மதவாதம் - மதச்சார்பின்மை

சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

1. சமயச்சார்பற்றோர்க்கு ஆர்.எஸ்.எஸ் கேள்வி

“இசுலாம்,கிறித்துவம்,கம்யூனிசம் போன்றவற்றுடன் சமயச்சார்பின்மை என்ற புதியமதத்தை இந்துத்துவ எதிரிகள் உருவாக்கியுள்ளனர். இந்த மதத்தைப் பின்பற்றுவோர் தம்மைச் சமயச்சார்பற்றோர் எனச் சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் ‘தேசியவாதி’களாகிய நாம் அவர்களைப் போலி மதச்சார்பின்மையாளர் எனவே அழைக்கலாம். இப்போலிகளின் புனிதநூல் அரசமைப்புச்சட்டமாகும். ஆனால் இப்புனிதநூல் எப்படி தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட முறையில் மாற்றப்பட்டது, திருத்தப்பட்டது, உருச்சிதைக்கப்பட்டதென நீங்கள் கேள்வி கேட்கக்கூடாது. எப்போது எப்போது, எங்கே அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறதோ அதற்கேற்றாற் போலப் பயன்படுத்தப்படுகிறது.” 
– பி. தெய்வமுத்து. (‘Are you a Secularist? Then please answer this Question – ‘The Hindu Voice’)

“முதன்மையானது இந்தியா என்பதுதான் அரசாங்கத்தின் ஒரேமதம், அரசியலமைப்புச்சட்டம்தான் ஆன்மிகநூல். அரசியல் சாசனக் கட்டமைக்கு உட்பட்டு இந்தியாவை முன்னெடுத்துச் செல்லவேண்டும். மூவர்ணம் தவிர வேறு வர்ணத்தை நான் பார்க்கவில்லை.”
– நரேந்திர மோடி(‘ தி இந்து ’28-2-2005)

போலிகளின் புனிதநூல் என்றெதனை ‘இந்து வாய்ஸ்’ புறக்கணிக்கின்றதோ அதனையே அந்த அரசமைப்புச்சட்டத்தையே ஆன்மிகநூலாக அரவணைத்தே கொண்டாடி நிற்கின்றது பிரதமர் குரல். அவரவர்க்கென வழங்கப்பட்ட அவரவர் பாத்திரங்களான வகிபாகக் காவி தர்பாரின் கபடநாடகக் காட்சிகளே இவை யாவுமே. இப்படித்தான் நிகழ்ந்தேறலாகின்றன ‘நடிப்புச்சுதேசிகளின் இரட்டைவேட ஆரியக்கூத்தெல்லாம்.

2. அஸ்கார் அலி, வே.ஆனைமுத்து பார்வையில்

“சமயச்சார்பின்மை என்ற சொல் குறிப்பாக. அண்மைக்காலத்தில் மிக விவாதத்திற்குரிய சொல்லாக மாறியுள்ளது. நெடுங்காலமாக இந்திய மேட்டுக்குடிகளிடையே இச்சொல்லின் நேருவியக் கருத்தாக்கம் குறித்துப்  பாஜக கேள்வியை எழுப்பியவுடன் இதுவரை நிலவிவந்த பொதுவான புரிதலில் உடைசல் ஏற்பட்டுவிட்டது. வெளிப்படையாகச் சொல்வதனால் இச்சொல்லின்  அடிப்படை அம்சத்திற்கே முரண்படுமாறும் இந்து ஆதரவு, முஸ்லீம் எதிர்ப்பு என்பதனையே தமது நேர்முறை சமயச்சார்பின்மை எனப் பாஜக தலைவர்கள் பேசத்  தொடங்கியுள்ளனர்.” 
– அஸ்கார் அலி என்ஜினியர் (‘ Religion States and civil society’)

இந்தியச் சூழலின் சமயச்சார்பின்மை முறையாக வகுக்கப்படவில்லை. காங்கிரசார் மத்தியிலேகூட மேலை அறிவொளி மரபுசார் நேருவியக் கருத்தாக்கமாகவும்; ‘சமதர்ம சமபாவ’ என்னும் காந்தியக் கருத்தாக்கம் ஆகவும் இருவேறு அணுகுமுறைகள் ஊடாடிக் கிடப்பனவாயின. 

“இன்றுள்ள இந்திய அரசமைப்பு விதிகள் 13,25,352(1) இவற்றை அடியோடு மாற்றினால் ஒழிய இந்தியாவில் வருணவேறுபாடு ஒழியாது. பார்ப்பனப்புரோகிதம் ஒழியாது, மதச்சார்பு நடப்பு ஒழியாது. இந்தச் சூழலில் மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி 1947-இல் மேற்கொண்ட முயற்சி குறிப்பிடத்தக்கது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேலைநாட்டார் கண்டு நிறுவிய சமயச்சார்பின்மைக் கோட்பாடு இடம்பெற்று விடாமல் பார்த்துக் கொள்வதற்கான கெட்டியான ஏற்பாட்டை 1947-இல் செய்தார். அது வென்றது”
– வே. ஆனைமுத்து

3. Secularism: கருத்தாக்க வரையறை

ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியாக் (1817- 1906) தான் முதன்முதலாகச் ‘செக்குலரிசம்’ எனும் சொல்லைப் பாவித்தவர். அதன் அடிப்படையில் ‘பிரிட்டிஷ் செக்குலர் யூனியனை’ உருவாக்கினார் என்னும் வே.ஆனைமுத்து அது குறித்த அவரின் வரையறையையும் எடுத்துரைப்பார்:

“முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் எழுந்த இவ்வுலக வாழ்க்கை பற்றிய கடமைகளை விதிக்கும் வாழ்க்கை நெறியே செக்குலரிசம்” 
– (‘இந்திய அரசமைப்புச்சட்டம் ஒரு மோசடி’)

“மதம் என்பது அரசு என்பதிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; மதம் என்பது கல்வி என்பதிலிருந்து பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்; மதம் என்பது ஓர் ஒழுக்கம் என்பதுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடாது.” 
– ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியாக் (‘இந்திய அரசியலமைப்புச்சட்டம் வெகுமக்களுக்கு விரோதமானது ஏன்?’)

4. பெரியார் பார்வையில்

“இவர்கள் எந்த நாட்டைப் பார்த்து எந்த மொழியில் ‘செக்குலர் ஸ்டேட்’ என்று குறிப்பிட்டார்களோ அந்த நாடுகளில் அந்த மொழியில் செக்குலர் என்பதற்கு என்ன பொருள் இருக்கின்றதோ, அவர்கள் எந்தப் பொருளில் அதைப் பயன்படுத்தி இருக்கிறார்களோ, அந்தப் பொருளில் தானே நாமும் பயன்படுத்த வேண்டும்? அதை விட்டுவிட்டுச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு செக்குலர் என்றால் மதச்சார்பற்றது என்பது பொருளல்ல; எல்லா மதங்களையும் ஒன்று போலக் கருதவேண்டும் என்றுதான்(பார்ப்பனர்கள்) கூறுகிறார்கள்”

“பெண்கள் ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அந்த மாநாட்டில் உள்ள பெண்கள் அத்தனை பேரும் பெண்கள் பதிவிரதைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு – பதிவிரதை என்றால் எல்லா ஆண்களையும் தங்கள் கணவனைப்போலக் கருதி நடந்துகொள்ள வேண்டும், அதுதான் பதிவிரதத்தன்மை என்று அர்த்தம் சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமாகும்; ‘மதச்சார்பற்ற’ என்பதற்கு எல்லா மதங்களையும் ஒன்று போலக் கருத வேண்டுமென்பது – எனவே’மதச்சார்பற்ற’ என்றால் எந்த மதத்தையும் சாராத என்றே பொருள்.” 
– ஈ.வெ.ராமசாமி(‘ஈவெரா சிந்தனைகள்’)

5. இந்திய அரசமைப்புச்சட்டயாப்பில் சமயச்சார்பின்மை வரைவிலக்கணம்

“இந்திய அரசமைப்புச்சட்டம் மதச்சார்பற்றது அல்ல; அப்படி நாம் நினைத்துக் கொண்டிருப்பது தவறு. அப்படி நினைத்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். நமக்கு மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டம் தேவை.” 
– நீதிபதி ஏ.சுப்பாராவ் (‘ இந்திய அரசமைப்புச்சட்டம் வெகுமக்களுக்கு எதிரானது ஏன்?’)

இதை நம்மில் எத்தனைபேர் விளங்கிக் கொண்டுள்ளோம்?

அரசமைப்புச்சட்டத்தின்  24 ஆவது விதியை அரசியல் நிர்ணயசபையில் 1948-ல் நிறைவேற்றுகின்றனர். அது குறித்து விவாதித்ததன் பயனாக 3-4-1948 இல் இந்திய மதச்சார்பின்மை எனப் பாவித்து, அதற்கான அடிப்படைக் கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை குறித்து கே.எம்.முன்ஷியின்ஆவணத் தொகுப்பிலிருந்து வே.ஆனைமுத்து எடுத்துரைக்கின்றார்:

 1. அரசாங்க மதம் என்பதாக ஒன்று இருக்கக் கூடாது.
 2. அந்தந்த மதமும் சட்டப்படி பெற்றுள்ள உரிமைகளின் படி எல்லாம் சமாகக் கருதப்படவேண்டும். 
 3. மதப்பிரிவுகள் யாவும் அதற்குரிய பழைய நம்பிக்கைகள், கோட்பாடுகள், வழக்கங்கள் ஆகியவற்றின்படி அனுமதிக்கப்பட வேண்டும்.
 4. ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் நம்புகிற மதத்தை வெளிப்படையாக அனுசரிக்கவும், அதைப் பிரச்சாரம் செய்யவும் தாராளமாக உரிமை வழங்கப்பட வேண்டும்.
 5. ஒவ்வொரு மதப்பிரிவும் சொத்துக்களை அடையவும் சொந்தமாக வைத்துக் கொள்ளவும் உரிமை வழங்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களின் வழக்கப்படி அச்சொத்துக்களை நிர்வகிக்க உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பவைதாம் இந்தியன் செகுலரிசம் என்பதன் அடிப்படைக் கொள்கைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.” 

  –  கே.எம்.முன்ஷி (‘K.M.Munshi’s Indian Constitutional Documents’. Volume :1 p :310) 

இதுதான் நம் இந்தியன் செகுலரிச வரைவிலக்கண இலட்சணமாகும்.

இந்திய அரசமைப்புச்சட்ட யாப்பின் முகப்புவாசகம்

“இந்திய அரசியல் சட்டத்தில் மொத்தம் 395 பிரிவுகள், 12 அட்டவணைகள் இடம் பெற்றன. இந்திய அரசியல் சட்டம் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் இயற்றப்பட்டிருந்தது.

‘இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு’ என்று இந்திய அரசியல் சட்டம் நம் நாட்டைப்பற்றிக் கூறிக்கொள்கிறது. அனைவருக்கும் சமநீதி,சம அந்தஸ்து, சம சுதந்தரம் வழங்குவதே இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சம். 1976 -இல் இந்திரா காந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலமாகத்தான் நம்முடைய அரசியல் சட்டத்தின் முகப்பு வாசகத்தில் ‘சோஷலிச, மதச்சார்பற்ற’ என்ற 2 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. 26-11- 1949- இல் அரசியல்  சட்டம் இறுதி செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. சபையின் 284 உறுப்பினர்கள் 24-1-1950 – இல் அதில் கையெழுத்திட்டார்கள். 26-1-1950-இல் அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது.”
– ஜூரி (‘ இந்துத் தமிழ்த் திசை)

6. சமயச்சார்பின்மையின் பெயரால் முன்னெடுக்கப்பட்ட ‘சர்வதர்ம சமபாவம்’ என்னும் இறையியல் சமரசமான சமயநல்லிணக்கம்

இந்தியச் சூழலில் சமயச்சார்பின்மை ‘சர்வதர்ம சமபாவம்’ (SarvaDharma Samabhava) எனும் இறையியல் சமரசமான சமயநல்லிணக்கம் எனவாங்கே முன்னிறுத்தப்படலாயிற்று. இதில் காங்கிரசார் ஊடேயே மேலை அறிவொளிமரபுசார் நேருவியக் கருத்தாக்கம் சார்ந்தும், காந்திய சமய நல்லிணக்கக் கருத்தாக்கம் சார்ந்தும் இருவேறு அணுகுமுறைகள் இயன்றன.

“சமயச்சார்பின்மை என்றால் என்ன என்பது குறித்து எப்போதும் தெளிவான விளக்கம் முன்வைக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியை உருவாக்கியோர் மேற்கத்தியமயமான மேட்டுக்குடியினராக இருந்ததால், அதன் தாக்கத்திற்கு ஆட்பட்டு அச்சொல்லை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இந்தியச் சமூகத்திலோ மதமே பெரும் யதார்த்தமாக விளங்கி வந்தது”

“இந்தியச் சமூகத்தின் நாடித்துடிப்பை நன்கறிந்தவர் காந்தி. சமயச்சார்பின்மையை அவர் தூய இந்தியச் சொல்லாட்சியாலேயே விளக்கினார். இக்கருத்தாக்கத்தை அவர் இம்மண்ணுக்கே உரிய ‘சர்வதர்ம சமபாவ’த்திலிருந்து வெளிக்கொணர்ந்தார். மேலைமயமான மேட்டுக்குடியினர் இவ்விளக்கத்தை மறுதலித்தனர். அவர்கள் இக்கருத்தாக்கத்தைப் பிற்போக்கானதென்றனர். ஆனால் காந்திக்கோ அது மிகவும் இயல்புடையதாயிருந்தது”
– அஸ்கார் அலி என்ஜினியர் (‘Religion states & civil society’)

ராமானுஜத்தின் குறுக்குச்சால்

ராமானுஜத்தின் அணுகுமுறையும் கூடச் சமயச்சார்பின்மையின் போதாமை எனச்சுட்டி அதற்கு மாற்றாக ‘சர்வதர்ம சமபாவம்’ எனக் காந்தியம் முன்னிறுத்தும் கருத்தாக்கத்தைப் வலியுறுத்துவதே : 

“அரசியல் ரீதியான இந்து அடிப்படைவாதத்திற்குப் பதிலாக முன்வைக்கப்படும் மதச்சார்பின்மை என்ற அரசியல் நிலைப்பாட்டின் போதாமையைத் தாராஷுகோவும், யாஷோ விஜயா ஞானியும் நமக்கு உணரவைப்பார்கள்”

” நவீன அரசியல் சொல்லாடலான மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டோடு தாராஷுகோவின் தத்துவார்த்தப்பார்வையை ஒப்பிடும் போது மதச்சார்பின்மை செழிப்பானதாக இல்லை. மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கம் சமுதாயத்தில் பிளவுபட்ட மனிதர்களை உருவாக்குகிறது”
– ராமானுஜம் (‘அகம் புறம் : 2 , ஜன- மார்ச் 2015)

ஒப்பியலாய்வு என்றாலே பொதுமூலந்தேடுதலும் வேற்றுமை அறிதலுமே அதன் இருவேறு கூறுகளையும் அகப்படுத்தியதே. ஆனால் ராமானுஜத்தின் எடுத்துரைப்பு பொதுமூலம் மட்டுமே தேடி, வேற்றுமை அறிதலை விலக்கி விடுவதான வில்லங்கமான ஒரு குறுக்குச்சாலே!

இன்னுமவர் மதங்களுக்கிடையே கடவுள் குறித்த வரையறையைக்கூட மதச்சார்பற்றோர் கணக்கில் கொள்வதில்லை எனவும் ; நாட்டார் மரபு அவர்களைக் காட்டிலும் கோலாகலமாய் இந்துக்கடவுளரைச் செழிப்பாகக் கொண்டாடுவதாகவும் தொடர்கின்றார். இவை யாவும் கூட பொதுமூலந் தேடி ஒற்றுமை அறிதலுக்கு அப்பாலாக ; விதந்தோதிச் சிறப்பியல்பு காணொணா அவரின் போதாமைக்குச் ‘சாலுங் கரியே’ என்பேன். இத்தகு கோளாறு யாவும் சிறைக்குள் சிக்கிக் கிடப்போர் பார்வையில் வெட்டவெளியில் வீற்றிருப்போரும் சிறையாளியாகவே காட்சி அளிக்கும் காட்சிப்பிழை அல்லாமல் மற்றென்பதோ? ஏற்றத்தாழ்வையே இயற்கை நியதி, இறைவன் படைப்பென பேதப்படுத்துவதும், அதனைத் தக்கவைப்பதுமே மதவாதக் கொட்டடிகளின் கைங்கர்யமாக இருக்க ; அத்தகு பேதங்களைத் தகர்த்தெறியவல்ல சமயச்சார்பின்மை பிளவுபட்ட மனிதர்களை உருவாக்குகின்றது எனும் தலைகீழ்ச்சித்திரிப்பை என்னென்பது?

காந்தியாரும் ராமானுஜமும் வலியுறுத்த முனையும் ‘ சர்வதர்ம சமபாவம்’ எனும் கருத்தாக்கம் தமிழ்ச்சூழலில் தாயுமானார் பாடிநிற்கும் ‘சமரச சன்மார்க்கம்’ எனும் கருத்தாக்கம் ஒத்ததே:

“வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின்விளையாட் டல்லால் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா’- தாயுமானார்

மட்டுமல்லாமல் இத்தொடர்பில். ‘சமன்மய வியாக்கியம்’ எனும்  கூட்டிணைவுக்கொள்கையும் இங்கே ஒத்துறழ்ந்து நோக்கத்தக்கதே:

“சமன்மய வியாக்யம் என்று அழைக்கப்படும் கூட்டிணைவு விளக்கம் என்ற கொள்கையே பிரபலப்படுகிறது. இதன்படி பல்வேறு தத்துவப்பிரிவுகளிடையே உண்மையில் முரண்பாடுகள் இல்லை என்றும் மாறாக, அவை ஒன்றுக்கொன்று இட்டு நிரப்புபவையாக உள்ளன என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இத்தகைய பிரிவுகள் படிப்படியாக இறுதியான தத்துவஞானத்தைச் சென்றடையகிறது என்றும் சொல்கிறார்கள்.
– தேவிபிரசாத் சட்டோபாத்யாய (‘இந்தியத் தத்துவம் ஒர்  அறிமுகம்’)

இத்தகு ‘சர்வதர்ம சமபாவ’ ‘சமரச சன்மார்க்க’ எல்லை யாவுங் கடந்துதானே இராமலிங்க வள்ளலார் ‘சமரச சுத்த சன்மார்க்கம்’ எனும் வெட்டவெளி நிலைப்பாட்டில் வீற்றிருக்கின்றார்? தாராஷுகோ, யாஷா விஜயா எனத் திக்கெலாந்தேடி மதஞானிகளைக் காணவல்ல ராமானுஜத்துக்கு தமிழறச் சால்பின் சமயங்கடந்த வளமண்டிய செழுமை உச்சமான இராமலிங்கரை இனங்காண இயலாமற் போனதேனோ?

தொடரும்…

அடுத்த பாகத்தினைப் படிக்க:

பாகம் 2: தமிழறம் எனும் சமய சார்பிலிக் கோட்பாடு

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Radicals)

One Reply to “சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்”

 1. ஐயா , பொதிகைச்சித்தர் அவர்களுக்கு வணக்கம்.
  ஐயா அவர்களின் நமமறிந்து மகிழ்ச்சி மிகக் கொண்டேன்.

  ஆழ்ந்த கருத்துகள்
  செறிவான விளக்கங்கள்.
  தொடரட்டும் கருத்துரைகள்.
  நன்றி. வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *