:

“அண்டம் பற்றிய ,பூமியைப்  பற்றிய நமது அறிவு இன்னும் முழுமையானதல்ல. அறியப்படாத மனிதரைப்போல, அறியப்படாத தாவரங்கள் நிறைய இருக்கின்றன. அறியப்படாத உயிரினங்கள் நிறைய இருக்கின்றன. இவை பற்றிய அறிவு பெருகப் பெருக மனிதவாழ்க்கை இன்னும் எளிமையாகும்”

பொருள் பற்றிய முழுமையான அறிவு எத்தகையது? அதைக் கொன்றொழித்தது யார்? பொருளுற்பத்தி பற்றிய முழுமையான அறிவு எதனால் பாதிக்கப்பட்டது? இதை மீட்டெடுப்பது யார்? மீட்டெடுப்பது  எப்படி? எனும் வினாக்களை எழுப்பி விடையளிப்பதே இக்கட்டுரையின் சிறப்பாகும்.

“பாரவண்டி செய்கிற ஒரு ஆசாரிக்கு அதனைப் பற்றிய முழுமையானஅறிவு உண்டு. என்ன மரத்தில் செய்ய வேண்டும்? என்ன பட்டை போட வேண்டும்? எவ்வளவு பாரம் தாங்கும்? பட்டையினுடைய கனம் என்ன? என்று பொருள் பற்றிய முழுமையான அறிவு உண்டு. பொருளுற்பத்தி பற்றிய இந்த முழுமையான அறிவு வேலைப்பிரிவினை, சிறப்புப்பயிற்சி இவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு மருந்து பற்றிய முழுமையான அறிவு ஆங்கில மருத்துவர்களுக்குக் கிடையாது. மருத்துவப் பிரதிநிதிகள் போய் மருத்துவரிடம் விளக்கினால்தான் உண்டு. எனவே பொருள் பற்றிய முழுமையான அறிவு இருக்கக்கூடாது என்பதிலே தெளிவாக இருக்கிறது, உலகமயமாக்கலுக்கும்  பின்னணியில் இருக்கிற பன்னாட்டு மூலதனம்.'”

“இந்தப் பாரம்பரியமான அறிவுத்தொகுதி மருத்துவத்துறையில் மட்டுமல்ல எல்லாத் திசைகளிலும் கொன்றொழிக்கப்படுகிறது என்பதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன்.”

“மருத்துவ அறிவு ஏனைய அறிவைவிட கூர்மையானதாக இருக்கவேண்டும் ‘மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன்’ என்பது சங்க இலக்கியம். நோயாளிக்கு அவன் விருப்பப்பட்டதைக் கொடுக்காமல் ஆய்ந்து ஆய்ந்து மருந்து கொடுத்தானே, எனவே ஆராய்ச்சி இந்த மருத்துவ உலகிலிருந்துதான் துவங்குகிறது” (‘சாளரம்’ இலக்கிய மலர், ஜன.2008)

இக்கட்டுரையில் பல்துறை சார் திறப்புகள் காணக்கிடக்கின்றன. பேசுபொருள் பற்றி மட்டுமே இங்கு எடுத்துரைக்கப்பட்டது.

தொடரும்..!

நான்காம் பாகத்தைப் படிக்க: பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

One Reply to “பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *