இந்த முறை பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்தே எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு “தரவுகள் இல்லை” என்று சொல்வதே பாஜக அரசின் தொடர் வழக்கமாக இருந்து வருகிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தரவுகள்
ஊரடங்கு நேரத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லும் போது எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்து போனார்கள் அல்லது காயமடைந்தார்கள் என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு தரவுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
அனைத்து நிர்வாக அமைப்புகளும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தரவுகள் இல்லை என்று தெரிவிக்கையில், சிறு ஆய்வாளர்களை உள்ளடக்கிய குழு ஒன்று எவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்பதனை ஆவணப்படுத்தியுள்ளது. தேஜேஷ் ஜி.என், கனிகா ஷர்மா, க்ருஷ்ணா, அமான் ஆகிய ஆய்வாளர்கள் இணைந்து இந்த முக்கியமான வேலையினை செய்திருக்கிறார்கள்.
அவர்களின் ஆய்வினைப் பார்க்க: NON VIRUS DEATHS – Thejesh GN
மார்ச் 19-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 971 புலம்பெயர் தொழிலாளர்கள் ஊருக்கு திரும்பும் வழிகளில் பல்வேறு காரணங்களால் மரணத்திருப்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் 216 தொழிலாளர்கள் பசியிலும், நிதிச்சிக்கல்களாலும் உயிரிழந்திருக்கின்றனர். 209 பேர் ஊருக்கு திரும்பும் வழியில் விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஷார்மிக் எனும் சிறப்பு ரயில்கள் பயணத் தடங்கள் மாற்றி இயக்கப்பட்டதால், நாட்கள் கணக்கில் முறையான உணவின்றி, இன்னபிற அத்தியாவசிய தேவைகள் இன்றி ரயில் பயணத்திலேயே 96 பேர் இறந்திருக்கின்றனர். கொரோனா இல்லாத இதர பல உடல்நல சிக்கல்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காமல் 77 பேர் இறந்துள்ளனர்.
இறந்த தொழிலாளர்களுக்கான இழப்பீடு
தொழில்துறை அமைச்சகத்தை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்தார்கள் என்கிற தரவே பராமரிக்கப்படாததால், இழப்பீடு குறித்த கேள்விக்கும் தரவு இல்லை என்ற பதிலையே அரசு அளித்திருக்கிறது.
முறைசாரா தொழில்கள் குறித்த தரவுகள்
நாட்டில் உள்ள முறைசாரா தொழில்கள், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் குறித்த தரவுகள் அரசிடம் உள்ளதா என கேட்ட கேள்விக்கும் ’இல்லை’ என்பதே பதிலாக வந்திருக்கிறது. தரவுகள் சேகரிக்கப்பட்டதா என்பது குறித்த கேள்விக்கு அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்றே ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி கடந்த காலங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு மைனஸ் 23.9% அளவிற்கு குறைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. உலகத்தின் பல நாடுகளின் பொருளாதார சரிவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் சரிவே பெரியது என்பது வெளிவந்தது.
அப்போது இந்தியாவின் பொருளாதார சரிவு குறித்து நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு தில்லி சமூக அறிவியல் கழகத்தின் பேராசிரியர் அருண்குமார் அளித்த நேர்காணலில், முறைசார தொழில்களின் வீழ்ச்சியானது இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். அது சேர்க்கப்படாமலேயே மைனஸ் 23% என்ற அளவில் இருக்கிறது. முறைசாரா தொழில்களை சேர்த்தால் சரிவின் விகிதம் மைனஸ் 40% என்ற அளவில் இருக்கும் என்று தெரிவித்தார்.
சுகாதாரப் பணியாளர்களின் இறப்பு குறித்த தரவுகள்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற கேள்விக்கு, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் ’தரவுகள் எதுவும் பராமரிக்கப்படவில்லை’ என்ற பதிலையே அளித்திருக்கிறது.
ஆனால் இந்திய மருத்துவர்கள் சங்கம் உயிரிழந்த 382 மருத்துவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஒரு மருத்துவ சங்கத்தினரால் வெளியிட முடிந்த தரவினை, அரசினால் ஏன் சேகரிக்க முடியவில்லை என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
RTI செயல்பாட்டாளர்கள் கொலை குறித்த தகவல்கள்
திமுக பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் RTI செயல்பாட்டாளர்கள் எத்தனை பேர் இதுவரை கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்வியினை எழுப்பி, Whistleblower பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கேள்வி எழுப்பினார். அதற்கும் எந்த தரவுகளும் இல்லை என்றே பாஜக அரசு பதிலளித்திருக்கிறது.
உலக ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் குறித்த தகவல்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் குமார் மொண்டல் ஊழல் குறித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்ற கேள்வியை எழுப்பியதற்கும் தரவுகள் இல்லை என்பதே பதிலாக வந்துள்ளது.
அரசியல் சிறைவாசிகள் குறித்த தரவுகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பினோய் விஸ்வம் இந்திய சிறைகளில் உள்ள அரசியல் சிறைவாசிகள் குறித்த கேள்வியை எழுப்பியதற்கும் தரவுகள் இல்லை என்றே பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
சிறைவாசிகள் குறித்த புள்ளிவிவரங்களில் தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) அரசியல் சிறைவாசிகள் குறித்த விவரங்கள் எதையும் பராமரிக்கவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
துப்புரவுப் பணியாளர்களின் மரணங்கள் குறித்த தரவுகள்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனைகளை தூய்மைப்படுத்தும் பணியிலும், மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பதிலளிக்கையில் ’தரவுகள் இல்லை’ என்றே தெரிவித்துள்ளது.
கடந்த 3 நாட்களாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு “தரவுகள் இல்லை” என்ற எளிமையான அக்கறையற்ற பதிலையே ஒன்றிய அரசு அளித்து வருகிறது. எந்த அதிகார பலமும், நிர்வாகக் கட்டமைப்பும் இல்லாத எளிய குழுக்களால் இத்தகைய தரவுகளை சேகரிக்க இயலும்போது, ஒன்றிய அரசினால் இத்தரவுகள் பராமரிக்கப்படவில்லை என சொல்லப்படுவது முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைப்பதைப் போன்ற செயலே ஆகும்.
நன்றி:
Huffington Post
NON VIRUS DEATHS – Thejesh GN Project