migrant labours

புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?

கொரோனா பேரிடருக்குப் பிறகு பொருளாதார கண்காணிப்பு மையம்(CMIE-centre for monitoring economy) கடந்த மே12-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஊரடங்கினால் 12 கோடி பேருக்கு மேல் வேலை இழந்துள்ளதாகவும், இதில்   பெரும்பான்மையானவர்கள் சிறு வணிகர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் என்று  கூறியுள்ளது.

இந்த  ஊரடங்கால் வேலை இழந்தவர்களில் பெரும் எண்ணிக்கையில் இருப்பவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். அவர்கள் கொரோனா ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அடிப்படைத் தேவைகளுக்கான நிவாரணம் கூட இன்றி, இந்தியா முழுவதும் சாலைகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள்

சில நாட்களுக்கு முன்  நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரம் அவர்கள் அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு அறிவிப்பில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உணவுத் தேவைக்காக 3 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.  இந்த அறிவிப்பு என்பது முழு கண்துடைப்பே.


இதில் நமக்கு எழும்  கேள்வி என்னவென்றால் இந்த உணவு வழங்கும் பணியை , புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய முறையான எந்த தரவுகளும் இல்லாத மத்திய அரசு எப்படி செய்ய போகிறது என்பதே!


புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர்திரும்பக் காரணம் என்ன?

புலம்பெயர்ந்த  தொழிலாளர்கள் இப்பெரும் எண்ணிக்கையில் நடந்தே ஊர்திரும்ப முக்கிய காரணம் அவர்கள் இருக்கும் இடங்களில், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அற்ப சொற்பமான சமூக பாதுகாப்பும், உயிர் வாழ்வதற்கு உணவுப் பாதுகாப்பும் மறுக்கப்படுவது மட்டுமே காரணம்.

இப்புலம்பெயர் தொழிலாளர்களை பெரும்பாலும் அழைத்து வருவது கூலி வேலைகளுக்காக மட்டுமே. அதனால் இத்தொழிலாளர்கள் முறையான ஒப்பந்தங்கள் பெற்றிருக்க மாட்டார்கள். ஆனால் ஏதோ ஒரு ஒப்பந்ததாரர் மூலம் தான்  அழைத்துவரப்படுவார்கள். 

அடிப்படையில்  இவர்களுக்கு  தங்குமிடம் மற்றும் வேலை ஆகியவை எது என்பதை அவர்களை அழைத்துவரும் ஒப்பந்ததாரர்கள்தான் முடிவு செய்வார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் துறை சார்ந்த மத்திய அரசோ அல்லது பணி புரியும் மாநிலங்களைச் சேர்ந்த மாநில அரசோ கூட இந்த செயல்பாடுகளை  கண்காணிப்பது இல்லை.

இந்த தொழிலாளர்கள் வறுமை காரணமாக உழைப்பாளர்களின் உரிமைகளைப் பற்றிச் சிந்திப்பற்கு வாய்ப்பு இல்லாதவர்களாய், ஒப்பந்ததார்கள் சொல்கிற வேலைகளை செய்பவர்களாக இருக்கிறார்கள். இப்படி சொந்த ஊர்களிலிருந்து வந்து ஓடாய்த் தேய்ந்து வேலை செய்ய இவர்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

இளம்பெண்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாய் வருவதற்கு முக்கியமான காரணம் இவர்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளுதல். இன்னும் வறுமைக்குள் சிக்கிவிடாமல் தப்பித்து, பொருளாதாரத்தில் சிறிதாவது தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே இடம்பெயர்ந்து வருகிறார்கள். இம்மாதிரியான பெண்களுக்கு உடனடியாக கைகொடுப்பது கல்வி தகுதி தேவையில்லாத  பணம் படைத்தவர்களின் வீட்டு வேலைகளே.

இவ்வாறு பல காரணங்களோடு சொந்த மாநிலங்களில் இருந்து வெளியில் வருபவர்களின் எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசம், பீகார் உட்பட இந்தி பேசும் மாநிலங்களே அதிகமாக உள்ளன.

இதில் முக்கியமானதொரு முரண் என்னவெனில் புலம்பெயர் தொழிலாளர்களை  அதிகமாக உள்வாங்கும் மாநிலங்களும் குஜராத், மும்பை  மற்றும்  இந்தி பேசும் மாநிலங்களாகவே உள்ளன.

2011-ம் ஆண்டின் புள்ளி விவரங்கள், மாநிலங்களுக்கு இடையிலான (தொழில் ரீதியாக மட்டுமின்றி திருமணம், கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக) புலம்பெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 139 மில்லியன் என்கிறது.


ஆனால் பிரியா தேஷிங்கர் எனும் பேராசிரியர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் 10 கோடி மக்கள் இருப்பார்கள் என கணித்துள்ளார்.


இவ்வளவு பெரிய தொழிலாளர் கூட்டத்தினை பற்றிய முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமலிருப்பது அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுவதாக உள்ளது. அதைத்தாண்டி புலம்பெயர் தொழிலாளர்கள் இந்நாட்டிற்கு அளிக்கும் பொருளாதார பங்களிப்பை அரசு அடியோடு மறைப்பதாகவும் இருக்கின்றது.

புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலை செய்யும் இடங்களாகிய கட்டுமான இடங்கள், ஜவுளி, கல்குவாரிகள் மற்றும் சுரங்கங்கள், செங்கல் சூளைகள், பயிர் நடவு, கரும்பு வெட்டுதல், ரிக்‌ஷா இழுத்தல், மீன் மற்றும் இறால் பதப்படுத்துதல், உப்பு பதித்தல், வீட்டு வேலை, பாதுகாப்பு சேவைகள், பாலியல் வேலை, சிறிய ஹோட்டல்கள் மற்றும் சாலையோர உணவகங்கள் / தேநீர் கடைகள் இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது, இந்த 10 கோடி தொழிலாளர்களின் பங்களிப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% இருக்கும் என்பது ஆச்சரியப்படுத்தும் உண்மையாக இருக்கிறது.

இவ்வளவு பெரிய பங்களிப்பை செய்யும் இத்தொழிலாளர்கள் பெருமளவில் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், சாதிய ரீதியிலும் பின்தங்கிய  பகுதிகளில் இருந்தே வருகிறார்கள். இம்மக்களை அரசும், மக்களாகிய நாமும் மேன்மேலும் புறக்கணிப்பது மொத்த பொருளாதாரத்தில் பெரிய   சீர்குலைவை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் ஏழ்மையின் காரணமாக கல்வி பெற முடியாமல் போகிற, இத்தொழிலாளர்களின் குழந்தைகளால் அச்சமூகம் வளர்ச்சி அடையாமல் தேங்கிப் போகும்.

புலம்பெயர் பெண் தொழிலாளர்கள்  பெரும் எண்ணிகைகளில் இருந்தும் முற்றிலும் மறுக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு தெற்கு டெல்லி நகரப் பகுதியில் கிட்டத்தட்ட 10 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இங்கே வெறும் 27,000 பெண்கள் மட்டுமே பதிவாகியுள்ளனர்.

 முதலாவதாக இப்பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதால் இவர்களை இப்பட்டியலில் அங்கீகரிக்க மறுக்கிறார்கள்.

இரண்டாவதாக சில பெண்கள் புலம்பெயர்ந்து வர முதன்மைக் காரணம் அவர்களின் திருமணமாக இருப்பதால், புலம்பெயர்ந்த இடத்திற்கு வந்து இவர்கள் செய்யும் கூலி வேலைகளை கணக்கில்  எடுக்காமல் அவர்களை  தொழிலாளர்களாக  அங்கீகரிக்க மறுக்கிறார்கள்.

கொரோனா நெருக்கடிக்குப் பிறகு இன்று  புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தக்கவைத்துக் கொண்டு, இந்நெருக்கடி காலத்தில் பராமரித்து வரும் தொழிற்கூடங்கள் எளிதாக எழுந்து நிற்கும் என்பதை நாம் பார்க்க முடியும். இதேபோன்று 2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்தில் இவ்வழிமுறையைப் பின்பற்றியவர்களே வேகமாக மீண்டெழுந்ததை வைத்துக் கூறிவிடலாம். ஏனெனில் இன்று இடம்பெயர்ந்து செல்பவர்கள் இந்த  துயரத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு, வேலைகளுக்குத் திரும்புவது  அத்தனை  எளிதல்ல. ஆனால் கர்நாடகாவில்  தொழிலாளர்களின் நலனைக் கண்டுகொள்ளாமல் முதலாளிகளின் நலன்களுக்காக, அவர்களைத் தக்கவைத்துக் கொள்ள, அரசியல் ரீதியாக கொடுக்கப்பட்ட நெருக்கடியால் வெகுண்டெழுந்த தொழிலாளர்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள் .

இத்தனை பெரும் சிக்களுக்கு முக்கிய காரணம், இந்தியாவின் மொத்த  உள்நாட்டு உற்பத்தியில் 10% பங்களிப்பை  செய்கிற, 10 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் மக்களின் தொகுப்பு குறித்து எந்த தரவுகளும் அற்ற மத்திய அரசு. தரவுகளற்ற அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் உணவுக்கு ஒதுக்கும் பணத்தை எப்படி பகிர்ந்தளிக்கப் போகிறது என்பதுதான் விடையில்லா கேள்வியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *