vallalar

வள்ளலாரியம் ; சமயச்சார்பின்மை – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்

இந்த கட்டுரையின் முதல் மூன்று பாகங்களை கீழே உள்ள இணைப்புகளில் படிக்கலாம்.

சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

சமயச்சார்பின்மை: பாகம்2 – தமிழறம் எனும் சமயச்சார்பிலிக் கோட்பாடு – வே.மு.பொதியவெற்பன்

சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி; சமயச்சார்பின்மை – பகுதி 3 – வே.மு.பொதியவெற்பன்

1. வள்ளுவர் முதல் வள்ளலார்வரை ‘சித்தனும் ஆனேன் என்றுந்தீபற’

உயிர்மநேயம் எனும் கருத்தாக்கம் வள்ளுவர் முதல் வள்ளலார் வரை ஊடாடித் தொடர்வதொன்றே!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள் எல்லா உயிர்க்கும் என்ற சொற்றொடரையே கையாள்கின்றது. மாந்தநேயம் என்ற குறுகிய வட்டத்தைவிட்டு உயிர்மநேயம் என்ற கருத்தையே திருவள்ளுவர் முன்மொழிகிறார்.”
– பாமயன்

“திருக்குறளில் உள்ள அருளுடைமை என்னும் அதிகாரத்தின் விரிவாக்கமே வள்ளலார் கூறிய சீவகாருண்ய ஒழுக்கமாகும் எனப் பெரும்புலவர் இளங்குமரனார் எழுதும் போது குறிப்பிடுவதாவது: 

‘சீவகாருணிய ஒழுக்கம் என்பது அருளொழுக்கமே. இவ்வருளொழுக்க விரிவு அருளுடைமைத் திருக்குறள் விளக்கமேயாகும்’. நாலாயிரப் பனுவலுக்கு (பிரபந்தத்திற்கு) முப்பத்தாறாயிரப்படி அமைந்தது போல் திருக்குறள் அருளுடைமை அதிகாரத்திற்கு அமைந்த பெருவிளக்கம் சீவகாருணிய ஒழுக்கம் எனில் தகும்.”

“வள்ளுவத்தில் தோய்ந்து அதற்கேற்பத் தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர் வள்ளலார்.” “தாம் பெற்ற குறளின்பத்தைத் தம் மமக்களும் பெறவேண்டும் என விரும்பித் திருக்குறள் வகுப்புகளை நடத்தச் செய்தார்.”
– பழ.நெடுமாறன் (‘வள்ளலார் மூட்டிய புரட்சி’)

தருமசாத்திரங்களில் தளையுண்டு கிடக்கும் தன்னிலைகளை எல்லாம் கட்டவிழ்த்தே விடுவித்து அவற்றை எதிர்கொள்ள வல்லதே தமிழ்ச்சித்த மரபின் வள்ளுவமும் வள்ளலாரியமுமாய் வியாபிக்கும் வெட்டவெளியாகும்.

“உலகத்திலுள்ள மதபேதங்களை எல்லாங்களைந்த ஸர்வசமய ஸமரசக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்குத் தமிழ்நாடே சரியான களம். உலகம் முழுவதும் மதவிரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படிச் செய்யவல்ல மஹான்கள் இப்போது தமிழ்நாட்டில்.தோன்றியிருக்கிறார்கள். அது பற்றியே பூமண்டலத்தில் புதியவிழிப்பு தமிழகத்தில் தொடங்கும் என்கின்றோம்.” 
– பாரதி (‘பாரதி தமிழ் வசனத்திரட்டு’) 

இவ்வாறு இனங்கண்ட பாரதி அவர் வழியிலேயே ‘யானுமொரு சித்தன் என வந்தேன்’ எனப் பாடிநிற்கின்றார். ‘பேதம் நீங்கி எல்லவரும் தம்மவர்களைச் சமத்தில் கொள்ளுதல்’ எனும் இராமலிங்கர் வரையறைப்படியே ‘எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம்’ எனப் பகவத்கீதைக்கு உரை காண்கின்றார். (இத்தலையீட்டுரை பரிமேழகலரின் ‘அறமாவது’ எனும் உரைபோல ஏற்புடைத்தன்றே!)

“வள்ளலார் சமத்துவக் கருத்தியலைச் சித்தர்மரபிலிருந்தும், பக்திமார்க்கத்திலிருந்தும் உணர்ந்து கொண்டார். கொல்லாமை, புலால் உண்ணாமை, உயிர்களின் பசிதீர்த்தல் என்ற அறச்செயல்கள் சமண, பௌத்த மதங்களின் தலையாய கொள்கைககளாக விளங்கின. உயிர்களிடத்தில் பாரபட்சம் காட்டாது சமமாகக் கருதுவது என்பன போன்றவை சித்தர் கொள்கையின் சாராம்சமாகும். வள்ளலார் தம் கொள்கைகளை மரபுசார்ந்த சமண, பௌத்தங்களிலிருந்தும், சித்தர் நெறியிலிருந்தும் உணர்ந்துள்ளார்.”
– இல.ஜெயச்சந்திரன்

திருமந்திரத்திற்கூடாகவும், அப்பரின் கபாலிகத் தேவாரக்குரலாகவும்; வேதத்தை ஒருபுடை ஏற்றும், வேத எதிர்வழக்காகவும், பனிப்போராகவுங் கனன்ற ஆரியஎதிர்ப்பு, சித்தர்மரபில் வீச்சுக்களோடு விசையுடன் வீசிடத் தொடங்கி, பேதமற யாவுங் கடந்த போதமாக சமயங்கடந்த ஆன்மிகமான சுத்த சன்மார்க்கமாக, ஆரியத்தின் தங்குதளம் யாவற்றையுமே மூர்த்தண்யமாக நின்றெதிர்க்கும் சூறாவளியாக ஆறாந்திருமுறையில் சுழன்றடிக்கலாயிற்று.

“பொற்புறவே இவ்வுலகில் பொருந்து சித்தன் ஆனேன்
பொருத்தமும் நினை திருவருளின் பொருத்தம் அதுதானே.” 
“சித்தனும் ஆனேன் என்றுந்தீபற.” -இராமலிங்கர்

2. மொழியியலாய்வு விதந்தோதல்: ‘மெய்ம்மொழிக்குப் பிரமாணம் ஆகாதென்க’

வள்ளலாருக்கும் சங்கராச்சாரியார், கோடகநல்லூர்சுந்தரசாமி மூவர்க்கும் இடையிலான உரையாடல்களுக்கு ஊடாகவும், திருவருட்பா  உரைநடைப் பகுதி முதலியவற்றாலும் ஆரியம், தென்மொழி குறித்த அவர் கணிப்பீடுகளையும்; வடமொழி பயில்வதில் இருந்த சிக்கல்கள், அதன் உரைகோள் முறைமைகள் பற்றி எல்லாம் உணரக்கிடக்கின்றன.

உலகமொழிக்கு எல்லாம் சமஸ்கிருதமே  ‘மாத்ரு பாஷா’ (தாய் மொழி) என்ற சங்கராச்சாரியார்க்கு மறுமொழியாக எனில் தமிழே ‘பித்ரு பாஷா'( தந்தை மொழி) என்றறைந்தார். வாதாடித் தோற்ற கோடகநல்லூராரும் திருந்திப் பின்னர் இராமலிங்கர் நண்பர் ஆயினாரென எடுத்துரைப்பார் ப.சரவணன் (‘சாளரம்’ இலக்கியமலர்:2008)

“அசஷர ஆரவாரம், சொல்லடாம்பரம், பொழுதுபோக்கு, பெருமறைப்பு முதலிய பெண்மை ஆரவாரமின்றி, எப்பாஷையின் சந்தசு (மந்திரங்)களையும் தன் பாஷையுடன் அடக்கி ஆளுகையால் ஆண்தன்மை பொருந்தியதுமான..” இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பிரயாசத்தையும், பெருமறைப்பையும் பொழுதுபோக்கையும் உண்டுபண்ணுகிற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும், துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக்கலையை இலேசிலளிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றனிடத்தே மனம்பற்றச் செய்து அத்தென் மொழிகளாற் பல்வகைத் தோதத்திரப் பாடல்களைப் பாடுவித்தருளினீர்.”
– இராமலிங்கர்.

