இன்று உலக அளவில் இணையம் எளிதாக கிடைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கிட்டத்தட்ட எளிதாக இணையம் கிடைக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா 18-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் அது ஒரு மாயையோ என்று சந்தேகத்தை சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு ஆய்வு முடிவு எழுப்புகிறது.
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவதில் பாலின இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது என்றும், அது 50% அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜி.எஸ்.எம்.ஏ (GSM Association) நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இடைவெளியில் திருமண நிலை, கிராம – நகர வேறுபாடு என பல வழிகளிலும் அதிகரித்துள்ளதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் இணையத்தை ஸ்மார்ட் போன்கள் வழியாகவே பெறுகின்றனர். இந்தியப் பெண்களில் வெறும் 21% பேர் மட்டுமே இணைய வசதி பெறும் தொலைபேசிகளை வைத்திருக்கிறார்கள் என்று அத்தகவல் தெரிவிக்கிறது. ஆனால் இதுவே ஆண்கள் 42% பேராகும். இதனால் இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் பாலின இடைவெளி 50% என தெரியவந்துள்ளது.
அதேபோல சொந்தமாக இணையவசதி இல்லாத சாதாரண தொலைபேசி வைத்திருப்பவர்கள் 63% பேர் பெண்கள் என்றும், 79% ஆண்கள் என்றும் அந்த ஆய்வில் கூறியுள்ளனர். இதில் பாலின இடைவெளி 16% ஆகும். இந்த ஆய்வு மேற்கொண்ட நாடுகளில் உகாண்டா, நைஜீரியா போன்ற ஆப்ரிக்க நாடுகளை விட குறைவான நிலையில் இந்தியா இருப்பது தெரியவள்ளது.
பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடையாக இருக்கும் காரணிகள்
மேலும் இந்தியாவில் நடுத்தர வருமானம் உடைய குடும்பங்களில் பெண்களுக்கு தனியாக ஸ்மார்ட் போன் வாங்குவற்கான சூழல் இல்லை என்றும் இதன் காரணமாகக் கூறப்படுகிறது. அதேவேளையில் இணையம் வழியாக நடைபெறும் பாலியல் வன்முறைகளும், தகவல்கள் பாதுகாப்பு குறித்த அச்சமும் பெண்கள் இணையம் பயன்படுத்துவதை தடுக்கும் காரணங்களாக இருக்கிறது.
இணையம் கொடுக்கும் அறிவு மற்றும் விழிப்புணர்வு பெண்கள் பெறுவதன் வழியாக தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியாது என்று கிராமப்புற பழமைவாதிகளும் தடுக்கின்றனர். அதனால் தான் சில கிராமங்களில் பெண்கள் தொலைபேசி பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளனர் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறியுள்ளனர்.
இணையம் என்பது வெறும் பொழுதுபோக்கு பகுதி மட்டுமல்ல. இது பல வாய்ப்புகளை வழங்கக் கூடியதும், புதியவற்றைக் கற்றுக்கொள்வற்கான இடமாகவும் இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்குத் தேவையான சுகாதார தகவல்கள், இணையவழி தொழில்கள் என்று பல வாய்ப்புகளை வழங்குவதாகவும் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று போன்ற காலங்களில் பல விழிப்புணர்வும் இணையம் வழியாக பரப்புரை செய்யப்பட்டது. அதனால் இந்த தொழில்நுட்பம் பாலினப் பாகுபாடு இன்றி சமமாக எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.