இந்தியாவின் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேச மாநிலப் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வலசை செல்லும் பூச்சியினங்களில் மிகவும் ஆபத்தானதாக வெட்டுக்கிளிகளின் கூட்டம் பார்க்கப்படுகிறது. கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் இப்பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டமொன்றில் மட்டும் 8 கோடி வரையிலான வெட்டுக்கிளிகள் இருக்கும். ஒரு கூட்டம் கிட்டதட்ட ஒரு சதுர கி.மீ பரப்பளவு வரை ஆக்கிரமிக்கக் கூடியவை. நாளொன்றுக்கு 150 கி.மீ பயணிக்கும் இயல்புடைய இவை தாங்கள் ஆக்கிரமிக்கின்ற பகுதியிலுள்ள விவசாயப் பயிர்களை மொத்தமாக தாக்கி அழித்து உண்ணக் கூடியவை. 2,500 நபர்கள் சாப்பிடக்கூடிய அளவை இப்பாலைவன வெட்டுக்கிளிகளின் சிறிய கூட்டமொன்று தின்றுவிடும். உலகின் மொத்த நிலப்பரப்பில் 20 சதவீதத்திற்கும் அதிகமான நிலங்களை ஆக்கிரமிக்கும் இவ்வெட்டுக்கிளிகள் கூட்டம், உலக மக்கள் தொகையின் பத்தில் ஒரு பங்கினருடைய வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடியவையாக இருக்கின்றன.
பாலை குறித்து தொல்காப்பியம்
பசுமையுடைய நால்வகைத் திணை நிலங்கள் திரிந்து வறட்சி மிகுந்த பாலை நிலம் தோன்றுவதாக தொல்காப்பியம் கூறுவது போல, நிலங்களிலுள்ள செடி, கொடி போன்ற பச்சைப் பயிர்களை முற்றிலுமாக அழித்து, தாங்கள் ஆக்கிரமிக்கக் கூடிய நிலப்பகுதியை பயிர்ப் பச்சையில்லாத பாலைவனாமாக மாற்றிவிடுவதால் இவ்வெட்டுக்கிளிக் கூட்டங்கள் பாலைவன வெட்டுக்கிளிகள் என அழைக்கப்படுகின்றன.
சாதாரண வெட்டுக்கிளிகளும், பாலைவன வெட்டுக்கிளிகளும்
நாம் சாதரணமாக பார்க்கின்ற தனித்த வெட்டுக்கிளிகள் இவ்வளவு ஆபத்தானவைகள் கிடையாது. வறண்ட பகுதிகளில் தனித்தனியாக உள்ள வெட்டுக்கிளிகள் பசுமைப் நிலப்பகுதியைத் தேடி இணைகிற பொழுது பெருங்கூட்டமாக உருவெடுக்கின்றன. பெருங்கூட்டமாக இணைகிற வெட்டுக்கிளிகளின் குணநலனை மூர்க்கமாக்குகிற வகையில் அவற்றினுள் வேதிப்பொருள் சுரக்கிறது. அவ்வாறு மூர்க்கக் குணம் பெறும் வெட்டுக்கிளிக் கூட்டங்களே பயிர்ப் பச்சைகளை அழித்து நிலங்களை பாலைவனமாக்கக் கூடியவையாக உள்ளன.
வெட்டுக்கிளிகள் ஏற்படுத்திய பேரிழப்பு
கிழக்கு ஆப்ரிக்கப் பகுதிகளிலிருந்து கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா நாடுகளுக்குப் பரவிய இப்பாலைவன வெட்டுக்கிளிக் கூட்டங்கள் ஈரானின் தென் பகுதிகள் மற்றும் பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதிகளைக் கடந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை வந்தடைந்துள்ளன. எத்தியோப்பியாவில் புகுந்த பாலைவன வெட்டுக்கிளிக் கூட்டங்கள் ஏப்ரல் இரண்டாம் வாரம் வரை 2 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் சாகுபடி செய்யபட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இதனால் உணவு தாணிய உற்பத்தியில் 3,56,000 டன் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது; 1.7 கோடி பேர் உணவுப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். தற்போது கிழக்கு ஆப்ரிக்க மக்கள், பாலைவன வெட்டுக்கிளிகள் ஏற்படுத்திய பயிர் சேதத்தின் விளைவாக கடுமையான உணவுப் பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 2.25 கோடி மக்களுக்கு கொரோனா ஊரடங்கின் காரணமாக ஐ.நாவின் மனிதாபிமானப் பிரிவு உணவுப் பொருட்களை கொண்டு சேர்க்க முடியாத சூழலுள்ளது.
பாலைவன வெட்டுக்கிளிகளால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண் கழகம் சர்வதேச சமூகத்திடம் 15.3 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியைக் கோரியிருக்கிறது. பாலைவன வெட்டுக்கிளிகள் ஏற்படுத்தும் பாதிப்பை சமாளிக்க உலக வங்கி 50 கோடி அமெரிக்க டாலர் கடன் வழங்க முன் வந்துள்ளது. இப்பிரச்சனையின் காரணமாக இவ்வருடத்தில் கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் ஏமனில் மட்டும் 850 கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ள உலக வங்கி, தனது உதவி குறிப்பிட்ட இழப்பின் மதிப்பை 250 கோடி அமெரிக்க டாலராக குறைக்கக்கூடும் என கணக்கிட்டுள்ளது.
இது கடந்த ஆண்டின் இறுதியில் தொடங்கிய பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பின் முதல் சுற்றே ஆகும். கடந்த 21-ம் தேதி பாலைவன வெட்டுக்கிளிகள் பிரச்சினை தொடர்பாக செயல்பட்டு வரும் ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண்மை மையத்தின் மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் (Keith Cressman),” எதிர்வரும் ஜீன் மாதத்தில் இரண்டாவது சுற்று படையெடுக்கத் தொடங்கும்” என தெரிவித்தார். மேலும் அவர் இரண்டாவது சுற்று படையெடுப்பில் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் என்றும், முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது பாலைவன வெட்டுக்கிளிகள் கூடுதல் சேதங்களை ஏற்படுத்துவதாகவும் எச்சரித்திருக்கிறார்.
இந்தியாவில் பாலைவன வெட்டுக்கிளிகள்
கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியப் பகுதிகளில் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம், ராஜஸ்தானின் அண்மைப் பகுதிகளில் 3,60,000 ஹெக்டேர்களிலும், குஜராத் பகுதிகளில் 17,000 ஹெக்டேர்களிலும் பயிரிடப்பட்டிருந்த விளைநிலப் பயிர்களை சேதப்படுத்தின. முன்னர் இந்தியாவில் ஜீன் – ஜீலை மாதங்களில் நிகழக்கூடிய பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் தற்போது ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கியிருக்கிறது.
பாகிஸ்தான் மற்றும் ஈரான் அரசுகளுடன் சேர்ந்து பாலைவன வெட்டுக்கிளிகளின் பிரச்சினையை எதிர்கொள்வதற்கு இந்தியா முயற்சி எடுத்துள்ளது. தற்போது வரை வானூர்திகள் மூலம் நிலங்களில் பூச்சிக் கொல்லிகளை தெளிப்பது மட்டுமே அரசுகள் பாலைவன வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் வழிமுறையாக உள்ளது. நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லிகளின் நச்சு வீரியம் குறைக்கப்பட்டு நீர்த்த நிலையில் (Diluted Condition) நிலங்களின் மீது தெளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில மாதங்களில் அடுத்தடுத்த தலைமுறைகளை எட்டிவிடும் வெட்டுக்கிளிக் கூட்டங்கள் தங்கள் பரிணாம மாற்றத்தில் பூச்சிக்கொல்லிகளை எதிர்கொள்ளும் ஆற்றலை பெற்றுவிடுகின்றன. எனவே பூச்சிக்கொல்லி தெளிப்பு பாலைவன வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவதற்கான நிரந்தரத் தீர்வாக அமைவதில்லை.
தீர்வு என்ன?
சென்னைப் புதுக் கல்லூரியின் உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் துறையின் முன்னாள் துறைத் தலைவரும், சூழலிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநருமான முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்கள்,”ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்ற நிறுவப்பட்ட மாதிரிகளே உடனடித் தீர்வாக இருந்தாலும், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தப் பயன்படும் இயற்கை பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தும் ஆய்வுகளை அரசு ஊக்குவிப்பது அவசியம்” என கூறியுள்ளார்.
பருவநிலை மாற்றம் எனும் முக்கியக் காரணி
சூழலியல் சிதைவே பாலைவன வெட்டுக்கிளிகளின் பாரிய படையெடுப்புக்கும், அவற்றை கட்டுப்படுத்த இயலாமைக்குமான காரணமாக உள்ளது.
இயல்பிற்கு மாறாக கிழக்கு ஆப்ரிக்க மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் ஏற்படும் கடுமையான மழைப் பொழிவுகள், பாலைவன வெட்டுக்கிளிகளின் பெருக்கத்திற்குக் காரணமாக உள்ளன. ஆப்ரிக்கக் கண்டத்தின் கொம்பு முனைப்பகுதியை (Horn of Africa) ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட லூபன் புயல் (Luban Cyclone) மற்றும் அக்டோபர் மாதம் ஏற்பட்ட மேக்குனு புயல் (Mekunu Cyclone), ஆப்ரிக்க பாலைவனப் பகுதிகளில் கடுமையான மழைப் பொழிவை உருவாக்கியது; இப்பகுதியின் வறண்ட நிலங்களில் மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக இப்பகுதிகளில் ஏற்ப்பட்ட பச்சைத் தாவர பெருக்கம் பாலைவன வெட்டுக்கிளிகளின் இனப் பெருக்கத்திற்கு சாதகமாக அமைந்தது.
மூன்று மாதம் வரையிலும் வாழக்கூடிய இப்பாலைவன வெட்டுக்கிளிகள் தம் வாழ்நாளில் மூன்று முறை முட்டையிடுகின்றன. ஒரு தலைமுறைக் கூட்டத்தின் இனப்பெருக்கும் அதனைவிட 20 மடங்கு அதிக எண்ணிக்கையுடைய அடுத்த தலைமுறைக் கூட்டத்தை உருவாக்கும். இவைகளின் தொடர் இனப்பெருக்கத்திற்கு சாதகமாக அமைந்த இரண்டு புயல் மற்றும் மழை பொழிவினால் ஒன்பது மாதங்களில் 8000 மடங்கு பெருகின. பெருகிய வெட்டுக்கிளிகள் கூட்டம் 2018-ம் ஆண்டின் ஜீன் மாதத்திலிருந்து 2019-ன் மார்ச் வரை எத்தியோப்பியா, சோமாலியா, ஏமன் நாடுகளில் பரவத் தொடங்கியது. மீண்டும் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பவன் புயலினால் ஏற்பட்ட மழைப்பொழிவு பாலைவன வெட்டுக்கிளிகளின் பெருக்கத்தை மேலும் அதிகரித்துள்ளது.
உலக வெப்பமயமாதல் இந்தியப் பெருங்கடலில் ஏற்படுத்திய விளைவு
இந்தியப் பெருங்கடலின் மேற்கு முனையை ஒட்டியுள்ள ஆப்ரிக்க பாலைவனப் பகுதிகள் கடந்த 18 மாதங்களில் அடுத்தடுத்த கடுமையான புயல் மழையைச் சந்தித்துள்ளன. இந்தியப் பெருங்கடலினுடைய இருதுருவத்தின் கடற்பரப்புகளில் ஏற்பட்ட வெப்பநிலை மாற்றமே, அதன் மேற்கு துருவப் பகுதியையொட்டி அமைந்திருக்கும் ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் அடுத்தடுத்த கடுமையான மழை பொழிவிற்கு காரணமாக அமைந்துள்ளது.
புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியப் பெருங்கடலினுடைய இரு துருவங்களின் கடற்பரப்புகளில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை மாற்றம் அதன் அண்மைப் பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை இந்தியப் பெருங்கடல் இருதுருவ (The Indian Ocean Dipole) விளைவு என அழைக்கின்றனர். இந்தியப் பெருங்கடலின் இருதுருவ விளைவு என்பது அதன் இருமுனைக் கடற்பரப்புகளுக்கு இடையே நிலவும் வெப்பநிலை மாறுபாடு ஆகும். இந்தியப் பெருங்கடலினுடைய இருதுருவ முனைகளில் ஒரு முனையாக இந்தியப் பெருங்கடலின் மேற்கு பகுதியான அரேபியக் கடற்பரப்பும், மறுமுனையாக கிழக்குப் பகுதியிலுள்ள இந்தோனேசியாவின் தென் கடற்பரப்பும் அமைந்துள்ளன.
இவற்றில் மேற்கு முனைத் துருவக் கடற்பரப்பில் வெப்பநிலை உயர்ந்ததன் காரணமாகவே ஆப்ரிக்க, மத்திய கிழக்குப் பகுதிகளில் கடுமையான தொடர் மழைப்பொழிவுகள் ஏற்படுகிறது. குறிப்பிடக்கூடிய இந்திய பெருங்கடல் இருதுருவ விளைவுதான் அண்மையில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத் தீயிற்கு காரணமாக அமைந்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு குறிப்பிடுகிறது. இந்தியப் பெருங்கடலின் கிழக்குத் துருவ கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை மாற்றம் ஆஸ்திரேலியப் பகுதிகளில் மழைப் பொழிவைக் குறைத்திருக்கிறது.
தமிழ்நாட்டைக் கைப்பற்றுமா?
இதேபோன்று இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்திருக்கும் தமிழ்நாடும் வர்தா, ஒக்கி, கஜா என தொடர் புயல்களை எதிர்கொண்டு வருவதும் கவனத்தில் கொள்ளக்கூடியதாக உள்ளது. கோடைக் கால முடிவில் வடமேற்கு இந்தியப் பகுதிகளில் ஊடுருவியிருக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதலுக்கு எதிர்வரும் தமிழ்நாட்டின் பருவமழைக் காலங்கள் வாய்ப்பாக அமையுமா என்பது சந்தேகமே. இருப்பினும் தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கைப் பணிகளை துரிதப்படுத்துவது அவசியமாகும்.
மனித இனம் கொள்ள வேண்டிய அக்கறை
நைரோபிக்கான பாலைவன வெட்டுக்கிளிகள் பிரச்சினை தொடர்பாக செயல்பட்டு வரும் ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண்மை மையத்தின் அதிகாரி சிரில் பெர்னாண்ட் (Cyril Ferrand), ”தற்போது நாம் இப்பிரச்சனையின் இடைப்பகுதியில் நிற்கிறோம். பாலைவன வெட்டுக்கிளிகளின் பிரச்சனையை முழுவதுமாக எதிர்த்து அழிக்க மேலும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம்” என தெரிவித்துள்ளார்.
சூழலியல் சீர்கேட்டினால் புவி வெப்பமயமானதன் விளைவாக, இயல்பிற்கு மாறான மழைப்பொழிவுகள் பாலைவன வெட்டுக்கிளிகள் பெருக்கத்திற்கு காரணமாக உள்ளன. அதேபோல சூழலியல் பன்மைத் தன்மை அழிக்கப்படுவதால் பாலைவன வெட்டுக்கிளிகளை உணவாக உட்கொள்கிற அதன் மேல்மட்ட உணவுச் சங்கிலியின் கன்னி அழிக்கப்பட்டு, பாலவன வெட்டுக்கிளிகளின் பெருக்கம் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.
விலங்குகளின் வாழிடங்கள் அழிக்கப்பட்டு அவை மனிதர்களை எதிர்கொள்ள நேர்வதால், விலங்குகளின் விளைவினால் மனிதர்களுக்குப் பரவியதாக கருதப்படும் கொரோனா போன்ற பெருந்தொற்றோடு உலகம் போராடிக் கொண்டிருக்கும் அதேவேளையில், சூழலியல் சீர்கேட்டின் மற்றொரு விளைவாக பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளது. முன்னது சாமானிய மக்களை ஊரடங்கிற்குள் தள்ளி வருமானமின்மையின் மூலம் பசியில் தள்ளியிருக்கிறது. பின்னது நெருக்கடி காலத்தில் நிகழக்கூடிய உணவு உற்பத்தியையும் தாக்கி அழிக்கிறது. இவை இருவேறாக இருந்தாலும் சொல்லும் செய்தி ஒன்றுதான், அரசுகள் தான் கேட்பதாக இல்லை.