‘இலக்கணக்கொத்தை’யும், வர்ணதர்மத்தையும்,  வடமொழியையும் வள்ளலார் மறுத்துரைக்கும் பாங்கை  சே.இராசேந்திரன் எடுத்துக்காட்டுவார்:

“ழ் ற் ன் முடிநடு அடி சிறப்பிய லக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ மோனாதீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கையுண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம் எனத் தமிழ் எழுத்தொலிகளின் அமைப்பின் சிறப்பைத் ததத்துவக் கண்ணோட்டத்தில் அடிகள் தெளிவுறுத்தியுள்ளார்” 
-சே.இராசேந்திரன்

“வருணாச்சிரம மானத்தாற் பந்தப்பட்டேக தேசத்தான் வழங்குகின்ற வேதம், வருணாச்சிரம மானத்தாற் பந்தப்படாது யாண்டும் பூரணதான் விளங்கும் மெய்ம்மொழிக்குப் பிரமாணமாகாதென்க.” 
– இராமலிங்கர் (‘தமிழ்க்கவிதைகளில் திராவிட இயக்கத் தாக்கம்’)

“சமூகத்தைச் சீர்திருத்த வந்த வள்ளலார்க்கு மொழிஉணர்வு இருந்ததில் வியப்பில்லை. வள்ளலாரின் மொழிக்கோட்பாடு என்பது தமிழ்த்தேசியம் சார்ந்ததே அன்றிச் சைவம் சார்ந்தது அன்று. இதனை இப்படிக்கூறலாம். தமிழ்த்தேசியத்தைச் சைவத்தேசியமாக உருவெடுக்காமல் தடுத்தவர் வள்ளலார்.”
– பழ.நெடுமாறன்.

“இராமலிங்கர் எந்தவகையிலும் சைவஅடையாளத்தை உருவாக்குபவராக. இங்குக் காட்சியளிக்கவில்லை. அந்த அடையாளத்தைச் சிதைப்பவராக உடைப்பவராகக் காட்சியளிக்கின்றார். இராமலிங்கரது தத்துவம் தமிழ் அடையாளத்திற்கு ஓர் அடித்தள மக்கள் சார்பினை வழங்குகின்றது.”
– ந.முத்துமோகன் (‘தமிழினி’ சன.2010)

3. சுத்த சன்மார்க்கம்

வள்ளலாரின் ஆன்மிகம் புதுப்புது  திறப்புகள் வாயிலாகப் புதுவெளிச்சம் பாய்ச்சியது. அத்தகு திருப்புமுனைகள் குறித்துக் காண்போம்:

“வள்ளலாருக்கு முன் சன்மார்க்கம் என்பது சைவசமயம் சார்ந்ததாக இருந்தது. அவருடைய வருகைக்குப் பிறகுதான் சைவசமய சன்மார்க்கம் என்பது சுத்த சன்மார்க்கமாக மாறியது. சமய சன்மார்க்கத்தை ஏற்க மறுத்துச் சுத்த சன்மார்க்கத்தை நிலைநாட்ட முயன்ற வள்ளலார் சமயங்களின் தளத்துக்குள் ஒரு புரட்சிக்காரராகவே அடியெடுத்து வைத்தார். விக்கிரக வழிபாட்டை விட்டு விலகினார். துறவுக் கோலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த காவியைக் கைவிட்டு வெள்ளாடை அணிந்தார். கோவிலைச் சபை என்றார். ஒளியே வழிபாட்டிற்குரியது என்றார். அந்த ஒளியும் தீபத்திற்கு அல்ல. ஒவ்வொருவரின் உள்ளத்திற்குள்ளும் சுடர்விட்டு ஒளிரவேண்டும் என்று கூறினார்”
– பழ.நெடுமாறன் (‘வள்ளலார் மூட்டிய புரட்சி’)

“வள்ளலார் அருளியது மாற்றுநிலை. எதிர்ப்பு எதிர்ப்பினை வளர்க்கும்; மாற்று ஒருநாள் இல்லை என்றாலும் ஒருநாள் சிந்தனையை ஊக்கும்; உயர்வை அளிக்கும் உள்ளதை அழிக்காமல் அதன்மீது கட்டப்பெற்ற பெருநெறி ஜோதி வழிபாட்டு நெறி.”
– இராம.இருசுப்பிள்ளை (‘வள்ளலார் வாழ்வும் வாக்கும்’)

பெருநெறி என்றால் யாதது? இந்த வினாவிற்கான விடை, ‘பெருநெறிய பிரம்மாபுரம் மேவிய பெம்மானே’ எனும் சம்பந்தர் பாட்டில் பூட்டியிருந்த பாட்டுக்குச் சாவி வள்ளலாரின் தெய்வமணிமாலையில் தான் கிடைத்தது என்கின்றார் கிஆபெவி; “வெறும் பெருநெறி என்றில்லை. ‘பெருநெறி பிடித்தொழுக வேண்டும்’ என்றிருப்பது புரிந்தது. மற்ற நெறிகளெல்லாம் பிறர் கொடுக்க வேண்டும் என்பதாகவும், இந்தப்  பெருநெறி மட்டும் பிறர் கொடுத்துப் பெறுவதல்ல ; ” தானே பிடித்து ஒழுக வேண்டிய ஒன்று’ என்றும் விளங்கிற்று. இதிலிருந்து பெருநெறி என்பது எல்லா நெறிகளிலும் உயர்ந்த நெறிஎன்பதும், அது சான்றோர்களால் கையாளப் பெற்ற – கையாளப்படுகின்ற நெறி என்பதும், அது அன்புநெறி, அருள்நெறி, கருணைநெறி ஆகிய மூன்று நெறிகளாலும் பின்னப்பட்ட ஒரு பெருநெறி எனவும் விளங்கிற்று”
– கி.ஆ.பெ.விஸ்வநாதம் (‘ வள்ளலாரும் அருட்பாவும்’)

4.இராமலிங்கர் தத்துவப்பார்வையை நிர்ணயித்தது எது?

“உலகியல் இயலாமையின் மீது பழைய ஆன்மிகங்கள் வீடுகட்டின. உலகியலை எதிர்கொள்ளச் சொல்கிறார் இராமலிங்கர். உலகியல் பேதம் நீங்கிச் சமம் விளைக்கமுடியும் என்றார்.”
“சித்தாந்தவித்தையை இராமலிங்கர் புறக்கணித்து, உடனடி வாழ்வின் அப்பட்டமான உண்மையாகிய பசி அவரது தத்துவப்பார்வையை நிர்ணயித்தது.”
– ந.முத்துமோகன் (‘தமிழினி’ -சன. 2010)

5. பேருபதேசப் பொழிவுப் பிரகடனம்:

வள்ளலாரியத்தின் வளமண்டிய சமயச்சார்பின்மையின் சிறப்பு அவருடைய பேருபதேசப் பொழிவுப் பிரகடனத்தில் ‘படிகத் தெளிவாய்’ (Crystal clear clarity) துலங்குகின்றது :

“இதுவரை நாம் பார்த்தும் கேட்டும் கவனத்தில் வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் கவனம் செலுத்த வேண்டாம்” 
“இதுபோல் வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில் சொல்லியிருக்கின்ற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே.” 
“சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும்; வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்”

என முற்றாக மறுதலித்து விடுகின்றார். ஏனெனில் ‘அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக்குறியாகக் குறித்திருக்கிறதே யன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை’ என்பாரவர்.

“வேதநேறி ஆகமத்தின் நெறிபவு ராணங்கள் விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுவதும் ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே” என்பதனானும் இது தெளிவாகப் போதருமன்றோ?

“இவைகளில் ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. இவைகளுக்கெல்லாம் நானே சான்றாக. இருக்கின்றேன். நான் முதலில் சைவசமயத்தில் லட்சியம் வைத்துக்கொண்டிருந்தது இவ்வளவென்று சொல்லமுடியாது. அது இப்போது எப்படிப்போய்விட்டது?” “ஏன் அத்தனை அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால் எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.” (பேருபதேசப் பொழிவு)

“தயவை விருத்தி செய்வதற்குத் தடையாக இருப்பன சமயஏற்பாடு முதலியவைகள். ஆதலால் இவைகளை விட்டொழித்துப் பொதுநோக்கம் வந்தாலொழிய காருண்ணியம் விருத்தி ஆகிக் கடவுள் அருளைப்பெற்று அனந்தசித்தி வல்லபங்களைப் பெறமுடியாது ” எனத் தெளிவுறுத்துவார்.

“இது தொடங்கி எக்காலத்துக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் : வருணம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்றாவண்ணம் வாழ்வோம். ஆன்மநேய ஒருமைப்பாட்டுண்மை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விதத்திலும், எவ்வளவும் விலகாமல் வாழ்வோம்.” 
– (சுத்த சன்மார்க்கச் சத்தியச் சிறுவிண்ணப்பம்’)

“விகற்பங்கள் என்ற சொல் அந்நியமாதலைக் குறிக்கும். வருண சாதி சமய அந்நியமாதல்கள் விலகும் போது கருணைகொள்ளுதல் எனும் சமூகப்பண்பு துலங்குகிறது. பேதம் நீங்கி எல்லவரும் தம்மவர்களைச் சமத்தில் கொள்ளுதல் என இராமலிங்கர் வரையறுக்கின்றார்.”
– ந.முத்துமோகன் (‘தமிழினி’)

6. சுத்த சன்மார்க்கத்தின் பெறுபேறே சுயமரியாதை இயக்கம்

இத்தகைய சுத்த சன்மார்க்கத்தின் பெறு பேறாகச் சுயமரியாதை இயக்கம் தோன்றியது குறித்த தரவுகள் அவ்விரு தரப்பிலிருந்துமே காணக் கிடப்பனவே:

“சுயமரியாதை இயக்கத்துக்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார். நான் தாயாவேன். நாங்கள் இருவரும் மாயவரம் சன்மார்க்கக் கூட்டத்தில் பெற்ற பிள்ளையே சுயமரியாதை இயக்கமாகும்.” – திருவிக (‘புதிய பார்வை’- 11-5-1966)

திராவிட இயக்கம் உருப்பெற அடித்தளங்கள் ஆனவற்றைப் பேசுமுகமாக, ‘தமிழகத்தில் ஆறாந் திருமுறை பாடியதன் மூலம் ஆரிய எதிர்ப்பைத் துவக்கிவைத்த வடலூர் வள்ளலார் இயக்கமும்’ என ஆறனுள் ஒன்றாகச் சுட்டித் தொடர்வார்.
– வே.ஆனைமுத்து (‘சிந்தனையாளன்’- ஜூன் 1984)

ஒரு நீணெடுந் தமிழறப் பாரம்பரியப் பிரதிவயமாக்கமாகவும், குறளறத்தின் கூர்தலறமாகவும் பெரியாரியலை இனங்காணும் இருபதிவுகள் இங்கே மனங்கொள்ளத் தக்கனவாம்: “பெரியாரின் வெற்றிக்கு ஒரு நீண்ட பிராமண எதிர்ப்புப் பாரம்பரியம் தமிழ்மொழிக்குள் இருந்தது காரணமாகும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றவரி ஒரு நீண்ட பிரம்பரியத்தின் பிரதிவயமாக்கமாகும் (Texttualization)” 
– தமிழவன் (‘தமிழுணர்வின் வரைபடம்’)

வைதிகத்தை எதிர்த்து நடத்திய அறிவுப்புரட்சிக்கான முழுமையான வடிவமாகத் திகழ்வது திருக்குறள், பார்ப்பன மேலாண்மையை வருணப் பாகுபாட்டை மேலுலகம் கருதி வழங்கும் தானத்தை மறுக்கின்ற குரல் யாவும் அக்கருத்துப்புரட்சியின் எதிரொலிகளே என வலியுறுத்தும் க.நெடுஞ்செழியனார், “வள்ளுவர் விதைத்த இவ்விதை கபிலரகவலாக, பதினெண் சித்தர் பாட்டுமரபாக, வள்ளலாராக வளர்ந்து பெரியாரியலாகச் செழித்துள்ளது” எனத் தொடர்வார். (‘தமிழர் இயங்கியல் : தொல்காப்பியமும் சாரக சம்கிதையும்’)

7. பரவலாக அறியப்படாப் பரிமாணங்கள்

“இந்தியத் தேசியக் காங்கிரஸ் உருவாக்கப்பட்டு சுயாட்சி உரிமைக்காகக் குரல் கொடுப்பதற்கு முன்னாலேயே வள்ளலார் அந்நிய ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு நன்நோக்கம் உள்ள ஆட்சி மலர வேண்டுமெனப் பாடினார்: ‘கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க’ “

“ஆங்கிலேய ஆட்சியின் நடவடிக்கைகள் பற்றி  இராமலிங்க வள்ளலார் மற்றொரு படைப்பில் மிக நுட்பமாகப் பதிவுசெய்து வைத்துள்ளார். அதுவே, மனுமுறைகண்ட வாசகம். இந்நூலை முழுமையாக வாசிக்கும் போது, அம் முழுநூலும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இரகசியக் காலப்பதிவு என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் இதற்கான சான்றினைப் பகர்கிறது.”- இரா. குறிஞ்சிவேந்தன். 
-பழ. நெடுமாறன் (‘வள்ளலார் மூட்டிய புரட்சி’)

“காலனியக்காலம் குறிப்பாக, 19-ஆம் நூற்றாண்டு குறித்து இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகளில் கல்கத்தாச் சூழலே மையப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற அளவிற்குப் பிற இடங்களில் சமூகச்சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறவில்லை என்பதாகவே இதுவரை எழுதப்பட்ட வரலாறு அமைகிறது. இத்தன்மை தமிழகத்தில் செயல்பட்ட வள்ளலார் எனும் சி.இராமலிங்கம் அவர்களின் செயல்பாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் செயல்பட்ட ஒன்றாகும்.’ 
– வீ. அரசு (‘பறை-2015’)

” மீண்டும் சமயங்கடந்த ஆன்மிகம் விஞ்ஞானவழிப் பரிமாணமாகத் தோன்றியுள்ளது. அதை முழுமையாக ஒரு விஞ்ஞானமாகத் தமிழ் ஆதி மெய்யியலின் முழுவடிவத்தில் தரத் தோன்றிய அருளாளர் இராமலிங்க அடிகள், உலகின் பேரரருளாளர்களாகிய புத்தர், ஏசு போன்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர்.” 
– இரா. குப்புசாமி (‘தமிழினி’- ஜூலை- 2008)

“தமிழில் எழுதப்பட்டதாலேயே கவனிக்கப்படாமல் போன துர்ப்பாகக்கியசாலி அவர். ஆனால் உண்மை வேறு. அவர் வெறும் பரதேசி யல்லர். உலகில் எந்தச் சிந்தனையாளனுக்கும் அருகே அமர்ந்து உரையாடும் ஆற்றல் அவருக்கு உண்டு. அறிவியல் விலங்குகளை உடைத்தவன் ரூஸோ. பொருளாதாரத் தளைகளை நீக்கியவர் மார்க்ஸ். அவற்றுடன் ஆன்மிகத் தளைகளையும் ஒழித்து மனிதன் இறைநிலை வாலறிவு பெற வழிகாட்டியவர் இராமலிங்கர். இந்த உண்மையை உலகம் உணரும் காலம் வரும்.” 
– இரா. குப்புசாமி (‘தமிழினி’- ஆக. 2009)

முற்றும்.

வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Radicals)

முகப்பு ஓவியம்: நன்றி – இயக்குநர் பொன்வண்ணன் (https://www.facebook.com/Tamilsapiens/photos/3450832125011039)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *