சாத்தான்குளம் காவல்துறையால் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட தந்தை மகன் வழக்கு இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் குற்றம் செய்த ஒரு சில காவல்துறையினரை நோக்கியே கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதேபோல் மக்கள் பார்வையும் குற்றவாளிகளை தண்டிப்பது என்ற நோக்கத்தோடு ஒரு முடிவுக்கு வருகிறது. ஆனால் காவல்துறை என்ற அமைப்பின் (Police System) நடைமுறை குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டிய நேரம் இது. காலனிய காலத்தில் துவங்கப்பட்ட இந்திய காவல்துறையின் எதேச்சதிகார மனநிலை ஒவ்வொரு நாளும் பல்வேறு சம்பவங்களுக்கு சாட்சியாக அமைகிறது.
இந்தியாவில் 2019-ம் ஆண்டு 1731 காவல் மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் காவல்துறையால் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாது ஆயிரக்கணக்கானவர்கள் மிகமோசமாக அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். அதில் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கையை இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

2019-ம் ஆண்டு அறிக்கையின் படி கொல்லப்பட்ட 1731 பேரில், 1606 பேர் நீதிமன்றக் காவலிலும் மற்றும் 125 பேர் போலீஸ் காவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த 125-ல் 7 நபர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய ஏழைகள். 13பேர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதேபோல் 15 ஆதிவாசிகளும், 35 இஸ்லாமியர்களும் இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கம். கொல்லப்பட்டவர்களில் 3 விவசாயிகள், 2 வாட்ச்மேன், 1 அகதி என்பது மிகவும் வருத்தத்தைத் தரக்கூடிய செய்தி.

2017-ம் ஆண்டு 58பேர் சட்டவிரோதக் காவலில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதுவரை அவர்களில் எந்த காவல்துறை அதிகாரிகளும் தண்டிக்கப்படவில்லை. ஏறத்தாழ 48 காவலர்கள் மீது மனித உரிமை ஆனையத்தால் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அவர்களில் 3 காவலர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். அதுவும் கொலை செய்த வழக்குகளுக்கு மட்டுமே. போலீஸ் தாக்கியதில் ஆயிரக்கணக்கானவர்கள் நடைபிணமாக வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களை நோக்கி எறியப்படும் அருவருப்பான கெட்ட வார்த்தைகளும் அத்துமீறல்களும் எளிமையாக கடக்கப்படுகின்றன. அடியை விட மிகமோசமாக சாமானியர்களை காயப்படுத்தும் அத்துமீறல்கள் காவல்துறை நடைமுறையின் இயல்பான ஒன்றாக இருக்கிறது.


இதுபோன்ற காவல்துறையின் அத்துமீறல் குறித்து முன்னால் IG தராபுரி IPS தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மிக விரிவாக விவாதிக்கிறார். 2019 டிசம்பர் 19-ம் தேதி CAA போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக உத்திரப் பிரதேச யோகி ஆதித்யநாத்தின் அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளது. பின்னர் 20-ம் தேதி காலை லக்னோவில் உள்ள காசியாபாத் காவல் நிலையத்திற்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். அன்று முழுவதும் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளார். பின் இரவு முழுவதும் எந்தவித உணவு, மருந்து எதுவும் இன்றி தனி லாக்கப்பில் இருநதுள்ளார். அடுத்தநாள் 21-ம் தேதி லக்னோ மாவட்ட நீதிபதியால் ரிமான்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிபதி எந்த கேள்வியும் அவரிடம் கேட்கவில்லை.
அதேபோல் அவர் 21-ம் தேதிதான் கைது செய்யப்பட்டதாக பொய்யாக FIR பதியப்பட்டுள்ளது. அவர் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு நாட்கள் வழக்கறிஞர்களையும் குடும்பத்தவர்களையும் பார்க்க அனுமதிக்கவில்லை. 32 ஆண்டுகள் IPS அதிகாரியாக காவல்துறையில் பணியாற்றிய அவருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மனிதனின் நிலை என்ன என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
இந்தியாவில் காவல்துறைக்கு காலனிய காலத்தில் கொடுக்கப்பட்ட வரம்புமீறிய அதிகாரம்தான் இதற்கு காரணம் என்று அவரே தெரிவித்துள்ளார். அதேபோல் நீதிபதிகளின் முன்பு கொண்டு செல்லப்படும் பெரும்பான்மையான கைதிகளின் நிலைகுறித்து நீதிமன்றத்தின் அலட்சியப்போக்கும் காரணம் என்று கூறுகிறார். பல நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிபதியின் முன் சாட்சியத்துக்கு கொண்டு வராமலே சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற எதேச்சதிகாரப்போக்கை அடியோடு மாற்றியமைக்க முறையான சட்டமும் வழிகாட்டுதல்களும் கொண்டுவரப்படவேண்டும்.
காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான ஒரு அமைப்பு (Independent Body) உருவாக்கப்பட வேண்டும் என்று தேசிய காவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே இருக்கும் மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணையங்கள் முறையாக செயல்படவில்லை என்று பரவலான குற்றச்சாட்டு உள்ளது. மனித உரிமை ஆணையத்தின் பெரும்பாலான உயர்மட்ட அதிகாரிகள் அரசியல் சார்புடனும் அதிகாரவர்கத்தின் ஆதரவிலும் அந்த பதவிக்கு வருகின்றனர். எனவே அவர்கள் முறையாக செயல்படுவதில்லை. ஆணையத்தை நாடும் சாமானியர்கள் காவல்துறையால் மேலும் மிரட்டப்படுவதும் கவனிக்கப்பட வேண்டிய உண்மை.
இதுபோன்ற காவல்துறையின் அடிப்படை கட்டமைப்பு குறித்தான விவாதத்தை துவங்கவேண்டிய நேரம் இது. குறிப்பாக ஒரு சில வழக்குகளின் போக்கை மட்டும் பரபரப்பாக காண்பித்துவிட்டு, உண்மையான பின்புலத்தினை கேள்விக்கு உட்படுத்தாமல் பாதுகாப்பது இப்பிரச்சினைகளை தீர்க்க உதவாது. சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையானது, காவல்துறையினை ஜனநாயகப் படுத்துவதற்கான அடிப்படை மாற்றங்கள் என்னென்ன என்பதை சமூகத்தில் முன்வைத்து விவாதிக்க வேண்டியதன் கட்டாயத்தை அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது.