கொரோனா தடுப்பூசி

நம் உடலினுள் கொரோனா தடுப்பூசி எப்படி செயல்படுகிறது?

இன்று நம் முன்னே இருக்கக்கூடிய மாபெரும் சந்தேகம், கேள்வி எல்லாம் தடுப்பூசி என்ற ஒன்றை நோக்கி
இருக்கிறது. எல்லோரும் ஒரு தயக்கத்தை சுமந்துகொண்டு அதை அணுகுவதில் பல்வேறு ஆலோசனைகளை எல்லோரிடமும் கேட்கின்றனர்.

கொரோனா தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, முதலில் நம் உடலானது நோயை எதிர்த்து எவ்வாறு போராடுகின்றன என்பதைப் பார்க்க வேண்டிய தேவையிருக்கிறது. கொரோனா போன்று நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் முதலில் நம் உடலில் ஊடுருவுகின்றன. பின்பு அவை பல்கிப்பெருகி உடலை தாக்கி நோயை ஏற்படுத்துகிறது. கிருமி தொற்று ஏற்படும்போதே நமது நோயெதிர்ப்பு மண்டலமானது அதை சரியாக அடையாளம் கண்டுகொள்கிறது. இயற்கையாகவே நமது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பானது தொற்றுநோயை எதிர்த்துப் போராட பல கருவிகளைக் கொண்ட படைப்பிரிவு போன்று பல்வேறு செயல்களை நோய்கிருமிகளுக்கு எதிராக உருவாக்குகிறது.

நம் உடலில் பாயும் இரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களானது திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கின்றன. இதேபோன்று நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் வெள்ளையணுக்கள் அல்லது நோயெதிர்ப்பு செல்களும் இருக்கின்றன. பல்வேறு வகையான வெள்ளை இரத்த அணுக்கள் வெவ்வேறு வழிகளில் உடலில் தாக்கும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன. அவற்றின் பணியைப் பற்றி அறியும்முன் சில முக்கியக் காரணிகளைப் பார்க்கலாம். கீழ்வரும் பெயர்கள் எல்லாம் அறிவியல் பெயர்கள் மற்றும் அதன் பணிகள் இவற்றை முடிந்தவரை எளிதாக புரியும்படி இங்கு சொல்லியிருக்கிறோம். ஒருமுறைக்கு இருமுறை படித்து தெளிவாக அறிந்துகொள்ளவும். அவற்றின் செயல்முறைகள் எளிதாக புரிந்துகொள்வதற்கு அவற்றின் வகைகளை அறிந்துகொள்வது முக்கியமானது. அவற்றை கீழே தருகிறோம் அதை படித்து நினைவில் கொண்டு மேற்செல்லவும்.

ஆன்டிஜென் (Antigen):

ரொம்ப எளிதாக சொல்வோமானால் உடலுக்கு வெளியிலிருந்து உடலுக்குள் வரும் உடலுக்கு சம்பந்தமில்லாத அனைத்துமே ஆன்டிஜென்.

ஆன்டிபாடி (Antibody):

‘பிறபொருளெதிரி’ (Antibody) என்பது முதுகெலும்பு கொண்ட உயிரினங்களில் உடலினுள்ளே வரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நோயை உருவாக்கும் வெளிப்பொருட்களை (Antigen) அடையாளம்கண்டு அவற்றை அழிக்கவோ அல்லது செயலற்றதாகவோ ஆக்குவதற்காக நோயெதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்பட்டு இரத்தத்திலும் மற்ற உடல் திரவங்களிலும் அனுப்பப்படும் ஒரு வகைப் புரதம் ஆகும். இது ‘இம்யூனோகுளோபுலின்’ (Immunoglobulin) எனவும் ‘Ig’ என சுருக்கமாக அழைக்கப்படும். இரத்த வெள்ளையணுக்களின் ஒரு பிரத்யேகப் பிரிவான ‘பிளாஸ்மா உயிரணு’ (Plasma cells) எனப்படும் இவை இரத்தத்தில் திரவ இழை போன்ற உயிரணுக்களால் உருவாக்கப்படும்.

வெள்ளை இரத்த அணுக்கள் (Macrophages) :

வெள்ளை இரத்த அணுக்கள் ‘மேக்ரோபேஜ்கள்’ (Macrophages) என்று அழைக்கப்படும். இவை உடலின் நோயெதிர்ப்பு செயலில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவையே கிருமிகளையும் இறந்த அல்லது இறக்கும் உயிரணுக்களையும் விழுங்கி ஜீரணிக்கின்றன. வெளியிலிருந்து உடலின் உள்ளே ஊடுருவும் கிருமிகள் “ஆன்டிஜென்” (Antigen) எனப்படுகின்றன. நம் உடல் அந்த ஆன்டிஜென்களை ஆபத்தானது என்று அடையாளம் கண்டு அவற்றைத் தாக்க (Antibody) ஆன்டிபாடியைத் தூண்டுகிறது.

தற்காப்பு வெள்ளை இரத்த அணுக்கள் ( B-lymphocytes) :

தற்காப்பு வெள்ளை இரத்த அணுக்கள் ‘பி-லிம்போசைட்டுகள்’ (B-lymphocytes) என்றழைக்கப்படும். அவை மேக்ரோபேஜ்களால் எஞ்சியிருக்கும் வைரஸின் துண்டுகளைத் தாக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன.

T-lymphocytes :

தற்காப்பு வெள்ளை இரத்த அணுக்களின் மற்றொரு வகை டி-லிம்போசைட்டுகள் (T-lymphocytes) எனப்படுகின்றன. அவை உடலில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள செல்களைத் தாக்குகின்றன.

ஒரு நபர் கொரோனா போன்ற வைரஸால் முதன்முறையாக பாதிக்கப்படுகையில் அவரது உடலின் நோயெதிர்ப்பு திறனானது, பல்வேறு படைக்கலன்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவு எவ்வாறு எதிரிகளுக்கு எதிராக செயலற்றுமோ அதுபோன்ற அனைத்து செயல்களையும் தூண்டுகின்றன. ஆனால் நமது உடலுக்கு, அந்த படைகருவிகள் போன்ற பல்வேறு இயற்கை கூறுகளைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். நோய்த்தொற்றிலிருந்து ஒரு நபர் மீண்ட பிறகு அந்த நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு அந்த நோயிலிருந்து உடலை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி கற்றுக்கொண்டதையும் தன் நினைவில் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் மீண்டும் அதே வைரசை எதிர்கொண்டால் அதற்கு எதிராக விரைவாக செயல்படும் ‘நினைவு உயிரணுக்கள்’ என்கிற (மெமரி செல்கள்- Memory cells) சில டி-லிம்போசைட்டுகளை உடல் வைத்திருக்கிறது. ஏற்கனவே உடலில் ஊடுருவிய பழக்கமான வெளி மூலக்கூறுகளான ‘ஆன்டிஜென்’கள் கண்டறியப்படும்போது, ​​பி-லிம்போசைட்டுகள் அவற்றைத் தாக்க எதிர்ப்புக் கூறுகளான ‘ஆன்டிபாடி’களை உருவாக்குகின்றன. தற்போது கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸுக்கு எதிராக இந்த நினைவக செல்கள் ஒரு நபரை எவ்வளவு காலம் பாதுகாக்கின்றன என்பதை மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.

COVID-19 தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன:

COVID-19 தடுப்பூசிகள் உடலானது கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகாமல் COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறனை வளர்க்க உதவுகிறது.

கோவிட் தடுப்பு மருந்து:

உடலுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க பல்வேறு வகையான தடுப்பூசிகள் வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன. ஆனால் அனைத்து வகையான தடுப்பூசிகளிலும் உடலில் கலப்பதற்காக முன்பே குறிப்பிட்ட நினைவு உயிரணுக்களான “மெமரி” டி-லிம்போசைட்டுகள் மற்றும் பி-லிம்போசைட்டுகள் செலுத்தப்படுகின்றன. அவை உடலில் தடுப்பூசிமூலம் செலுத்தப்பட்டபின், உடலானது குறிப்பிட்ட வைரஸால் தாக்கப்படும்போது அந்த வைரஸை எதிர்த்து எவ்வாறு போராடுவது என்பதற்கான ‘நினைவு உயிரணுக்கள்’ ஏற்கனவே தடுப்பூசிமூலம் செலுத்தப்பட்டிருப்பதால் அதை நினைவில் கொண்டு அதற்கெதிராக செயல்படும்.

உடலானது ‘டி-லிம்போசைட்’டுகள் மற்றும் ‘பி-லிம்போசைட்’டுகள் தயாரிக்க தடுப்பூசி போட்டபின் சில வாரங்கள் ஆகும். ஆகையால், தடுப்பூசிக்கு பாதுகாப்பு அளிக்கப் போதுமான நேரம் இல்லாவிட்டாலும் அந்த குறிப்பிட்ட காலவெளியில் அவர் கொரோனா நோய்க்கிருமிகள் தாக்கக்கூடிய சூழலில் வாழ்ந்தாலும் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு நோய்வாய்ப்படலாம்.

சில நேரங்களில் தடுப்பூசிக்குப் பிறகு, நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டியெழுப்பும் செயல்முறையில் அவை காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். இந்த அறிகுறிகள் இயல்பானவை ஏனெனில் இது உடலானது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதற்கான அறிகுறிகளாகும்.

தடுப்பூசிகளின் வகைகள்:

தற்போது மூன்று முக்கிய வகை COVID-19 தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டவை மற்றும் பரிந்துரைக்கப்பட்டவையாக இருக்கின்றன. மேலும் சிலவகை தடுப்பூசிகள் இறுதிகட்டப் பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளன.

ஒவ்வொரு வகை தடுப்பூசிகளும் COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸிலிருந்து நம்மை அடையாளம் கண்டு நம் உடல்களைப் பாதுகாக்க எவ்வாறு தூண்டுகிறது என்பதற்கான விளக்கம் கீழே உள்ளது. இந்த தடுப்பூசிகளால் கொரோனா உடலின் உள்ளே ஊடுருவ வாய்ப்பில்லை.

கொரோனா தடுப்புசிகள் ஒப்பீடு – படம் – நன்றி: பிபிசி

தகவல் மரபணு மூலக்கூறுகள் கொண்ட தடுப்பூசிகள் (messenger RNA -mRNA தடுப்பூசிகள்):

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற காவல்துறை ஒத்திகையை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த பயிற்சி ஒத்திகையில் தீவிரவாதிகள் நகருக்கு உள்ளே புகுந்துவிட்டனர் என்ற குறிப்பு மட்டுமே காவல்துறைக்கு சொல்லப்பட்டிருக்கும். அந்த குறிப்புகளை வைத்துக்கொண்டு நகர் முழுவதும் அவர்களாலேயே அனுப்பப்பட்டிருக்கும் ‘மாதிரி தீவிரவாதிகளை’ தேடுவார்கள். தீவிர சோதனைகள் நடக்கும். அவர்களை பிடித்தபின் அவர்களை பிடித்த முறையையும், தப்ப விட்டிருந்தால் எவ்வாறு இன்னும் சோதனையை தீவிரப்படுத்தவேண்டும், எங்கெங்கு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்வார்கள்.

mRNA தடுப்பூசி செயல்படும் விதம்

இதேமாதிரி தான் இந்த mRNA எனப்படும் ‘தகவல் மரபணு’ கொண்ட தடுப்பூசிகள் செயலாற்றுகின்றன. ஒத்திகையில் முன்கூட்டியே சொல்லப்பட்ட ‘குறிப்பு’ முக்கியப் பங்காற்றுகிறது என்றால் இங்கு ‘தகவல் மரபணு’ முக்கியப் பங்காற்றுகிறது. உடலில் கிருமி நுழைந்துவிட்டால் ஏற்கனவே தடுப்பூசிமூலம் செலுத்தப்பட்ட ‘தகவல் மரபணு’ குறிப்பிட்ட எதிராளிக்கு எதிரான ‘டி-லிம்போசைட்’டுகள் மற்றும் ‘பி-லிம்போசைட்’டுகளை உருவாக்குகின்றன. இவை ஏற்கனவே சொல்லப்பட்ட குறிப்புகளின்படி உள்நுழைந்த கிருமியை கண்டறிந்து அழிக்கின்றன.

விளக்கமாக சொல்வதென்றால் இந்த வகை தடுப்பூசிகளில் கொரோனா வைரஸ்சிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாதிப்பில்லாத ஒரு தகவல் மரபணு இருக்கின்றது. இந்த வகை தடுப்பூசி உடலில் போட்டவுடன் அவை கொரோனா வைரஸில் இருக்கும் புரத கூர்முனைகளில் (Spike Proteins) காணப்படும் புரதத்தையொட்டிய தனித்துவமான, பாதிப்பில்லாத புரதத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான வழிமுறைகளை உயிரணுக்களுக்கு வழங்குகிறது. செல்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு கொரோனா வைரஸின் புரதத்தின் நகல்களை மட்டும் உருவாக்கிய பிறகு தடுப்பூசியிலிருக்கும் மரபணுப் பொருளை அழிக்கின்றன. இந்த பாதுகாப்பான புரதம் உடலில் தோன்றும்போது இவை உடலின் இருக்கக்கூடாத பொருள்கள் என்பதை உடல்கள் உணர்ந்து, டி-லிம்போசைட்டுகள் மற்றும் பி-லிம்போசைட்டுகளை உருவாக்குகின்றன. அவை அந்த புரதத்தை எவ்வாறு எதிர்த்துப் போராடி அழிகின்றன. இதன்மூலம் எதிர்காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் அதை ஏற்படுத்தும் வைரஸை எதிர்த்து எவ்வாறு போராடுவது என்பதை நினைவில் கொள்ளும்.

புரதத்தை துணைப்பொருளாகக் கொண்ட தடுப்பூசிகள் ( Protein subunit vaccine):

மிக ஆபத்தான கொரோனா வைரஸ்சிலிருந்து ஆபத்தில்லாத புரதத்தை பிரித்தெடுத்து அதற்கு துணையாக பல்வேறு மருத்துவ வேதிப்பொருள்களும் கலக்கப்பட்டு உடலிலுள் செலுத்தப்படும். எளிதாக சொல்வதென்றால் நடிகர் தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தில் அவரின் கண்முன்னே அவரது தாயை அவர் தந்தை கொல்வார். இந்த கதையில் ஆபத்தான கொலைகாரனுக்கு மகனாகப் பிறந்த குமார் தொடக்கத்தில் மிகுந்த அப்பாவியாக இருப்பார். ஒரு சமூக விரோத கூட்டத்துடன் கலந்து ‘கொக்கி குமராக’ வளர்ந்து நிறைய பேரை துணைக்கு கொள்ளும் தாதாவாக மாறியபின் தன் தந்தையை கொன்று பழிதீர்ப்பார். அதேபோல ஆபத்தான கொரோனா கிருமியின் ஆபத்தில்லாத புரதம் பிரித்தெடுக்கப்பட்டு துணையாக வேதிப்பொருட்களைக் கலந்து உடலுக்குள் செலுத்தப்படுகிறது. புரதத்தை துணைப்பொருளாகக் கொண்ட இந்த தடுப்பூசிகளில் கொரோனா வைரஸின் பாதிப்பில்லாத துண்டுகளும் (புரதங்கள் மட்டும்) அடங்கும்.

புரதத்தை துணைப்பொருளாகக் கொண்ட தடுப்பூசிகள் செயல்படும் விதம்

தடுப்பூசி போடப்பட்டவுடன் உடலில் இந்த பாதுகாப்பான ஆபத்தில்லாத புரதம் உடலில் கலக்கிறது. இவை உடலுக்கு தொடர்பில்லாத வெளிப்பொருள்கள் என்பதை நம் நோயெதிர்ப்பு மண்டலம் உணர்ந்து அந்த புரதம் உடலில் இருக்கக்கூடாது என்று அவற்றை அழிக்க டி-லிம்போசைட்டுகள் மற்றும் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன. அதே நேரத்தில் இந்த வழிமுறையும் மற்ற தடுப்பூசி போல் டி-லிம்போசைட்டுகளும் ஆன்டிபாடிகளும் எதிர்காலத்தில் தொற்று ஏற்பட்டால் COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸை எவ்வாறு எதிர்ப்பது என்பதை நினைவில் கொள்ளும்வகையில் செயல்படும்.

வழிகாட்டி தடுப்பூசி (Vector Vaccine):

இதன் செயல்முறையை எளிதாகச் சொல்ல மீண்டும் செல்வராகவனிடம்தான் வரவேண்டும். இயக்குனர் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் கதாநாயகனின் முதுகில் ஒரு அடையாளம் அல்லது குறிப்பிட்ட சோழர்களின் வழிகாட்டியாக விளங்கப்போகும் ஒருவனின் அடையாளமாக ஒரு ‘புலியின் படம் பச்சை குத்தபட்டிருக்கும். இவரே பல்வேறு இக்கட்டுகளை கடந்து சோழர்களைக் கண்டுபிடித்தபின் அவரை அந்த புலி படம் அடையாளம் காண்பிக்கும். பின்பு அவர்களுடன் சேர்ந்து எதிரியுடன் மோதுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படத்தில் உடலில் புலி படம் பச்சை குத்தப்பட்டு ஒரு அடையாளமாக இருப்பதுபோல, இங்கு கொரோனா நுண்கிருமியின் மாற்றியமைக்கப்பட மரபணு வேறொரு வைரஸின் கூட்டிற்குள் பொதியப்பட்டு உடலிலுள் செலுத்தப்படுகிறது. இவை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு வழிகாட்டியாக தன்னுள் புகுத்தப்பட்டிருக்கும் ஆபத்தில்லாத மரபணுவை வெளிக்காட்டுகிறது. வெக்டர் தடுப்பூசி என்றழைக்கப்படும் இவ்வகை தடுப்பூசிகளில் ஒரு வேறுபட்ட மாற்றியமைக்கப்பட்ட வைரஸ் இருக்கிறது. மாற்றியமைக்கப்பட்ட வைரஸின் கூட்டின் உள்ளே COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸின் ஆபத்தில்லாத மூலக்கூறு ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. இது “நுண்கிருமி வழிகாட்டி” (Virus Vector) என்று அழைக்கப்படுகிறது.

வழிகாட்டி தடுப்பூசி செயல்படும் விதம்

வைரஸ் வழிகாட்டியானது உடலின் உயிரணுக்களுக்குள் வந்தவுடன் COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸுக்கு எதிராக தனித்துவமான ஒரு புரதத்தை உருவாக்க மரபணுப் பொருள் செல்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அறிவுறுத்துகிறது. இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி செல்கள் புரதத்தின் நகல்களை உருவாக்குகின்றன. அப்படி புரதம் உருவானவுடன் அதற்கேற்றபடி உடலின் நோயெதிர்ப்பு கருவிகளான டி-லிம்போசைட்டுகள் மற்றும் பி-லிம்போசைட்டுகளை உருவாக்க நம் உடலைத் தூண்டுகிறது. இந்த செயல்முறையால் எதிர்காலத்தில் கொரோனாவினால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அந்த வைரஸை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை நோயெதிர்ப்பு மண்டலம் நினைவில் கொள்ளும்.

மேலே குறிப்பிடப்பட்ட திரைப்படத்தின் காட்சியமைப்புகள் இந்த சிக்கல் மிகுந்த தடுப்பூசிகளின் அறிவியல் செயல்பாட்டை மிக எளிதாக நினைவில் கொள்ளவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டவை. கதையில் வரும் சில ஒப்புமைகளை மட்டுமே கையாளப்பட்டிருக்கிறது. இவை உங்களுக்கு ஒவ்வொரு வகையான தடுப்பூசிகளின் செயல்பாட்டினை எளிதாக விளக்கும் என்று நம்புகிறோம். மேலும் கொரோனா தொடர்பான பல்வேறு கட்டுரைகளும் நமது ‘மெட்ராஸ் ரீவியூ’ தளத்தில் வந்திருக்கிறது.


படிக்க: பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்குமா ’மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ (Herd Immunity)?

படிக்க: கொரோனா நுண்கிருமியின் சேமிப்புகலனாக மாறுகிறதா நம் குழந்தைகளின் உடல்? பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்


பிற்சேர்க்கை :

COVID-19 இலிருந்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க நீங்கள் எடுக்கக்கூடிய பல நடவடிக்கைகளில் ஒன்று தடுப்பூசி போடுவது. ஏனெனில் இன்று உலகம் முழுவதையும் தன் கோரப்பிடிக்குள் வைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா நோய்ப் பரவல். தினமும் சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய இரங்கல் செய்திகள் மனதை கனக்க வைக்கின்றன. யாரோ எவரோ என்று கடந்து சென்றுவிட முடியாது. ஒவ்வொருவரும் அந்த குடும்பத்தின் முக்கிய நபராக விளங்கியிருப்பார்கள். மிக நெருங்கிய உறவுகளையும் , நண்பர்களையும் இழப்பது என்பது மிகுந்த வேதனையை தரக்கூடியது.

உண்மையில் ஒரு தொற்றுநோயை நிறுத்துவதற்கு நமக்கு கிடைக்கக்கூடிய எல்லா கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். தடுப்பூசிகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்துடன் செயல்படுகின்றன. எனவே நீங்கள் பாதிக்கப்பட்டால் உங்கள் உடல் வைரஸை எதிர்த்துப் போராடத் தயாராக இருக்கும்.

COVID-19 க்கு எதிராக நீங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பிறகும் நீங்கள் பொது இடங்களில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் இருக்கும்போதும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவப் பரிந்துரைகளை தெளிவாக உள்வாங்கி செயல்படுவதே சோதனைகளும் வலிகளும் மிகுந்த காலத்தைக் கடப்பதற்கு உதவியாக இருக்கக்கூடும். நலம் பேணுக! நலம் பெறுக!

– அருண்குமார் தங்கராஜ், Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *