கொரோனா நுண்கிருமியின் சேமிப்புகலனாக மாறுகிறதா நம் குழந்தைகளின் உடல் ? பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்.
இங்கு பள்ளிகள் திறக்கப்படவேண்டும் என்று சிலர் வலியுறுத்துகின்றனர். கொரோனா நோய்த் தொற்றின் வீரியம் மற்றும் அதன் வீச்சு இன்னும் சரிவரத் தெரியவில்லை. உலகெங்கும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் வேகத்துடன் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன என்றாலும், அவை ஒவ்வொன்றும் பல்வேறுகட்ட பரிசோதனைகளைக் கடந்து மக்களின் உபயோகத்திற்கு வருவதற்கு இன்னும் குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகலாம் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். இதுவரை தடுப்பூசி கண்டுபிடித்ததாக ரஷிய நாடும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அறிவித்திருந்தாலும் அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றனர் மருத்துவர்கள்.
அமெரிக்காவில் திறக்கப்பட்ட பள்ளிகளின் அதிர்ச்சி தரும் முடிவுகள்
சமீபத்தில் அமெரிக்காவின் ஜார்ஜியா மற்றும் மிசிஸிப்பி மாகாணங்களில் திறக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நூற்றுக்கணக்கான பள்ளி சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கு சிறுவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா நோய் தொற்றின் பாதிப்பை அங்குள்ள இளைஞர்களுக்கு ஏற்பட்ட நோய் பாதிப்புடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு தீவிர பாதிப்பையும் கொரோனா ஏற்படுத்தவில்லை. ஆனால் சிறுவர்களின் மூலமாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு தீவிரமாக நோய்த்தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அங்கு மேற்கொண்ட மருத்துவ ஆய்வுகளில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் மேல்சுவாசக் குழாயில் பெரியவர்களை விட 100 மடங்கிற்கும் அதிகமான அளவில் நுண்கிருமி பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்திருக்கக்கூடும் என கண்டறிந்திருக்கிறார்கள். ஏனெனில் இந்த பரிசோதனைகள் நடைபெற்ற போது அங்குள்ள சிறுவர்களுக்கு கொரோனா நோய் தொற்று எந்தவிதமான அறிகுறிகளையும் தெளிவாக வெளிப்படுத்தவில்லை.
மிக சமீபத்தில் வந்த புதிய ஆய்வானது மேற்கூறிய ஆய்வின் முடிவுகளை ஒத்திருப்பதோடு, இளவயதினர் அதிகளவில் நுண்கிருமித் தொற்றைக் கொண்டிருந்தாலும் அவர்களுள் பெரும்பான்மையோரிடம் எந்தவித நோய் பாதிப்பையும் அறியமுடியவில்லை என தெரிவித்திருக்கிறார்கள். அதேநேரத்தில் இந்த கொரோனா கிருமியானது அவர்களின் உடலுக்குள் சென்று அவர்களை நோய் பரப்பும் ஊடகங்களாக மிகத் தீவிரமாக மாற்றி வைத்திருப்பதை புதிதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
Journal Of Pediatrics மருத்துவ இதழ் நடத்திய ஆய்வு
குழந்தை மருத்துவம் தொடர்பான மருத்துவ ஆய்வு இதழான ‘ஜர்னல் ஆப் பீடியாட்ரிக்ஸ்’ (Journal of Pediatrics), பிறந்த சிசு முதல் 22 வயது வரையான 192 நபர்களை ‘இளவயதினர்’ என்ற வகைப்பாட்டில் வைத்து ஒரு ஆய்வை நடத்தியது. இவர்கள் அனைவரும் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமையில் (Massachusetts General Hospital – MGH) சுவாசத் தொற்று பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்கள் அங்கு கொரோனா நோய் தொற்றிற்காகவும் அல்லது சுவாசப் பாதையில் ஏற்படக்கூடிய பல்வேறு அழற்சிகளுக்கான சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்களிடம் பல்வேறு உடல் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அவர்களிடம் எடுக்கப்பட்ட நோய் பரிசோதனை முடிவுகளையும், ஏற்கனவே மற்ற இடங்களில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட தொண்டை, மூக்கு மற்றும் இரத்த மாதிரி பரிசோதனை முடிவுகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கொரோனா நுண்கிருமியை உடலின் செல்களுக்குள் அனுமதிக்கும் ACE 2 என்ற புரத ஏற்பியின் அளவும் (ACE2 receptor) அதனுடன் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பிணைப்பின் அளவையும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.
அறிகுறிகள் வெளிக்காட்டாத நோய்த் தொற்றுள்ளவர்களே அதிகம்
இதில் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 192 நபர்களில் 49 பேர்களுக்கு மட்டுமே கொரோனா நோயின் அறிகுறி வெளிப்படையாகவும் மேலும் 25 நபர்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறி மட்டுமே வெளிப்பட்டவர்களாகவும் காணப்பட்டனர். இதில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு விதமான அறிகுறிகள் தென்பட்டதே தவிர குறிப்பிடத்தக்க எந்தவொரு நோய் பாதிப்பையும் அறியமுடியவில்லை. “அவர்களைத் தாக்கிய கொரோனா வைரஸ் நுண்கிருமியானது இயல்பாகவே அதற்குண்டான எந்தவொரு அறிகுறிகளையும் வெளிப்படையாக காண்பிக்கவில்லை” என்று அந்த மையத்தின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறை மருத்துவர் அலிசியோ (Dr. Alessio Fasano) கூறியுள்ளார்.
சிறுவர்களிடம் பரவக்கூடிய கொரோனா தொற்றானது பொதுவான அறிகுறிகளையோ அல்லது அதற்கென்று நாம் அறிந்திருக்கக்கூடிய குறிப்பிடத்தக்க அறிகுறிகளையோ காண்பிப்பதில்லை. அவர்களிடம் வெளிப்படும் நோய் அறிகுறிகளாக சளித் தொல்லை, இருமல் மற்றும் இலேசான காய்ச்சல் என்றும் அல்லது இவற்றில் சிலவற்றை மட்டுமே கொண்டு குறைந்த அறிகுறிகளை காட்டுவதாகவும் மேலும் இவற்றின் பாதிப்பையும் மிகமிக குறைவாக வெளிப்படுத்துகிறது. இதில் மேலும் சிக்கலாக கொரோனா நோய் தாக்கம் தொடங்கிய இரண்டு நாட்களுக்கு பிறகே அவர்களுக்கு நுண்கிருமி தாக்குதலின் அளவு அதிகரிக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க குறிப்பு என்னவென்றால் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட் பெரியவர்களை விடவும் அதிக நுண்கிருமி தாக்குதல் கொண்டவர்களாக சிறுவயது கொண்டவர்களே இருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நோய்த்தொற்றில் உள்ள வேறுபாடு
இதைப்பற்றி மருத்துவர் லீல் யான்கர் (Dr. Lael Yonker) குறிப்பிடுகையில் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது கொரோனா நுண்கிருமி பெரியவர்களை தாக்கும் பொழுது கீழ்சுவாசக் குழாயில் பரவி பின்பு நுரையீரலுக்குப் பரவுகிறது. ஆனால் குழந்தைகளுக்கும் ,சிறுவயதினருக்கும் இந்த கிருமி மேல்சுவாசக் குழாயிலேயே தங்கி அங்கேயே நின்றுவிடுகிறது. அதன்பின்பும் பரவும் சிறுவர்களின் எண்ணிக்கையானது மிக மிகக் குறைவு. இதற்கு காரணம் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் கிருமியை செல்களினுள் அனுமதிக்கும் ACE 2 ஏற்பியானது மிக குறைந்த அளவே கிருமியின் நேரடி தாக்குதலுக்கு தன்னை வெளிப்படுத்துகிறது. இதனாலேயே கொரோனா வைரஸ் அவர்களிடம் எந்தவித தீவிர பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை .
மற்ற ஆய்வுகளைப் போலவே இந்த ஆய்வும் சிறுவர்கள் பெரியவர்களை விடவும் அதிக தொற்றுக்கு உள்ளாகிறார்கள் என்ற முடிவிற்கு வரவில்லை .ஆனால் அவர்களிடம் காணப்படும் அதிகப்படியான நுண்கிருமிகளின் தாக்கமானது, அது தொடர்பான மற்ற நோய் பாதிப்பிற்கும் உள்ள தொடர்பை கண்டறிய உதவியுள்ளது.
கொரோனாவுக்கும், மற்ற காய்ச்சல்களுக்கும் உள்ள வேறுபாடு
கொரோனா நோய் மற்ற காய்ச்சல் நோய்களைப் போலல்லாமல் மிகவும் வித்தியாசமாக தன்னை வெளிப்படுத்துகிறது. எந்த ஒரு நோயும் மனித உடல் அதற்கு உண்டான கிருமிகளின் தாக்கத்தை எந்த அளவிற்கு ஏற்றுக்கொண்டிருக்கிறதோ அந்த அளவு தீவிரத்தைப் பெறும். உதாரணமாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சலில் நோய் கிருமிகளின் தாக்கம் எந்தளவிற்கு நோயாளியின் உடலினுள் காணப்படுகிறதோ அந்த அளவிற்கு அதன் தீவிரத்தை வெளிக்காட்டும். ஆனால் சிறுவயதுடையோர் கொரோனா நோய் நுண்கிருமிகளை அதிகளவில் தன் உடலில் கொண்டிருந்தாலும் அதன் பாதிப்பானது குறைவாகவே வெளிப்படுகிறது. மேலும் குழந்தைகளின் சுவாசப் பாதையில் தொற்றக்கூடிய அதிகளவிலான கொரோனா நுண்கிருமியானது அவர்கள் மூலம் அதிக நோய்ப் பரவலை மற்றவர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய அபாயத்தை உருவாக்குகிறது.
இளவயதினருக்கும், சிறுவர்களுக்கும் ஏற்படும் நோய்த் தொற்றின் எண்ணிக்கையானது பெரியவர்களுக்கு ஏற்படும் தொற்றின் எண்ணிக்கைக்கு இணையாகவே இருக்கிறது என்றாலும், வித்தியாசம் என்பது இளவயதினருக்கு குறைவாக ஏற்படும் பாதிப்பு மட்டுமே. எனவே நோய்த் தாக்குதலுக்கு எதிரான பொது சுகாதார விதிமுறைகளை மேலும் நன்கு கவனித்து மேம்படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது .
நோய்த்தொற்று பரப்புபவர்களாக குழந்தைகளை மாற்ற வேண்டாம்
இந்த ஆய்வின் மூலம் தெளிவாக தெரியவருவது என்னவென்றால் அனைத்து வயதினரும் கொரோனா நுண்கிருமி தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்பதும், இதனால் நாம் அனைவருமே அதிக அளவிலான நுண்கிருமியை நம் உடலினுள் தேக்கிவைத்து அதை சுமந்துசெல்லும் நோய் பரப்புனராக மாற வாய்ப்பிருக்கும் ஆபத்தையும் தெரிவிக்கிறது.
பள்ளிகள் திறந்து குழந்தைகள் விளையாட அனுமதிக்கப்பட்டால் இந்த நோய்ப் பரவல் இன்னும் அதிகமாகக்கூடும். எனவே அதற்கேற்ப முன்தயாரிப்புகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் காய்ச்சல் மட்டுமே சிறுவர்களுக்குரிய கொரோனா அறிகுறியாக என்ற அனுமானத்தை மாற்றி மேலும் அதிகமான நோய் அறிகுறிகளை கண்டறிய வேண்டும். அப்போதுதான் கொரோனா வைரஸ் தாக்கியிருக்கும் சிறுவர்களை முழுமையாக அடையாளம் கண்டு தகுந்த சிகிச்சை அளிக்கமுடியும். அனைவருக்கும் முகக் கவசம், அடிக்கடி கைகளை கழுவும் பழக்கம், சீரான இடைவெளியில் செய்யக்கூடிய நோய் பரிசோதனை, தனிநபர் இடைவெளி ஆகியவற்றில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
இன்னும் துவங்கவே இல்லை கொரோனாவின் இரண்டாவது அலை
இதுவரை கொரோனா தொற்றின் முதல் அலை இன்னும் முடிவடையவில்லை. இனிவரும் இரண்டாவது அலை (Second Wave) அதிக உயிர் இழப்பிற்கு வழி வகுக்கக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதற்கு முன் “ஸ்பானிஷ் காய்ச்சல் ” என்றழைக்கப்பட்ட இன்ஃப்ளுயன்சா பேரழிவு தொற்று நோயில் இரண்டாவது அலையில்தான் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்ற வரலாறை சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த ஆய்வில் மருத்துவர் அலிசியோ” மூன்றாவது கொரோனா அலையானது குழந்தைகளால் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறார் . அதனால் அதற்குரிய முன்னேற்பாடுகளை கவனத்தில் கொண்டு இப்பொழுதே அதை தடுப்பதற்குரிய வழிகளை ஆராய வேண்டும் என்கிறார். குழந்தைகளின் உடல் கொரனோ கிருமியின் சேமிப்பு கலனாக மாறுவதை உரிய நேரத்தில் தடுக்கவேண்டியது நம் அனைவரின் முயற்சியில் உள்ளது.