2020 சிறந்த மனிதர்கள்

2020-ம் ஆண்டின் தலைசிறந்தவர்கள்

இந்த 2020ம் வருடம் எல்லோருக்கும் மறக்கவியலாத ஆண்டு. இந்த ஆண்டில் எந்த விசித்திரமான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அதை ‘இந்த வருடதில் இது ஒன்றும் அதிசயமில்லை’ என்று வாழ பழகிக்கொண்டார்கள் மக்கள். உலகெங்கும் கொரோனா நுண்கிருமி தன்னுடைய கோரமுகத்தை இன்றுவரை காட்டிக்கொண்டிருக்கிறது.

உலகெங்கும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. வீடற்றவர்களின் நிலையோ இன்னும் மோசம், அவர்களின் குரல் எங்குமே கேட்கவில்லை. யாரும் யாரையும் முகம்கொடுத்து பேசவே பயந்தார்கள். விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழகத்தில் யாரும் யார்வீட்டிற்கும் செல்லவும் இல்லை, யாரும் எவரையும் விருந்தினர்களாக அழைக்கவும் இல்லை. யார் ஒருவர் தும்மினாலும் அந்த ஒரு தும்மலுக்கு சுற்றியிருப்பவர்கள்  காத தூரம் ஓடும் நிலை ஏற்பட்டது. பேரழிவு காலத்தை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. 

போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020. இப்படி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பல்வேறு அனுபவங்கள் நினைவில் மறக்கவியலாத தடங்களை பதித்து சென்றிருக்கிறது 2020.

இப்படிபட்ட  சூழ்நிலையிலும் எங்கோ ஓர் மூலையில் ஒரு குயில் இனிமையாக  கூவுகிறது, இயற்கையின் செய்திகளை கொண்டுவந்து தருவது போல  பூக்கள் மலர்கின்றன, ஒவ்வொரு நாளையும் புதியதாக கதிரவன் கொண்டுவருகிறான். ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்வை ஒரு திருமணம், மழலை, ஒன்று கூடி விளையாடும் விளையாட்டுகள், வீதியெங்கும் ஒலித்த தாயக்கடைகளின் ஒலி இப்படி பல்வேறு விதமான நிகழ்வுகள் நிர்ணயம் செய்தன. 

இப்படியான இக்கட்டான சூழ்நிலையிலும் எழுந்துநின்றது மனிதாபிமானம். நம்பிக்கையின் கீற்றுகள் தன்னுடைய கதிர்களை பரப்பி மனிதர்களின் உள்ளத்தில் ஏதோவொரு சாதகமான ஆற்றலை எழச்செய்தன. அவற்றின் பன்முகங்களின் தொகுப்பே Madras Review-ன் ‘2020ம் ஆண்டின் தலை சிறந்தவர்கள்’ தொகுப்பு.

1. கொரோனா பழியைச் சுமந்த இஸ்லாமிய உறவுகள்

கொரோனா பெருந்தொற்று காலம் என் நண்பனை நலம் விசாரிக்க தொலைபேசியில் அழைத்தேன். என் நண்பன் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவன். “ஆபிஸ்ல இருந்து யாரும் பேசல, எல்லோரையும் ஷிப்ட்ல வரசொன்னாங்க போனா யாரும் பக்கத்துல கூட வரல, பேசவும் இல்ல, கஷ்டமா இருக்கு. கடைக்கு, வெளியில போன எல்லோரும், முன்பின் தெரியாதவங்க கூட கொஞ்சகொஞ்சமா விலகி போறாங்க. என்ன சொல்லுறதுனே தெரியல” என்று சொன்னான். இது அவனுக்கு மட்டும் நிகழ்ந்ததல்ல கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் எதிர்கொண்ட உளவியல் யுத்தம். கரூர் அருகே இஸ்லாமியர்கள் பெருவாரியாக வசிக்கும் பள்ளப்பட்டி சிறுநகரத்தில் இருந்து யாரும் வெளியேறி வந்துவிடுவார்களோ என்று சுற்றியிருந்த ஊர்கள் எல்லாம் முள் வெட்டிப்போட்டு சாலையை, பாதையை அடைக்கும் வேதனை சம்பவங்களும் நடந்தது என்றால் இந்த பாதிப்பை அவர்கள் எப்படி தாங்கியிருப்பார்கள் என்று உணரலாம்.

‘மன்னிக்கக் கூடாத குற்றம்’ என்று தமிழகத்தின் நாளிதழ் ஒன்று தலையங்கம் எழுதியது. இதுதான் வாய்ப்பென்று பெரும்பாலான  ஊடகங்களும் தங்களுடைய இஸ்லாமிய ஒவ்வாமையை கக்கின. ஒட்டுமொத்தமாக கொரோனா பழியை ஒரு சமூகத்தின் மேல் சுமத்தினார்கள். சமூக ஊடகங்களில் வன்மம் விதைக்கப்பட்டது.

நண்பனாக இருந்தாலும், எங்கோ ஒரு சிற்றூரில் வசித்தாலும் அவனுக்கும் டெல்லியில் நிகழ்ந்த கூட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லாமலிருந்த போதிலும் அவன் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்தினால் அவதூறு அல்லது கேலி செய்யப்பட்டான். ஆனால் இந்த பேரிடர் காலத்தில் சாலையில் வசித்த ஆதரவற்றோர் மற்றும் உதவி தேவைப்படுவோர் அனைவர்க்கும் உதவிக்கரம் நீட்டியதில் இஸ்லாமியர்கள் தான் முதலில் முன்வந்தனர் என்பது ஒரு அழகான முரண்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வெளிநாட்டவர்களும் அடங்குவார்கள். நிகழ்வு காவல்துறை அனுமதியுடன்தான் கூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக் காலத்தில் அவர்கள்மீது சுமத்தப்பட்ட பழி சமீபத்தில்தான் துடைக்கப்பட்டது. 

இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் அமர்வின் நீதிபதிகள் டி.வி.நளவாடே மற்றும் செவ்லிகர் விசாரித்து “ஒரு பெருந்தொற்று அல்லது பேரிடர் நடக்கும் இந்த சூழலில் அரசியல் ரீதியாக இயங்கும் ஓர் அரசு, அதற்கான பலியாடுகளைத் தேட முயல்கிறது. இந்த வெளிநாட்டவர்கள் அத்தகைய பலியாடுகள் ஆக்கப்பட தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சூழல்கள் காட்டுகின்றன” என தங்கள் தீர்ப்பில் கடுமையாகக் குறிப்பிட்டனர். மேலும் “நாம் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியம்படிதான் நடந்து கொள்கிறோமா என்ற கேள்வி இந்த வழக்கை விசாரிக்கும்போது எழுகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் நாம் உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஆவணங்களில் விதிமீறல், வைரஸ் பரவ காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி நாம் அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறோம்” என தீர்ப்பில் கூறினர்.

கொரோனா பேரிடர் காலத்தின் தொடக்கத்தில் அவர்களுக்கு நடந்த அநீதியை நொடிக்கொரு தரம் ஒளிபரப்பிய எந்தவொரு அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும் அவர்களின் வழக்கின் இறுதி தீர்ப்பை சரிவர மக்களிடம் கொண்டு சேர்க்காததை அவர்களுக்கு நிகழ்ந்த அநீதியாகத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது.

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் உன்னத பணியை துணிந்து ஏற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர்

கொரோனா நோய்க்கு பலியானவர்களின் நெருங்கிய உறவினர்கள் கூட அவர்களுக்கான இறுதிச் சடங்கை செய்ய  முன்வராதபோது, அவர்களுக்கான இறுதிச் சடங்கை, தகனத்தை நடத்த இசுலாமியர்கள்தான் முன்வந்தனர். இப்படி எல்லா மதத்தினருக்கும் உதவியது மட்டுமல்லாமல் செய்யாத தவறுக்கு தன்மீது பழியை ஏற்ற இஸ்லாமியர்கள் அனைவரையும் கடந்த வருடத்தின் சிறந்த மனிதர்களாக தேர்வு செய்கிறோம்.

2. மருத்துவப் பணியாளர்கள்

அது சீனாவின் புஃகு மாநிலத்தின் மருத்துவமனை கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெருந்தொற்று பாதித்தவர்கள் அதிகமாக வரவர அங்கிருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு பணிச்சுமை கடுமையாகிறது. தொடர் பணி அவர்களை பாதிக்கவில்லை, மாறாக அதை ஒரு சவாலாக எதிர்கொண்டு முன்களத்தில் நின்று போரிட்டனர். அதில் ஒரு பெண் பணியாளர் 10 நாட்களாக தொடர்பணி ,வீட்டிற்கும் போக இயலவில்லை. ஒரு வேளை அவருக்கு தொற்று இருந்தால், வீட்டிற்குப் போனால் அங்கும் அவரால் பரவிவிடும் அபாயங்களும் உண்டு. அவரின் சிறுவயது மகள் தாயை பார்க்க ஆசைகொண்டு வருகிறாள். மிகுந்த அபாயமிருப்பதால் பக்கத்தில் நெருங்க இயலாது. மகள், தாய் தூரத்தில் நின்றே நிகழ்த்திய அவர்களது பாசப்போராட்டத்தைக் கண்டு உலகமே கண்ணீர் கசிந்தது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த மருத்துவர் ஹேடியோ அலி (Dr Hadio Ali) கொரோனா நோயாளிகளுக்கு தொடர்சிகிச்சை அளித்துவந்தார். தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருக்கவேண்டிய சூழல். வீட்டிற்கு வந்தால் வீட்டில் இருப்பவர்களுக்கு வருமோ என்ற அச்சம் வேறு. அவர்களைப் பார்க்காமலும் இருக்க முடியாது. வீட்டிற்கு வருவார், வந்து வீட்டின் நுழைவாயிலில் நின்று மகள்களையும், மனைவியையும்  பார்த்துவிட்டு சென்றுவிடுவார். இப்படியே கொரோனா காலத்தை கழித்தவர்கள் ஏராளம். (மருத்துவர்  ஹடியோ அலி தன் குடும்பத்தினரை சந்திக்கும் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் யாரோ ஒருவர் ‘கொரோனா பாதித்த மருத்துவர் தன் இறப்பிற்கு முன் குடும்பத்தினரை சந்தித்த புகைப்படம்’ என்று தவறுதலாக பதிவிட்டு அதை ஏராளமானோர் பகிர்ந்த வேதனையும் அரங்கேறியது. மருத்துவர் ஹடியோ அலி நலமாக உள்ளார் என்பதும் தற்போதும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது)

டெல்லியின் சீலம்பூரில் வசித்து வந்தவர் ஆரிஃப் கான். கொரோனாவில் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு உடல்களை எடுத்து செல்லுதல், பண உதவி செய்தல் போன்ற வேலைகளை தனது முழுநேரப் பணியாக கொண்டு செயல்பட்டார். இப்படி ஆறு மாத காலத்தில் கிட்டத்தட்ட 200 நோயாளிகளின் உடல்களை இவரின் ஆம்புலன்ஸ் வாகனம் சுமந்திருக்கிறது. இவர் கொரோனா நோய் தொற்றிற்கு உள்ளாகி இறந்தார்.

தமிழகத்தில் சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் (Dr Simon Hercules) கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 58 வயதான பெண் தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும்போது கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தார். தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய்க்கு உயிரிழந்த முதல், தலைமை பெண் செவிலியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன் பல இடங்களில் உயிரிழந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா மொத்த பாதிப்பில் 10 முதல் 15 சதவீதம் பேர் இவர்கள்தான்.  

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயது இளைஞர் திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் அவசர உதவி மருத்துவ பணியாளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். 

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாட்களில் வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரிக்கு வந்த வடமாநிலத்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மற்றும் கார்கள் மூலம் மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை வேலூரைச் சேர்ந்த கார் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று அழைத்துச் சென்று நோயாளிகளை இறக்கி விட்டு திரும்பிவரும் போது மேற்கு வங்காளம் ஒடிசா மாநில எல்லையான பலாசூரில் உள்ள சுங்கச்சாவடியில் அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால்  5 நாட்களுக்கு மேலாக அங்கு அவசரஊர்தி ஓட்டுனர்கள் தவித்தனர்.

எல்லாவற்றிக்கும் மேலாக தண்ணீர் கூட குடிக்கமுடியாதபடி உடல்முழுக்க மூடியிருக்கும் முழு கவசஉடை அணிந்த பின் இடைவெளி இல்லாமல் பணியாற்றியிருக்கின்றனர் மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள். நாளொன்றிற்கு குறைந்தது 8 மணி நேரம் முழு கவசஉடை அணிந்து வியர்வையில் நனைந்து, இயற்கை உபாதைகளுக்குக் கூட செல்லமுடியாமல் தங்களது பணியினை சமுதாயத்திற்கு அர்ப்பணித்த அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றி சொல்லி, 2020-ம் ஆண்டின் தலை சிறந்தவர்களாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

3. பஞ்சாப் விவசாயிகள்

2020-ம் ஆண்டின் நவம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தேசத்தின் உயிர்நாடியான விவசாயிகளின் பேரணி நீண்ட தொலைவைக் கடந்து மெல்ல மெல்ல தனது  தலைநகர் டெல்லியின் எல்லையை அடைந்தபோது, பொதுவான ஊடகங்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அதன்பின் அவர்களின் கோரிக்கைகள், அகிம்சை போராட்ட வடிவங்கள் ஆகியவை மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று மசோதாக்களான 1. வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா, 2020, 2.விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா 2020 மற்றும் 3. அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 ஆகியவற்றை எதிர்த்து அமைதியான போராட்டம் இன்றுவரை நடத்திவருகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தங்கள் மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தியுள்ளன. மசோதாக்கள் நிறைவேறறப்பட்ட பிறகு பிகார், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஒடிசா, தமிழ்நாடு  உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அகில இந்திய கிசான் சபா மற்றும் அதனுடன் இணைந்த குழுக்களும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிராவில் ராஜு ஷெட்டி, பாச்சு காடு போன்ற விவசாய தலைவர்கள் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் வெளி எல்லைகளாக உள்ள சிங்கு, திக்ரி, படர்பூர், காஜிபூர் எல்லைகளில் முகாமிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். டிசம்பர் 8-ம் தேதி நாடுதழுவிய பந்த் நடத்தப்பட்டது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 40 விவசாய அமைப்புகள், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த பல விவசாய அமைப்புகள் இதில் பங்கேற்றன. 

விவசாயிகள் கூடாரங்கள் அமைத்தும், லாரிகள் மற்றும் டிராக்டர்களிலும் சாலையோரங்களில் தங்கி, தங்களுக்கான உணவை அங்கேயே சமைத்துக் கொள்கின்றனர். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்குத் தேவையான பொருட்களுடன் வந்திருந்தாலும், உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், `பத்ம விபூஷண்’ விருதை திருப்பி அளித்துவிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எ். திண்ட்சா பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்து விட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள், தேசிய விளையாட்டு பயிற்சியாளர்களும் தங்கள் விருதுகளை திருப்பி ஒப்படைத்துவிட்டனர். ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங் `கேல் ரத்னா’ விருதை திருப்பித் தரப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் அமைதிவழியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததை அடுத்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தூதரக உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. கனடா தூதரை வரவழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. பிரிட்டனில் பல எம்.பி.க்கள் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன் போன்ற சர்வதேச பத்திரிகைகள் இந்தப் போராட்டங்கள் குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளன.

மாநிலம் விட்டு மாநிலம் வந்து ஒட்டுமொத்த விவசாயிகளின் நலனுக்காக கடுங்குளிரையும் தாங்கிக்கொண்டு ஒரே குரலில் கோரிக்கைகளை மட்டுமே உயர்த்தி பிடிக்கும் அகிம்சை போராட்டத்தை நிகழ்த்தும் பஞ்சாப் விவசாயிகளை 2020-ம் ஆண்டின் தலைசிறந்த மனிதர்களாக அறிவிக்கிறோம் .

4. புலம்பெயர் தொழிலாளர்கள்

இந்த வருடத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும் தங்களுடைய பொதி மூட்டைகளுடனே சுமந்து சென்றவர்கள் இந்த தேசத்தின் உள்ளேயே பிழைப்புக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். கொரோனா ஊரடங்கு ஆரம்பித்த நாட்களில் அனைத்தும் முடங்கியது அதனுடே சேர்ந்தது இவர்கள் பிழைப்பும் முடங்கும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

எங்கிருந்தோ வந்தவர்க்கெல்லாம் அடைக்கலம் கொடுத்து பொருளாதாரத்திலும் அவர்களின் வாழ்வாதாரத்திலும் வளர்ச்சி கொடுத்த தொழிலகங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டன. கனவுகள் எல்லாம் நொறுங்கி வாழ வழியற்று உயிர் போவதாக இருந்தாலும் சொந்த மண்ணில் போகட்டும் என்று வெறும் கால்களுடனே நடந்தார்கள். 

இந்த தேசத்தின் மூலைமுடுக்குகளில் இருக்கும் அவர்களின் தாய் நிலம் தேடி. ஆண்களும் ,பெண்களும் ,வயதானவர்களும் இவர்களுடன் குழந்தைகளும் கடும் வெயிலில் கால் கடுக்க நடந்த துயர வரலாற்றின் தடம் அவர்கள் போன பாதைகளில் எல்லாம் நிறைந்திருக்கும். இதில் சிலபேர் பிழைக்க வந்த இடத்தில் வளர்த்த நாய், வாத்து போன்றவற்றைக் கூடவே தங்களுடன் கூட்டிச்சென்றது உயிரினங்களின் மேல் அவர்கள் காட்டிய பாசத்தின் உச்சம். 

பிழைக்க வந்த இடத்தில் அவர்கள் சேர்த்ததையெல்லாம் ஒரு மூட்டையில் அடைத்து தலையில் வைத்த அவலமே சொல்லும் அவர்களின் வாழ்வாதாரத்தை. அவர்களுக்கு வேலையில்லா நாட்களிலும் உணவு கொடுத்து அக்கறை கொண்ட முதலாளிகளும் இருந்தனர் என்பதையும் மறைக்க இயலாது. ஆனால் அவர்கள் மிக சொற்பமே. அரசு கைவிட்டது, வேலை பார்த்த நிறுவனங்கள் கைவிட்டது. 

இரவெல்லாம் நடந்து பகலில் நிழல் கண்ட இடத்தில் கண்ணயர்ந்து சென்ற இடங்களில் மக்கள் உதவியது கொஞ்சம் நிம்மதி அளித்தது. தூத்துக்குடியில் நாம் பார்த்த இருவர் சைக்கிளிலேயே ஜார்கண்ட் வரை செல்வதாக கூறிச் சென்றது முதல் இப்போது வரை முழுவதும் அவர்கள் பாதுகாப்பாக சென்றிருக்கவேண்டும் என்றே அக்கறைகொள்ள வைக்கிறது. 

குழந்தைகளின் பிஞ்சு கால்கள் அனல் வெயிலில் புண்ணான கொடுமைகண்டு வேதனையடைந்தவர்கள் அவர்கள் செல்லும் இடங்களில், அவர்களை காணும் போது காலணி கொடுத்ததும் நடந்தது. ஒன்றிய அரசும் ஒவ்வொரு மாநில அரசும் இவர்களை காக்கவைத்தது , குற்றங்களை செய்தவர்கள் போல் துரத்திப் பிடித்தது எல்லாம் துயரத்தின் உச்சம்.

புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த முதலாளித்துவத்தின் கோரங்களுக்கு சாட்சி. அவர்களின் தடத்தை நன்றியுடன் நினைவுகூறி பெருமையடைகிறோம். தங்களது சந்தோஷங்களையும் , துக்கங்களையும் தங்களுடனே சுமையாக எடுத்துச்சென்ற ‘புலம் பெயர் தொழிலாளர்களை’ 2020-ம் ஆண்டின் சிறந்த மனிதர்களாக அறிவித்து பெருமைகொள்கிறோம்.

5. தூய்மைப் பணியாளர்கள்

பண்டிகை, விடுமுறை என்று எந்த நாளிலும் விடுமுறை இல்லாத ஒரு தொழிலாளர் வர்க்கம் எதுவென்று பார்த்தால் இந்த ‘தூய்மை பணியாளர்கள்’ தான். சாதாரண நாட்களிலேயே பிழிய பிழிய வேலைவாங்கும் அதிகார வர்க்கம் ஊரடங்கு காலத்தில் மட்டும் விட்டுவிடுமா என்ன? இந்த கொரோனோ காலத்தை இவர்கள் இல்லாமல் பாதுகாப்பாக இத்தனை மக்கள் கடந்திருக்க முடியாது. 

எத்தனை விதமான குப்பைகள், எத்தனை வகையான கழிவுகள் இவற்றை அப்புறப்படுத்தி வீதிகளையும், சாலைகளையும் தூய்மையாக வைத்திருக்கும் இவர்களை பொது சமூகம் என்றென்றும் கண்டுகொள்வதே இல்லை. இது இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தொடர்ந்தது வேதனை.

சென்னை துறைமுகம் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளி நந்தகுமார். மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மருந்துத் தெளிப்பு ஊழியராகப் பணியாற்றிவந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மே 14 அன்று உயிரிழந்தார். 

துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவந்த சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மாநகராட்சி ஊழியர் சங்கர், ஜூன் 11 அன்று கரோனாவால் பலியானார். இனி அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி வாடகை வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளுடன் எப்படி வாழ்வார் என்பதுபற்றி யாருக்கும் அக்கறையில்லை. 

ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுகளால் 87 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டு அதில் 573 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் குறைவானவர்களே நிரந்தர ஊழியர்கள். சென்னையிலோ 22,430 துப்புரவுத் தொழிலாளர்களில் 6,401 பேர் மட்டுமே நிரந்தர ஊழியர்கள். மற்றவர்கள் தற்காலிக, மதிப்பூதிய, ஒப்பந்த ஊழியர்கள் என்பதே இவர்களின் நிரந்தரமற்ற பணி சூழலை குறிக்கும். 

ஆகஸ்ட் மாதம் (2020) வெளிவந்த தகவல்களின்படி தமிழகத்தில் ஒன்பது தூய்மைப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இத்தனை உயிரிழப்புகளுக்குப் பிறகும் மாநகராட்சியோ அரசோ மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் இதுவரை எத்தனை பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலைக்கூடச் சொல்லாமல்  அலட்சியத்துடன் உள்ளனர்.

அவர்களின் சேவையைப் பாராட்டி கைதட்டி, வணங்குவது எல்லாம் ஒரு நாடகமாகவே நடந்து முடிந்தது. வேலை செய்யும் வீதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் குடிக்க தண்ணீர்கூட தருவதில்லை இந்த கொரோனா காலத்தில் என்று வேதனையடைந்ததது தான் மிச்சம். இதில் அவர்களுக்கு நடந்த கொடுமை குடிதண்ணீர் மறுத்தது, வாடகை வீட்டில் வசித்தால் துரத்துவது மட்டுமில்லை. அவர்களை தாக்கிய சம்பவங்களும் நடந்தது.

சென்னையில் மட்டும் முப்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை களப்பணியாளர் ஒருவருக்கு நாளொன்றுக்கு ஒரு முகக்கவசமும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கையுறையும் வழங்கப்படுவதாக அரசு கூறுகிறது. இதுவே இவர்களின் மீது அரசு கொண்ட அக்கறை. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் கையுறை இந்த பெருந்தொற்று காலத்தில் எப்படி அவர்களை பாதுகாக்கும்?

ஊரின் குப்பைகளைப் பெருக்கி தூய்மை பேணும் பணியாளர்களின் வாழ்வு துயரமானதே. கடந்துவரும் பெருந்தொற்று காலத்தில்  நாம் நலமாக இருப்பதற்கு அவர்களே காரணம். அவர்களின் கையைப் பிடித்து அவர்களின் சேவைகளை உணர்ந்து 2020-ம் ஆண்டின் தலைசிறந்தவர்களாக அறிவிப்பதில் அவர்களுடன் நாங்களும் உறுதுணையாக இருக்கிறோம் என்பதிலும் பெருமைகொள்கிறோம்.

6. லாரி ஓட்டுனர்கள் மற்றும் காய்கறி கடைக்காரர்கள்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததில் இருந்தே ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தார்கள் லாரி டிரைவர்கள். கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற அச்சத்திற்கு மத்தியிலும், பால், காய்கறி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்சென்று நாட்டில் எந்தவொரு இடத்திலும் உணவு பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாத்து வைத்ததில் அவர்களுக்கு ஒரு பெரும்பங்கு உண்டு.

பேரிடர் தாக்கும் ஒவ்வொருமுறையும் உணவுப் பற்றாக்குறை தொற்றிக்கொண்டு வரும். கொரோனாவைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னை ஏற்படவில்லை. இன்று நாடெங்கும் உணவுக் கிடங்கில் நமக்குத் தேவையான அளவு உணவு இருக்கிறது. எல்லா இடத்திலும் சேகரித்து அவற்றை நேரத்திற்கு கொண்டு வந்து சேர்த்த, தைரியமான உதவும் கரங்கள் ஸ்டீயரிங் பிடித்தபடி களத்தில் இன்றும் நிற்கின்றன.

தமிழ்நாட்டில் 4.5 லட்சம் டிரக்குகள் இருக்கின்றன. இதில் பெட்ரோல், டீசல், LPG போன்றவற்றை ஏற்றிச்செல்லும் 60,000 வாகனங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. மற்ற லோடு ஏற்றும் வாகனங்கள் கிட்டத்தட்ட 3.9 லட்சம் இருக்கும். இதில் உணவுப் பொருள் எற்றிச்செல்லும் பணியில் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வாகனங்கள் தற்போது செயல்பாட்டில் இருக்கின்றன.

இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு விஷயம் உண்டு. இத்தகைய அத்யாவசிய, நேரத்திற்குரிய பணியைச் செய்த லாரி டிரைவர்களுக்கு இன்றுவரை உடல்நலக் காப்பீடு (ஹெல்த் இன்சூரன்ஸ்) மறுக்கப்படுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. இந்த அநீதியைக் களைய என்றென்றும் நாங்கள் குரல்கொடுப்போம் என்ற உறுதியை வழங்கி “2020 ம் ஆண்டின் தலைசிறந்தவர்கள்” என்று அறிவித்து மகிழ்கின்றோம்.

காய்கறி கடைக்காரர்கள்

லாரி டிரைவர்கள் இவர்களோடு இணைந்து உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் காத்ததில் காய்கறி கடைக்காரர்கள் பங்கும் குறிப்பிடத்தக்கது. தெருக்களிலோ மக்கள் நடமாட கடுமையான கெடுபிடிகள். ஏறக்குறைய அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான சேவைகள் பாதுகாப்பு கருதி மக்களுக்கு மறுக்கப்பட்டுவிட்ட காலத்தில் மக்களுக்காக களத்தில் நின்றது இவர்கள் தான்.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுவிட்டதாக சொன்னபோதிலும், நகரத்தின் வெளியே மாற்றப்பட்ட வானகரத்தின் புதிய மார்க்கெட்டிலிருந்து நகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் காய்கறிகளை எடுத்துச்சென்று மக்களின் பசியைப் போக்கியத்தில் போர்க்கால நடவடிக்கை போல செயல்பட்டார்கள்.

தங்களுக்கு நோய் பரவும் அபாயத்தில் பெரும்பாலான மக்கள் முடங்கியபோதும், சோர்வில்லாமல், நோய் தாக்கக்கூடிய ஆபத்துகளை, பல்வேறு இடர்களைத் தாண்டி மக்களுக்கு சேவைசெய்த அனைத்து காய்கறி கடைக்காரர்களையும் ‘2020-ம் ஆண்டின் தலைசிறந்தவர்கள்’ என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

7. நடராஜன் தங்கராசு

கடந்த 2020-ம் ஆண்டின் தொடக்கம் ஆஸ்திரேலியாவில் பரவிய மிக மோசமான காட்டுத்தீயைப் பற்றியாகத்தான் இருந்தது. ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதமும் ஆஸ்திரேலியாவை பற்றியதாகத்தான் முடிந்தது. முதலாவது காட்டுத்தீ என்றால், இரண்டாவது மைதானத்தில் பொறிபறக்கும் தமிழகத்தின் நடராஜன் தங்கராசுவின் கிரிக்கெட் பந்துவீச்சுதான்.

‘ஜென்டில்மேன்’ விளையாட்டு என்று அழைக்கப்படும் கிரிக்கெட் அதன் விதிமுறைகளுக்காக குறிக்கப்பட்டாலும் இந்தியாவில் ‘ஒருவரை ஒருவர் தொடாமல்’ விளையாடக்கூடிய சாத்தியங்களுடனான விளையாட்டு என்ற பதத்தில்தான் வழங்கப்பட்டது. இதுவரை குறிப்பிட்ட ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே இதுவரை தமிழகத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ளனர்.

சரியான திறமைகள் இருந்தும் , உடற்திறன் இருந்தும் உள்ளே நுழைவதற்கு தனது விளையாட்டின் வாழ்நாள் முழுதும் போராடிய வீரர்கள் உண்டு. அப்படியிருக்க இனிமேல் திறமைகள் வாய்ந்த இவரை புறந்தள்ளுவது இயலாது என்ற முடிவுதான் இவரை அணிக்குள் சேர்த்திருக்கவேண்டும்.

சேலம் அருகேயுள்ள சின்னப்பம்பட்டியில் பிறந்த நடராஜனின் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியது. தந்தை தங்கராசு நெசவுத் தொழில் செய்யும் கூலித் தொழிலாள, தாய் சாந்தா கோழி இறைச்சி விற்பனை செய்யும் சிறிய கடையில் வரும் வருமானமே குடும்பத்தின் நிதி ஆதாரம். 

நடராஜன் குடும்பத்தின் மூத்தவர் , இவருக்கு மூன்று சகோதரிகளும் , ஒரு சகோதரனும் உண்டு. வீடென்பது மிகச்சிறியது, விடாமல் வறுமை வாட்டினாலும் தன் திறமையினால் உலகளவில் பெயர் பெற்ற நடராஜனின் விடாமுயற்சி, ஒருங்கிணைந்த கவனத்தில் அனைவருக்குமான ஒரு உதாரணம்.

பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் சாதனைகள் படைக்கும் நடராஜனை இந்த அளவிற்கு மெருகேற்றியதில் அவரின் நண்பர் ஜெயபிரகாஷ்க்கும் பங்குண்டு. பிரபல கிரிக்கெட் வீரர்கள் வார்னர், சேவாக், இர்பான் பதான் ஆகியோர் இவரின் துல்லியத்தை பாராட்டி மகிழ்ந்தனர். நடராஜனால் முதன் முதலில் ‘தமிழ்’ கிரிக்கெட் மைதானத்தில் கவனம் பெற்றது.

விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் நிகழ்கால எடுத்துக்காட்டாய் விளங்கும் நடராஜன் ஒரு தலைசிறந்த பந்துவீச்சாளராய் மிளிர்வார் என்பதில் எந்த ஐயமுமில்லை. ‘நடராஜன் தங்கராசு’வை 2020-ன் தலைசிறந்த மனிதர் என்று அறிவிப்பதில் மகிழ்கிறோம்.

8. ஷைலஜா டீச்சர்

கேகே ஷைலஜா கேரள மாநிலத்தில் சுகாதார துறை அமைச்சர். மக்களால் ஷைலஜா டீச்சர் என்று அன்போடு அழைக்கப்படுபவர். கேரள மாநிலத்தில் 2018-ம் ஆண்டு ‘நிபா வைரஸ்’ பரவியபோது பலர் உயிரிழந்தனர். அந்த நெருக்கடியான சூழலில் பதட்டமின்றி அமைதியாகக் களமிறங்கி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சரான கேகே ஷைலஜா. 

நிபா வைரஸ் கொடுத்த அனுபவங்கள் இந்த கொரோனா பெருந்தொற்றையும் சமாளிக்க உதவியது. அதில் இவர் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் தேசிய அளவில் கவனம் பெற்று இந்த கொரோனா பெருந்தொற்றையும் எப்படி தடுப்பது என்று பல்வேறு மாநிலங்கள் இவரது வழிமுறைகளில் இருந்துதான் தெளிவுபெற்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று கேள்விப்பட்டபொழுதே இவர் தனது துறை அதிகாரிகளை சூழ்நிலைக்கு ஏற்ப தயாராகும்படி அறிவுறுத்தினார்.

கடந்த வருடம் சர்வதேச அளவில்கொரோனா தொற்று இறப்பு மூன்று சதவீதமாக இருந்தபோது இந்தியாவில் கொரோனா இறப்பு என்பது 1.36 சதவீதமாக இருந்தது. அதிலும் குறிப்பிடத்தக்க வகையில் கேரளாவில்தான் இந்தியாவின்முதல் கொரோனா தொற்று பதிவானது. ஆனால் கேரள  மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 0.36% மட்டுமே. கேரள அரசு மிக கவனமாகஇந்த நோய் தொற்றை கையாண்டதற்கு இதுவே சாட்சி.

இவர் சுகாதாரத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையை எப்போதும் மேற்கொண்டு வந்ததால்தான் கொரோனா காலத்தை சரியாக கேரளா எதிர்கொண்டது. கிராம அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களாக செயல்பட்ட சாதாரண மருத்துவமனைகளை தரம் உயர்த்தும் வேலையை செய்தார். கேரளாவில் உள்ள 971 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 240 நிலையங்களை குடும்ப சுகாதார நிலையங்களாக மாற்றினார். இன்று அவற்றில் பத்துக்கும் மேற்பட்ட நிலையங்கள் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற மையங்களாக உள்ளன.

இங்கிலாந்தில் வெளியாகும் முன்னணி இதழான ‘பிராஸ்பெக்ட் (Prospect)’, ‘உலகின் சிறந்த 50 சிந்தனையாளர்கள் 2020’ பட்டியலில் முதல் பெயராக அறிவித்திருப்பது மட்டுமல்லாமல், ‘சீனாவில் பரவி வந்த கொரோனா வைரஸின் தவிர்க்க முடியாத வருகையை கே.கே.ஷைலஜா துல்லியமாக முன்னறிந்தது மட்டுமல்லாமல், அதன் தாக்கங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு, ‘சோதனை, கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல்’ என்ற உலக சுகாதார நிறுவனத்தின் வலியுறுத்தலை சிறப்பாகச் செயல்படுத்தினார்’ என்று பாராட்டியுள்ளது.இங்கிலாந்தின் புகழ்பெற்ற செய்தித்தாள் ‘தி கார்டியன்’ இவரை ‘கொரோனா வைரஸ் ஸ்லேயர்’, ‘ராக் ஸ்டார் சுகாதார அமைச்சர்’ என்று பாராட்டியது.

தற்போது 63 வயதாகும் ஷைலஜா கூத்துபரம்பா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். இவரது  பெற்றோர் குந்தன், சாந்தா. மட்டனூரில் இருக்கும் என்எஸ்எஸ் கல்லூரியிலும், பிஎட் படிப்பை விஸ்வேஸ்வரய்யா கல்லூரியிலும் முடித்து இருந்தார். இதன் பின்னர் சிவபுரம் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இங்கு சில காலம் பணியாற்றிய அனுபவம் நெருக்கடியான நோய்தொற்று பரவல் காலகட்டத்தில் சிறப்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியதாக அவரது குழுவினர் தெரிவிக்கின்றனர். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் தனது பணியை ராஜினாமா செய்து அரசியலில் இறங்கினார்.

ஷைலஜாவின் கணவர் கே பாஸ்கரன். இவர்களுக்கு சோபித், லசித் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவரை 2020-ம் ஆண்டின் தலைசிறந்தவர் என்று அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்.

9. ஆர்யா ராஜேந்திரன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் 21 வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றதன் மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைவான வயதில் மேயர் பதவிபெறும் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். “கேரளத்தின் முதல் இடதுசாரி முதல்வரான இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தோழரின் மனைவி பெயர் ஆர்யா. என் மனைவி ஸ்ரீலதாவுக்கு இ.எம்.எஸ்ஸின் மனைவி ஆர்யாவை மிகவும் பிடிக்கும். அதனால்தான் எங்களுக்கு மகள் பிறந்ததும் ஆர்யா என்று பெயர் வைத்தார் என் மனைவி” என்று சொல்கிறார் ஆர்யாவின் தந்தை ராஜேந்திரன்.

ஆர்யாவின் தந்தை ராஜேந்திரன், வீடுகளில் மின்சார ஒயரிங் பணி செய்துவரும் எலக்ட்ரீஷியன். அம்மா ஸ்ரீலதா எல்.ஐ.சி ஏஜென்ட். ஆர்யாவின் குடும்பம் வசிப்பது வாடகை வீட்டில். திருவனந்தபுரம் முடவன்முகலில் உள்ள ஆர்யாவின் வீடு ஒரு டூவீலர் மட்டுமே செல்லக்கூடிய பாதைகொண்ட குறுகலான சந்துக்குள் இருக்கிறது. .

ஆல் செயிண்ட் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப்படிப்பு பயின்றுவரும் ஆர்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முடவன்முகல் தொகுதியில் கவுன்சிலராக வெற்றி பெற்றிருக்கிறார். பின்பு நடந்த மாநகராட்சி மேயருக்கான தேர்தலில் 100 உறுப்பினர்களில் ஆர்யா ராஜேந்திரன் மேயராகப் பொறுப்பேற்பதற்கு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்திருக்கின்றனர். திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றதன் மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைவான வயதில் மேயர் பதவிபெறும் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

 ”எனது தொகுதிக்கும், திருவனந்தபுரத்துக்கும் மிக முக்கியமாக செய்ய வேண்டிய பணியாக நினைப்பது கழிவு மேலாண்மை, கோவிட் காலத்தில் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சுகாதார நிலையங்களில் இது மிக முக்கியமான அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களை நோக்கிய திட்டங்கள் சீரிய வகையில் முன்னெடுக்கப்படும்” என்று தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது குறிக்கோளை முன்வைத்திருக்கிறார்.

இளம் மாணவி அதிகாரத்தை அடைந்தார் என்பதைவிட சீரிய குறிக்கோளுடன் மக்கள் ஆதரவைப் பெற்ற இளம் பொதுவுடைமை தோழர் பதவிக்கு வந்தார் என்பதில் பெருமையடைகிறோம். தனது குறிக்கோளில், திட்டங்களில் கவனமெடுத்து மக்களின் நலம் சார்ந்து பணிபுரிய வாழ்த்துகிறோம். மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துவதோடு இவரை 2020-ம் ஆண்டின் தலை சிறந்தவர் என அறிவித்து மகிழ்கிறோம்.

10. நடிகர் சூர்யா

கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் ‘ஊரடங்கு’ போடப்பட்டன. அனைத்து தொழில்களும் முடங்கிய நிலையில் கல்லூரி, பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. இத்தகைய மக்களின் இயல்பு வாழ்கை முடங்கிய நிலையிலும் மத்திய அரசு பிடிவாதமாக மருத்துவ படிப்பிற்கான  நீட் தகுதி தேர்வை மாணவர்களுக்கு எந்தவித நியாயமும் இல்லாமல் நடத்தியது.

அப்போது நடிகர் சூர்யா ”கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வு எழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது” என்று மாணவர்களுக்காக  அறம் சார்ந்து அறிக்கை ஒன்றை  வெளியிட்டார்.

இந்த அறிக்கை வெளியானபின் இது நீதிமன்றத்தையும் , அதன் மாண்பையும் குறைக்கும் செயல் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் என்பவர் உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். இதன் கூடவே சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து, கேலி செய்து சமூக வலைத்தளங்களில் சங்க பரிவார கும்பல்கள் களமிறங்கின. இதற்கு முன்பாக புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சூர்யா பேசியது பரவலாக மக்களைச் சென்றடைந்தது. பல மாதங்களாக கல்வியாளர்களும், அரசியல் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நிகழ்த்திய பிரச்சாரங்களுக்கு சூர்யாவின் பேச்சு வலுசேர்ப்பதாக அமைந்தது என்றே கொள்ளலாம்.

பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு உதவும்நோக்கில் அகரம் என்ற அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இதன் வழியே ஏராளமான பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளை செய்து அவர்களின் கனவு நனவாக பிரதிபலன் பார்க்காமல் உதவிவருகிறார்.

இவரின் மனைவி திரைகலைஞர் ஜோதிகா. இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். சிறந்த திரைகலைஞர், நடிகர் என்பதாக மட்டுமல்லாமல் கல்விக் கொள்கை குறித்து தனது கருத்துகளை துணிவாக பதிவு செய்து வரும் நடிகர் சூர்யா உச்ச நட்சத்திரங்களில் இருந்து வேறுபட்டு ஒரு சிறந்த மனிதராக மிளிர்கிறார். அந்த அடிப்படையில் இவரை 2020ம் ஆண்டின் சிறந்த மனிதராக அறிவிப்பதில் மகிழ்கிறோம்.

– மெட்ராஸ் ரிவியூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *