கீழடியில் ஆறாம் கட்ட தொல்லியல் அகழாய்வில் எடைக் கற்கள் மற்றும் உருவில் மாறுபட்ட பெரிய விலங்கொன்றின் எலும்புக் கூடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் என கீழடியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் கீழடியின் தொடர்ச்சியான 6ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் விரிவுப்படுத்தப்பட்ட நிலையில், ஆறாம் கட்ட அகழ்வாய்வுப் பணியில் பல்வேறு முக்கியமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் தமிழ் மக்களிடத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமர்நாத் தலைமையில் துவங்கிய ஆய்வுப் பணி
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மதுரைக்கு அருகேயுள்ள கீழடியில் 2015ம் ஆண்டு தொடங்கி பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டவரும் தொல்லியல் அகழ்வாய்வுப் பணிகள் இதுவரையிலும் மற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளை விடவும் மக்களிடையே மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழ்வாய்வுப் பணி தொடங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட இக்குழு பானை ஓடுகள், உறை கிணறுகள், செங்கல் சுவர்கள், ஆபரணங்கள், மட்பாண்டங்கள், கலைநயமிக்க பயன்பாட்டுப் பொருட்கள் என 5000க்கும் மேற்பட்ட தொல்பொருள் சான்றுகளை கண்டெடுத்தது. தமிழர்களின் தொல் வரலாறு தொடர்பான சில முக்கிய கருதுகோள்களை எட்டுவதற்கு இக்குழு கண்டடைந்த தொல்பொருட்கள் பயன்பட்டன.
தமிழர் வரலாற்றை மூடி மறைக்க முயற்சித்த பாஜக அரசு
‘வட இந்திய மையப்படுத்தப்பட்ட இந்திய வரலாற்றை’ கேள்வியெழுப்பும் விதமாக வட இந்தியா தவிர்த்த குறிப்பாக தமிழ்நாட்டுப் பகுதியில் பழம்பெரும் நாகரீகம் தொடர்பான அகழ்வாய்வு கண்டெடுப்பாக கீழடி அமைந்தது. தொல்லியல் ஆய்வாளர்கள் சிலர் ஆரியரல்லாத சிந்து-சமவெளி நாகரீகத்தின் தொடர்ச்சியாக கீழடியில் கண்டெடுக்கப்பட்ட நகர நாகரீகம் அமைய வாய்ப்புள்ளது என கூறினர். இந்நிலையில் 2017-ம் ஆண்டு பாஜக அரசு, கீழடி அகழ்வாய்வுப் பணியில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை ஒடிஸாவிற்கு பணியிட மாற்றம் செய்தது. மூன்றாம் கட்ட ஆய்வுகளுக்கு அனுமதி கொடுக்க மறுத்தது. தமிழர்களின் வரலாற்றை பாஜக அரசு இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பதாக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், அமைப்புகள் பாஜக அரசைக் கண்டித்து குரலெழுப்பின. கீழடிக்கு வந்த ஒன்றிய கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா, அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் மூன்றாம் கட்டப் பணிகளை இந்திய தொல்லியல் துறை ‘கடமைக்கு’ செய்தது. இதற்கு தமிழ்நாட்டளவில் கடுமையான எதிர்ப்புகள் வரவே, நான்காம் கட்ட அகழ்வாய்வுப் பணியினை தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்டு, தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மீண்டு விரிவடைந்த கீழடி அகழாய்வு
தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடியில் கிடைக்கப் பெற்ற தொல்பொருள் சான்றுகளை ஆய்வுக்குட்படுத்தியது. பொருட்களின் காலத்தை கணக்கிடப் பயன்படும் கரிம (கார்பன் டேட்டிங்) முறை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கீழடியில் கிடைக்கபெற்ற தொல்பொருட்களின் மாதிரிகள் கி.மு. 580 ஆண்டைச் சேர்தவை என கண்டுபிடிக்கப்பட்டது, கீழடியின் பானை ஓடுகளில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக் குறிகள் சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துக் குறிகளோடு ஒத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நான்காம் கட்ட ஆய்வின் முதல்நிலை அறிக்கை 19.09.2019 அன்று தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பாக வெளியிடப்பட்டது. முதல்நிலை ஆய்வு அறிக்கையின் முடிவுகள் தமிழர் வரலாற்றின் மீது புது வெளிச்சம் பாய்ச்சுவதாக அமைந்தது. தனித்த மொழி, பண்பாடுடைய இனமாக தமிழினம் விளங்கியதை எடுத்துக்காட்டியது.
பழந்தமிழரின் கல்வி அறிவு
தமிழ் எழுத்து முறைக்கு முந்தைய எழுத்து வடிவமான தமிழி எழுத்து முறை கி.மு 6ம் நூற்றாண்டிலேயே நிலவியதை கீழடி எடுத்துக் காட்டியிருந்தது. பண்பாடு, தொழில் உற்பத்தி மற்றும் வணிகம் ஆகியவற்றில் மேம்பட்ட நாகரீகமிக்க வளமான சமூக-பொருளாதார நிலையுடைய சமூகமாக தொல் தமிழ்ச் சமூகம் வாழ்ந்ததற்கான அடையாளத்தை கீழடி அகழ்வாய்வின் முதல்நிலை அறிக்கை வெளிக்கொணர்ந்தது. பானை ஓடுகளில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள், 2600 ஆண்டுகளுக்கு முன்பே சாமானிய தமிழ் மக்களும் கல்வியறிவு பெற்றிருந்தமையை சுட்டிக்காட்டியது.
பல்வேறு கட்ட அகழ்வாய்வுப் பணிகளிலும் மத தொடர்புடைய சின்னங்கள் எதுவும் கிடைக்கப் பெறாதது தொல் தமிழர் வரலாறானது இந்தியாவின் வைதீக மதங்களின் தொடர்பில்லாத அவைதீக பண்பாடுடையது என நிறுவியுள்ளது.
6-ம் கட்ட அகழாய்வில் கிடைத்தவை
இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கப்பட்ட கீழடியின் 6ம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் கீழடியின் அருகே அமைந்துள்ள அகரம், மணலூர், கொந்தகை பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. 6-ம் கட்ட அகழ்வாய்வுப் பணியில் தொடக்கத்திலேயே இதற்கு முந்தைய அகழ்வாய்வுகளில் கிடைத்திடாத வகையிலான உருவத்திலும், அளவிலும் மாறுபட்ட விலங்கின் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது. அகரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் 17-ம் நூற்றாண்டைச் தங்க நாணயங்கள் உள்ளிட்ட நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. மணலூரில் பட்டறைகளுக்கு பயன்படும் பெரிய அடுப்பு வடிவிலான உலை கண்டெடுக்கப்பட்டது. கொந்தகையிலோ முதுமக்கள் தாழி மற்றும் குழந்தையொன்றின் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
எடைக் கற்களும், உலைகளும்
தற்போது கீழடியில் தமிழர்களின் வணிகத் திறத்தை பறைசாற்றும் விதமாக நுண்ணிய பொருட்களை அளவிட பயன்படுத்தப்பட்டிருக்ககூடும் என கருதக்கூடிய எடைக் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 8 கிராம், 18 கிராம், 150 கிராம், 300 கிராம் எடை கொண்ட எடைக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அடுப்புக் கறி, இரும்பு போன்ற உலோகங்களும் இப்பகுதியிலிருந்து கிடைத்துள்ளன. இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி உருக்கிய பின் வெளியேறும் கசடுகள் என பலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் இப்பகுதி ஒரு தொழிற்கூடமாக இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மேலும் எடைக்கற்கள் கிடைத்திருப்பதன் மூலமாக இது ஒரு வணிக நகரமாகவும் இருந்திருக்கக் கூடும் என்று தெரிவிக்கிறார்கள்.
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை கீழடி மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. இத்தனை காலம் சங்க இலக்கியங்கள் பறைசாற்றி வந்த தமிழின வரலாற்றை கீழடி தொல்லியல் ஆய்வு இனி உலகுக்கே ஆதாரத்துடன் சொல்லப் போகிறது. தமிழருக்கென்று ஒரு பழம்பெரும் வரலாறு இருந்தது. அந்த வரலாறு சமத்துவம் நிறைந்ததாய் இருந்தது. வைதீக சிலை வழிபாடு முறைகள் இல்லாததாய் இருந்தது. தொழில்நுட்ப அறிவுகள் நிறைந்த ஒன்றாய் இருந்தது என கீழடி பறை சாற்றுகிறது. தொடர்ந்து நடைபெறும் கீழடி ஆய்வுகள் நிச்சயமாய் வரலாற்றை மாற்றி எழுதும் என்றே தெரிகிறது.