புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டம்

இப்படியொரு சட்டம் இருக்கிறது தெரியுமா? 1979-ம் ஆண்டின் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி, வீடின்றி, பணமின்றி புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலங்களுக்கு திரும்பியதைப் பார்த்து அனைவரும் எழுப்பிய கேள்வி “ஏன் இவர்களுக்கான அடிப்படைத் தேவையினை அரசு செய்து கொடுக்கவில்லை?” என்பதுதான்.

ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, ”அப்படி எந்த தரவுகளையும் நாங்கள் வைத்திருக்கவில்லை” என்று தான் ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் பதிலளித்திருக்கிறது. 

இந்தியாவில் மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டம் (Inter-State Migrant Workman Act (ISMW)) என்று ஒரு சட்டம் இருக்கிறது. இந்த சட்டத்தைப் பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். 1979-ம் ஆண்டு மாநிலம் கடந்து இன்னொரு மாநிலத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தடுத்திட இச்சட்டம் இயற்றப்பட்டது. 

ISMW எனும் இந்த சட்டத்தின்படி, 5 அல்லது அதற்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகிற ஒரு நிறுவனமோ அல்லது ஒப்பந்ததாரரோ அதனை அரசிடம் முறையாக பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் விவரங்களையும் பதிவு செய்திட வேண்டும். RTI செயல்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் அவர்கள் ஒன்றிய தொழிலாளர் அமைச்சகத்திடம் சில கேள்விகளை RTI மூலம் எழுப்பியிருந்தார். அதில் இந்த சட்டத்தை அரசு முறையாக எங்கும் அமல்படுத்துவதில்லை என்பது அம்பலமாகியுள்ளது. 

RTI மூலம் கிடைத்த விவரங்கள்

  • 2010 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டு காலத்தில் நாடு முழுதும் வெறும் 84,875 தொழிலாளர்கள் மட்டுமே ISMW சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வேலைவாய்ப்பு குறித்தான தரவுகளை ஆய்வு செய்யும் ஆய்வாளரான அமிதாப் குண்டு அவர்கள் இந்தியாவில் 2.1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பணிப்பாதுகாப்பற்ற வேலைகளில் இருப்பதாக கணக்கிட்டுள்ளார். அதில் 61 லட்சம் பேராவது ISMW சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 85,000 பேர் கூட பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். பிரியா தேஷிங்கர் எனும் பேராசிரியர் புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியா முழுதும் 10 கோடி இருப்பதாக சொல்கிறார்.
  • 2015 முதல் 2020 வரையிலான 5 ஆண்டு காலத்தில் டெல்லியில் ISMW சட்டத்தின் கீழ் ஒரு தொழிலாளர் கூட பதிவு செய்யப்படவில்லை. 
  • 2015 முதல் 2020 வரையிலான 5 ஆண்டு காலத்தில் சென்னையில் 13,313 பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சென்னையில் மட்டுமே லட்சக்கணக்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.
  • கடந்த 10 ஆண்டுகளில் 1993 ஒப்பந்ததாரர்களும், 372 நிறுவனங்களும் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றுள்ளனர். ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை லட்சங்களில் இருக்க வேண்டும். 
  • கடந்த 10 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் விதிமுறைகளை மீறியதற்காக வெறும் 515 ஒப்பந்ததாரர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

RTI நகலை இங்கே பார்க்கலாம்.

இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் தவறுவதால் கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமான சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். 

இந்த சட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்கள் பதிவு செய்யப்படாததால் தான் இந்திய அரசு தன்னிடம் அவர்கள் குறித்தான எந்த தரவுகளும் இல்லை என்று எளிதாக பதிலளித்து கடக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில் எத்தனை தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள்? எத்தனை பேருக்கு நிதி உதவி தேவைப்பட்டது? எத்தனை பேர் இறந்தார்கள்? என்பது போன்ற எந்த தரவுகளும் இந்திய அரசிடம் இல்லை. இத்தகைய தரவுகள் எதையும் மேலாண்மை செய்யாமல் எப்படி புலம்பெயர் தொழிலாளர்களுக்கான திட்டத்தினை அரசு வகுத்திட முடியும்?

இதையும் படிக்க: புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

  • இந்த சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனமும், ஒப்பந்ததாரரும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ந்து, அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் விவரங்களை அளித்திட வேண்டும். ஆனால் அதை பெரும்பாலானோர் செய்வதில்லை. 
  • மேலும் இந்த சட்டத்தின்படி, தொழிலாளர்களுக்கான தங்குமிட வசதி, அவர்களுக்கான இலவச உடைகள் போன்றவற்றையும் நிறுவனம் வழங்கிட வேண்டும். பல இடங்களில் அது பின்பற்றப்படுவதில்லை.
  • புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும்போது, அவர்களுக்கான பயண செலவுகளையும் நிறுவனம் அல்லது ஒப்பந்ததாரர் ஏற்க வேண்டும். அதுவும் இங்கே பின்பற்றப்படவில்லை. 
  • இப்படிப்பட்ட உதவிகள் கிடைக்கப்படாத தொழிலாளர்களுக்கு அவர்களுக்கான இழப்பீட்டினை பெறுவதற்கான சட்ட உதவிகளை அரசு அளித்திட வேண்டும். அதுவும் நடப்பதில்லை. 

இயற்றிவைத்த சட்டத்தையும் பின்பற்றாமல், தொழிலாளர்கள் குறித்த தரவுகளையும் வைத்திருக்காமல் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு பேரிடரில் சிக்கும்போது அவர்களை எப்படி பாதுகாத்திட முடியும்? இந்திய ஒன்றிய அரசின் இந்த போக்கினால் தான் கொரோனா ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் கேட்க யாருமற்றவர்களாய் சாலைகளில் கைவிடப்பட்டார்கள்.

புதிதாக கொண்டுவரப்பட்ட தொழிலாளர் மசோதாக்களும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான எந்த பாதுகாப்பினையும் வழங்கவில்லை. தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை முடக்குவதே முதன்மையானதாக இருக்கிறது. இனியாவது புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டத்தை இந்திய அரசு நடைமுறைப்படுத்துமா?

நன்றி: The Quint

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *