ஐ.ஐ.எம்.சி

ஊடக பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்

இந்தியாவின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் முன்னணி பத்திரிகை மற்றும் ஊடகக்  கல்வி  நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC)– க்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் அனில் சௌமித்ரா பேராசிரியராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

அனில் செளமித்ரா

அனில் சௌமித்ரா முன்னாள் மத்தியப்பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பு தலைவராக பதவி வகித்தவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவின் தேசத்தந்தையான மகாத்மா காந்தியை “இந்நாட்டின் மகனாக இருப்பதற்கான தகுதியற்றவர்” என்றும் “காந்தி பாகிஸ்தானின் தேசத்தந்தை” என்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர். இக்கருத்துகள் சர்ச்சையாக மாறியதன் காரணமாக 2019-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இவர் IIMC-ல் பணியமர்த்தப்பட்டது சர்ச்சையாகியுள்ள காரணத்தால், தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இணையதள பக்கங்களை deactivate செய்துள்ளார். மேலும் இவர் ஊடக கல்வி நிறுவனங்களில் ‘மீடியா செளபால்’ எனும் நிகழ்வினை ஒருங்கிணைப்பவராக இருப்பதோடு, குடிமக்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி அளிப்பதற்கான திட்டங்களையும் முன்னிறுத்தி வருகிறார்.

பிரமோத்குமார் சைனி

மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பத்திரிக்கையான ’ஆர்கனைசர்’ இதழின் தலைமை செய்தி ஒருங்கிணைப்பாளர் என தன்னைக் கூறிக்கொள்ளும் பிரமோத்குமார் சைனி-க்கும் அதே நிறுவனத்தில் பேராசிரியர் பணி கொடுக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன் இமாச்சலப்பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

2015-ம் ஆண்டு முதலே ஊடக கல்வி நிறுவனங்களில் நடைபெற்றுவரும் முறைகேடான நியமனங்கள்

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஆர்.எஸ்.எஸ் பற்றாளரான சஞ்சய் திவேதி IIMC-ன் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். சஞ்சய் திவேதி இயக்குநர் ஜெனரல் பதவிக்கு தேவையான தகுதிகளோடு இல்லாததால் அந்த பதவியைப் பெறுவதற்கான ஆவணங்களில் அவர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. சஞ்சய் திவேதி, மஹன்லால் சதுர்வேதி பத்ரகரிதா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தை தனது பணி அனுபவ காலமாக காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

பி.எச்.டி படிப்பை முடிக்காத சஞ்சய் திவேதி-க்கு மத்தியப்பிரதேசத்தில் உள்ள மஹன்லால் சதுர்வேதி பத்ரகாரிதா பல்கலைக்கழகத்தில் வேலை வழங்கப்பட்டதாக 2015-ம் ஆண்டே குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் அங்கு பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டு பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். சமூக ஆர்வலர் பிரமோத் மிஸ்ரா இந்த நியமனம் குறித்து நீதிமன்றத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் அவசரமாக நடைபெற்ற இந்த நியமனம் குறித்து பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்தன.

‘நியூஸ் கிளிக்’ (Newsclick) செய்தி நிறுவனத்திற்கு பெயர் தெரிவிக்க விரும்பாத ஓய்வுபெற்ற IIMC-ன் பேராசிரியர் அளித்த பேட்டியில், “பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள இந்த நியமனத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. விதிகளின்படி, நியமிக்கப்படும் பேராசிரியர்கள் பி.எச்.டி மற்றும் பத்து ஆண்டுகள் கற்பித்தல் அனுபவத்தோடு தொழில்துறை அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசின் ஒரு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரு உதவி பேராசிரியரை எவ்வாறு நேரடியாக வேறொரு மத்திய நிறுவனத்தின் பேராசிரியராக பதவி உயர்வு செய்ய முடியும் என்பது எனக்கு புரியவில்லை” என தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாக இமாச்சலப் பிரதேசத்தின் மத்திய பல்கலைக்கழக இணையதளத்தில் பிரமோத்குமார் சைனியின் சுயவிவரக் குறிப்பில், அவர் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் கற்பித்த அனுபவம் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை வழிநடத்திய அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் அந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் கூறியதாவது “இதுபோன்ற நியமனங்கள் அரசியல் காரணங்களுக்காகத் தான் நடக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த நியமனங்கள் அரசாங்கம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் முக்கியமானதாகும். இவர்கள் மாநில அரசின் ஊடக பல்கலைக்கழகங்களில் தங்கள் செல்வாக்கை செலுத்தி வருகின்றனர். ஆனால் IIMC இன்னும் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. ஆதலால் இதுபோன்ற நியமனங்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது நிகழ்ச்சி நிரலை எந்தவித தயக்கமும் இல்லாமல் செய்ய வழி செய்கிறது.

ஊடகதுறை கல்வி நிறுவனங்களை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்ந்து இதுபோன்ற பத்திரிக்கைத் துறை கல்வி நிறுவனங்களை குறிவைத்து இயங்கி வருகிறது. இதற்கு முன்னர் சத்தீஸ்கர் மாநில ஆளுநர் அனுசுயா உய்யா, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இந்தி செய்தித்தாளான ‘பஞ்ஜனாய’ இதழின் ஆசிரியரான பாலாதேவ் பாய் சர்மா-வை, குஷாபாவ் தாக்கரே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியமர்த்தினார். இதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பேகல் மற்றும் சத்தீஸ்கர் மாநில ஆளுநர் அனுசுயா உய்யா- விர்க்கும் இடையில் மோதல் வெடித்தது. 

பின் சத்தீஸ்கர் மாநில அரசு குஷாபாவ் தாக்கரே பல்கலைக்கழகத்தின் பெயரை சந்துலால் சந்திரகர் பல்கலைக்கழகம் என மாற்றியது. குஷாபாவ் தாக்கரே பாஜகவின் தலைவராக பணியாற்றியதோடு, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் செல்வாக்கு மிக்க நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *