மலக்குழி மரணங்கள்

ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்

திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் என அனைத்தும் மூடியிருந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் நடந்துள்ளன. 

கடந்த ஜூலை மாதம் தூத்துக்குடி மாவட்டம் கீழச்செக்காரகுடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சோமசுந்தரம் வீட்டில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இசக்கிராஜா, ஆலங்குளத்தைச் சேர்ந்த பாண்டி, தினேஷ், பாலா ஆகிய 4 பேர் தங்களது டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றுள்ளனர். இந்த நான்கு தலித் இளைஞர்கள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய இறங்கிய போது விசவாயு தாக்கி இறந்தனர். 

இறக்கும் போது பாலா தனது குடும்பத்தின் ஒரே வருமானம் தரும் நபராக இருந்துள்ளார். இவர் இறக்கும் போது கைக்குழந்தையுடன் மனைவி, வயதான பெற்றோர் என அந்த குடும்பம் இப்போது நிற்கதியாக நிற்கிறது. 

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் தலித் இளைஞர்கள் முருகன் மற்றும் சஞ்சய் ஆகிய இருவர் கழிவு நீர் தொட்டியில் இறங்கிய போது மரணம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டையில் ஒரு தலித் இளைஞர் உட்பட இரண்டு பேர் மரணமடைந்தனர். 

அதிக அளவிலான மலக்குழி மரணங்கள் பெரு நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில்தான் நடக்கும். ஆனால் அனைத்தும் மூடியிருக்கும் ஊரடங்கு காலத்தில் 8 மரணங்கள் என்பது பெரும் அதிர்ச்சிகரமான தகவலாக இருக்கிறது.  

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய செயல்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், 2013 முதல் 2018 ஆண்டுகள் வரையிலான காலத்தில் இந்திய அளவில் அதிக மலக்குழி மரணங்கள் தமிழகத்தில் தான் நடந்துள்ளன என்று தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 144 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் உத்திரப்பிரேதேசத்தை விட தமிழகத்தில் இரண்டு மடங்கு எண்ணிக்கை அதிகம். 

”அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு காலத்திலும் 8 மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்றும், இந்த ஊரடங்கு காலத்தில் 100-க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளது என்றும் கூறுகிறார். அதில் 20 சாதியக் கொலைகள், 58 சாதிய வன்கொடுமை தாக்குதல், 8 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சாதிய ரீதியான அவமானப்படுத்துதல், 14 பாலியல் தாக்குதலும் நடந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *