ஜல்லிக்கட்டும் ஜாதியும்

ஜல்லிக்கட்டும் சாதியும்; முன்மாதிரி தீர்ப்பு

அவனியாபுரம் சல்லிக்கட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று முன்தினம் அளித்திருக்கும் தீர்ப்பு சல்லிக்கட்டில் ஜாதிய ஆதிக்கத்திற்கு எதிரான முன்மாதிரி தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக உலகப்புகழ் பெற்றது அவனியாபுரம் சல்லிக்கட்டு, அதை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் முறையாக அமைக்கவில்லை என்று தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

சல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனம்

தமிழகம் முழுவதும் 2017-ம் ஆண்டு நடந்த சல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதன் ஆதரவாளர்கள் மீது வைக்கப்பட்ட முக்கிய விமர்சனம்  சல்லிக்கட்டு ஒரு குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியின் விளையாட்டு, பட்டியல் சமூகத்திற்கு அதில் பிரதிநிதித்துவம் இல்லை என்பதுதான்.

இது உண்மை இல்லை என்றாலும் தென்மாவட்டங்களில் நடக்கும் இந்த விளையாட்டில் ஜாதி ஆதிக்கம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

வாடிவாசல் நாவலை எழுதிய  சி.சு செல்லப்பா “கள்ளர்களும் பள்ளர்களும்” சல்லிக்கட்டில் சரிசமமாக பிரதிநித்துவப்படுத்தினார்கள் என்று தன் ஆய்வின் போது கண்டதாக கூறியதாக “சல்லிகட்டு” ஆய்வு நூலை எழுதிய முனைவர் அ.முத்தையா கூறுகிறார்

“தென்னிந்திய குலங்களும் குடிகளும்” எழுதிய எட்கர் தர்ஷன் தன்னுடைய ஆய்விலும் சல்லிக்கட்டில் மறவர்களின் பெரும்பான்மையை பதிவுபண்ணும் அதே வேலையில் சல்லிக்கட்டு மதுரை சுற்றியுள்ள அணைத்து மக்களின் பங்களிப்பாக நடந்ததாகத்தான் பதிவு செய்கிறார்.

இன்றைக்கும் அலங்காநல்லூர் சல்லிக்கட்டில் முதல்மாடு பள்ளர் சமூகத்தின் மாடுதான்.

இந்திய சமூக சூழலில் சாதியின் பாத்திரம்

அதே சமயம் சாதி ஆதிக்கம் இல்லாத எந்த பண்பாட்டு நிகழ்வும் இந்திய சமூகச் சூழலில் கிடையாது. உண்டு என்று வாதிடவும் முடியாது. 

சல்லிக்கட்டில் அனைத்து உற்பத்தி சாதிகளின் பங்கும் இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டு அவர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். அரசும் நீதிமன்றங்களும் சட்டமும் நுழைவதன் மூலம் இது சாத்தியம் என்பதே சல்லிக்கட்டு ஆதரவாளர்களின் வாதமாக இருந்திருக்கிறது.

சல்லிக்கட்டுக்காக தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டு வந்து சல்லிக்கட்டு போராட்டம் வெற்றிபெற்ற பிறகு, இதுவரை அதற்குள்ளாக இருந்துவந்த அனைத்து பிற்போக்குத்தனங்களையும், சாதி ஆதிக்கங்களையும் களைந்து சமூகநீதியை நிலைநாட்ட வேண்டியது சட்டத்தின் பொறுப்பு.

அந்த வகையில் நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற மதுரை கிளை அவனியாபுரம் சல்லிக்கட்டு வழக்கில் வழங்கியிருக்கும் சல்லிக்கட்டில் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிரான தீர்ப்பு முன்னுதாரணமான வரவேற்க வேண்டிய தீர்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *