எஸ்.பி.பாலசுப்ரமணியம் விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகளுக்காக பாடிய எஸ்.பி.பி

திரையிசை பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் செப்டம்பர் 25-ம் தேதி உயிர் நீத்தார். அவர் பல்வேறு மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழின் பாடகர் வரிசையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் விடுதலைப் புலிகளுக்காக தமிழீழ விடுதலை குறித்த பாடல்களைப் பாடியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத செய்தியாகும்.

எஸ்.பி.பி-யை பாடவைக்க விரும்பிய புலிகள்

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக மூன்று பாடல் கேசட்டுகளை தயாரிப்பதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் 2007-ம் ஆண்டு முயற்சித்தது. தமிழ் திரைப்படத் துறையில் புகழ்பெற்று விளங்கும் பாடகர்களைக் கொண்டு அதனை தயாரிக்க அவர்கள் முயன்றனர். அதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை பாடவைக்க வேண்டும் என்று புலிகள் விரும்பினர். 

இந்த ஒலிப்பேழைகளை தயாரிக்கும் பொறுப்பினை தமிழ்நாட்டில் உள்ள ஓவியர் புகழேந்தி அவர்களிடம் அளித்தனர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தமிழீழ விடுதலை குறித்து பாடுவதற்கு ஒப்புக் கொள்வாரா என்ற தயக்கம் முதலில் புகழேந்தி அவர்களுக்கு இருந்திருக்கிறது. புலவர் புலமைப்பித்தன் அவர்களின் வழியாக எஸ்.பி.பி அவர்களிடம் தொடர்பு கொண்டு புகழேந்தி கேட்டிருக்கிறார். 

பிரபாகரன் மீது மதிப்பு கொண்டிருந்த எஸ்.பி.பி

அப்போது எஸ்.பி.பி அவர்கள் நேரில் அழைத்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் தமிழீழ விடுதலை குறித்தான இந்த பாடல்களை பாட வேண்டும் எனக் கேட்டபோது எஸ்.பி.பி அதனை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மீது மிகப்பெரிய அன்பினை எஸ்.பி.பி கொண்டிருந்திருக்கிறார் என்பதை அப்போதுதான் உணர்ந்து கொள்ள முடிந்தது என்று ஓவியர் புகழேந்தி தமிழ்நெட் இணையத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி உடன் ஓவியர் புகழேந்தி

பிரபாகரன் பாராட்டு! நெகிழ்ந்த எஸ்.பி.பி!

மேலும் பிரபாகரன் அவர்கள், தான் எஸ்.பி.பி-யின் திறமையின் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பதாக ஒரு செய்தியினையும் ஓவியர் புகழேந்தி வாயிலாக எஸ்.பி.பி-க்கு அனுப்பி வைத்திருக்கிறார். இயக்கத்தில் இசை மீது ஈடுபாடு கொண்டவர்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’என்னோடு பாட்டு பாடுங்கள்’ என்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.பி கூறும் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என பிரபாகரன் கூறியதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

அந்த நிகழ்ச்சியினை பிரபாகரன் அவர்கள் பார்த்து அது குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதைக் கேட்டு, எஸ்.பி.பி. அவர்கள் மிகவும் நெகிழ்ந்து போய் “தலைவரே என்னை பாராட்டி விட்டாரா?” என்று தெரிவித்திருக்கிறார். எஸ்.பி.பி தனது அன்பையும் நன்றியையும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என சொல்லியிருக்கிறார்.

தமிழீழத்திற்காக பாடிய பாடல்கள்

’எங்களின் கடல்’ என்ற பெயரில் கடல் கரும்புலிகளுக்கான முதல் பாடல் தொகுப்பில் ”உலக மனிதம் தலைகளை நிமிரும் விடுதலைப் போரின் வீரத்திலே” எனத் தொடங்கும் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார். இதுதான் புலிகளுக்காக எஸ்.பி.பி பாடிய முதல் பாடலாகும்.

அந்த பாடலின் வரிகளைப் படித்துக் கொண்டிருக்கும்போது, “எங்கள் மண்ணில் நாங்கள் வாழ எவரும் தடுத்தல் சரிதானா? சொந்த மண்ணில் வாழும் உரிமை எமக்கு என்ன கிடையாதா?” என்ற வரிகளைப் படித்துவிட்டு மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். 

அதன் பிறகு விடுதலைப் புலிகளின் ’எல்லாளன்’ திரைப்படத்திற்காக ’தாயக மண்ணே’ எனத் தொடங்கும் பாடலை எஸ்.பி.பி பாடினார். அப்பாடலைப் பாடி முடித்துவிட்டு அவர் “நான் இதுவரை எத்தனையோ பாடல்களைப் பாடியிருக்கிறேன். ஆனால் விடுதலைக்காக நான் பாடியதென்பது என்னை மிகவும் பெருமைப்படுத்துக்கின்ற ஒரு விடயமாக இருக்கிறது. எனக்கு மிக திருப்தியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் ’புயல் அடித்த தேசம்’ எனும் பாடல் தொகுப்பிலும் எஸ்.பி.பி பாடியுள்ளார். 

திரைப்படங்களில் காதல், சோகம், கோபம், ஆற்றாமை, துள்ளல், பக்தி என பல உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியதை அனைவரும் கேட்டிருக்கிறோம். ஆனால் சமகாலத்தில் நடந்த ஒரு விடுதலைப் போராட்டத்தின் குரலாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியதென்பது பலரும் அறியாத முக்கியமான செய்தியாகும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது குரலில் தமிழீழத்திற்காக பாடிய பாடல்களினைக் கேட்க:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *