சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவர் காவல்துறையால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தை தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மதுரை நீதிமன்றம், காவல்துறையினர் மன அழுத்தத்தை போக்குவதற்கு யோகா பயிற்சியும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை முதல் கட்டமாக தெரிவித்துள்ளது.. நீதிமன்ற விசாரணை எவ்வளவு தூரம் கேலிக் கூத்தாக இருக்கப் போகின்றது என்பதை இப்போதே நம்மால் யூகிக்க முடிகிறது.
கொரோனாவிற்கு தீர்வாக மோடி யோகாவை முன்வைக்கும் அபத்தம் ஒரு பக்கம் நடந்தேறுகின்றது என்றால், விவரிக்க முடியாத ஒரு காட்டுமிராண்டித்தனமான கொலையை விசாரிக்கும் நீதிமன்றமும் யோகாவைத் தான் சர்வரோக நிவாரணியாக முன்வைக்கிறது. அரசு அதிகார இயந்திரதங்கள் எவையானாலும் அவை ஒரே மொழியைப் பேசுகின்றன.
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தமிழகமெங்கிலும் காவல் துறையின் அத்துமீறல்கள் நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. சிறு, குறு வணிகர்கள் முதல், தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக வெளியில் வரும் சாமனியர்கள் வரை அனைவருமே காவல்துறை அராஜகத்தால் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நோய்த்தொற்றை கையாளத் தேவையான நடவடிக்கைகளை துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு திட்டமிட வக்கற்ற அரசு, தன் அதிகாரக் கரங்கள் மூலம் உழைக்கும் மக்களை நசுக்கியது. அதன் உச்சகட்டமாக நடந்தேறியது தான் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவர் சித்திரவதை செய்யப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டது.
காவல்துறையின் இந்த காலனிய கால வன்முறைத் தன்மைய எடுத்துக் கூறும் போதெல்லாம், ”யாரோ ஒருவர் செய்த தவருக்கு ஒட்டுமொத்தமாக குறை சொன்னால் எப்படி?”
என்ற கேள்வி நம்மை நோக்கிக் கேட்கப் படவே செய்கின்றது. ஆனால் மூன்றாம் உலக நாடுகள் என்று கூறப்படும் காலனிய நாடுகள் அனைத்திலும் காவல்துறையின் செயல்பாடுகள் ஒரே ரீதியில்தான் அமைந்துள்ளன.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன்னுடைய காலனி நாடுகளில், உருவாக்கிய போலீஸ் இயந்திரத்தின் நீட்சிதான் இன்று வரை இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் காவல்துறை அமைப்பு. 1822-ல் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் அயர்லாந்தில் முதன் முதலில் Royal Irish Constabulary (RIC) என்ற அமைப்பை உருவாக்குகிறது. 1853 ஆம் ஆண்டு Sir Charles Napier என்ற பிரிட்டிஷ் தளபதி, சிந்து நதிப்பகுதியை கைப்பற்றிய பிறகு , RIC-ன் செயல்வடிவத்தை ஒத்த ஒரு போலீஸ் அமைப்பை இங்கு உருவாக்குகிறார். இந்த காவல்துறை அமைப்புகள் யாவும், சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கவோ, குற்றங்களைத் தடுக்கவோ ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் அல்ல. மாறாக காலனிய சுரண்டலுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளே இவை. மக்களின் பாதுகாப்புக்கான அமைப்புகளாக அல்லாமல், மக்கள் மேல் அதிகாரம் செலுத்தும் இயந்திரங்களாகவே இவை இன்றுவரை செயல்படுகின்றன.
அதுவும் இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் கூட காலனிய நாடுகள் எங்கிலும் சாமானியர்கள் போலீஸ் வன்முறைக்கு பலியாகியுள்ளார்கள். ஆப்ரிக்க நாடுகளான கென்யா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா ஆகியவற்றில் பொதுமுடக்கத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், பொதுமக்களை கொன்றுள்ள அந்த நாட்டு காவல்துறை. தென் ஆப்ரிக்காவில், ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி மக்களை சுட்டுக் கலைத்துள்ள நிகழ்வுகளும் நடந்துள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகள் எங்கிலும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளும், கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதற்கு எதிரான போராட்டங்களும் இந்த நாடுகளில் நடக்காமல் இல்லை. கென்யாவில் காவல்துறை மக்களை சுட்டுக் கொன்றதைக் கண்டித்து மாபெரும் பேரணி நடைபெற்றது. கென்ய அதிபர் உகுரு கென்யாட்டா இதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். (ஆனால் இங்கு எடப்பாடி பழனிச்சாமியோ, அவர்கள் உடல் நலமின்றி செத்தார்கள் என்று அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்). தென் ஆப்ரிக்க நீதிமன்றம் போலீஸின் வன்முறையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு, ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்சேல் பாச்சிலேட், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துக்கிறோம் என்ற போர்வையில் அறங்கேறும் காவல்துறையின் வன்முறைகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
காலனிய சுரண்டலுக்கும், அதன் பிறகு நவதாராளமய சுரண்டலுக்கும் உள்ளாகி, அடிப்படை மக்கள் தேவைகளுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் சக்தியை இழந்து நிற்கும் ஏழை நாடுகளில்தான் கொரோனாவைக் காரணம் காட்டி அரச வன்முறைகள் நிகழ்கின்றன என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
கொரோனா பெருந்தொற்றை கையாள்வதில் தமிழக அரசு ஒட்டுமொத்த தோல்வியை தழுவியுள்ளது. அதை நாம் கேள்விக்குட்படுத்தாத வரை, அது, அ.தி.மு.க அமைச்சர்களின் உளறல்களாகவும், காவல்துறை உட்பட அரசு அதிகாரிகளின் அத்துமீறல்களாகவும் வெளிப்படுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
சாத்தான்குளம் இரட்டைக் கொலை உட்பட, கொரோனா ஊரடங்கு தொடங்கப்பட்ட பிறகு தமிழகத்தில் நடந்த அத்தனை போலீஸ் வன்முறைகளையும், அத்துமீறல்களையும் விசாரிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள் கொண்ட ஒரு விசாரணைக் கமிஷன் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.
கொலையில் நேரடியாக பங்கெடுத்த இரண்டு துணை ஆய்வாளர்கள், அதற்கு துணை போன ஆய்வாளர், மருத்துவ அதிகாரி, மாஜிஸ்ட்ரேட், சிறைத் துறை அதிகாரி, Friends of Police அமைப்பினர் என அனைவருமே இந்த ஆணையத்தால் விசாரிக்கப்பட வேண்டும்.
ஸ்டெர்லைப் போராட்டத்தில் அப்பாவித் தமிழர்கள் 13 பேர் கொல்லப்பட்ட விவகாரம் உட்பட, காவல்துறையின் மீது நிலுவையிலுள்ள அனைத்துக் குற்றசாட்டுகளை விசாரிக்க எந்த ஒளிவு மறைவுமின்றி இயங்கும் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.
சாதிய வர்க்க வேறுபாடுகள் மண்டிக் கிடக்கும் சமூக அமைப்பில், ”Community Policing” என்ற பெயரில் ஜனநாயகமற்ற முறையில் உருவாக்கப்படும் Friends of Police போன்ற அமைப்புகள் மக்களுக்கு எதிரானாதகவே இருக்க முடியும். காவல்துறைக்கு குறைந்த கூலியில், அரசாங்க ஊழியருக்கான எந்த ஒரு சலுகையும் இல்லாமல், வேலைப் பார்க்கத் தயாரக இருக்கும் நபர்களை உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கும் நிறுவனமாகவே இந்த ”Community Policing” அமைப்புகள் செயல்படுகின்றன. சமூக முரண்பாடுகளின் கோரமுகமாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிச அமைப்புகள் இந்த நிறுவனங்களை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதும் நடக்கத்தான் செய்யும். சாத்தான்குளம் படுகொலைகளிலும் அதைத் தான் நாம் பார்க்கிறோம்.
Friends of Police போன்ற அமைப்புகள் ஒரு போதும் மக்களுக்கான அமைப்புகளாக இருந்து விட முடியாது. தங்களுடன் வாழும் மக்களையே, தங்கள் சுயநலனுக்காக காட்டிக் கொடுக்கும் வேலையைத் தான் இவர்களால் செய்ய முடியும்.
இதற்கு முன் சட்டீஸ்கர் மாநிலத்தில், காடுகளை அழித்து நில வளங்களை கொள்ளையடிக்கும் அரசின் திட்டங்களுக்கு எதிராகவும், கார்பரேட் கம்பெனிகளுக்கு எதிராகவும் போராடிய பழங்குடி மக்களை ஒடுக்க, அந்த பழங்குடி சமூக இளைஞர்கள் சிலரையே “சல்வா ஜூடும்” என்ற பெயரில் செயல்பட வைத்து, பழங்குடி சமூகத்தை சிதைத்தது அந்த மத்திய-மாநில அரசுகள். உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. ”சல்வா ஜூடும்” என்ற கோண்டி மொழி வார்த்தைக்கு அர்த்தம் “அமைதிக்கான அணிவகுப்பு”. இந்தியாவில் உருவாக்கப்படும் ”Community Policing” அமைப்புகளின் லட்சணம் இது தான். ஆகவே இப்படிப் பட்ட அமைப்புகள் உடனடியாக கலைக்கப்பட வேண்டும்.
அப்படிச் செய்தால் மட்டுமே இந்த கொலைக்கான நீதி கிடைக்கும். அதிகார வக்கிரமற்ற தமிழகத்தை ஏற்படுத்த இதுவே முதல் படியாக இருக்கும்.