ஃபேஸ்புக் மீது வழக்கு

இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்? சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக வழக்கு!

இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களை கையகப்படுத்தியதற்கு எதிராக ஃபேஸ்புக் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களைச் சேர்ந்த 48 தலைமை அரசு வழக்கறிஞர்கள் (Attorney general) மற்றும் அரசின் முக்கிய கட்டுப்பாட்டு நிறுவனமான ஃபெடரல் டிரேட் கமிஷன் ஆகியோர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் 2014-ம் ஆண்டு வாட்ஸ்அப் (Whatsapp) செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கி கையகப்படுத்தியது. ஃபேஸ்புக் போன்ற பெருநிறுவனங்கள் தங்களுடன் போட்டியிடும் சிறு நிறுவனங்களை வாங்கி கையகப்படுத்தி ஏகபோகத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு, Antitrust Law எனும் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தங்களுக்கு கடுமையான போட்டியாளர்களாக இந்த நிறுவனங்கள் இருந்த காரணத்தினால், அவற்றுடன் தங்களால் போட்டிபோட முடியாது என்றும், அதனால் அந்த நிறுவனங்களை வாங்கி கையகப்படுத்திவிட வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவன அதிபர் மார்க் சூகர்பெக் பேசி வந்ததாகவும் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒற்றை ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலும் பேஸ்புக்

“அன்றாட ஃபேஸ்புக் பயனாளர்களின் செலவில் சிறிய போட்டியாளர்களை நசுக்கி, ஆதிக்கம் மற்றும் ஏகபோகத்தை தக்கவைத்துக் கொள்ள, போட்டி நிறுவனங்களை வாங்கியுள்ளதாக” நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெடிடியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக  வழக்கு தொடர்ந்துள்ள அமெரிக்காவின் முக்கிய கட்டுப்பாட்டு நிறுவனமான  ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC- Federal Trade Commission), “ஃபேஸ்புக்கின் ஏகபோகத்திற்கு அச்சுறுத்தல்களாக உள்ள போட்டி நிறுவனங்களை அகற்றுவதற்கான தந்திரத்தை” செயல்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. 

போட்டியாக வளரும் நிறுவனங்களை தடுத்து வாங்கி கையகப்படுத்தும் முறை

மேலும் ஃபேஸ்புக்கின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சுமார் 1 பில்லியன் டாலர் செலவு செய்து  இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை 2012 ஆம் ஆண்டு கையகப்படுத்தி “ஒரு போட்டியாளரை மட்டுப்படுத்தியுள்ளதாக” தெரிவித்துள்ளது. 

மேலும் ஃபெடரல் டிரேட் கமிஷன் பதிவுசெய்துள்ள வழக்கில், மார்க் ஜுக்கர்பெர்க் 2008-ல் “போட்டியிடுவதை விட வாங்கி விடுவது சிறந்தது” என்று கூறியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மற்றொரு மின்னஞ்சலில் 2012-ல் ஜுக்கர்பெர்க், ”வாட்ஸ்அப் என்பது எங்கள் முழுமையான மெசஞ்சரை விட ஒரு சிறந்த தயாரிப்பு” என்றும் 

“அவர்களின் வேகத்தையும் வளர்ச்சி விகிதத்தையும் நேரடியாகக் குறைக்க எங்களுக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கிறது இந்த வழக்கு.

“ஃபேஸ்புக் நிறுவனம் முறைகேடாக கையகப்படுத்திய வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களை மீண்டும் விற்க நீதிமன்றங்கள் உத்தரவிடும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” என லெடிடியா ஜேம்ஸ் தெரிவித்தார்.

‘நம்பிக்கையில்லா சட்டங்கள்'(Antitrust Laws)

அமெரிக்காவில் இந்த சட்டம் 1890 ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டது. 

பின்னர் இச்சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பல மாறுதல்கள் பின்பு தற்போது ஷெர்மன் சட்டம்( Sherman Act), கூட்டாட்சி வர்த்தக ஆணைய சட்டம்( Federal Trade Commission Act), கிளேட்டன் சட்டம்(Clayton Act) ஆகிய சட்டங்கள் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளன.

இவை அமெரிக்க நாட்டில் வணிக நோக்கத்தில் நடைபெறும் ’நிறுவன இணைப்புகள்’ சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டால் அவற்றை ஆய்வு செய்து தடைசெய்வதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் ஆகும். ஒவ்வொரு வழக்கிலும் உண்மைகளின் அடிப்படையில் எது சட்டவிரோதமானது என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன.

வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகும்

இந்த வழக்கு முடிவடைய பல ஆண்டுகள் ஆகும் எனவும், இதனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் அல்லது மெசஞ்சர்களை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு உடனடியாக எந்த இடற்பாடும் ஏற்படப் போவதில்லை எனவும் சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

அமெரிக்க செனட் சபையின் Antitrust துணைக்குழுவின் முன்னாள் பொது ஆலோசகரான சேத் ப்ளூம் கூறும் போது, வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களை விற்பனை செய்யுமாறு இப்போது பேஸ்புக் நிறுவனத்தை நீதிமன்றங்கள் கட்டாயப்படுத்துவது கடினம் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால் தற்போது பேஸ்புக்கின் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ள ஃபெடரல் டிரேட் கமிஷன் தான் வாட்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்ட நேரத்தில் அந்த ஒப்பந்தத்திற்கான அனுமதியை அளித்தது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *