செல்வமுருகன் மரணம்

சாத்தான்குளம் பாணியில் நெய்வேலி காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள வியாபாரி!

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இரண்டு வியாபாரிகள் அடித்துக் கொல்லப்பட்ட சூடே இன்னும் குறையவில்லை. அதற்கான விசாரணையே இன்னும் முடியாத நிலையில், அதேபோன்ற வெறிச் செயலில் நெய்வேலி காவல்நிலைய காவலர்கள் ஈடுபட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. 

பண்ருட்டி அருகே உள்ள கடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற முந்திரி வியாபாரி காவல்துறையினரின் சித்ரவதையினால் மரணமடைந்திருக்கிறார். முந்திரி வியாபாரி காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டுள்ள செய்தி கடலூர் மாவட்ட மக்களை கோபத்திலும், பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுதுமிருந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் பதியப்பட்டு வருகின்றன.

இந்த கொலை குறித்த அதிர்ச்சியான விவரங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ளார். 

தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கடாம்புலியூரைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் தனது வியாபார விடயமாக 28.10.2020 அன்று காலை 11 மணியளவில் வடலூர் வரை செல்கிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். மாலை 4 மணி வரை அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரது செல்போனுக்குத் தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்கவில்லை. இதனால் மனைவியும் இரு குழந்தைகளுமாக அவரைத் தேடிச் சென்றுள்ளனர்.

வடலூர் சென்று எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் புகார் கொடுக்க வடலூர் காவல் நிலையம் சென்றார்கள். அங்கு புகாரை வாங்க மறுத்து வடக்குத்தில் உள்ள நெய்வேலி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறினார்கள்.

இரவு 8 மணியளவில் நெய்வேலி நகர காவல் நிலையம் சென்றபோது மறுநாள் காலையில் வரச் சொன்னார்கள். அப்போது செல்வமுருகன் மனைவியையும் இரு பிள்ளைகளையும் உடன் சென்ற வடலூரைச் சேர்ந்த உறவினர் ஒருவரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

பிறகு அங்கிருந்து திரும்பி வந்தபோது வழிமறித்த கிரைம் போலீசார் மற்றும் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர், செல்வமுருகன் மீது பல வழக்குகள் இருப்பதாக மிரட்டி விட்டு சென்றுவிட்டனர்.

மறுநாள் காலை செல்வமுருகனின் போன் மூலமே அவரது மனைவியிடம் தொடர்புகொண்டு, இந்திரா நகரில் உள்ள ராணி & ராணி என்ற லாட்ஜுக்கு வரும்படி போலீசார் கூறினர்.

குழந்தைகளுடன் அங்கு சென்றபோது, செல்வமுருகன்  மீது திருட்டு வழக்கு போடப் போகிறோம், 10 பவுன் தங்கச் செயின் கொடுத்துவிட்டால் வழக்கு போடமாட்டோம் என்று மிரட்டினார்கள்.

தவறே செய்யாதவர் செல்வமுருகன்; ஏன் 10 பவுன் தங்கச் செயின் தர வேண்டும்; அப்படி எதுவும் எங்களிடம் இல்லவும் இல்லை எனக் கூறிவிட்டு குழந்தைகளுடன் திரும்பி வந்துவிட, மீண்டும்  30.10.2020 அன்று காலை நெய்வேலி நகர போலீசார் காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்தார்கள். 

குழந்தைகளுடன் அங்கு சென்றபோது செல்வமுருகனை காவல் நிலையத்தில் இருந்து ஒரு காவலர் வெளியே அழைத்து வந்தார். அப்போது செல்வமுருகனின் கை மற்றும் கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தது. அவர் நடக்க முடியாமல் தட்டுத் தடுமாறி வந்தார். வந்தவர் கண்ணீர் மல்க தன் மனைவியிடம் என்னைக் காப்பாற்று என்று கதறி அழுதார். தன்னை சந்தேகத்தில் இங்கு அழைத்துவந்து, இங்கு வந்த திருட்டு வழக்குகள் அனைத்தையும் உன் மேல்தான் போடப் போகிறோம், ஒப்புக் கொண்டுவிடு என்று மிரட்டி அடித்து உதைத்து சித்திரவதாக  அவரது மனைவியிடம் செல்வமுருகன் கூறியுள்ளார்.

அப்போது போலீசார் செல்வமுருகன் மனைவியையும் மிரட்டி சில வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கி உள்ளார்கள். இதை யாரிடமும் சொல்லாதே. சொன்னால் உன் கணவரைச் சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள். அழுதுகொண்டே அவரது மனைவியும் குழந்தைகளும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

அதன் பிறகு செல்வமுருகனைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. 02.11.2020 பகல் 12 மணியளவில் விருத்தாசலம் கிளைச் சிறையில் செல்வமுருகன் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு சென்றபோது, சிறைக் காவலர் ஒருவர் செல்வமுருகனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்.

அவரால் நடக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. கை ஜாடை செய்கை முலம்தான் தெரிவித்து உள்ளார் செல்வமுருகன்.

சிறைக் காவலர்கள் செல்வமுருகனுக்கு மயக்கம் வந்தது என்றும் தொண்டையில் அடிபட்டதால் சாப்பிடமுடியவில்லை என்றும் கூறியுள்ளார்கள். அதன்பின் செல்வமுருகனை விருத்தசலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நெய்வேலி போலீசாரும் இருந்தனர். அவர்கள் செல்வமுருகனை திரும்பவும் சிறைக்குக் கொண்டு செல்வதிலேயே குறியாய் இருந்து உள்ளார்கள் .

உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கக் கேட்டபோது அதற்கும் போலீசார் மறுத்துவிட்டு சிறைக்கே கொண்டு சென்றுள்ளார்கள்.

04.11.2020 அன்று செல்வமுருகனை விருத்தசலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் உடனே வந்த பார்க்கும்படியும் இரவு 11.45 மணியளவில் போன் வந்தது. உடனே குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் அங்கு சென்றபோது, செல்வமுருகன் சிறையிலேயே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்கள். செல்வமுருகன் உடல் விரைத்துச் சடலமாகக் காணப்பட்டார்.

அப்போதுதான் செல்வமுருகனின் மனைவிக்கு புரிந்தது, நெய்வேலி நகர காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்கச் சென்றபோதே செல்வமுருகனைக் காட்டாமல் மறைத்து வைத்துவிட்டு மறுநாள் வரச் சென்னதும்; அங்கேயே செல்வமுருகனை அடித்துத் துவைத்துச் சித்திரவதை செய்து குற்றுயிரும் கொலையுயிருமாக ஆக்கி  செல்வமுருகன் சிறையிலேயே இறப்பதற்கு காரணமாக இருக்கலாம். பிறகு உடல்நலக்குறைவு காரணமாக செல்வமுருகனை விருத்தசலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கு சிகிக்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக கூறுகிறார்கள் என்று.

ஆக இது காவல்துறை நடத்திய ஆணவப் படுகொலை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதற்கு பதில் சொல்ல வேண்டியது நெய்வேலி நகர காவல் நிலையத்தின் கடமை. அவர்களைப் பதில் சொல்ல வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. 

சாத்தான்குளம் பாணியில் காடாம்புலியூர் வியாபாரி செல்வமுருகனை நெய்வேலி காவல் நிலையத்தில் அடித்துச் சித்திரவதை செய்து நிகழ்த்தப்பட்ட காவல் ஆணவப் படுகொலை!

மேலும் தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் படுகொலைக்குக் காரணமான காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் சட்டப்படி தண்டிக்கப்படவும், வியாபாரி செல்வமுருகன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அவரது மனைவி திருமதி பிரேமா அவர்களுக்கு அரசு வேலை வழங்கவும் இந்தப் படுகொலைக்கு நீதி கிடைக்க வழி வகை செய்யுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

என்று தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காவல் நிலைய சித்ரவதைகளை அரசு எப்போது நிறுத்தப் போகிறது?

குற்றவாளிகளாகவே இருந்தாலும் தாக்கும் உரிமை காவல்துறையினருக்கு இல்லாத போதும், அப்பாவி பொதுமக்களும், வியாபாரிகளும் காவல்துறையினரின் அத்துமீறலுக்கும், சித்ரவதைகளுக்கும் தொடர்ந்து உள்ளாகும் சூழல் இருக்கிறது. சக மனிதனை அடித்துக் கொள்ளும் அளவிற்கான மிருகக் குணத்தினையும், அதிகாரத்தினையும் காவல்துறைக்கு அளிப்பது யார் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டாலும், தமிழக அரசு பதில் சொல்ல மறுப்பதால்தான் இதுபோன்ற கொலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. 

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் 5 லாக்டப் மரணங்கள் நிகழ்வதாக தரவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் போதிலும், மனித உரிமைகளைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இந்திய அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. 

இந்த 10 ஆண்டுகளில் 17,146 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மரணங்கள் சித்ரவதை, தாக்குதல்கள், கொடிய நோய்கள், உரிய மருத்துவம் அளிக்கப்படாமை உள்ளிட்ட பல காரணங்களால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டில் மட்டும் ஜூலை மாதம் வரையில் 914 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 53 மரணங்கள் போலிஸ் கஸ்டடியில் இருக்கும்போது நிகழ்ந்துள்ளன. 

ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட காவல்துறை சட்டத்தில் எப்போது சீர்திருத்தங்களை கொண்டுவரப் போகிறது அரசு? அப்பாவி மக்கள் மீது அத்துமீறும் காவல்துறையினருக்கு உறுதியாக தண்டனை வாங்கித் தரப்படும் என்ற நம்பிக்கையினை மக்களுக்கு அரசு எப்போது அளிக்கப் போகிறது? மனித உரிமை சட்டங்கள் உறுதிப்படுத்தப்படாத வரையில் சாத்தான்குளம் சம்பவங்களை நாம் தொடர்ந்து பார்த்திடவே நேரிடும்.

இதையும் படிக்க:
1. சாத்தான்குளம் படுகொலையை ஒரு தனி சம்பவமாக பார்க்க முடியுமா?

2. சாத்தான்குளம் இரட்டை படுகொலைக்கு நீதி என்பது எது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *