இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையானது கிராமங்களில் தீவிரமடைந்திருப்பது மிகவும் கவலைக்குரிய அறிகுறியாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் 65% மக்கள் கிராமப் பகுதிகளில் தான் வசிக்கிறார்கள். ஆனால் மாநகரங்களிலோ, நகரங்களிலோ இருப்பது போன்ற குறைந்தபட்ச மருத்துவ வசதிகள் கூட கிராமப் புறங்களில் கிடையாது. கொரோனா அறிகுறிகள் தென்பட்ட பிறகும் பரிசோதனை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் கிராமப் புறங்களில் மிகக் குறைவாகவே இருக்கிறது. ஊரக மக்களிடையே விழிப்புணர்வில் இருக்கும் பற்றாக்குறையும், மருத்துவக் கட்டமைப்பில் உள்ள பற்றாக்குறைகளும் அதேசமயம் உயர்ந்துகொண்டிருக்கும் தொற்றுப்பரவலின் எண்ணிக்கையும் அச்சமூட்டக்கூடியதாய் மாறியிருக்கிறது.
சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் 13 மாநிலங்களில் கிராமப்புறப் பகுதிகளில் கொரோனா பரவல் என்பது மிகத் தீவிரமடைந்திருக்கிறது. நகர்ப்புறப் பகுதிகளை விட கிராமப்புறப் பகுதிகள் தொற்றின் விகிதம் தீவிரமடைந்திருப்பது ஒரு கவலைக்குரிய அறிகுறியாகும்.
மே 9-ம் தேதியின் புள்ளிவிவரத்தின்படி, பீகார் மாநிலத்தின் தினசரி மொத்த தொற்றுக்களில் 76% கிராமப்புறங்களில் இருக்கிறது எனும் தகவல் அதிர்ச்சியூட்டக்கூடியதாகும். ஒரு மாதத்திற்கு முன் ஏப்ரல் 9-ம் தேதி அன்று 53% சதவீதமாக இருந்த கிராமப்புற தொற்றுக்களின் பங்கானது 76% ஆக உயர்ந்திருக்கிறது.
மாநில் வாரியாக கிராமப்புறங்களில் கொரோனா தொற்றின் விகிதம்
மாநிலம் | கிராமம் (தினசரி சராசரி எண்ணிக்கை) | நகரம் (தினசரி சராசரி எண்ணிக்கை) |
சட்டீஸ்கர் | 89% (12,099) | 11% (1480) |
இமாச்சலப் பிரதேசம் | 79% (3040) | 21% (807) |
பீகார் | 76% (10,148) | 24% (3257) |
ஒடிசா | 76% (7798) | 24% (2520) |
ஆந்திரா | 72% (14,668) | 28% (5701) |
ராஜஸ்தான் | 72% (12,640) | 28% (4896) |
உத்திரப்பிரதேசம் | 65% (17,662) | 35% (9500) |
ஜம்மு காஷ்மீர் | 65% (3090) | 35% (1688) |
அருணாச்சலப் பிரதேசம் | 63% (128) | 37% (76) |
மகாராஷ்டிரா | 56% (30,334) | 44% (23,857) |
மத்தியப்பிரதேசம் | 54% (6414) | 46% (5499) |
ஜார்க்கண்ட் | 54% (3210) | 46% (2772) |
ஹரியானா | 50% (7191) | 50% (7239) |
தமிழ்நாடு | 49% (12,161) | 51% (12,574) |
பஞ்சாப் | 49% (3952) | 51% (4170) |
மேற்குவங்கம் | 47% (8712) | 53% (9826) |
கர்நாடகா | 44% (20,954) | 56% (26,548) |
திரிபுரா | 44% (125) | 56% (157) |
கேரளா | 42% (15,699) | 58% (21,994) |
உத்திரகாண்ட் | 41% (3077) | 59% (4455) |
மேகாலயா | 38% (123) | 62% (204) |
மிசோரம் | 36% (64) | 64% (116) |
குஜராத் | 31% (3861) | 69% (8483) |
நாகலாந்து | 8% (22) | 92% (235) |
இப்பட்டியலில் முதல் 13 மாநிலங்களில் நகரங்களின் பரவலை விட கிராமங்களில் பரவல் அதிகரித்துவிட்டது. இதர மாவட்டங்களிலும் கிராமங்களின் பரவல் நகரங்களை இன்னும் சில நாட்களில் தாண்டிவிடும் நிலை இருக்கிறது. 31 சதவீதத்திலிருந்து துவங்கி 89% சதவீதம் வரை பல்வேறு மாநிலங்களில் பரவியிருக்கும் தொற்று ஒரு எச்சரிக்கையை அளித்திருக்கிறது.
ஏன் கிராமங்களில் பரவுவதை அபாய அறிகுறியாகப் பார்க்க வேண்டும்? – தர்மபுரி மாவட்டம் ஒரு பார்வை
தர்மபுரி மாவட்டம் தமிழ்நாட்டில் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. இம்மாவட்டத்தில் 251 கிராமங்கள் இருக்கின்றன. தர்மபுரி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 15 லட்சம் பேரில் கிட்டத்தட்ட 12.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கிராமங்களில் வசிக்கின்றனர். மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், கூலி வேலை செய்பவர்களாகவும் இருக்கின்றனர். 4 லட்சத்திற்கும் அதிகமானோர் விவசாயிகளாகவும், விவசாயக் கூலிகளாகவும் இருக்கின்றனர். 11,308 பேர் குடிசைத் தொழிலில் இருக்கின்றனர். ஓசூருக்கும், பெங்களூருக்கும், கர்நாடகாவின் பிற பகுதிகளுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களாய் சென்று பணிபுரியும் தொழிலாளர்களும் ஏராளம். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் அதிகமாக உள்ளனர்.
தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டும்தான் மாவட்டத்தின் முதன்மையான பெரிய பல்நோக்கு மருத்துவமனையாகும். இதைத் தவிர்த்து அரூர் அரசு மருத்துவமனை, பென்னாகரம் அரசு மருத்துவமனை, பாலக்கோடு அரசு மருத்துவமனை என சாதாரண அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் கொரோனா கேர் செண்டர்களாக 6 இடங்கள் இருக்கின்றன. கூடுதலாக ராகவேந்திரா மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தமாக 615 படுக்கைகள் உள்ளன. அதில் ICU படுக்கைகள் 141. மாவட்டத்தில் இந்த மருத்துவமனையில் மட்டும் தான் ICU படுக்கைகள் இருக்கின்றன. எனவே மாவட்டத்தின் மொத்த ICU படுக்கைகளின் எண்ணிக்கை 141 மட்டுமே.
ICU அல்லாத படுக்கைகளாக அரூர் அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகளும், பென்னாகரம் அரசு மருத்துவமனையில் 75 படுக்கைகளும், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளும் இருக்கின்றன.
இதர கோவிட் கேர் செண்டர்கள் சேர்த்து தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1455 மருத்துவப் படுக்கைகளே இருக்கின்றன. இவற்றில் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் 369. ICU படுக்கைகள் 141. மற்றவை சாதராண படுக்கைகளே.
(மருத்துவப் படுக்கைகள் குறித்த தரவுகள் அரசாங்க இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.)
ICU படுக்கைகளைப் பொறுத்தவரை அனைத்துமே நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் படுக்கைகளும் கிட்டத்தட்ட அனைத்தும் நிரம்பிவிட்டன. இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் 8 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே மீதமிருக்கின்றன. அவையும் நாளை நிரம்பிவிடக் கூடும்.
குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தின் 15 லட்சம் மக்களில் 99,000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிலும் இரண்டாவது டோஸ் 26,000 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. இன்னும் 10 % மக்களுக்குக் கூட தடுப்பூசி போடப்படவில்லை.
நேற்று ஒரு நாளில் மட்டும் 271 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் கணக்கு தெரிவிக்கிறது. பரிசோதனைக்கு வராமல் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் கிராம மக்களின் எண்ணிக்கையையும் சேர்க்கும்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும். தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1935 பேர் கொரோனா பாசிட்டிவாக இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இனிவரும் நாட்களில் தொற்று அதிகரிக்கும்போது ஏராளமான மக்களுக்கு மருத்துவப் படுக்கைகள் தேவை ஏற்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான மருத்துவக் கட்டமைப்பு இல்லாத நிலையில், நோய்ப்பரவல் குறித்த விழிப்புணர்வும் இல்லாமல் இது கொடியதொரு சூழலை உருவாக்கக் கூடும்.
தர்மபுரி எம்.பி விடுக்கும் எச்சரிக்கை
தர்மபுரி பாராளுமன்றத் தொகுதியின் எம்.பியான மருத்துவர் செந்தில் குமார், தர்மபுரி மாவட்டத்தில் இறப்பு விகிதம் மிக அதிகமாகச் செல்வதாகவும், மாவட்டம் சிவப்பு எச்சரிக்கைப் பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், முழுமையான கண்டிப்பான ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட அனைத்தும் நிரம்பிவிட்டதால் இன்னும் 10,000 படுக்கைகள் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தொற்று கிராமங்களுக்குப் பரவியதன் விளைவு இறப்பு விகிதங்களில் எவ்வாறு வெளிப்படுகிறது எனும் அவசரத்தினை உணர்ந்துகொள்ள முடியும்.
பெருநகரங்களைப் போல வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கான சாத்தியங்கள் கிராமங்களில் குறைவே
சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மக்களைப் போன்று வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளோ, விழிப்புணர்வோ கிராமத்தில் மிகவும் குறைவு. சாதாரண குடிசைகளிலும், ஓட்டு வீடுகளிலும் வசிக்கும் பெரும்பாலான மக்களிடம் தனிமைப்படுத்திக் கொள்ள வீடுகளில் அறைகளும் கிடையாது. வீட்டில் கழிப்பிடம் இல்லாமல் திறந்த வெளிக் கழிப்பிடத்தை பயன்படுத்துவோர் அதிகம்.
இந்நிலையில் பரிசோதனை இல்லாமல், காய்ச்சலுடன் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வு இல்லாமல் இயல்பாக கூட்டமாக அமர்ந்து பேசுகிறார்கள், நலம் விசாரிக்கிறார்கள். இவையெல்லாம் தொற்றினை கிராமம் முழுக்க பரவச் செய்திடும் அபாயம் இருக்கிறது. கிராமங்களில் உள்ள மக்களில் யாரிடமும் பல்ஸ் ஆக்சிமீட்டர் எனப்படும் ஆக்சிஜன் அளவை சோதிக்கும் கருவி கிடையாது. நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறையும்பட்சத்தில் அதைத் தொடக்கத்திலேயே கண்டறிவது இயலாது. அறிகுறிகளை புரிந்துகொள்ளாமலேயே மக்கள் மரணத்திற்கு தள்ளப்படும் சூழல் ஏற்படும்.
இதையெல்லாம் விட முக்கியமாக உள்ளே இருக்கும் கிராமங்களிலிருந்து தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துசேர வேண்டுமென்றால் சுமார் 30 கி.மீ தூரம் கடந்து வர வேண்டிய நிலையில் பல கிராமங்கள் இருக்கின்றன. அரசின் காப்பீட்டுத் திட்டம் இருந்தாலும் கூட தனியார் மருத்துவமனைகளும் பெரிதாகக் கிடையாது. ஆம்புலன்ஸ் பற்றாக்குறை நிகழும் இந்த சூழலில் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்வதென்பதே மிகப் பெரும் சவாலாகும். மருத்துவமனைக்கு வந்த பின்னரும் இடம் கிடைக்கவில்லையென்றால், பெருநகரங்களைப் போல அடுத்தடுத்த மருத்துவமனைகளுக்கும் தேடிச் செல்ல முடியாது.
ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் சூழலில் கிராம மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை தேடிப் பெறுவதோ, ஆக்சிஜன் கான்சண்ட்ரேட்டர்கள் வாங்குவதோ, ரெம்டெசிவர் மருந்தைத் தேடி வாங்குவதோ சாத்தியமில்லாததாகும்.
கிராமங்களுக்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டின் எல்லைப்புற மாவட்டமாக இருப்பதால் தர்மபுரி மாவட்டத்தின் உதாரணத்தைப் பார்த்தோம். இதேபோன்ற நிலையில் தான் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் இருக்கின்றன. ஆனால் வட மாநிலங்களின் கிராமங்களில் மருத்துவக் கட்டமைப்பின் நிலை இன்னும் மோசம். எனவே இந்த உதாரணத்தினை வட மாநிலங்களின் எந்த மாவட்டத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. கிராமங்களைப் பாதுகாப்பதற்கான துரித நடவடிக்கைகள் இல்லாவிட்டால் இரண்டாம் அலை ஒரு பேரழிவினை தமிழகத்திற்குக் கொடுக்கும்.
- கிராமங்கள் தோறும் மருத்துவக் குழுக்களை அனுப்புவதற்கு உடனடி ஏற்பாடு செய்திட வேண்டும்.
- அரசு அளித்திடும் கொரோனா நிவாரண உதவித் தொகையினை வீடுகளுக்கே சென்று நேரடியாக வழங்கிட வேண்டும்.
- கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக தடுப்பூசி போடுதலை விரைவுபடுத்திட வேண்டும். தடுப்பூசி குறித்து மக்களுக்கு அச்சம் இருப்பின் அதற்கு விளக்கம் அளித்து தெளிவுபடுத்திட வேண்டும்.
- ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக பல்ஸ் ஆக்சிமீட்டர் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.
- அனைத்துக் கட்சி குழுக்கள் மூலமாகவோ, கிராம இளைஞர் குழுக்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலமாகவோ அல்லது NCC போன்ற அணிகள் மூலமாகவோ விழிப்புணர்வை கிராமங்கள் முழுதும் ஏற்படுத்திட வேண்டும்.
- கொரோனா பரிசோதனை முகாம்களை கிராமங்களில் நடத்தி தொற்றுப் பரவலை கண்டறிந்திட வேண்டும்.
- CT ஸ்கேன் மையங்களை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பதோடு, தனியார் CT ஸ்கேன் மையங்களில் எடுக்கப்படும் ஸ்கேன் கட்டணத்தை மானியமாக அரசே ஏற்றிட வேண்டும்.
- மருத்துவப் படுக்கைகளை ஒவ்வொரு தாலுகாவிலும் உடனடியாக அதிகரிப்பதோடு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களையும் புதிதாக பணியில் நியமித்திட வேண்டும்.