தமிழகத்தின் மிகப் பழமையான தொல்லியல் தளமாக தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் உள்ளது. தற்போது அங்கு மீண்டும் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆதிச்சநல்லூரில் மட்டுமல்லாமல் அதே தாமிரபரணிக் கரையில் உள்ள சிவகளைப் பகுதியிலும் தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் ஆதிச்சநல்லூர் பரும்பில் நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், எலும்புகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவை கிடைத்தன. அதில் ஈமசடங்கு தொடர்பான பொருள்களே பெருமளவில் கிடைத்திருந்தன.
அதனால் பழங்கால மக்கள் வாழ்ந்த இடங்களைக் கண்டறிவதற்காக ஆதிச்சநல்லூரில் கால்வாய் சாலை, வீரளபேரி, ஆதிச்சநல்லூர் ஊர்பகுதி ஆகியவற்றில் 76 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த புதிய அகழாய்வில் சுடுமண்ணாலான 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இது கீழடியிலும் சிவகங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட குழாய்களை விட பெரியதாக இருக்கின்றது. இந்த வடிகால் குழாய் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான சான்றாக பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் கூரை ஓடுகள், எழுத்து பொறிக்கப்பட்ட பானைத் துண்டுகள், புகைக்கும் குழாய் மற்றும் சதுரங்க விளையாட்டை ஒத்த விளையாட்டுப் பொருள்களும் இங்கு கிடைத்துள்ளன.


இந்த ஆய்வு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆய்வுக் குழுவின் தலைவர் பாஸ்கர் இந்த புதிய அகழாய்வில் கிடைத்த பொருட்கள் ஆதிச்சநல்லூர் ஒரு மக்கள் வாழ்ந்த பகுதி என்பத நிரூபித்துள்ளது என்றும், வரும் 30-ம் தேதிக்குள் நாங்கள் ஆய்வை முடித்து அறிக்கை சமர்ப்பிப்போம் என்றும் கூறியுள்ளார்.
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் காலம் ஆய்வுகள் மூலம் தெரிய வரும்போது தமிழக வரலாறு குறித்த காலம் இன்னும் பழமையானதாக மாறும் என்றும், உண்மையான வரலாறு வெளிவரும் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க: 1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்