2020 மார்ச் மாதத்திற்குப் பின் இந்த உலகம் முற்றிலும் புதிதான சூழ்நிலையை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று நோயின் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை தினந்தினம் அதிகரித்தவண்ணமே இருக்கிறது. எல்லா திசைகளிலிருந்தும் துயரச்செய்திகள் வந்து ஒவ்வொரு நாளையும் இந்த வாழ்வின்மீது நம்பிக்கையிழக்க வைக்கிறது. நம்பிக்கையளிக்கக்கூடிய நவீன அறிவியலின் மருத்துவ கண்டுபிடிப்புகளுக்காக உலகமே காத்துக்கொண்டிருக்கிறது.
தடுப்பு மருந்துகள் மக்களின் தேவைக்கு வரக்கூடிய நாட்கள் நீண்டுகொண்டே போக மாற்று வழிமுறைகளை எல்லா நாடுகளும் தேடத்துவங்கியிருக்கின்றன. அப்படி ஓரு வழிமுறைதான் ‘மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ (Herd Immunity).
மந்தை எதிர்ப்பு சக்தி பற்றி உலகில் தற்போது நிலவும் கருத்துகள்
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் தொற்றுநோய் ஆலோசகர் கிரஹாம் மெட்லி (Graham Medley) மந்தை நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கப் போவதாக அறிவித்தவுடன் நாலாபுறங்களிலிருந்தும் கண்டனங்களும், கேலிப்பேச்சுகளும் எழுந்தன. உடனே சுதாரித்த அதிகாரிகள் அப்படி எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என்றுசொல்லி பின்வாங்கினர்.
ஆகஸ்ட் மாதத்தில் ஸ்வீடன் அரசு மந்தை நோயெதிர்ப்பு சக்தியை நோக்கி தனது கவனத்தை திருப்பியபோது பிரபலமான கணிதவியலாளர் மார்கஸ் கார்ல்சன் (Marcus Carlsson) அந்த முடிவை கடுமையாக எதிர்த்தார். “நாங்கள் பேரழிவை நோக்கி செல்லக்கூடிய ஆட்டுமந்தையைப் போல வளர்க்கப்படுகிறோம்” என கவலையை பகிர்ந்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின் மைக்கேல் ரியான் (Michael Ryan) பத்திரிகையாளர்களிடம், “நாம் இன்னும் இந்த கொரோனா நோய் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியை நெருங்கவில்லை. பரவுதலை தடுப்பதற்கு உடனடியாக செய்ய வேண்டியது என்ன என்பதில்தான் அனைவரின் கவனமும் இருக்கிறது. இந்த நேரத்தில் மந்தை நோயெதிர்ப்பு சக்திதான் நம்மை காக்கும் என்ற நம்பிக்கையில் வாழக்கூடாது” என்று உண்மையைப் பகிர்ந்தார்.
ஆனால் அந்த விவாதம் அத்துடன் முடியவில்லை. ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில், அமெரிக்க வெள்ளை மாளிகை மந்தை நோயெதிர்ப்பு சக்தி பற்றிய ஒரு கொள்கையை ஆலோசிக்கக்கூடும் என்று சிலர் சில ஆதாரங்களை வெளியிட்டனர். வெள்ளை மாளிகை அதிகாரிகள் உடனடியாக அதுபற்றிய மறுப்பை வெளியிட்டனர்.

’மந்தை எதிர்ப்பு சக்தி’ என்பதன் பொருள்
மந்தை நோயெதிர்ப்பு சக்தியை ஒருவரியில் சொல்வதானால் “நாம் அந்த இலக்கை அடைந்தால், எந்தவொரு தொற்றுநோயும் முடிந்துவிடும்”. ஆனால் அதை அடைவதற்கு, பெரும் எண்ணிக்கையிலான மக்களின் உடல்நல பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதற்கு பெரும் பின்னடைவைத் தரக்கூடும்.
“மந்தை” என்ற சொல் பொதுவாக வளர்ப்பு விலங்குகளின் கூட்டத்தை, குறிப்பாக கால்நடைகளைக் குறிக்கிறது. மந்தையில் வளர்க்கப்படும் ஆடு, மாடு போன்ற விலங்குகள் மனித நுகர்வுக்காக தேவைப்படுகின்றன அல்லது பலியிடப்படுகின்றன. இந்த மந்தை நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும்போது எப்படி விலங்கு மந்தையின் நோக்கத்திற்காக விலங்குகளை பலியிடுவது போல, பெரும்பாலான மக்களை பெருந்தொற்ற்றிலிருந்து காக்கக்கூடிய வழிமுறைகளின் பல்வேறு படிநிலைகளில் நாம் கணிக்க இயலாத வகையில் உயிரிழப்புகள் நேரிடலாம்.
மந்தை எதிர்ப்பு சக்தி பயன்பாட்டின் வரலாறு
“மந்தை நோயெதிர்ப்பு சக்தி” (Herd Immunity) என்ற சொல் எவ்வாறு மருத்துவம் மற்றும் சுகாதார புலத்தில் நுழைந்தது என்பதை பார்க்கலாம். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க கால்நடை மந்தைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு தன்னிச்சையாக கரு கலைவு ஏற்பட்டது. இது தொற்றாக மாற்றமடைந்து அங்கிருக்கும் அனைத்து மந்தைகளுக்கும் பரவியது. 1910-ம் ஆண்டிற்குப் பிறகு இது அமெரிக்காவில் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய முன்னணி தொற்றுநோயாகவும், விலங்கினங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும், மந்தை உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் மாறியது.
அப்பொழுதுதான் முதன்முதலில் அமெரிக்க கால்நடை மருத்துவர்களின் புழக்கத்தில் இந்த சொல் அறிமுகமாகியது. நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை விவசாயிகள் கொன்றனர் அல்லது விற்பனை செய்தனர். அப்போது கன்சாஸ் (Kansas) கால்நடை மருத்துவர் ஜார்ஜ் பாட்டர் (George Potter) இது தவறான அணுகுமுறையாக இருக்கக்கூடும் என்பதை உணர்ந்தார். 1916-ம் ஆண்டில் அவர் அமெரிக்க கால்நடை மருத்துவ சங்கத்தின் செய்தி இதழில் (Journal of the American Veterinary Medical Association) அடோல்ஃப் ஐச்சோர்னுடன் ( Adolph Eichhorn) எழுதும்போது, “மந்தை நோயெதிர்ப்பு சக்தி” என்ற செயல்முறையை உருவாக்கப்படுத்தினார்.
அவர் 1918-ல் எழுதியது போல், “கருக்கலைப்பு போன்ற தொற்று நோய்களை நெருப்புடன் ஒப்பிடலாம், நெருப்பு எரிவதற்கான எரிபொருள் தொடர்ந்து சேர்க்கப்படாவிட்டால், நெருப்பு விரைவில் அணைந்துவிடும். அதுபோல இந்த நோயை வெல்வதற்கு அது பரவ தடையாக இருக்கக் கூடிய நோயெதிர்ப்பு சக்தி கொண்ட மாடுகளை மந்தையில் தக்கவைப்பதன் மூலமாகவும், அதன் கன்றுகளை வளர்ப்பதன் மூலமாகவும், வெளிநாட்டு கால்நடைகளை அறிமுகப்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலமாகவும் அதன் தீவிரத்தை தணிக்க முடியும். இதன்மூலம் மந்தை நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி, நெருப்பு போன்ற எந்த தொற்றுநோயையும் வெல்லலாம்.” என்றார்.

முதல் உலகப் போரின் போது இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு
பாட்டரின் கருத்து 1917 மற்றும் 1920 ஆகிய ஆண்டுகளில் ஸ்காட்லாந்திலிருந்து வெளிவரும் கால்நடை ஆய்வு இதழ் (Veterinary Review ) மற்றும் ஸ்காட்லாந்து விவசாய இதழ் (Scottish Agriculture) ஆகிவற்றில் வெளிவந்ததன் மூலம் இங்கிலாந்தை அடைந்தது. இது ஒரு முக்கியமான தருணத்தில் இங்கிலாந்தை வந்தடைந்தது.
அப்போது முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட இங்கிலாந்தின் அனைத்து படைகளிலிருந்த படைவீரர்களுக்கும் தொற்றுநோய்கள் பரவி அவர்கள் அதற்கெதிராக போராடிக்கொண்டிருந்தனர். மருத்துவ வல்லுநர்கள் தொற்று நோயை ஏற்படுத்தக்கூடிய கிருமிகளைக் கண்டறிவதிலும், வேறுபடும் மக்கள்தொகை கொண்ட பல்வேறுஇடங்களில் நோயின் தாக்கம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதைக் கண்டறிவதிலும் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த நோய்க் கிருமிகளை எதிர்ப்பதில் மக்கள்தொகையின் எண்ணிக்கையானது முக்கியத்துவம் பெறுகிறதா என்பது பற்றியும், எப்படி பல்வேறுபட்ட காலங்களில் அதன் பாதிப்பானது உயர்ந்தும், வீழ்ந்தும் காணப்படுகிறது என்பதைப் பற்றியும் பல ஆய்வுகள் மேற்கொண்டனர்.
ஜூலை, 1919-ல் மருத்துவ ஆய்விதழான தி லான்செட் (The Lancet) இதழில், நுண்ணுயிரியல் ஆய்வாளர் (Bacteriologist) டோப்லி (W W C Topley) என்பவர் ஒரு சோதனையை மேற்கொண்டார். ஏராளமான எலிகளை பல்வேறு குழுக்களாக பிரித்து சோதனை நடத்தினார். அதில் ஒவ்வொரு எலி குழுவிற்குள்ளும் செயற்கையாக தொற்றுநோய்களை உண்டாகி சோதித்தார். அப்போது ஒரு தொற்று பரவிக்கொண்டிருக்கும் போது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய அல்லது பலவீனமான புதிய எலிகளின் வருகையானது அந்த குழுவிற்குள் நிகழாவிட்டால், நோயெதிர்ப்பு சக்தி கொண்ட எலிகளின் எண்ணிக்கை குழுவிற்குள் அதிகரித்து தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1923-ம் ஆண்டில் மருத்துவ இதழான ‘ஜர்னல் ஆஃப் ஹைஜீன்’ (Journal of Hygiene)-ல் வெளிவந்த கட்டுரையில், டோப்லியும், ஜி.எஸ்.வில்சனும் (G S Wilson) இந்த நிகழ்வை “மந்தை நோயெதிர்ப்பு சக்தி” (Herd Immunity) என்று பெயரிட்டு விவரித்தனர்.
மந்தை நோயெதிர்ப்பு சக்தியை பற்றிய விவாதங்கள் மருத்துவத்துறையிலும் எழுந்தன. பள்ளி செல்லும் வயதடைந்த குழந்தைகளுக்கு வரக்கூடிய தொற்று நோய்களுக்கும் எலிகளுக்கு வரக்கூடிய தொற்று நோய்களுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதை டோப்லி கண்டறிந்தார். மேலும் கால்நடைகளுக்கு தொற்றுநோய் வரக்கூடிய சமயங்களில் நோய் பாதித்த கால்நடைகளைப் பிரித்துவைத்து நோயைத் தடுக்கும் மரபு வழியான செயல்முறைகளை ஏற்கனவே விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டிருப்பதையும், அதே வழிமுறைகளை மனிதர்களுக்கும் பின்பற்றினால் அது மிக எளிதாக இருக்கக்கூடும் என்பதையும் கணித்தார்.
இப்போது உலகெங்கும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதுவும் ஆரோக்கியமான மாணவர்களை, நோய் பாதித்த மாணவர்களிடமிருந்து பிரித்து நோய் பரவும் வேகத்தை மட்டுப்படுத்தும் செயல்முறைன் கீழ்தான் வருகிறது.
