Adichanallur excavation 1876

1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்

தாமிரபரணி நதிக்கரையில் ஆதிச்சநல்லூர் கிராமத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலை வெளிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது. இதை நாம் அறிவோம். ஆனால் 1876-ம் ஆண்டு காலத்திலேயே, ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? 

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, புதை பொருட்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் 1876-ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜாகர் (Jagor) என்பவர் ஆதிச்சநல்லூருக்கு வந்து ஆய்வு நடத்தினர். அப்போது அவருக்கு ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்தன. ஆயிரக்கணக்கான தொல்பொருட்களை அவர் பெர்லின் அருங்காட்சியத்துக்கு எடுத்துச் சென்று விட்டார். பெர்லின் இனவியல் அருங்காட்சியகத்தில் அப்பொருட்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அலெக்சாண்டர் ரியா நடத்திய ஆய்வு

அதற்குப் பிறகு 1899-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரியா (Alexander Rea) என்பவர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வைத் தொடங்கினார். இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் தெற்குப் பகுதியின் கண்காணிப்பாளராக அவர் இருந்தார். 1899-ம் ஆண்டு அகழாய்வைத் தொடங்கிய அவர் பல்வேறு கட்டங்களாக 1905-ம் ஆண்டு வரையில் தனது ஆய்வினை நடத்தினார். அவர் தனது ஆய்வுகளை ’Catalogue of the prehistoric antiquities from Adichanallur and Perumbair’ என்ற பெயரில் புத்தகமாகவும் எழுதினார்.

ஆதிச்சநல்லூர் பகுதி பழங்காலத்தில் இறந்தவர்களை புதைக்கக் கூடிய பகுதியாக இருந்ததாகவும், அப்பகுதி முழுவதும் மண்ணுக்குள் முதுமக்கள் தாழிகள் விரவிக் கிடப்பதாகவும் கண்டறிந்தார். 114 ஏக்கர் நிலப்பரப்பிற்கு இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் பல பகுதிகளில், தான் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும், ஆனால் இறந்தவர்களை புதைப்பதற்கு இவ்வளவு பெரிய விரிந்து பரந்த இடத்தினை தான் கண்டறிந்ததில்லை என்று தெரிவித்தார். 

பல இடங்களில் சிறு சிறு எண்ணிக்கையில் முதுமக்கள் தாழிக்கள் கிடைத்திருந்தாலும், இங்கு ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கான தாழிகள் இங்கு புதைக்கப்பட்டிருப்பதாக ஆச்சரியத்துடன் கூறினார். இப்பகுதியை முழுமையாக அகழாய்வு செய்தால் பல அருங்காட்சியங்களில் வைக்கும் அளவுக்கு ஏராளமான பொருட்கள் கிடைக்கும் என்றும், இந்தியாவில் இதுவரை நடந்தத்திலேயே இதுதான் முக்கியமான அகழாய்வு என்றும் தெரிவித்தார்.

முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்பாண்டங்கள்

முதுமக்கள் தாழி என்பது இறந்தவர்களின் உடலை உள்ளே வைத்து புதைப்பதற்கு பயன்படுத்திய பெரிய அளவிலான மண்பாண்டம் ஆகும். ஆதிச்சநல்லூரில் பல்வேறு அளவுகளிலான மண்பாண்ட தாழிகள் கிடைத்தன. அவற்றின் உள்ளே மனித மண்டை ஓடுகளும், எலும்புகளும் கிடைக்கப் பெற்றன.  பானைகளின் உள்ளே அரிசி உமி அல்லது சாமை போன்ற உணவுப் பொருள் கொட்டப்பட்டிருப்பதன் தடயங்கள் இருப்பதாகவும் ரியா கூறினார்.

ஏராளமான சுடுமண்பாண்டங்களும் கிடைத்தன. பானைகள் கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன. இப்பானைகள் பல எகிப்தில் கிடைத்த பழங்கால பானைகளோடு ஒத்திருப்பதாக அவர் கருதினார். பானைகள் மட்டுமல்லாது வீடுகளில் பயன்படும் ஏராளமான பொருட்கள் மண்ணால் செய்யப்பட்டிருந்தன. பானைகளை இணைக்கும் குழாய்கள் கூட மண்ணால் செய்யப்பட்டிருந்தது. 

மனித எலும்புக் கூடுகளுடன் இருக்கும் தாழிகள்
பல வகையான மண்பாண்டப் பொருட்கள்

உலோகக் கலையில் சிறந்து விளங்கிய தமிழர்கள்

பானைகள் மட்டுமல்லாது உலோகங்களால் செய்யப்பட்ட ஏராளமான கருவிகள், ஆபரணங்கள், ஆயுதங்கள், பாத்திரங்கள் போன்றவையும் கிடைத்தன. ஒவ்வொரு வகையான உலோகப் பொருட்களிலும் ஏராளமான வடிவங்களும், நுட்பங்களும் காணப்பட்டதால் உலோகத்தினை உருக்கிப் பயன்படுத்தும் கலையில் தமிழர்கள் மிகவும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்று அலெக்சாண்டர் ரியா கூறினார். இரும்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருந்தன. 

தங்க பட்டம்

தங்கத்தினால் செய்யப்பட்ட தலையில் நெற்றியின் மீது கட்டக் கூடிய பட்டம் அல்லது கிரீடம் வடிவிலான வடிவமைப்பும் கிடைக்கப் பெற்றது. அது மிகக் குறைவாகவே கிடைத்ததால் சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களைப் புதைக்கும் போது அவர்களின் நெற்றியில் அது பொருத்தப்பட்டிருக்கலாம் என தெரிவதாக ரியா கூறியிருக்கிறார். இவை ஆபகரணங்களாக பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் இறந்தவர்களை மரியாதைப்படுத்தும் ஒரு செயலாக கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

தங்கத்தினால் செய்யப்பட்டு இறந்தவர்களின் நெற்றியில் கட்டக் கூடிய பட்டங்கள்

இரும்பைப் பயன்படுத்திய விதம்

இரும்பினால் செய்யப்பட்ட கூர்மையான வாள்கள், பலவகையான கத்திகள், ஈட்டிகள், சுத்தியல், உளி மற்றும் பல்வேறு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றன. இவை சண்டையிடுவதற்கும், வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். விவசாயத்திற்கு பயன்படக் கூடிய பல வடிவிலான மண்வெட்டிகள், கோடாரி போன்றவையும் கிடைத்தன. 

இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் கருவிகள்
மண்வெட்டி, கோடாரி போன்ற விவசாய பயன்பாட்டுப் பொருட்கள்

நுட்பம் மிகுந்த வெண்கல பயன்பாடு

வெண்கலத்தைப் பொறுத்தவரை அவை சாதாரண பயன்பாட்டுப் பொருட்கள் செய்வதற்காக பயன்படுத்தப்படாமல், ஆபரணங்கள் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வெண்கலம் என்பது இரும்பைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த விலை மதிப்புமிக்க பொருளாக இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. 

ஆபரணங்கள் கலைநுட்பம் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. மோதிரம், வளையல், கைவளையம், கழுத்தணிகள், மாலையாக கோர்க்கும் மணிகள் போன்ற ஆபரணங்கள் கிடைத்தன. 

பாத்திரங்களில் மூடி, வடிகட்டும் சல்லடைகள், கிண்ணம், கலையம், குடுவை, தட்டு, வட்ட வடிவிலான குழிகள் கொண்ட தட்டு, குடம், விலங்குகளின் உருவங்களை வைத்து அலங்கரித்து குவளைகளை வைப்பதற்காக செய்யப்பட்ட தாங்கி, ஒளியேற்றுவதற்காக செய்யப்பட்ட அலங்கரிப்பு பாத்திரங்கள், அலங்கார பொம்மைகள், சிறிய வகை ஒலியெழுப்பும் மணிகள்  என பலவகைப் பொருட்கள் கிடைக்கப்பெற்றன. 

ஆயுதங்கள், கருவிகள், பொருட்கள், ஆபரணங்கள் என இவை பலவும் இறந்தவருடன் சேர்த்து முதுமக்கள் தாழிக்குள் புதைக்கப்பட்டன.

வெண்கலத்தினால் செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள்
வெண்கலத்தினால் செய்யப்பட்ட, பல்வேறு விலங்குகள் உருவம் பொறிக்கப்பட்ட கலை சாதனப் பொருட்கள்

மதம் சார்ந்த சின்னங்கள் இல்லை

பல ஆபகரணங்களிலும், பாத்திரங்களிலும் காளை, ஆடு, சேவல் போன்ற வீட்டு விலங்குகளின் உருவங்களும், புலி, யானை போன்ற காட்டு விலங்குகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. பறவைகள், நாய் போன்றவைகளின் உருவங்களும் கூட சிலவற்றில் பொறிக்கப்பட்டிருந்தன.

ஆனால் ஹிந்துமத வைதீக சின்னங்களாக கருதப்படும் பசு அல்லது இதர விலங்குகளின் சின்னங்கள் எதுவுமே ஆதிச்சநல்லூரில் கிடைக்கவில்லை என்று 1905-ம் ஆண்டே ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. தமிழரின் பண்பாடு வைதீக சாயல் இல்லாத தனித்த பண்பாடாக இருந்திருப்பதை கீழடி மட்டுமல்ல, ஆதிச்சநல்லூரும் பறைசாற்றுகிறது.

இதுபோன்ற இறந்தவர்களைப் புதைக்கும் பகுதிகள் கிடைக்கப் பெற்ற அகழாய்வு இடங்களிலிருந்து சிறிது தூரத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் காணப்பெறும் என்றும், பெரும்பாலும் நகரத்தின் தெற்குப் பகுதியில் இத்தகைய இடுகாடு போன்ற பகுதி அமையப் பெறும் அன்றும் அவர் தெரிவித்தார். அவரால் மேற்கொண்டு ஆய்வினை தொடர இயலவில்லை.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த 616 வகையான பொருட்களை அலெக்சாண்டர் ரியா ஆவணப்படுத்தியுள்ளார். அவற்றில் பல பொருட்கள் தற்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்திலும், பாளையங்கோட்டை அருங்காட்சியகத்திலும் இருக்கின்றன. ஆதிச்சநல்லூரின் காலம் என்பது பாண்டியர்களுக்கு முந்தைய காலம் என்று அவர் கருதினார்.

100 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்ட ஆய்வு

அலெக்சாண்டர் ரியா தனது ஆய்வினை 1905-ம் ஆண்டு முடித்துக் கொண்டார். அதன் பிறகு 100 ஆண்டுகளுக்கு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தப்படவே இல்லை. இடைப்பட்ட காலங்களில் பலர் அறிஞர்கள் தனித்தனியாக சென்று ஆய்வுகளை நடத்தினர். அவர்களின் பெரும் அறிவுறுத்தலுக்குப் பின்னர் 2004-ம் ஆண்டு  ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி மீண்டும் துவங்கப்பட்டது. பெருமளவிலான தொல்பொருட்கள் மீண்டும் கிடைக்க ஆரம்பித்தன. ஆதிச்சநல்லூர் இந்தியாவின் ஆதிநகரம் எனும் பெயரைப் பெருகிற இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 

ஆனால் 2005-ல் முடிக்கப்பட்ட அந்த ஆய்வின் அறிக்கை இந்திய தொல்பொருள் துறையினால் கடந்த 15 ஆண்டுகளாக வெளியிடப்படவே இல்லை.

 தமிழரின் வரலாறு திட்டமிட்டு மூடி மறைக்கப்படுகிறது எனும் குற்றச்சாட்டு தொல் பொருள் ஆய்வாளர்கள் மத்தியிலும், தமிழறிஞர்கள் மத்தியிலும் எழுந்தது. 

பொருட்களின் வயது கி.மு 905

ஆதிச்சநல்லூர் ஆய்வுகளை வெளியிடக் கோரி எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த விசாரணையின் போது ஆதிச்சநல்லூர் பொருட்களின் வயது கி.மு 905 மற்றும் 696 ஆக இருப்பதாக அமெரிக்காவின் ஃப்ளோரிடா ஆய்வகத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் தொல்லியல் துறை 2019ம் ஆண்டு தெரிவித்தது. 

தமிழ்நாடு அரசால் மீண்டும் தொடங்கப்பட்ட ஆய்வு

உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட பிறகு இந்த ஆண்டு மே 25 அன்று தமிழ்நாடு தொல்லியல் துறையானது மாநில அரசின் சார்பில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வுப் பணியை துவங்கியது. 40 நாட்களுக்கும் மேலாக ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. 40 க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வித்தியாசமான பொருட்கள் கிடைத்து வருகின்றன. 

வாழ்விடத்தை நோக்கிய தேடல்

ஆதிச்சநல்லூரின் மக்கள் வாழ்ந்த நகரத்தைத் தேடி இப்போது அகழாய்வுப் பணிகள் விரிவடைந்து வருகின்றன. இதற்காக ஆதிச்சநல்லூர் ஊரின் மையப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு 5 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் முதல்கட்டமாக ஒரு குழியில் சமையல் செய்யும் பாண்டங்கள் சில கிடைத்துள்ளதால் ஆய்வுகள் வேகமாக நடந்து வருகின்றன. மாநில அரசு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கும் போதிலும், ஒன்றிய அரசு இன்னும் அந்த வேலியிடப்பட்ட பழைய 114 ஏக்கர்களை அகழாய்வு செய்திட அனுமதி அளிக்காமல் இருக்கிறது. இதனால் அவ்வேலிக்கு வெளியில்தான் தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் உள்ளே ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் கோரி வருகிறார்கள்.

தடைகளை உடைத்து கீழடியும், ஆதிச்சநல்லூரும் ஆய்வுகளாக வெளிவரும்போது தமிழரின் தனித்த பண்பாட்டையும், வரலாறையும் உலகறியும்!

இதையும் படிக்க: இந்திய வரலாற்றை மாற்றி எழுதுகிறது கீழடி!

மண் மற்றும் கல்லினால் செய்யப்பட்ட பாத்திரங்கள்

One Reply to “1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்”

  1. தற்போது
    தமிழ்நாடு அகழாய்வு பெயரில் பெருத்த அளவு திருட்டு தில்லுமுல்லு நடக்கிறது . கவனிக்க யாரும் இல்லை .நாதியற்ற தமிழினம்

    https://www.facebook.com/tamiltamilartonmam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *