விவசாயிகள் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 25-ம் தேதியிலிருந்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆளும் பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடக்கும் இப்போராட்டத்தின் வழிமுறைகள் நாளுக்குநாள் விரிவடைந்து வருகிறது. 

கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக விவசாயிகள் முன்னெடுத்த பல்வேறு வடிவங்கள்

டெல்லியின் சுங்கச் சாவடிகளை கைப்பற்றிய விவசாயிகள், மக்களை சுங்கக் கட்டணமின்றி செல்ல அனுமதித்தனர். 

கார்பரேட் பெருநிறுவனங்கள் பயன்பெறுவதற்காக இயற்றப்பட்ட  இச்சட்டங்களை எதிர்க்கும் அடையாளமாக, இச்சட்டங்களினால் பயன்பெறப்போகும் அம்பானி, அதானி நிறுவனங்களுடனான வணிகத்தைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்தனர். 

ரிலையன்ஸ் நிறுவனங்களை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்து ஜியோ சிம்களை உடைக்கும் போராட்டத்தை நடத்தினர். 

முன்னதாக பஞ்சாப் மாநிலத்திலுள்ள ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் பெட்ரோல் பங்களுக்கு எதிராக விவசாயிகள் மறியல் நடத்தியிருந்தனர்.

ரிலையன்ஸ் ஜியோ டவர்களின் மின்சாரம் துண்டிப்பு

தற்போது பஞ்சாபிலுள்ள அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்பு கோபுரங்களின் மின் இணைப்பைத் துண்டிக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

பஞ்சாப்பின்  நவான்ஷ்ஹார், பெரோஸ்பூர், மன்ஸா, பர்னாலா, பசில்கா, பாட்டியாலா மற்றும் மோகா மாவட்டங்களில் அமைந்துள்ள ஜியோவின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிப்பு தொடர்கிறது.

இதுபற்றி கருத்து கூறிய விவசாய சங்கம் ஒன்றின் தலைவர் தர்ஷன் சிங் கர்மா, “பெரோஸ்பூரிலுள்ள ஐந்து ஜியோ தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின்இணைப்பைத் துண்டித்துள்ளோம். (விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களுக்கு காரணமான) கார்ப்பரேட் பெருநிறுவனங்களை எதிர்ப்பதற்காக இப்படியான போராட்டத்தை செய்கிறோம்” என கூறியுள்ளார். 

நவான்ஸ்ஹாரிலுள்ள 11 ஜியோ தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட தொலைதொடர்பு கோபுரங்கள் அமைந்துள்ள வளாகமும் விவசாயிகளால் பூட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மின்இணைப்பு துண்டிப்புக்குள்ளான ஜியோ நெர்ட்வொர்க் செயல்படும் தொலைதொடர்பு கோபுரங்களை பயன்படுத்தும் பிற நெட்வொர்க்குளாலும் பாதிப்படைவதாகக் கூறப்பட்டது. 

மேலும் மாணவர்களின் இணையவழிக் கல்வி, தேர்வுகள் இதன் மூலம் பாதிப்புக்குள்ளாவதாகவும் கூறப்பட்டது. இதைக் கருத்தில் எடுத்துக்கொண்ட விவசாயிகள், பிற நெட்வொர்க்குகள் பகிர்ந்து கொள்ளாத ஜியோவின் பிரேத்யேக தொலைதொடர்பு கோபுரங்களைக் கண்டறிந்து அதனை மட்டும் செயலிழக்கச் செய்யப்போவதாக கூறியுள்ளனர். 

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசின் அலட்சியப் போக்கு விவசாயிகளை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஒரு மாதமாக தொடரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசு உரிய மதிப்பளிக்காததன் விளைவே இவை. இப்படியாக நாளுக்கு நாள் விரிவடையும் விவசாயிகளின்  போராட்டத்தின் காரணமாக மிக விரைவில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்றே ஆக வேண்டிய நிலை வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *