1. விவசாயிகள் போராட்டம்
கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் துவங்கிய போராட்ட வேள்வி இன்னும் அணையாமல் கனன்று கொண்டிருக்கிறது. சீக்கிய விவசாயிகள் ஒட்டுமொத்த இந்தியாவின் விவசாயிகளின் கைகளையும் இழுத்துக் கொண்டு போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள். நவம்பர் மாதம் 25-ம் தேதியன்று டெல்லி சிங்கு எல்லைப் பகுதியில் போராட்டத்தை துவங்கிய விவசாயிகள் இன்னும் போராட்டக் களத்திலேயே இருக்கிறார்கள்.
அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை ஏற்காத வரை தங்களுக்கு புத்தாண்டே இல்லை என்று களத்திலேயே அமர்ந்திருக்கிறார்கள் விவசாயிகள்.
2. CAA எதிர்ப்பு போராட்டம்
2020-ம் ஆண்டின் துவக்கத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் NRC ஐ எதிர்த்து நாடு முழுதும் தீவிரமான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இன்னொரு பக்கம் இந்த போராட்டத்தை இசுலாமியர்கள் மட்டுமே நடத்துவதாக சித்தரிப்பும் நடைபெற்றது. டெல்லியின் ஷாகின்பாக்கில் 60 நாட்களுக்கும் மேலாக அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் வலதுசாரி வன்முறையாளர்கள் வன்முறையை ஏவினர். இசுலாமிய சிறுபான்மை மக்கள் மீது திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போராட்டம் கொரோனா தொற்று பரவலின் காரணமாக கைவிடப்பட்டது.
3. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எதிர்ப்பு
ஒரு பக்கம் புதிய கல்வியை ஏற்பதா இல்லையா என்று முடிவு செய்ய ஒரு குழுவை அமைத்த தமிழக அரசு, இன்னொரு பக்கம் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமான 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற நடைமுறையைக் கொண்டுவந்தது.
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது, மாணவர்களின் இடை நிற்றலை அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குழந்தைகளின் மன உளைச்சலை அதிகப்படுத்தும் என்று பெற்றோர்கள் எதிர்த்தனர். இது மாணவர்கள் மீதான வன்முறை என்றும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக குழந்தைகளை கல்வியிலிருந்து வெளியேற்றும் சூழ்ச்சி என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர். எதிர்க்கட்சிகள் போராட்டத்தை அறிவித்தன. இதன் காரணமாக இந்த முடிவிலிருந்து தமிழக அரசு பின்வாங்கியது. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
4. EIA 2020 வரைவு எதிர்ப்பு
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த திருத்தத்தினைக் கொண்டுவருவதற்கான வரைவினை வெளியிட்டது. இந்த திருத்தங்களின் வாயிலாக அறிவிக்கப்பட்ட தளர்வுகள் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கும் என்று சூழலியல் செயல்பாட்டாளர்கள் எச்சரித்தனர்.
இந்த சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை பெறாமல், பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளித்திட வழிவகுப்பதாகவும் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக நீருக்கடியிலும் பூமிக்கடியிலும் இருக்கும் எரிவாயு-நிலக்கரி-எண்ணை வளங்கள்-நிலக்கரி படிம மீத்தேன் எடுத்தல் போன்ற திட்டங்களுக்கு EIA-வும் கருத்துகேட்பும் அவசியமில்லை என்பது தமிழகத்தில் எதிர்ப்பினை உருவாக்கியது.
EIA 2020 வரைவில் என்னென்ன சிக்கல்கள் உள்ளது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் வெளியிட்ட விரிவான விளக்கம்:
பத்மபிரியா என்ற பெண் EIA2020 குறித்து பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.
5. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு பலத்த எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தை சிறப்பு உயராய்வு நிறுவனமாக மாற்றுவதாக அறிவித்து, பல்கலைக்கழகத்தினை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தமிழக அரசு முடிவெடுக்காத நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது கடும் எதிர்ப்பலையை உருவாக்கியது. மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகம் குறித்து முடிவெடுக்க சூரப்பாவுக்கு யார் அதிகாரம் அளித்தது என்று கேள்வியெழுப்பி, சூரப்பாவை பதவி நீக்கக் கோரி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதை எதிர்த்தும், சூரப்பாவை பதவி நீக்கக் கோரியும், ஆளுநரை எதிர்த்தும் போராட்டங்களை நடத்தினர்.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் – கல்வியாளர்கள் இணைந்து அறிவிப்பு
6. மருத்துவ உயர்படிப்பில் OBC இடஒதுக்கீட்டை அமல்படுத்தாதற்கு எதிர்ப்பு
மருத்துவ உயர் படிப்பில் OBC மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருவதனை எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. OBC மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டினை மறுக்கும் பாஜக யாருக்கான கட்சி என்ற ரீதியில் கேள்வி எழுப்பப்பட்டது.
OBC இந்துக்களை பாஜக வஞ்சிப்பதாகவும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டன. தமிழ்நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓ.பி.சி இடஒதுக்கீடு மறுக்கப்படுவதை எதிர்த்தனர்.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் மத்தியத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான 50 சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக மற்றும் தமிழக சுகாதாரத் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
7. தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு
தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கினை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு உருவாக்கப்பட்டது.
தமிழில் குடமுழுக்கு நடத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு, மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய், வழக்கறிஞர் திருமுருகன், வீரத்தமிழர் முன்னணி, கரூர் தமிழ் இராசேந்திரன், ஹென்றி திபேன், ராஜீவ் ரூபஸ் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து வாதிட்டனர்.
வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கினை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
8. ஏழு தமிழர் விடுதலைக்கான குரல்
30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழ்வரையும் விடுதலை செய்வதற்காக தமிழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் மீதான முடிவெடுக்காமல் தொடர்ந்து ஆளுநர் தாமதித்து வருவதற்கு தொடர்ந்து ஏராளமான கண்டனங்கள் எழுப்பப்பட்டன.
பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளால் போராட்டங்களும் நடத்தப்பட்டன. குறிப்பாக இந்த ஆண்டு தமிழ் திரையுலகைச் சேர்ந்த இளம் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆளுநருக்கு கோரிக்கை எழுப்பி குரல் எழுப்பியுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் ஆர்யா, இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குநர் அமீர், நடிகை ரோகிணி, இயக்குநர் ராஜூ முருகன், நடிகர் பார்த்திபன், இயக்குநர் நவீன், இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழ்வரின் விடுதலைக்கு குரல் எழுப்பி பரப்புரையை மேற்கொண்டனர்.
பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள் – ஒலிக்கும் திரையுலகினரின் குரல்
9. Black lives matters போராட்டம்
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் காவல்துறையினால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் கொந்தளிப்பை உலகம் முழுவதும் உருவாக்கியது. வெள்ளை (!) மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகை இடப்பட்டது.
இதேபோன்று 2014ம் ஆண்டு ஜீலை 14ம் தேதி எரிக் கார்னர் என்ற கறுப்பரும் அமெரிக்க வெள்ளையின காவல் அதிகாரியால் கழுத்தில் சுருக்கிட்டு படுகொலை செய்யப்பட்டார். கழுத்து நெறிபடும் வேளையில் எரிக் கார்னரால் உச்சரிக்கப்பட்ட “என்னால் மூச்சு விட முடியவில்லை (I Can’t Breathe)” என்று சொற்றொடர், தொடர்ந்து அமெரிக்க அரசமைப்பினால் இனப் பாகுப்பாடோடு நடத்தப்படும் அமெரிக்க கறுப்பின மக்களின் நீதி கோரும் முழக்கமாக மாறியது.கொரோனா அச்சுறுத்தலையும் கடந்து நிறவெறி அரசிற்கு எதிரான போராட்டம் தீவிர நிலையை எட்டியது,
கொலம்பஸ், வின்ஸ்டன் சர்ச்சில் உள்ளிட்ட ஏராளமானோரின் சிலைகள் உடைக்கப்பட்டன. அமெரிக்காவைத் தாண்டி இப்போராட்டம் உலக நாடுகள் முழுவதும் பரவி நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிரான மிகப்பெரும் எழுச்சியை உருவாக்கியது.
Black Lives Matter போராட்டத்தின் புகைப்படக் கதை
10. ஹத்ராஸ் பாலியல் கொலை
செப்டம்பர் மாதம் உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் மனிஷா தனது அண்ணன் மற்றும் அம்மாவுடன் வயல் வேலைக்குச் சென்ற இடத்தில் காணாமல் போனார். பிறகு உடலில் பல பகுதிகளில் பலத்த காயங்களுடனும் நாக்கு அறுக்கப்பட்ட நிலையிலும் மிக மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அந்த பெண்ணை ஆதிக்க சாதியைச் சேர்ந்த நான்கு பேர் கூட்டு பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கியதும், கழுத்தை நெரித்து, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்தது கொடூரமான முறையில் கொலை செய்வதற்கு முயன்றுள்ளதும் தெரியவந்தது. இறந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட கொடுக்காமல் காவல்துறையினர் எரித்தனர்.
பாஜக-வின் முன்னாள் எம்.எல்.ஏ வான ராஜ்வீர் பஹல்வான், கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விடுதலை செய்யக் கோரி அந்த நபர்களின் சாதியைச் சேர்ந்தவர்களை தன் வீட்டிற்கு அழைத்து கூட்டம் நடத்தியது கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், சாதிய வன்கொடுமைகளை எதிர்த்தும் எழுச்சியினை உருவாக்கியது.