சித்தர் மரபு

சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி; சமயச்சார்பின்மை – பகுதி 3 – வே.மு.பொதியவெற்பன்

இக்கட்டுரையின் முதல் இரண்டு பாகங்களை கீழகாணும் இணைப்புகளில் படிக்கலாம்.

சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

சமயச்சார்பின்மை: பாகம்2 – தமிழறம் எனும் சமயச்சார்பிலிக் கோட்பாடு – வே.மு.பொதியவெற்பன்

மதமரபின் அந்தங்களின் அரசியலும், எதிர்மரபினரின் சிறப்பியல்பு அறியொணாத் ‘தாரை வார்ப்பும்’!

எங்கே சமயம் முடிவடைகின்றதோ அங்கே ஆரம்பிக்கும் ஆன்மிகமான சமயத்தன்மையே சித்தரியமாம். சமயஞ்சார் பக்தியியக்கம் இறைஞானத்தின் (Theology) பாற்பட்டதெனில், சமயஞ்சாரா சித்தநெறியோ மறைஞானம் (Mysticism) சார் மனிதாயச் சிந்தனைப்பள்ளி எனலாம். அவ்வச் சமயிகள் போல் அல்லாமல் சித்தர் யாவரும் ஒரே படித்தானோர் அல்லர். ஒரே படித்தானவை அல்லாமல் விதந்தோதிக் காணவேண்டிய அடிப்படை முரண்பாடுள் மூவகைத்தாம்:

1.மத அத்துக்கள்  X இறையியல்,

2.முன்னைச்சிவசித்தர் திருமூலர் X பின்னை சமயஞ்சாரா சிவவாக்கியர்.

3.வெவ்வேறு சித்தர் நோக்கு நிலைப்பாடுகள்

அத்துக்களை வரையறுப்பதே மத அதிகாரங்களின் செயற்பாடாக இருக்க, அத்தகு அதிகாரங்களைக் கட்டவிழ்ப்பதே  பின்னைச்சித்தர் மரபின் அத்துமீறலின் செல்நெறி ஆகும்.

வேதாந்தத்திலிருந்தும் சித்தாந்தத்திலிருந்தும் வழிவிலகிய தத்துவப்பிரிவுகளை மீட்டெடுத்து மீளவும் அந்தங்களின் அரசியலில் கரைத்துவிடப் பாடாய்ப்படுவோர் அவ்வச் சமயிகள் மட்டுமே அல்லர். இவற்றை அறவே மறுதலிக்கும் எதிர்மரபினர் சிலரும் சிறப்பியல்பு இன்னதென இனங்காணமாட்டாமல் மதமரபிற்கே அவ்வழிவிலகல்களையும் ‘தாரை வார்த்திடும் கைங்கர்யம்’ புரிதலுங் கண்கூடே.

இவ்வாறான சித்தர்மரபின் அத்துமீறல்களை அறியொணாமல் அவை யாவற்றையும் சித்தர்மரபின் எல்லைக்குள்ளேயே நிகழ்ந்தனவாகச் சித்திரிக்கும் பிறழ்திரிபான காட்சிப்பிழைகளைத் தொகுத்துக் காண்போம்:

1.சித்தர்மரபு ராஜ்கௌதமனுக்கும் சைவத்தின் ஞானக்கிளையாகவே காட்சியளிக்கின்றது. (‘புதுமைப்பித்தன் என்னும் பிரம்ம ராசஷஸ்’) 

2. “சிவன் விஷ்ணு முதலானவர்களை வழிபட்டு வந்தனர். சைவசமய எல்லைக்குள் இருந்தே மரபுமீறல்கள் நிகழ்த்தப்பட்டன” – ஆ.சிவசுப்பிரமணியன்( சித்தர்கள்: மரபே மீறலாய்’ கட்டுரையில்)

3. ” சிவனையே ஏகதெய்வமாகக் கருதினர். அவனின் உருவகமாகக் கோயில்களில் வழிபடுவதை எதிர்த்தார்கள்” – நா.வானமாமலை (‘திரட்டு’ ஜூன்-1995)

4.”சித்தர்கள் சாத்திரங்களை எதிர்ப்பது போலத் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் சிந்தனை அதில் ஈடுபட்டேயிருக்கிறது. சமயநிலையில் அவர்கள் ஈடுபாட்டுடன் கூடிய புரட்சியாளர்களாகவே (Pious rebels inside the field of religion) விளங்குகிறார்கள்”
“சித்தர்களை வேதங்களை மறுப்பவர்கள் என்று கூறினால் அது ஓர் ஒழுங்கற்ற குறுகிய நோக்குடைய பொருள் வரையறையாகும் (illogical narrow definition)”
“தந்திரங்கள்  வேதத்திற்குப் புறம்பானவை என்பது தப்பெண்ணம். எந்தத் தந்திரமும் வேதத்தின் தலைமை அதிகாரத்தை மறுக்கவில்லை”
– த.ந.கணபதி (‘சித்தர்களின் குறியீட்டுமொழியும் சூனியசம்பாஷனையும்’)

5. “சித்தர்களின் சிந்தனைப்புலம் இந்துசமய மரபின் எதிர்நிலை சார்ந்தது போன்ற தோற்றம் தருவது உண்மை. ஆம் அது ஒரு தோற்றம்தான். ஆழ்ந்து நோக்கினால் அத்தோற்றம் உண்மையல்ல என்பது தெளிவாகவே புலப்படும்”
-ந.சுப்பிரமணியன் (‘அரிமா நோக்கு’,  ஜூலை – 2007)

6. “லலிதா சகஸ்ரநாமம் சொல்லும் குலம் பற்றிய விளக்கத்தோடு சித்தர்களின் குண்டலினி பற்றிய பாடல்கள் ஒத்திசைவு கொள்வதால் தான் சித்தர்மரபு வேத எதிர்மரபு அல்ல என்று நம்மால் தீர்மானிக்க முடிகிறது. வேத மரபிலிருந்து சித்தர் மரபில் ஈடுபட்ட பேராசிரியர் தான் இத்தகைய செய்திகளை எழுதமுடியும்” 
– சுகி சிவம் (சுகிசிவம் போலும் அக்மார்க் சற்சூத்திர ஆன்மிகப் பேச்சாளார்களால் மட்டுமே இப்படி சனாதன விஸ்வாசத்தைப் படிகத்தெளிவாகப் பளிச்செனக் காட்டிட இயலும். சும்மாவா அடுத்தடுத்த மீட்டிங் அட்வான்ஸ் எல்லாம் வாங்கவேண்டாமா பின்னே?)

7.”எவ்வுயிர்க்கும் அன்புசெய்தல் பசிப்பிணி அகற்றுதல் ஆகியவற்றை வலியுறுத்திய வள்ளல் இராமலிங்கரும் இந்து சமய எல்லைக்குள் நின்றவர்தான். திருமூலர்,தாயுமானவர் என்கிற மரபிலேயே அவர் வருகிறார். சோதிவடிவில் இறைவனை வணங்குதல் சைவமரபுதான்” 
“சிவனை முழுமுதல் கடவுளாக ஏற்கும் வள்ளல் பெருமான் சைவசித்தாந்த மரபில் நின்றே பிரபஞ்ச லீலைகளை விளக்குகிறார்”
– அ.மார்க்ஸ் (‘புதிய காற்று’ மார்ச்- 2004)

8.”சித்தர் பாடல்களின் முதல் தொகுதியாக ‘பெரிய ஞானக்கோவை’ (1899) கருதப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள பாடல்களின் தலைப்புகளில் சரியைவிளக்கம், யோகநிலை, ஞானநிலை  எனும் உட்தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. சிவபூசை தொடர்பான பாடல்களும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. எனவே சித்தர் பாடல்கள் என அறியப்படுபவை சைவசமயிகளின் ஒருசாரார் பாடல்கள் என்றே கருதமுடியும்.”
– வீ.அரசு

மேலும் சமயத்தைச் சரிசெய்து அதனை ஏற்றுக்கொள்ளலாம் என்ற கருத்துநிலை உரையாடலில் வள்ளலாரைச் சித்தர் மரபில் இணைப்பதும் ஆபத்தானது. நவீன காலனிய மரபில் உருவான கருத்துநிலைகளுக்கும் பாரம்பரியக் கருத்துநிலைகளுக்கும் இடைப்பட்ட முரண்பாட்டில் அலைந்து உழன்று வாழ்ந்தவர் அவர். இராமலிங்கரின் இறுதிக்காலச் செயல்பாடுகள் தன்னை மறுக்கும் நிலைக்கு அவரை இட்டுச் சென்றது. மனிதநேயம் சார்ந்த மனநிலையில் இன்னொரு நிலை இதுவாகும் என்பார். (‘பக்தி : அனுபவம், அரசியல்’)

“ஞானார்த்தக் கலாச்சாரத்தின் மீது ஒட்டுண்ணி வியாபாரம் செய்கிற சூழ்ச்சிக்காரர்கள், அவர்களைத் தாக்கும் போது ஞானார்த்தக் கலாச்சாரத்தையும் சேர்த்துத் தாக்கும் அரசியல் மனோபாவக்காரர்கள் என்ற இரண்டு அணிகளையும் கலைஞன் அம்பலப்படுத்தியாக வேண்டிய நிலை இன்று.”
– பிரமிள்

இத்தகு இருமுனைத் தவறுகளையும் ஊடறுத்து நோக்கியே உண்மைகளை இனங்கண்டாக வேண்டியுள்ளது.

சைவ சித்தாந்த இறையியல் X பின்னைச் சித்தர்மரபு மெய்யியல் அடிப்படை வேறுபாடுகள்:

1.பதி, பசு, பாசம் என மூன்றாக.(சை.)1 உடல், உயிர், பூரணம் ஒன்றாக(சி.)

2. சிவனில் ஒடுங்கும் சக்தி (சை.) சக்தியில் ஓடுங்கும் சிவம்(சி.)

3.பலவாகத் தோன்றும் தூலங்கள் (சை.) தூலமுடன் இரண்டற ஒன்றித் துலங்கும் சூக்குமம்(சி.)

4. உயிர் அநாதி. கன்ம வினைக்கேற்ப மறுபிறவி(சை.) ஐம்பூதச்சேர்க்கை (சி)

5.கோயில்,தல, மூர்த்தி வழிபாடு(சை.) காயமே கோயில் (சி.)

6. நால்வகை மார்க்கமும் (சை.) சன்மார்க்கம் மட்டுமே (சி.)

7.ஆகம வழிப்பட்டது (சை.) முன்னூலற்றது ( சி.)

8. நாயக நாயகி பாவம்(சை.) வாலை, மனோன்மணி (சி.)

வழக்கு மொழியின் எளிமையும் குறியீட்டுமொழியின் அருமையும் தலைமயங்கி முயங்கிய சித்தமொழிக் கவைப்பாங்கின் (ambiguious) ‘ஏமாற்றும் எளிமை’

“சித்தர்கள் எல்லோரும் தாய்மொழிக்கு ஏற்றம் அளித்துவந்தார்கள். தம் கருத்துக்களை அந்தந்த மொழியின் வட்டார மொழிகளிலும் வெளிப்படுத்தி வந்தார்கள். இதனால் படிப்பறிவு இல்லாத கிராம மக்களும் சித்தர்களின் பக்தர்களாயினர்”
– இராகுல் சாங்கிருத்தியாய [(‘பொது சமயப்புயல் எழுப்பிய 84 சித்தர்கள்’- (18 சித்தரெனல் தமிழ்மரபு,84 நவநாத சித்தரெனல் வடபுலமரபு-பொதி)-‘ஓம் சக்தி’ நவ.1995]

“மிக ஆழ்ந்த அறிவை மிக அற்பமான புதிர்களில் பதுக்கி வைப்பார்கள். வறட்டு வேதாந்த விசாரணையில் ஈடுபட்டிருப்போர்க்கான அதிர்ச்சி மருத்துவமாகப் பயன்பட்டிருக்கிறது”
-த.ந. கணபதி (‘சித்தர்களின் குறியீட்டுமொழியும்  திருமூலரின் சூன்ய சம்பாஷணையும்’)

எடுத்துக்காட்டாக,

“தன் கணவன் தன்சுகத்தில் தன்மனம் வேறானது போல் 
என்கருத்தில் உன்பதத்தை ஏற்றுவதும் எக்காலம்?”
– இது பத்திரகிரியாரின் ‘மெய்ஞ்ஞானப்புலம்பல்’.

ஒத்துறழ்ந்து காண்போம்:

“அந்தரம் சென்றுமே வேர்பிடுங்கி
அருளென்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே”
– இது பாம்பாட்டிச்சித்தர் பாடல்

“கிளைகள் மண்ணில் பரப்பி 
வேர்கள் 
விண்ணில் விரவவவிட்ட மரம்” 
– இது ஒரு பவுல் பாவலனின் தலைகீழ்மொழி(ulatbamsi)

“மலையேற வேண்டும் 
எந்தப் பாதையில் போகலாம்
உச்சியிலிருந்து தொடங்கு” 
– இது ஒரு சென்ரின்ஜாய் முரண்புதிர் (Parodax).

“உச்சியில் பிச்சையெடுத்தல்”- இது சித்தமொழி.

கீழ்நோக்கிப் பாயும் விந்தினை மேல்நோக்கி ஆறாதாரங் கடந்து சுழுமுனையில் தாழ்திறக்கும் அனுபோகக் காமமே இவற்றின் உட்கிடையான பேசுபொருளாம்.

சித்தமொழியின் பித்தஜாலம் இத்தகு தியானக்குறியீடுகள் செறிந்த கமுக்கமொழியாகும். படிமமே கவிதையாகும் சங்கப்பாடற்பாங்கும் சித்தர் பாடலூடே தாக்குரவு மீக்கூரக் காணலாம். இல்லாமல் இருப்பதான ‘சாகாக்கலை’யைப் பேசும்மொழி சொல்லாமற் சொல்லவல்ல கவிதையாகத்தானே ஆதல் கூடும்? ஆக இவ்வாறு மேலோட்டமான அதிர்ச்சிமதிப்பு கவனஈர்ப்பு ஆகுமாறும், அடியாழக்குறியீடு மறைஞானஞ் செறிந்தும் கட்டமைக்கப்பட்ட பித்தஜாலமே சித்தமொழி எனலாம்.

இருமையற்ற ஒருமை நோக்கிய பாய்வு

சித்தமருத்துவத்தில் ஆண்மருந்தைக் கரைப்பதே பெண்மருந்தாகும்.

“எதிர் எதிர்நிலை, இயைதல்நிலை ஆகிய இருநிலைகளும் தந்திரத்தின் எல்லைக்கற்கள். தந்திரத்தின் குறிக்கோளே இந்த இருமையின் எல்லா வடிவங்களையும் யோகியின் தேகத்திலேயே ஒன்றுபடுத்தி இணைத்துக் கொள்வதுதான். இருமை என்பதைக் குறிக்கும் அடையாளங்கள் தான், ஆண் பெண் இரண்டும்”
– த.ந.கணபதி

“உலக முழுவதும் உள்ள பொருட்களை இரு எதிர்நிலைகளாக வைத்து இரண்டன் ஒற்றுமமையும் மமுரண்பாடுங் கொண்ட இயக்கமாக இயக்கத்தைத் தாந்திரிகம் காண்கிறது.”

“வாமகாரம் என்பது தாந்திரிகத்தில் ஆண் – பெண் சேர்க்கையின் மூலமாக வளமையைப் பெருக்குவதை முன்வைக்கிறது. இங்கே தந்தை தாயிடம் அடைக்கலமாகி விடுதலே தலையாயது. தாய்தான் வளமையின் சின்னம். எனவே தாயிடம் ஒடுங்குதல் தாந்திரிகத்தில் அவசியமாகும்”
– தேவ.பேரின்பன் (‘திரட்டு’ ஜுன் – 1995)

“தன் ஆளுமையையும் உணர்வையும் பெண்மையாக மாற்றுவதற்கான ஒருவிதப் பயிற்சித்திட்டமே தந்திரயோகம். நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த நடைமுறை பெண்ணாக மாறுவதன் மூலம் எல்லையற்ற பெண்சக்தியைச் சாந்தப்படுத்தும் ஒரு முயற்சிதான் என்பதையே”

“பெண்ணாக வேண்டும். மனிதரில் உறங்கும் பெண்மையைக் கிளர்த்தித் தமது ஆண்மையை அழிக்கவேண்டும்”
– தேவிபிரசாத் சட்டோபாத்யாய (‘உலகாயதம்’)

இத்தகு தந்திரமரபை வெவ்வேறு சமயங்களும் தத்தமக்கேற்பத் தகவமைத்துக் கொண்டன.வெவ்வேறு சமயங்களில் இது எவ்வெவ்வாறு எலாம் வழங்கப்படலாயின என தநக எடுத்துரைப்பார்:

மூலதந்திரத்தில் ஆண் – பெண் (புருஷன்-ப்ரகிருதி) என்பதனையே மகாயான பௌத்தத்தில் சூள்யதம்- கருணை எனவும், தந்திரயான பௌத்தத்தில் ஓர்மை – உத்தி எனவும், வைணவ தந்திரத்தில் கண்ணன் – ராதை எனவும், சித்தர்மரபில் சிவன் – சக்தி எனவும், விந்து நாதம் எனவும்; தாவோயிசத்தில் யின் – யாங் எனவும், ரசவாதத்தில் ரசம் – மைக்கா எனவும் வழங்குவர். ஆகவே தமிழ்ச்சித்தர் பாடலைப் பொறுத்தவரையில் சிவம் என்பது ஆண்மைக்கும், சக்தி என்பது பெண்மைக்குமான குறியீட்டுச் சொற்களே அல்லாமல் அவை கடவுளரைக் குறிப்பன ஆகமாட்டா!

உளவியலறிஞர் கார்ல் யூங் (Karl Jung) ஆணிடத்தில் உள்ளடங்கிய பெண்கூறை அனிமா(anima) எனவும், பெண்ணிடத்தில் உள்ளடங்கிய கூறு அனிமஸ் (animus) எனவும் குறிப்பிடுவார்.

‘ஆணாகிப் பெண்ணாகி அலியாகி நின்ற ஆதி’யைப் பரவும்  திருமந்திரம். “பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
அண்ணுற அமைந்த அண்ணுற வகுத்த அருட்பெருஞ் சோதி” யைப் பரவிநிற்பார் இராமலிங்கர்

“அருவில்லான் உருவுமில்லான் அணுவுமில்லான் 
ஆணில்லான் பெண்ணில்லான் அலியுமில்லான்” 

என அல்லாவைப் பராவிநிற்கும் ரசூல்பீவிப்பாடல்.

சித்தர்மரபின் ‘தனித்திருத்தல்’ விட்டேற்றியான ஒதுக்கற்பாடன்று. ‘விட்டு விடுதலையாகி நிற்கும் ஒட்டுறவே!

‘தனித்திரு’ என்பதே தமிழ்ச்சித்தமரபின் தனிச்சிறப்புக் கூறான மூலவாசகமாகும். 

“உன்னை அறிந்தக்கால் – அகப்பேய்
ஒன்றையுஞ் சாராயே” 
என்பதும்,
‘சாராமல் சாரவேண்டும்’ எனவும் ஒலிக்கும் அகப்பேயார் குரலே. இதுவே ‘தனியுற்ற கேவலம்’ என்னுந் திருமந்திர முதலாகப் ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்னும் வள்ளல் வாக்கு வரை இவ்வாறே வலியுறுத்தப்படக் காணலாம்.

“அதாவது தனியுற்ற நிலையினும் தனியுற்றநிலை. எந்தச் சார்புகளும் இல்லாமல் பாழாய்ப்போன நிலை. சார்ந்து நிற்பன எல்லாவற்றையும் உள்ளடக்கி அவற்றைக் காட்டிலும் விரிந்து நிற்றல்” 
எனத் ‘தனியுற்ற கேவல’த்தை எடுத்துரைப்பார் தநக.

“சேற்றில்திரி பிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல் போல் தேசத்தோடு  ஒத்து வாழ்வார் செய்கை” என்பது பாம்பாட்டியார் பாடல்

“சேற்றிலே நுழைந்திருந்த சிறுபிள்ளைப் பூச்சிபோலும்
நீற்றிலே நுழைந்திருந்த அழற்சி போலும்” 
எனத் தொடரும் ‘நெஞ்சறி விளக்க’ப் பாடலுமே.

பசித்திரு எனில் எல்லாவகைச் சிந்தனைப்பள்ளிகளையும் அறிந்துகொள்ள வேணவாக் கொண்டிருத்தல், தனித்திரு எனில் அறிந்து கொண்ட அவை யாதொன்றனையுமே சாராதிருத்தல், விழித்திரு எனில் கேள்விக்கண்ணுடனேயே விழிப்புணர்வோடிருத்தல் என இற்றைப்படுத்திக் காண்போமாக!

“சித்தர்பாடல்கள் யாவுமே ஒரே பண்பின் பாற்பட்டவை என்று நிச்சயமாகக் கூறமுடியாவிட்டாலும் தமிழ்நாட்டின் உத்தியோகபூர்வமான கோயிற்பண்பாட்டை (அரண்மனை ஆலயம்) நிராகரித்தவை எனக் கொள்ளலாம்”
“ஆன்மிகம் என்பது வாழ்வுக்கு அப்பாற்பட்டதொன்றாகவோ,அந்த வாழ்வை நிராகரிப்பதாகவோ அமையவில்லை என்பதும் உண்மையாகும்.”
– கா.சிவத்தம்பி 

எனவே தனித்திருத்தல் எனில் நிறுவனச்சார்பின்றித் தனித்திருத்தலே.

சித்தர்மரபின் இத்தகைய ஒதுக்கற்பாடாகா விட்டு விடுதலை ஆகிநிற்கும் ஒட்டுறவு (The detached attachment)  ஏலவே நாம் கண்டவாறே சீக்கிய சந்த்மரபின் மீரி பீரிக்கோட்பாட்டோடும் ஒத்துறழ்ந்து நோக்கத்தக்கதேயாம்.

பெண்ணெனும்  மனிதவியக்தியை மெய்ந்நெறியாளர் நிராகரியார்!

பெண்ணாதாரமான,  பெண்ணாக மாற முயலுஞ் சித்தர் மரபை அறியொணாமல் பொதுப்புத்தியில் மட்டுமல்லாது  சில அறிவாண்மையர் தரப்பிலிருந்துங் கூடச் சித்தர் மரபையே பெண்களுக்கு எதிரானதாகப் பிறழ்திரிபாகச் சித்திரிக்கப்படுதலுமுண்டு. வள்ளுவத்தின் ‘பெண்வழிச்சேரல்’ போலவே தான் இதுவுமாகும். பாலியல் போதையில் ஒருபாலார் மறுபாலார்க்கு அடிமையாகி நிற்றல் குறித்ததே என்பதே என் நிலைப்பாடு.

பெண்ணைச் சம்சாரப்பிணிப்பின் மூளைக்கோலாகவும், காமக்கருவி ஆகவும் காண்கிற பார்வைக் கோளாறுதான், புத்தராலும் சித்தர்களாலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறதே தவிர, பெண் என் மனிதவியக்தியையும் சரி, தத்துவத்தையும் சரி, மெய்ந்நெறியாளர் நிராகரிக்க இடமில்லை என மறுதலிக்கும் பிரமிள்’ ‘பெண்ணுடன் கூடியே உண்மையை அடையமுடியும்’ என்றுகூடச் சிவவாக்கியர் வலியுறுத்துவார் என்பார்.

அப்படி அவர் சுட்டிக்காட்டிய பாடலையும் இன்னோரன்ன இன்னோர் சிவவாக்கியர் பாடலையும் காண்போம்:

“பெண்மையாகி நின்றதொன்று விட்டுநின்று தொட்டதை
உண்மையாய் உரைக்க முக்தி உட்கலந் திருந்ததே”

“மாதர்தோள் புணரந்திடார் மாநிலத்தில் இல்லையே மாதர்தோள்  புணர்ந்த போது மனிதர்வாழ் சிறக்குமே” – சிவவாக்கியர்

தொடரும்…!

பாகம் 4 விரைவில் வெளிவரும்.

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Radicals)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *