நாட்டின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு தங்களின் உழைப்பைக் கொடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்து ஷார்மிக் சிறப்பு ரயில்களில் இடத்தினை பெற்றுவிட்டாலும் அவர்களின் துயரம் ஓயவில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய போது, பல்வேறு சாலை விபத்துகளில் 205 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். இன்றுவரையில் 667 தொழிலாளர்கள் ஊரடங்கு காலத்தில் ஊருக்கு திரும்புகையில் பலியாகி இருக்கிறார்கள்.
பாதை மாற்றப்பட்ட ரயில்கள்
நடந்தவர்கள் போக, தற்போது அரசினால் இயக்கப்படும் ஷார்மிக் எனும் சிறப்பு ரயில்களில் இடத்தைப் பெற்றாலும் மரணிப்பது நிற்கவில்லை. ஷார்மிக் ரயில்கள் வழக்கமாக செல்ல வேண்டிய பாதைகளுக்கு மாறாக பல்வேறு பாதைகளில் திருப்பப்படுவதினால், ஒவ்வொரு ரயிலும் இலக்கின் இடத்தினை அடைவதற்கு நாட்கள் கணக்கில் தாமதம் ஏற்படுகிறது. 24 மணிநேரத்தில் சென்று சேர வேண்டிய ரயில் ஒன்று, பல்வேறு பாதை மாறுதல்களால் இரண்டரை நாட்கள் கழித்துத் தான் சேர்ந்திருக்கிறது.
இப்படி ஒவ்வொரு ரயிலும் நாட்கள் கணக்கில் தாமதமாக செல்வதால் உணவும், தண்ணீரும் இன்றி தொழிலாளர்கள் பெரும் இடருக்கு உள்ளாகியுள்ளனர். பாதை மாற்றம் குறித்தோ, அதனால் ஏற்படுகிற காலதாமதத்தின் அளவு குறித்தோ தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. இரண்டரை நாட்கள் பயணிக்கும் ஒரு ரயிலில் அவர்களுக்கான போதுமான உணவோ, தண்ணீரோ கூட முறையாக வழங்கப்படுவதில்லை.
இதையும் படிக்க : புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?
இடையில் உள்ள ரயில் நிலையங்களிலும் கடைகள் திறந்து வைக்கப்படாத காரணத்தினால் உணவையோ தண்ணீரையோ பெறுவதற்கான வழியின்றி புலம்பெயர் தொழிலாளர்களும், அவர்களின் குழந்தைகளும் மரணிக்கும் நிலை கூட ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் 7 பேரின் மரணம் பதிவு
35 வயதான உரேஷ் காட்டூன் என்ற பெண்மணி பீகாரின் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் மரணித்துக் கிடக்கும்போது, அதை அறியாமல் அவரது குழந்தை தனது அம்மாவை எழுப்ப முயன்று கொண்டிருக்கும் காணொளி நாடு முழுவதும் பரவலாகி மக்களின் உளவியலை பெரிதும் பாதித்த பிறகு, ரயில்வே துறையின் மீதான பல்வேறு விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. அதன் காரணமாக சிறப்பு ரயில்களில் தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் வெளிவரத் துவங்கியுள்ளன.
மே27-ம் தேதி ஒரே நாளில் மட்டும் சிறப்பு ரயில்களில் பயணித்த 7 பேரின் மரணம் பதிவுக்கு வந்திருக்கிறது. இவை கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் நிகழ்ந்த மரணங்கள். இதில் பீகாருக்கு சென்ற ரயில்களில் 4 பேரும், உத்திரப் பிரதேசத்திற்கு சென்ற ரயில்களில் 3 பேரும் இறந்துள்ளனர்.
உணவோ, தண்ணீரோ இன்றி தவிக்கவிடப்பட்ட தொழிலாளர்கள்
மகாராஷ்டிராவின் வசை சாலையிலிருந்து கோரக்பூர் செல்லும் ரயில் ஒடிசாவின் ரோர்கேலா வழியாக திருப்பப்பட்டதன் காரணமாக 25 மணிநேரத்தில் செல்லவேண்டிய ரயில், 60 மணிநேரத்திற்கு பயணித்திருக்கிறது. மகாராஷ்டிராவின் வசையிலிருந்து மே 21-ம் தேதி புறப்பட்ட ரயில் மே 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் கோரக்பூரை அடைந்திருக்கிறது. அந்த பயணத்தினை மிக மோசமான கொடூரமான பயணம் என்று தொழிலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரயிலின் ஓட்டுநர் பாதையை தொலைத்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த பின்னரே, தொடர் ரயில்களின் நெரிசலை தவிர்ப்பதற்காக ரயிலின் பாதை மாற்றப்பட்டதாக அரசால் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க : சாலை விபத்துகளில் உயிரைக் கொடுத்த 126 புலம்பெயர் தொழிலாளர்கள்
40 ரயில்களில் பயணித்த தொழிலாளர்கள் தொலைந்து போய்விட்டதாக செய்திகள் பரவ ஆரம்பித்த பிறகு, Press Information Bureau நடத்திய உண்மை அறியும் ஆய்வில் 80 சதவீத ரயில்கள் உத்திரப் பிரதேசத்திற்கும், பீகாருக்குமே செல்வதால் ரயில் பாதையில் நெருக்கத்தினைக் குறைப்பதற்காக அந்த ரயில்கள் பாதை மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ரயில்களின் பயண நேரம் தொழிலாளர்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்படுவதில்லை. கொளுத்தும் வெயிலில் தொழிலாளர்கள் ரயிலில் உணவும், தண்ணீரும் இன்றி காலதாமதாக்கப்பட்டு தவிக்க விடப்பட்டுள்ளனர்.
பசியால் துடித்து இறந்த குழந்தை
பாட்னாவிலிருந்து டெல்லிக்கு 15 மணிநேரத்தில் செல்ல வேண்டிய ரயில் 39 மணி நேரங்களாக சென்றதால் முகமது இர்ஷாத் என்ற 4 வயது குழந்தை இறந்திருக்கிறது. குழந்தையின் தந்தை பேசுகையில், குழந்தை சாப்பாடு கேட்டு பசியில் துடித்ததாகவும், துடிக்கும் குழந்தைக்கு உணவளிக்க தங்கள் கையில் எதுவும் இல்லை என்றும், கொஞ்சம் பணமிருந்த போதும், கடைகள் திறந்திருக்காததால் தங்களால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார். டெலிகிராப் இணையம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
ஊரடங்கை அறிவித்ததைப் போன்றே எவ்வித திட்டமிடலும் இல்லாமல் ரயில்கள் இயக்கப்பட்டதாகவே தெரிகிறது. ஒரு அரசின் திட்டமிடாத செயல்கள் சமூகத்தில் எத்தனை பெரிய இழப்புகளை கொண்டுவரும் என்பதனை குழந்தை இர்ஷாத்-தின் மரணம் நம் கன்னத்தில் அறைந்துவிட்டு சென்றிருக்கிறது.
மே 25-ம் தேதி திங்கள்கிழமை கோரக்பூர் சென்ற ரயிலில் ஒரு மாத குழந்தையும், ஜவுன்பூர் சென்ற ரயிலில் 46 வயதுடைய ஒரு தொழிலாளியும் இறந்திருக்கிறார்கள்.
10 மாத குழந்தை ஒன்று உடல்நிலை சரியில்லாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவரை அனுப்புவதற்கு ரயில்வே தாமதப்படுத்தியதால் இறந்திருக்கிறது.
கோவாவிலிருந்து மணிப்பூருக்கு சென்ற ரயிலில், இரண்டரை நாட்கள் உணவும், தண்ணீரும் இன்றி சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் மிக மோசமான நிலையில் பயணித்திருக்கிறார்கள்.
எந்த மாநிலத்திலிருந்து ரயில் புறப்படுகிறதோ, அந்த மாநில அரசுதான் ரயில் புறப்படுவதற்கு முன்பு உணவும் தண்ணீரும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கைகாட்டிவிட்டு ரயில்வே நிர்வாகம் தப்பித்துக் கொள்கிறது. அரசியலமைப்பு சாசனத்தின்படி ஒன்றியப் பட்டியலில் வருகிற புலம் பெயர் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசும், மாநிலங்களையே கைகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறது. திட்டமிடல் இல்லாமல், தொழிலாளர்களுக்கான நிதியினை ஒதுக்காமல் அறிவித்த ஊரடங்கினால் தான் இத்தனை துயரம் என்பதை எப்போதுதான் ஒன்றிய அரசு உணரப் போகிறது!