(பள்ளி குழந்தைகளை எவ்வாறு கொரோனா பாதிக்கிறது என்பது பற்றிய கட்டுரையும் முன்பே Madras Radicals இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது. மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்)
இங்கிலாந்தின் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
டோப்லியின் எண்ணங்கள் கூடியவிரைவிலேயே சோதனைக்கும் உள்ளாக்கப்பட்டன. 1923-ம் ஆண்டில் கிரீன்விச்சில் உள்ள ராயல் நேவல் ஹாஸ்பிடல் பள்ளியில் (Royal Naval Hospital School) தொண்டை அழற்சி நோயான டிப்தீரியா(Diphtheria) தொற்றுநோய் பரவுவதை நோயியல் பேராசிரியரான ஷெல்டன் டட்லி (Sheldon Dudley, professor of pathology) அறிந்தார். அங்கு தனது சோதனைகளை தொடங்க எண்ணினார். பள்ளியும் அவருக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட ஆய்வகத்தையும் வழங்கியது.
அந்த பள்ளியில் ஒரே விதமான உடல்திறன் கொண்ட மாணவர்கள் கல்வி பயில பல்வேறு பருவங்களில் வந்தனர். அவர்கள் 70 முதல் 126 படுக்கைகள் கொண்ட பள்ளி விடுதியில் தங்கி கல்வி பயின்றனர். டட்லி இந்த மாணவர்களிடம் பரவிய தொற்று நோய் தொடர்பான அனைத்து தரவுகளையும் சேகரித்து, போரில் பங்கேற்று தொற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளான கடற்படை வீரர்களின் தரவுகள் மற்றும் எச்.எம்.எஸ் இம்ப்ரெக்னபிள்(HMS Impregnable) என்ற பயிற்சிக் கப்பலில் பணியாற்றிய வீரர்களைப் பற்றிய தரவுகள் இம்மூன்றையும் ஒன்றிணைத்து தனது ஆய்வை பூர்த்தி செய்தார்.

தனது ஆய்வைக் குறித்த அறிக்கையை டிப்தீரியா மற்றும் ஸ்கார்லட் காய்ச்சல் (Scarlet fever), மற்றும் நீர்த்துளிகள் மூலம் பரவுகின்ற நோய்த்தொற்றுகள் குறித்து ஆய்வு செய்யும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பினார். எலிகளின் குழுவினை வைத்து செய்த தொற்றுநோய் பற்றிய சோதனைக்கும், கிரீன்விச்சில் சிறுவர்களிடையே ஏற்பட்ட டிப்தீரியா தொற்றுநோய் பற்றிய சோதனைகளுக்கும் பல்வேறு ஒப்புமைகளை உணர்ந்தார். 1924-ம் ஆண்டில் தி லான்செட்டில் வந்த ஒரு கட்டுரையில், டட்லி மனிதர்களுக்கான “மந்தை நோயெதிர்ப்பு சக்தி” என்ற பதத்தை பயன்படுத்தினார்.
மக்களை மந்தைகளாக பிரிக்கும் வகைப்பாட்டு முறை விவாதிக்கப்பட்டது
1929-ம் ஆண்டு ஒரு கட்டுரையில் , “ஒட்டுண்ணிகளின் சூழலியலை ஏற்றுக்கொண்ட மனிதஇனம்’ என்ற கட்டுரையிலும் இதுபற்றி விரிவாக விளக்கினார் (Human Adaptation to the Parasitic Environment). அந்த கட்டுரையில் மனித சமூகத்தை பல்வேறு மந்தைகளாக உருவாக்கப்படுத்துவது மிகமிக எளிதானதென்றும், உதாரணமாக ஒரு நாட்டில் வசிப்பவர்களை, நகரங்களில் வசிப்பவர்கள் ,கிராமங்களில் வசிப்பவர்கள் என்றும், கடற்கரையோரம் வசிப்பவர்களை, மீனவ மக்களென்றும், கடற்கரையோரம் வசிப்பவர்கள் என்றும், நோயாளிகளை பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் என்றும், சிறப்பு மருத்துவ மனைகளில் சிகிச்சைபெறும் நோயாளிகள் என்றும் எளிதாக இதுபோன்று பல்வேறு காரணிகளைப் பயன்படுத்தி பல்வேறு மந்தைகளாக பிரிக்க இயலும் என்றார்.
ஆங்கில மந்தை (English Herd) என்ற வார்த்தை பயன்பாடு
விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு என்று உருவகப்படுத்தப்பட்ட இந்த சோதனை ஏற்கனவே விலங்குகளின் அடையாளத்தின் கீழ் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் மரபுகளை ஈர்த்தது. வரலாற்றாசிரியர் ஹாரியட் ரிட்வோ( Harriet Ritvo) தி அனிமல் எஸ்டேட் (The Animal Estate) எனும் நூலில் குறிப்பிடுவதைப் போல, விலங்குகளானது நீண்ட காலமாக இங்கிலாந்தில் தேசிய வகைகளையும், மரபையும் மற்றும் அடையாளங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீட்டு மரபாக பயன்படுத்தப்பட்டு வருவதைக் குறிப்பிட்டு, அறுவை சிகிச்சை நிபுணராகவும், ஆராய்ச்சியாளராகவும் மற்றும் மருத்துவ நிர்வாகியாகவும் திகழ்ந்த டட்லி “ஆங்கில மந்தை” (English herd) என்ற பதத்தை முதலில் உபயோகித்தார்.
மனித மந்தை மற்றும் நுண்ணுயிர் மந்தை
அவர் 1934-ம் ஆண்டு தனது அறிக்கையான டிஃப்தீரியாவுக்கு எதிரான “மந்தை நோயெதிர்ப்பு சக்தி”யை “மனித மந்தை” (The human herd)என்ற வகைப்பாட்டில் “இரவு உணவு உண்ணும் கிரீன்வீச் சிறுவர்கள்” (Greenwich boys at dinner) என்ற தலைப்பில் வெளியிட்டார். அந்த அறிக்கையில் சேர்ந்தே உண்ணும் சிறுவர்களின் புகைப்படங்களை “மனித மந்தை” என்ற தலைப்பிலும், அந்த சிறுவர்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்ட நுண்கிருமிகள் செறிவின் புகைப்படங்களை, “புரத சோதனையில் காணப்படும் நுண்ணுயிர் மந்தை” (The bacterial herd – colonies of diphtheria on culture media) என்ற தலைப்பிலும் முன்வைத்தார்.
அப்போது ‘தி லான்செட்’ இதழ் குறிப்பிட்டது போல், “நவீனமான இந்த சமூகத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்ட எவரும் ‘மனித மந்தை’ என்ற சொற்றொடர் இங்கே ஒரு அறிவியல் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது அதற்கு முரண்பாடான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆச்சரியப்படலாம். ஆனால் இந்த விஷயத்தில் அவை குறிப்பிடக்கூடிய அர்த்தங்கள் பயன்படுத்தப்படும் காலங்கள் வெகு தொலைவில் இல்லை” என்றது குறிப்பிடத்தக்கது.
இன மந்தை நோயெதிர்ப்பு சக்தி (Racial Herd-Immunity)
1930-களில் “மந்தை நோயெதிர்ப்பு சக்தி” என்பது தொற்றுநோய் குறித்த மருத்துவதின் அங்கமாக மாறியது. இன்ஃப்ளூயன்ஸா (Influenza), போலியோ(Polio), பெரியம்மை (Smallpox) மற்றும் டைபாய்டு (Typhoid) போன்ற தொற்று நோய்களை மந்தை நோயெதிர்ப்பு சக்தியின் வழிமுறைகளை பயன்படுத்தி அவற்றை வெல்வது பற்றியதான விவாதங்கள் அங்கு வெளிவந்த பாடப்புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் உள்ள பொது சுகாதார அறிக்கைகளில் வெளிவந்தன. அப்போது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் மக்களுக்குள் இனவெறிகொண்டு அவர்களுக்குள் தாக்குதல்கள் அதிகரித்த நேரத்தில் இன வேறுபாடு பற்றிய கருத்துக்களுடன் ஒவ்வொரு இனத்திற்குள்ளும் இருக்கக்கூடிய மந்தை நோயெதிர்ப்பு சக்தி பற்றிய விவாதங்களும் குறுக்கிட்டன.
1931 ஆம் ஆண்டு லான்செட் இதழானது சமூகத்தின் குறிப்பிட்ட இனக் குழுக்களுக்கு, உதாரணமாக நியூசிலாந்தில் வசிக்கும் மோரி (Māori) என்ற பூர்வக்குடியைச் சார்ந்த மக்களுக்கு இயற்கையாகவே “இன மந்தை-நோயெதிர்ப்பு சக்தி” (Racial Herd-Immunity) இருப்பதைக் கண்டு அதை வெளிப்படுத்தி வியப்பை வெளியிட்டது.
மந்தை நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கான மந்தையின் இயல்புகள்
ஆரம்பகால ஆராய்ச்சியாளர்கள் “மந்தை நோயெதிர்ப்பு சக்தி” பற்றிய தெளிவான வரையறையை வழங்கவில்லை. இயற்கையாகவே வெளிப்படக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியையோ அல்லது நோய்எதிர்ப்புக் கூறுகளையோ பெறுவதற்கு ஒரு மந்தையின் என்னென்ன இயல்புகள் காணப்படுகின்றன அல்லது தேவைப்படுகின்றன என்பதில் டட்லி கவனம் செலுத்த விரும்பினார். பின்னர் டோப்லி அதுபற்றி மிகவும் விரிவான கருத்தை கூறினார்.
1935 ஆம் ஆண்டில் ராயல் ஆர்மி மெடிக்கல் கார்ப்ஸின் இதழில் (Journal of the Royal Army Medical Corps) அவர் விளக்கமளித்தபடி, ஒவ்வொரு மக்கள் சமூகத்தையும் தனித்தனி மந்தைகளாக பிரித்தல் , அந்த மந்தைகள் சமூகத்துடன் எந்தவிதமான வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிறதோ, அதற்கு காரணமான சமூக காரணிகளும் அந்த மந்தையின் உள்ளே மந்தை நோயெதிர்ப்பு சக்தி மிதமாகவோ/விரைவாகவோ பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன.
உதாரணமாக இங்கிலாந்தில் வசிக்கும் மக்களை “ஆங்கில மந்தை” (English herd) என்று வகைப்படுத்தினால் அந்த மந்தையானது பிளேக் (Plague), மலேரியா (Malaria) மற்றும் டைபஸ் (Typhus) ஆகிய நோய்களுக்கு எதிரான மந்தை நோயெதிர்ப்பு சக்தியை இயல்பாகவே பெற்றிருக்கும். ஏனெனில் அந்த மந்தை இந்த நோய்களுக்கு தேவையான காரணிகளுடன் நெருங்கிய தொடர்பில் வாழவில்லை. அதனால் பலமான நோயெதிர்ப்பை இயல்பாகவே அந்த மந்தை பெற்றிருந்தது.
தடுப்பூசியின் வழியிலான மந்தை நோயெதிர்ப்பு
பின்வந்த 1950-ம் ஆண்டிலிருந்து 1960-ம் ஆண்டுவரை பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது ‘மந்தை நோயெதிர்ப்பு’ முக்கியத்துவம் பெற்றது. அப்போது ஒரு குறிப்பிட்ட அளவுள்ள மக்கள் தொகையில் எத்தனை சதவிகித மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடையலாம் என்ற கேள்வி எழுந்தது. அதன்பின் மீண்டும் இந்த மந்தை தடுப்பு பற்றிய கவனம் 1990களில் எழுந்தது.
இதில் குறிப்பிடத்தக்கவொரு விடயமாக “மந்தை நோய்எதிர்ப்புசக்தி” என்பதில் இருக்கும் மந்தை என்ற சொல் அப்போது வெளிவந்த எழுத்தாளர் எச் ஜி வெல்ஸின் நாவலான “டைம் மெஷின்” (H G Wells’ Time Machine) மற்றும் எழுத்தாளர் டேவிட் மிட்சலின் கிளவுட் அட்லஸ் (David Mitchell’s Cloud Atlas) போன்ற படைப்புகளில், பலியிடப்படுவதற்காக மந்தைகளாக வளர்க்கப்படும் மனிதர்களைப் பற்றிய புனைவுகளாக வெளிவந்தன. இந்த படைப்புகள் மக்கள் மனதில் எழும் பல்வேறு ஐயங்களுடன் ஒத்திசைவாக அமைந்திருந்ததன என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் மந்தை நோயெதிர்ப்பு எனும் வழிமுறை எதிர்ப்பை சந்திப்பதற்கான காரணம்
இந்த வருடம் மார்ச் மாதம் பல நாடுகள் எடுத்திருக்கவேண்டிய ‘மந்தை நோயெதிர்ப்பு’ நடவடிக்கைகள் பல்வேறு தடைகளை சந்தித்தது. இதற்கு காரணம் மக்கள் மனதில் எழுந்த மந்தையில் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் மந்தை நோயெதிர்ப்பில் ஏற்படக்கூடிய ஈகைகள் இவை இரண்டிற்குமான தொடர்புகள் பற்றிய அச்சங்களேயாகும். இவை தொடர்பாக வெளிவந்த அறிக்கைகள் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் இந்த மந்தை நோய்த்தடுப்பு முறையை செயல்படுத்தினால் ஏராளமான மனிதர்கள் உடல்நலம் பாதிக்கக்கூடும் அல்லது இறக்கக்கூடும் என்ற அச்சத்தை மக்கள் மனதில் விதைத்திருக்கக் கூடும்.
எப்படியாயினும் ‘மந்தை நோயெதிர்ப்பு’ என்ற சொல் இன்னும் மறையவில்லை. 1020-களில் டிப்தீரியாவை டட்லி எதிர்கொண்டபோதும், 2020-ம் ஆண்டில் நாம் இப்போது எதிர்கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றும் மக்களின் ஒரே விதமான இன்னல்களையே வெளிப்படுத்துகின்றன. நீர்த்துளிகள் மூலம் பரவும் கொரோனா தொற்றுநோயை தடுப்பூசி அல்லது சிகிச்சை இல்லாமல், தனிநபர் இடைவெளி மற்றும் சுகாதாரம் பேணுவதன் மூலம் மட்டும் கட்டுப்படுத்தமுடியுமா என்ற கேள்வி இப்போதும் மருத்துவ ஆய்வாளர்கள் மனதிலிருக்கிறது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மந்தை நோயெதிர்ப்பு சக்திக்கான வாய்ப்புகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. பல மாதங்களாக கொரோனா நோயின் தாக்குதல் நீடித்தபோதிலும், மனித இரத்தத்தில் காணப்படும் கொரோனா நுண்ணுயிரிக்கான எதிர்ப்புகூறுகள் (Antibody)மிகக் குறைந்த அளவே கண்டறியபட்டிருக்கின்றன. ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள நகரங்களில் வாழும் மக்களின் இரத்தத்தில் 10% க்கும் குறைவாகவே நோய் எதிர்ப்புசக்தி கண்டறியப்பட்டுள்ளது.
‘தி லான்செட்’ இதழில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தங்கள் முடிவாக “ஏற்கனவே கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட ஆராய்ச்சிகளானது, செயற்கையாக நோய்த்தொற்றின் மூலம் உருவாக்கப்படும் மந்தை நோயெதிர்ப்பு சக்தியை அடைவதற்காக இதுவரை முன்மொழியப்பட்ட எந்தவொரு வழிகாட்டுதல்களும் நெறிமுறையற்றதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அதை அடைய முடியாத இலக்காகவும் கொண்டிருக்கின்றன ” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் மந்தை நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. அதாவது கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற வகை வைரஸ்கள் மனித உடலில் உட்புகும்போது குறைந்த அளவிலான நோய்எதிர்ப்புக் காரணிகளே (Antibodies) மனித உடலால் தூண்டப்படுகின்றன என்பதால் இந்த முறை பயன்தராது என்று யூகிக்கின்றனர்.
இன்னும் சில ஆரய்ச்சியாளர்கள் உடலில் தோன்றக்கூடிய நோய்எதிர்ப்பு காரணிகள் (Antibodies) இதில் மிக முக்கியப்பங்கு வகிக்காது என்றும், ஏனெனில் மனித செல்லில் இருக்கக்கூடிய டி- உயிரணுக்கள் என்றழைக்கப்படக்கூடிய T-செல் (T-cell) எதிர்ப்பு சக்தியையே கொரோனா வைரஸ் தூண்டக்கூடும் என்பதால் இந்த வழிமுறைகளை சந்தேகிக்கின்றனர்.
இந்த வழிமுறையை ஆதரிப்பவர்களோ மந்தையாக பிரிக்கப்படும் ஒவ்வொரு மனித மந்தையிலும் இதைப் பயன்படுத்தும்போது, பலவீனமான, எளிதில் நோய் தாக்கக்கூடியவர்கள் முதலில் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஆனால் அந்த மந்தையில் 20% சதவிகிதம் பேர்களுக்கு நோய் பரவல் ஏற்பட்டாலே நாம் விரும்பும் மந்தை நோயெதிர்ப்பு சக்தியின் நோக்கத்தை அடையலாம் என்கின்றனர்.
இப்போது நடப்பது ஒரு சதுரங்க நகர்வு
கொரோனா வைரஸ் தடுக்கக்கூடிய தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு இன்னும் காலங்கள் நீளலாம். அதுவரை ஊரடங்கு மற்றும் தனிநபர் இடைவெளி போன்ற வழிமுறைகள் சமூகத்தின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கக்கூடும். ஆனாலும் நமக்கு கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கு அவற்றை விட சிறந்த தேர்வுகள் இப்போது நம்முன் எதுவுமில்லை.
பிரிட்டிஷ் பொது சுகாதார நிபுணர் ராஜ் போபால் (Raj Bhopal) இந்த நிலைமையை சதுரங்கத்தின் நகர்வுகளுடன் ஒப்பிட்டார், “சதுரங்க விளையாட்டில் ஒரு நேரத்தில் நாம் எடுக்கக்கூடிய நகர்வு அதன்பின்னான அனைத்து நகர்வுகளின் திட்டத்தையும் மாற்றக்கூடும். அப்போது நாம் அங்கு ஒவ்வொரு நகர்வுக்கான திட்டத்தையும் ஆராய வேண்டும். ஏனெனில் எந்த நகர்வு பொருத்தமற்றது என்பது அப்போதுதான் புரியும்” என்றார். மேலும் ‘மந்தை நோயெதிர்ப்பு’ (Herd Immunity) என்ற பதம் விலங்குகளுடன் தொடர்புள்ளதாக மக்கள் மனதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதால் இதை ‘மக்களின் நோயெதிர்ப்பு’ (Population Immunity) என்ற பதத்திற்கு மாற்றலாம் என்று அறிவுறுத்தினார். ஆனால் பெயர் மாற்றங்களால் ஒருபோதும் நாம் சிக்கல்களை சரிசெய்துவிட முடியாது.
உண்மை என்னவென்றால் தடுப்பூசி மருந்தை நாம் விரைவாக கண்டுபிடிக்காவிட்டால் நோயெதிர்ப்பு சக்தியை மக்கள் அடையும் முன்னரே ஏராளமானோர் கொரோனா நோய் தாக்குதலால் இறக்கக்கூடும்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் ஏராளமான உயிரிழப்புகள் அமெரிக்கா, இங்கிலாந்து மட்டுமல்லாது உலகெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது மக்களின் வாழ்வியலில் மிகப்பெரும் பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வுகள் திட்டமிடப்பட்ட இனவெறியையும், வறுமையையும் சிறுபான்மை சமூகங்களில் ஏற்படுத்துகின்றன.
உதாரணமாக நியூயார்க் நகரத்தின் அருகிலிருக்கும் ஒரு புறநகர் பகுதியில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்துவந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். சமீபத்தில்அங்கிருக்கும் மருத்துவமனையில் அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனைகளில் 68.4% சதவிகித மக்களுக்கு அவர்களின் இரத்தத்தில் கொரோனா நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு காரணிகள் (Antibodies) கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த நோயெதிர்ப்புக் கூறுகள் அந்த தனிநபர்களைப் பாதுகாக்குமா அல்லது மந்தை நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குமா என்பது பற்றி இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
மேற்கூறிய இரண்டு காரணிகளையும் உருவாக்கக்கூடிய தடுப்புமருந்துகளை கண்டறியும் வரையில் பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் சமூக நடவடிக்கை மூலம் உள்ளூர் அளவில் கொரோனா நுண்ணுயிரி பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கு, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ முறைகளை முறையாக கடைபிடிக்கவேண்டும். அதுவரை மந்தை நோயெதிர்ப்பு சக்தி மீது நாம் வெறுமனே நம்பிக்கை வைக்கக்கூடாது.