George Floyd

Black Lives Matter போராட்டத்தின் புகைப்படக் கதை

அமெரிக்காவைச் சேர்ந்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலை அமெரிக்காவையே பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

வாசிங்டன் நகரத்தில் மே 31-ம் தேதி போராட்டக்காரர்கள் நடத்திய ஊர்வலம்
சாலைகளில் குவிந்துள்ள மக்கள்

கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டை வெள்ளையின காவல் அதிகாரியொருவர் தனது முழங்காலால் கழுத்தை நெறித்து படுகொலை செய்துள்ளார். இப்படுகொலைக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, படுகொலை செய்யப்பட்ட கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நீதிகோரி அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வெள்ளை (!) மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகை இடப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை முன்பு போராட்டம்

கடந்த திங்கள் கிழமை, மே 25-ம் தேதி அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் பகுதியிலுள்ள கடையொன்றின் அருகே ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஃப்ளாய்டை விலங்கிடப்பட்ட நிலையில் தரையில் கிடத்தி டெரிக் சாவின் என்ற வெள்ளைக் காவல் அதிகாரி தன் முழங்கால்களால் ஃப்ளாய்டின் கழுத்தை நெறித்தார்; தன் கழுத்து நெறிக்கப்படும் சமயத்தில் “என்னால் மூச்சுவிட முடியவில்லை”, என கூறிக் கொண்டே சுய நினைவை இழக்கும் ஃப்ளாய்டின் உயிர் சிறிது நேரத்தில் பறிபோகிறது. வெள்ளையின காவல் அதிகாரி டெரிக் சாவின், 8 நிமிடம் 46 நொடிகள் தன் முழங்கால் ஃப்ளாய்டின் கழுத்தை நெறித்திருக்கிறார். அப்போது அங்கிருந்தவர்கள் காவல் அதிகாரிகளின் மனித விரோத செயலைக் கண்டித்து வாக்குவாதம் செய்துக் கொண்டே நடந்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்தனர்.

இதேபோன்று 2014ம் ஆண்டு ஜீலை 14ம் தேதி எரிக் கார்னர் என்ற கறுப்பரும் அமெரிக்க வெள்ளையின காவல் அதிகாரியால் கழுத்தில் சுருக்கிட்டு படுகொலை செய்யப்பட்டார். கழுத்து நெறிபடும் வேளையில் எரிக் கார்னரால் உச்சரிக்கப்பட்ட “என்னால் மூச்சு விட முடியவில்லை (I Can’t Breathe)” என்று சொற்றொடர், தொடர்ந்து அமெரிக்க அரசமைப்பினால் இனப் பாகுப்பாடோடு நடத்தப்படும் அமெரிக்க கறுப்பின மக்களின் நீதி கோரும் முழக்கமாக மாறியது. அமெரிக்க வெள்ளையின நிறவெறியை எதிர்த்து “கறுப்பர் உயிரும் பொருட்படுத்தக்கூடிய விடயமே” என்ற பெயரில் அமெரிக்க கறுப்பின மக்கள் பொது இயக்கத்தை உருவாக்கினர். ஐந்தாண்டுகள் கடந்தும் எரிக் கார்னரின் மரனத்திற்கு அமெரிக்க அரசமைப்பு நீதி வழங்கிடாத நிலையில், எரிக் கார்னரைப் போன்றே போன்றே வெள்ளையின காவல் அதிகாரியின் நிறவெறியினால் படுகொலை செய்யப்படும் ஃப்ளாய்டின் காணொளிக் காட்சி அவர்களை மேலும் மனக் கொந்தளிப்படைய வைத்துள்ளது.

I Cant Breathe என்ற முழக்கத்துடன் வீதிகளில் மக்கள்
முகக் கவசத்தில் ஜார்ஜ் ஃப்ளாய்டின் கடைசி வார்த்தைகளை நினைவுபடுத்தும் வகையில் I cant breathe என்று எழுதி போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

அமெரிக்க கறுப்பின மக்களின் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த,   காவல் துறை மற்றும் நீதியமைப்பு உள்ளிட்ட அமெரிக்க அரசமைப்பின் நிறவெறிக்கு எதிரான கோபம் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் போராட்டமாக வெடித்துள்ளது. கறுப்பின மக்களோடு நிறவெறிக்கு எதிரான வெள்ளையின மக்களும் போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர், கொரோனா அச்சுறுத்தலையும் கடந்து நிறவெறி அரசிற்கு எதிரான போராட்டம் தீவிர நிலையை எட்டியுள்ளது.

போராட்டத்தில் கருப்பினத்தவர்களோடு வெள்ளையின மக்களும் ஈடுபட்டுள்ளனர்
வெள்ளை மக்களும் கருப்பினத்தவர்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபடும் காட்சி

அமெரிக்க நகரங்களிலுள்ள காவல் நிலையங்களுக்கு தீ வைக்கப்படுக்கிறது. அமெரிக்க மாகாணங்களின் சட்டமன்றங்கள் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

தீ வைக்கப்பட்டுள்ள காவல் நிலையம்
காவல்நிலையத்தினை உடைக்கும் போராட்டக்காரர்கள்

காவல்துறையின் புகைக் குண்டுகளும், ரப்பர் குண்டுகளும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.  போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஓட்டுநர்களும் இறங்கியுள்ளனர். காவல்துறை கைது செய்கிற போராட்டக்காரர்களை அழைத்துச் சென்று வெளியேற்ற பேருந்து ஒட்டுநர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.

போராட்டம் காவல்துறையின் கட்டுக்கடங்காமல் போகவே தேசிய பாதுகாப்புப் படையை அழைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

போராட்டக்காரர்களை ஒடுக்க ஆயுத வாகனங்களை குவிக்கும் அமெரிக்க அரசு

வாஷிங்டனின் போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைப் பகுதியை சூழ்ந்து முற்றுகைக்கு உள்ளாக்கியதையடுத்து வெள்ளை மாளிகையிலுள்ள பாதுகாப்பு பதுங்கு குழிக்குள் அதிபர் ட்ரம்ப் தஞ்சமடைந்துள்ளார். முன்னதாக அதிபர் ட்ரம்ப் தன் ட்வீட்டர் பக்கத்தில், ”போராட்டத்தில் சூறையாடல் தொடங்கினால், சுடப்படுவது தொடங்கப்படும்” என போராட்டக்காரர்களை எச்சரித்திருந்தது குறிப்பிடதக்கது.

அமெரிக்காவில் பெருகிய வேலையின்மையைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா நெருக்கடி அமெரிக்க மக்களின் அரசிற்கெதிரான மனநிலையை தீவிரப்படுத்தியிருக்கிறது, கொரோனா நெருக்கடியால் வேலையிழந்தவர்களில் ஜார்ஜ் ஃப்ளாய்டும் ஒருவர். நிலவிய பொருளாதார நெருக்கடியோடு, அரசின் நிறவெறியும் இணைந்து கறுப்பின மக்களை வதைக்கின்ற பொழுது, கறுப்பின மக்களின் வீதி நிரப்பும் போராட்டம் தவிர்க்க முடியாததாகிறது.

அமெரிக்க பூர்வகுடிகளிடமிருந்து ஐரோப்பிய வெள்ளையர்கள் அமெரிக்காவை அபகரித்த நாள் முதல், அமெரிக்காவில் நிலவும் கறுப்பின மக்களுக்கு எதிரான நிறவெறி நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது.

வெள்ளையின நிறவெறியை எதிர்த்து Black Panthers, மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் போன்றோர் நடத்திய வரலாற்றுப் போராட்டங்களுக்குப் பிறகும் அமெரிக்க அரசமைப்பு தன் நிறவெறிக் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.

கறுப்பினத்தவரான ஒபாமா அதிபரான பிறகும் கூட அமெரிக்க அரசமைப்பு வெள்ளையின நிற வெறியோடே இருக்கிறது.

வெள்ளை மாளிகையின் அரச குணமாக வெள்ளையின நிறவெறி இருக்கும் வரையில் ”Black Lives Matter” என்கிற முழக்கமும் நீடித்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *