இக்கட்டுரையின் முதல் பாகத்தினை கீழ்காணும் இணைப்பில் படிக்கலாம்.
சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
தமிழின் ஆதிநூல்களில்…!
தமிழறமான சமயச்சார்பிலிக் கோட்பாட்டை இனங்காணும் ஆய்வை தமிழின் ஆதிநூல்களிலிருந்தே தொடங்க வேண்டும்.
“ஆரியதரும சாத்திரமுறை வேறு, தமிழறநூல் மரபு வேறு. வள்ளுவர் குறளோ தமிழ்மரபு வழுவாமல் பொருட்பகுதிகளான அகப்புறத்துறை அறங்களை மக்கள் வாழ்க்கை முறைக்கு ஆமாறு அறுதியிட்டு வடித்தெடுத்து விளக்கும் தமிழ்நூல். எனவே குறள்நூல் தமிழில் தோன்றிய தனிமுதல் அறநூல்”
– ச.சோமசுந்தர பாரதியார். (‘திருவள்ளுவர்’)
“தத்துவஇயல் வரலாற்றில் திருவள்ளுவரின் நூல் தனிக்குரல். அறம் இவ்வளவு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டதை உலகின் வேறு எந்த சமய, தத்துவ நூல்களிலும் காணவில்லை.”
– ஆல்பர்ட் சுவைட்சர் (‘தமிழினி’ நவ. 2009)
தமிழின் ஆதிநூல்களாம் தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் காணக்கிடக்கும் மெய்யியல் சமயச்சார்பிலிக்கோட்பாடு, ஆள்நிலைப்படாக் கருத்தாக்க நிலைப்பாடு என்பதாகவே இனங்காணப்பட்டுள்ளது.
“பண்டைய உலகத்தின் சிந்தனை மரபுகள் யாவும் சமயம் அல்லது சடங்குகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவந்த போது தமிழ்ச்சிந்தனைமரபு இயற்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிந்தனைமரபை உருவாக்கியது.”
“தமிழர்களின் பண்டைய தனித்த இயற்கை சார்ந்த, சமயம்சாராத ஒரு சார்பிலி(Secular)க் கோட்பாடாகத் திணையவியல் (Ecology) கோட்பாடு விளங்கியது.”
– பாமயன் (‘தமிழினி’ பிப். 2008)
“திருவள்ளுவர் உலகியற்றியான் ஆன அப்பாலைக்கடவுள் கருத்தியலைப் போற்றவில்லை. படைத்தோன் என்பவனைப் பக்குடுக்கை நன்கணியார் பண்பிலாளன் எனக் கடிந்துரைத்தார். நப்பாலத்தனார் படைப்புக்கடவுள் துன்புறவேண்டும் எனக்கூறித் தமது வெறுப்பைப் புலப்படுத்தினார். மூவரும் படைப்புக் கடவுளை ஏற்கவில்லை.”
– கி.முப்பால்மணி (‘உரையாசிரியர்கள்’)
முப்பால்மணி குறிப்பிடும் அம்மூவர் கூற்றுக்கள்
‘பரந்து கெடுக உலகியற்றியான்” படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்’ (‘புறம்’ : 194)
‘ஐதே கம்ம உலகு படைத்தோன்’ (‘நற்றிணை’: 240)
தொல்காப்பியர் உலகு, உயிர், கடவள் பற்றிய இலக்கணங்கள் அறியப்பட்டு அவற்றிற்குப் பெயர் இட்டப்படிக் காலச்சூழலில் தாம் கண்ட மெய்ம்மைக்குப் பெயர் சூடிற்றிலர். அதனை நாம் தமிழர் உண்மை என்றே வழங்குவோம் என்பார் ச.தண்டபாணி தேசிகர்.
சமயங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தவையே தொல்காப்பியமும், திருக்குறளும் எனவே தேசிகரும், க.நெடுஞ்செழியனாரும் குறிப்பிடுவர். மட்டுமல்லாமல் உரையாசிரியன்மாரை ஒதுக்கி மூலநூல்களை நேரடியாகப் பயிலப் பல ஆய்வாளர்களும் வலியுறுத்துவாராயினர்:
“நால்வகை(குல)ப் பிரிவுகளைப் பற்றிய மயக்கம் தெளிய வேண்டுமானால், தொல்காப்பிய உரைகளை ஒதுக்கிவைத்துவிட்டு மூலப்பகுதிகளை மட்டும் ஆராய்ந்து பார்க்குமாறு வரலாற்றறிஞர்களையும், பழம் பொருள் ஆராய்ச்சியாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.”
-பா.வே.மாணிக்க நாயகர் (‘குறள் முரசு’ 8-2-1957)
“ஒல்லும் வகை முயன்று மூலநூல்களைப் படித்து, ஆராய்ச்சியிற் புகுவதே அறமாகும்”
– திருவிக (‘தமிழ் நேயம்’ :30 15-8- 2007)
“தமிழ் நாகரிகத்திற்குக் கண்ணாடியாக அமைந்த தொல்காப்பியத்திற்கு ஏற்பட்டிருக்கும் உரைகள் அது தோன்றிச் சில்லாயிரம் ஆண்டுகள் கழிந்தபின் வடநூல் ஒளியில் வகுக்கப்பட்டவையாகும். உரைக்கேற்ப நூற்பாக்கள் புகுத்தப்பட்டும், திருத்தப்பட்டும், வைப்புமுறை மாற்றப்பட்டும் இருப்பதை ஆராய்ச்சியாளர் அறிவர். அவ்வுரை கண்டு நூல்கற்பவர கலப்பற்ற உண்மையைக்காண இயலாதவரே ஆவர்.”
– கா.சு. பிள்ளை (‘கா.சு.பிள்ளையின் ஆராய்ச்சித்திறன்’)
இவ்வாறே தொல்காப்பியத்துக்கும் திருக்குறளுக்குமான உரைகாரர்களே வடநூன்முடிபுகளைப் புகுத்தி உரை கூறற்லாயினலர் என்பார் நாவலர் பாரதியாரும்.
“திருவள்ளுவர் சமணர் அல்லர் ; தமிழ் அறிவர். சமணமதம் தோன்றுவதற்கு முன்பே தென்குமரிக்கண்டம் முதல் சப்தசித்து வரை பரவியிருந்த சித்தர் என்ற அறிவர் மரபில் வந்தவர். தமிழ்ச்சித்தர்கள் என்ற வாழையடி வாழையென வந்த திருக்கூட்டமரபின் தொடக்கப்புள்ளிகள் பரிணாமவாதிகளான(Evolutionists) தொல்காப்பியரும் திருவள்ளுவரும்.”
– இரா. குப்புசாமி (‘தமிழினி’ சூலை-2008)
காலத்தால் முந்தையதான தந்திர மகாசமயம்
‘தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி’ என மாணிக்கவாசகர் பாடிநிற்கும் அத்தகைய சித்தம் (எண்ணகக்ரு, கருத்தாக்கம்) ஏற்படுவதற்கும் முந்தைய தொன்முது பழங்காலந்தொட்டே தோன்றியதே இயற்கை வழிபாடு. அது தாய்த்தெய்வ வழிபாட்டின் தர்சனமான தந்திரமகா சமயகால முதலாகவே தொடர்வது. மேலுமது இயற்கைக்கும் மூதாதையர்க்கும் நன்றிக்கடன் செலுத்துவதாகவும், தம்மிடையே வாழ்ந்துபட்ட வீரர்க்கான நடுகல் வழிபாடாகவும் குலக்குறி வழிபாடாகவும் அமைந்தியன்றது. மதங்கூறும் தெய்வங்கள் விண்ணில் இருந்து இறக்கப்பட்டன எனில் நாட்டார் சிறுதெய்வங்கள் மண்ணில் இருந்து எழுந்தனவே.
மெய்யியல் வரலாற்றில் தந்திரமகா சமயமே பௌத்தத்திற்கும் வேதமரபிற்கும் முந்தையது.
“The religion of Tantra ande dates both Hinduism and Buddhism. The great religion of Tantra was suppressed because it was very female oriented but Tantra persisted in verbal tradion and in some ancient texts”
– Gavin: Yvone Frost (‘Tantric Yoga – The royal path to raising Kundalini power’)
இது தந்திரமகா சமய சாதகமுகமாக இந்தியா பாகிஸ்தான் வந்த மேலைத் தந்திரவாணர் ஆய்விலிருந்து ஓர் எடுத்துக்காட்டே!.
தந்திரமகா சமயத் தந்திரக்கூறுகளை வெவ்வேறு சமயங்களும் தத்தமக்கு ஏற்றவகையில் தகவமைத்துக் கொள்வனவாயின.
“தமிழ்ச்சமுதாயத்தில் சங்ககாலந்தொட்டு வளர்க்கப்பட்ட முன்னிலை உலகாய்தத்தை(Proto – Materialism) தமிழ்ச்சித்தர் மரபின் வேராகக் கொள்ளமுடியும். நோய்களுக்கான காரணம் பஞ்சபூத சேர்க்கையில் ஏற்படும் குறைகளே.”
“ஆன்மா(உயிர்) தனிப்பொருள் இல்லை. உடலோடு பிறப்பது உடலோடு அழிவது. உலகும்,மனிதனும் பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டதே. இயற்கைப் பொருட்களின் இயல்பறிந்து, அவற்றை நாமே மாற்றி அமைக்கமுடியும் (ரசவாதம், மருத்துவம்) போன்ற கொள்கைககளினால் பொருள்முதல்வாதத் தத்துவநிலையை எடுத்தனர் (மருத்துவச்) சித்தர்கள்”
– தேவ.பேரின்பன் (‘திரட்டு’ ஜூன் 1995)
தொன்முது தந்திரம், உபநிடதம், பௌத்தம் எனவாங்கும்; தமிழ்ச்சூழலில் தொல்காப்பியப் பொருளதிகாரம், வள்ளுவம்,சங்கமரபு, ஆசிவகம்,மணிமேகலை, வள்ளலாரியம் எனவாங்கும் சமயத் தலையீடற்றுப் பரிணமிக்கும் தமிழறப் பரிமாணம் [சமயச்சார்பிருப்பினும் சமயமேலாதிக்கம் (Religious Hegemony) அற்றனவவற்றையும் கணக்கிற் கொண்டும் இத்தகு தமிழறச் சமயச்சார்பிலிக் கோட்பாடு அமைந்தியல்வதாகும்.
பார்ப்பனி்ய எதிர்ப்பென்னும் கருத்தாக்கமும் மாற்றுமரபும்
இந்தியச் சிந்தனையில் மனிதநேயம் பற்றி ஆராய்ந்த அ.சக்கரவர்த்தி நயினார், மனிதநேயத்தை வேத, வைதிக – அஃதாவது பார்ப்பன எதிர்ப்பாகக் காண்கின்றார் என்பார் க.நெடுஞ்செழியன்.
“இந்திய வரலாற்றில் அறவியல், பக்தியியல், மறைஞானவியல், அழகியல் எனப் பலதிறப்பட்ட புதிய சிந்தனைப்புலங்களெல்லாம் அவற்றின் தோற்றத்தில் பிராமண எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன.”
“பிராமணிய எதிர்ப்பு என்கிற ஒரு விஷயத்தைக் குறிப்பிட்ட ஒரு ஜாதியைச் சேர்ந்த நபர்களுக்கான எதிரான போராட்டம் என்று கருதுவதை விடுத்து; இந்திய வரலாறு, இந்தியச் சமூகம் ஆகியவை குறித்த ஆய்வுகளுக்கான தவிர்க்கமுடியாத ஒரு கருத்தாக்கம் என்று கொள்ள வேண்டியுள்ளது. சாதிச்சமூகத்தின் பிரத்தியேகச் சூழலுக்குள் பிராமண எதிர்ப்பு என்ற கருத்தாக்கமும் அர்த்தப்படவேண்டும்.”
– ந.முத்துமோகன்
இத்தொடர்பிலவர் அடித்தளமக்கள் காலம் காலமாக ஏமாற்றப்பட்டிருப்பது பிராமண வருணத்தவரால் மட்டுமல்ல; பிராமண எதிர்ப்பைப் பேசிக்கொண்டு சாதியத்தை மறுகட்டமைப்புச் செய்த பிராமணரல்லாத மேட்டுக்குடியினராலுந்தான் என இதேமூச்சில் முன்வைப்பார்.
“பார்ப்பனர் அல்லாத பிற (இடைப்பட்ட) சாதியினரின் சாதிஉணர்வு, சாதிவெறி ஆகியனவும் கூடப் பார்ப்பனியத்துடன் தொடர்புடைய விஷயங்களே. சாதி அமைப்பின் இருப்பை நியாயப்படுத்தி அந்த அமைப்பில் பார்ப்பனர்க்குரிய தனிப்பெரும் இடத்தை உறுதிசெய்யச் செயல்படும் சித்தாந்தமே (Ideology) பார்ப்பனியம். சாதி அமைப்பின் ஒவ்வொரு அடுக்கிலும் உள்ள சாதியினரும் தமக்குக் கீழே இருப்பவரைப் புறக்கணித்து ஒடுக்குதல் என்பதைப் பார்ப்பனியம் சாத்தியப்படுத்துகிறது”
– எஸ்.வி.ராசதுரை, வ.கீதா (‘திராவிட தினமணியின் பார்ப்பனியம்’)
“நவீன சமூகவியல் அறிஞர்கள் மாற்றுமரபு (Counter Tradition) என்ற ஒரு புதிய கருத்தாக்கத்தை உருவாக்கி உள்ளனர். சாதாரண மக்களை விலக்கிநிற்கும் வேத, பிராமண, உயர்ந்தோர் மரபுகளுக்கு எதிராக விளங்கும் சிந்தனைமரபே மாற்றுமரபு என்று சுட்டப்படுகின்றது. மாற்றுமரபுச் சிந்தனையில் விமர்சனப்பிரக்ஞை (Critical Conciousness) ஒரு முக்கியமான கூறாக விளக்கப்படுகின்றது.”
– பா. ஆனந்தகுமார்
“கடவுளின் கருத்தையோ, மூலநூல்களையோ தொன்மங்களையோ, வரலாற்றுப் பிரக்ஞையையோ தனது முதன்மை ஆதாரமாகாக் கொள்ளாது, மாறாக வாழ்க்கை அனுபவங்களையும் பகுத்தறிவையும் ஆதாரமாகக்கொண்டு சமகால வாழ்க்கை முறையை, உலகை, சமூக அமைப்பை அது விமர்சனம் செய்யும். நிறுவன எதிர்ப்பு கொண்டிருக்கும். தானே ஒரு நிறுவனமாவதை எதிர்க்கும்.”
– ந.முத்துமோகன்
பேரிலக்கியங்களில் பொதுமனிதகுல மேன்மையும் தமிழினப்பெருமையும்
“சங்க இலக்கியம், சிலம்பு, திருக்குறள், கம்பராமாயணம் இந்நான்கும் பல தலைமுறையினராலும் அதிகமாகக் கருத்து வேறுபாடின்றிப் பேரிலக்கியங்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படுபவை. இந்நான்கிற்கும் ஊடிழையாக ஒரு பொதுமையான கருத்துநிலை மய்யங் கொண்டுள்ளது. அதாவது சாதிசமயச் சார்பற்ற ஒரு பொதுமனிதகுல மேன்மை (Secular & Universal Humanity), அதனை அடியொற்றிய தமிழ்இனப்பெருமை (Tamil Ethos) என்பது மையமாக அல்லது செய்தி விடுப்பாக இருக்கின்றது. இவற்றின் உறுப்புக்களில் அல்லது பகுதியில் சமய உண்மைகளும் சார்புகளும் இருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் இவை மொத்தநிலைப்படுகின்றபோது, பக்கச்சார்பான ஒற்றைச்சமய மேம்பாடு (Religious Hegemony) என்ற கருத்துநிலை அமிழ்ந்துபோய் விடுகிறது. மொத்த மனிதகுல மேன்மை என்ற கருத்தியல் மேலெழுந்து நிற்கிறது.”
– தி.சு. நடராசன் (‘தமிழின் அடையாளம்’)
இவற்றில் கம்பராமாயணம் விதந்தோதிக் காணப்பட வேண்டியதே! திராவிட இயக்க நோக்கிலது தடை விலக்கான (Taboo) ஒன்றாக அதை எதிர்த்துத் ‘தீபரவட்டும்’ என இயக்கமே நிகழ்ந்தேறியது. தனித்தமிழியக்க நோக்கிலோ கம்பநாடனின் தனித்தமிழ்ச் சொல்லாட்சிகளும், ஒலியாக்க நீர்மையும் போற்றப்பெற்றன. (காண்க: அரசேந்திரன் கட்டுரை ‘தனித்தமிழியக்க நூற்றாண்டுவிழா மலர்’).
இசைத்தமிழ் தமிழிசை நோக்கில் தொல்காப்பியம், சிலம்பு, கம்பராமாயணம் மூன்றன் இசையமைதி போற்றப்படலாகின்றது. (அரிமளம் பத்மநாபன் காணொளிகள்)
அந்தங்களின் அரசியலும் பௌத்தத்தத்தின் நடுவழிப்பாதையும்
“வேதாந்தம்,சித்தாந்தம் இரண்டுமே அந்தமாக ஒரு முற்றுண்மையினை அறுதிப் பிரமாணமாகப் பிரகடனப்படுத்துகின்றன. இதனைக் கொண்முடிபென்பார் பாவாணர். (கொள்கை> கோள்> கோட்பாடு – கோட்பாட்டின் முடிந்த முடிபான அத்து) முடிபெனில் தீர்மானகரமாகத் தீர்த்துக்கட்டி வரையறுப்பது. மற்றைமையைத் ‘தீர்த்துக்கட்டி’க் கரைத்து உட்செறித்துவிடுவது. இதுதான் இத்தகு அந்தங்களின் அரசியலாகும்
“பல்வேறு தத்துவப் பிரிவுகளிடையே முரண்பாடுகள் இல்லை என்றும் மாறாக அவைகள் ஒன்றுக்கொன்று இட்டு நிரப்புபவையாக உள்ளன என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இத்தகைய பிரிவுகள் படிப்படியாக இறுதியான தத்துவஞானத்தைச் சென்றடைகிறது என்றும் கொள்கிறார்கள்”
– தேவிபிரசாத்.
இது நாம் ஏலவே நோக்கிய ‘சமன்மமய வியாக்யம்’ எனும் கூட்டடிணைவு விளக்கத்தரப்பே!
“முரண்பட்ட தத்துவங்களை முரணற்றவை போலச் சாமார்த்தியமாகக் காட்டுவதே கீதையின் விநோதமான அடிப்படைக் குறைபாடாகும். ஆனால் கீதையின் பயன்பாடே இந்தக் குறைபாட்டிலிருந்துதான் தோன்றுகிறது.”
– டி.டி.கோசாம்பி (‘முனைவன் : 11)
“ஒன்றை முதற் பொருளாக்குவதால் பிறவற்றை அம்முதற்பொருளுக்கு ஆட்படுத்தும் அரசியலும் தொடங்கி விடுகிறது. கொள்கைரீதியாக ஒரு சூத்திரவாதம், (Dogmatism) வேலைசெய்யத் தொடங்கிவிடுகிறது. முதற் பொருளிலிருந்து பிற எல்லாவற்றையும் வருவிக்கும். இப்படி வருவித்தல் இயங்கியலுக்கு எதிர்த்திசையிலான செயல்பாடாகும். எனவே அந்தங்களின் அரசியல் வன்முறை கொண்டதாக இருக்கிறது.”
– ந.முத்துமோகன்
அந்தங்களின் உட்கிடையையும் அரசியலையும் முரணியக்க முறையில் புத்தர் மறுதலிக்கும் பாங்கை எடுத்துரைப்பார் முத்துமோகன்:
“கடைக்கோடி எல்லையில் நீ ஈட்டுவது அறிவு அல்ல. அது வேறு எதுவாகவோ இருக்கலாம். எல்லைகள் சந்திக்கும் மத்திமத்தளத்தில் எதிர்வுகளைப் புணரச்செய்து நீ கண்டதே அறிவு. அதற்கு உலகம் உண்டு. உலகு குறித்த விமர்சனம் உண்டு. உலகு தரும் வாய்ப்புகளுண்டு. மாற்றம் குறித்த தன்னுணர்வு உண்டு, படைப்புத்தன்மை குறித்த தேடல் உண்டு. அறிவு இயங்கியல் பண்பு கொண்டது. ஏதோ ஒரு கடைக்கோடி நிலையைக் கட்டிஅழுவது அறிவா?”
– புத்தர்
பௌத்தத்தின் இத்தகு நடுவழிப்பாதைகளான மெய்காண முறைகள் பலவும், எல்லைகள் சந்திக்கும் மத்திமத்தளத்தில் எதிர்வுகளைப் புணரச்செய்த வண்ணமே நம்மில் புதுப்புது வெளிச்சம் பாய்ச்சி எரிகொளுவும் மதுகை பெற்றனவாய் நின்றொளிர்கின்றன.
இந்திய மெய்யியல் சிந்தனைகளின் வழிநூல் எனும் எல்லைக்கப்பால், அவற்றை உள்வாங்கிச் செரித்துத் தன்வயமாக்கித் திட்பநுட்ப மீதூரத் திறம்பட எடுத்துரைக்கும் வகையில் இந்தியாவின் முதல் சர்வதர்சன சங்கிரகமான அருமைப்பாடும்; தம் தனித்துவமிக்க மெய்யியல், தருக்கம் இருவகைககளிலும் வழங்கியுள்ள கொடைகளும் மெய்யியற் பேரறிஞர் சாத்தனாரின் அரும்பெறற் சாதனைகளாகும் (சமயக்கணக்கர் திறங்கேட்ட காதை)
தொடரும்…
பாகம் 3: ‘சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி : சிவவாக்கியர் முதல் இராமலிங்க வள்ளல் வரை!
விரைவில் வெளிவரும்.
– வே.மு.பொதியவெற்பன்
(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Radicals)