உயர்சாதி பிராமணப் பெண்களின் திருமணத்திற்காக சிறப்பு உதவி தொகை வழங்க கர்நாடக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பிராமணர்கள் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வரும் நாட்களில் உயர்சாதி பிராமணப் பெண்கள் திருமணத்திற்காக “அருந்ததி” மற்றும் “மைத்ரேயி” எனும் பெயர்களில் உதவித் தொகை திட்டத்தை அரசு அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
அருந்ததி மற்றும் மைத்ரேயி திட்டம்
“அருந்ததி” திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும் பிராமணப் பெண் குடும்பத்திற்கு ரூ. 25,000 வழங்கப்படும் என்றும், மேலும் “மைத்ரேயி” திட்டத்தின் கீழ் ஒரு பிராமண பெண் மாநிலத்தில் ஒரு அர்ச்சகரை மணந்தால் ரூ3 லட்சம் நிதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளை ஏற்கனவே பிராமணர்கள் மேம்பாட்டு வாரியம் கண்டறிந்துவிட்டதாகவும், இதில் “அருந்ததி” திட்டத்தின் கீழ் 500 பெண்களையும், மேலும் “மைத்ரேய்” திட்டத்தின் கீழ் 25 பெண்களையும் பட்டியலிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பிராமணப் பெண்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகள்
இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய சில தகுதிகளை வரையறுத்து உள்ளதாக பிராமணர்கள் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் எச்.எஸ்.சச்சிதானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார். அதில்,
முதலாவதாக திருமணம் செய்து கொள்ளும் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியை வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
“பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதி பிரிவை சேர்ந்த பிராமணர்கள் மட்டுமே தகுதி பெறுவார்கள்” என்றும் குறிப்பாக அது அந்த பெண்ணின் முதல் திருமணமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது மட்டுமின்றி உதவித் தொகை பெறும் தம்பதியினர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு திருமணத்திற்கு பின் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற உறுதிமொழியையும் கொடுக்க வேண்டிய நிபந்தனை இருப்பதாகவும் தெரிவித்தார்.”
பிற்போக்குத்தனமான பெண்களுக்கு எதிரான திட்டம்
இந்த இரண்டு திட்டங்களுக்கும் எதிராக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து பிற்போக்குத்தனமான திட்டங்களாக இருப்பதாக தெரிவித்து வலுவான எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ளன.
“திருமணம் என்பது இரு தனிப்பட்ட நபர்களின் விருப்பம் சார்ந்த தேர்வாகும், சில சமூக திருமணங்களை செய்வதற்கு மட்டும் அரசே ஊக்குவிப்பது என்பது பிற்போக்குத்தனமானதொடு பெண்களுக்கு விரோதமானதாகும்” என்று காங்கிரசின் இளைஞர் பிரிவின் தேசிய தலைவர் ஒய்.பி.ஸ்ரீவட்சா கூறி கண்டனம் தெரிவித்தார்.
எடியூரப்பா அரசு உருவாக்கிய பிராமண மேம்பாட்டு வாரியம்
கடந்த ஜனவரி 2019-ம் ஆண்டு பொருளாதார ரீதியாக பலவீனமான உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு திட்டத்தை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அறிமுகப்படுத்திய பின்னர், அதே ஆண்டு ஜூலை மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருந்து பி.எஸ்.எட்டியூரப்பா தலைமையிலான அரசாங்கத்தால் பிராமண மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டது.
ஏற்கனவே பூஜை சடங்குகள் மற்றும் மாலை அர்ச்சனைகள் செய்வதில் பயிற்சி பெற விருப்பம் உள்ள உயர்சாதி பிராமணர்கள் கிட்டத்தட்ட 4,000 நபர்களுக்கு மாதத்திற்கு ரூ. 500 வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கி வைத்தது.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதத்திற்கு போதுமான நிதி ஒதுக்க முடியாமல் பற்றாக்குறையால் அரசு தள்ளாடிக்கொண்டிருப்பதாக தெரிவித்து வந்த சூழலில், முன்னேறிய ஒரு சமூகத்திற்கு மட்டும் இது போன்ற நிதித் திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வரும் 2020-2021 ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ25,000 முதல் ரூ30,000 கோடி வரை வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிசம்பரில் எடியூரப்பா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சாதி மறுப்பு திருமணங்களை மறுத்து சாதி முறையை ஊக்குவிக்கம் திட்டம்
“ஒரு பெண் தனது துணையை தேர்ந்தெடுப்பதும் அதேபோல் ஒரு ஆண் மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதும் அவர் அவர்களின் தனிப்பட்ட உரிமை. எனவே இந்த உத்தரவு நமது அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது என்றும் கர்நாடக அரசு தனிநபர் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தில் தலையிட்டு விதிமுறைகளை மீறுகிறது ”என்று மூத்த வழக்கறிஞர் உக்ரப்பா தெரிவித்தார்.
மேலும் வழக்கறிஞர் உக்ரப்பா “பிராமண சமூகத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் பிற சமூகங்களில் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதாகவும், இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பாஜக அரசாங்கம் இது போன்ற சாதியவாத போக்குகளை வரி செலுத்துவோரின் பணத்தில் ஊக்குவித்து வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” எனவும் தெரிவித்தார்.
பிரபல எழுத்தாளர் மகேஷ் சந்திர குரு இது போன்ற சாதி முறையை ஊக்குவிக்கும் பாஜக அரசிற்கு நோக்கி கண்டனம் தெரிவித்தார்.”இது சாதி அமைப்பின் இரும்புச் சங்கிலிகளில் சிக்கித் தவிக்கும் பிராமண பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்” என்றும் குரு தெரிவித்தார்.