ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே ஊருக்கு திரும்ப முயன்று வழியிலேயே உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இவர்கள் யார்? இவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?
இவர்களின்றி இங்கே வளர்ச்சி என்று எதுவும் இல்லை. இன்று நாம் அனுபவிக்கும் சேவைகளில் ஏதேனும் ஒன்றிலாவது கண்டிப்பாக இவர்களில் ஒருவரின் உழைப்பும், கண்ணீரும் கலந்திருக்கும். பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக சொந்த மண்ணிலிருந்து அரை அடிமைகளைப் போல இந்த துணைக்கண்டத்தின் இன்னொரு மூலைக்கு அழைத்து வரப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்.
இத்தனை நாட்களாக இந்த நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்திருந்தாலும், கொரோனா பேரிடர் காலத்தின் ஊரடங்கில் கேட்க ஆளில்லாதவர்களாய் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். உணவோ, வருமானமோ இன்றி சொந்த ஊருக்கு சென்றாலாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று ஆயிரம் ஆயிரம் கிலோமீட்டர் நெடும் பயணத்திற்கு கையில் இருந்த மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டனர்.
நாட்கள் கணக்கில் நடந்து நடந்து கால்கள் தேய்ந்தது மட்டுமல்ல, சாலை விபத்துகளில் உயிரை இழக்கவும் செய்கிறார்கள்.
இதில் ஒரு மே 8, 2020 அன்று நடைபெற்ற ஒரு ரயில் விபத்தில் 16 தொழிலாளர்கள் கொல்லப்பட்டது மக்களின் மனசாட்சியை உலுக்கியது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்னா நகரில் உள்ள ஒரு தனியார் இரும்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்த 16 புலம்பெயர் தொழிலாளர்கள், மார்ச் மாதத்திற்கு பிறகு தங்களுக்கு சம்பளம் வழங்கப்படாததாலும், மீண்டும் எப்போது வேலை கிடைக்கும் என்பது தெரியாததாலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தங்கள் ஊருக்கு செல்வதற்காக, ஒளரங்கபாத் ரயில்வே நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். சாலை வழியாக சென்றால் காவல்துறையினரின் தாக்குதலை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதற்காக, ரயில்வே தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றிருக்கிறார்கள். பல மணி நேரங்கள் நடந்த பின்னர், அதற்கு மேல் அசைய இயலாமல் களைப்பாகி அங்கேயே அமர்ந்து, களைப்பில் தூங்கியும் விட்டனர். அப்போது ஒரு சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறிச் சென்றதில் 16 பேரும் உடல்கள் துண்டாகி இறந்து போயினர். இதைப் போல் ஏராளமான விபத்துகள் நாடு முழுதும் நடைபெற்று அதில் இதுவரை 126 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
நாள் வாரியாக புலம் பெயர் தொழிலாளர்கள் பலியாக்கப்பட்ட விபத்துகளின் விவரம்
மே 14, 2020 – மத்தியப் பிரதேசத்தில் 65க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உத்திரப் பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ஒரு ட்ரக்-கில் பயணித்த போது நிகழ்ந்த சாலை விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 55 பேர் படுகாயமடைந்தனர்.
பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்வதற்காக பஞ்சாபிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தனர். உத்திரபிரதேசத்தில் சாலையில் நடந்து கொண்டிருந்த போது பேருந்து ஒன்று அடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திராவில் டிராக்டரில் பயணித்த தொழிலாளர்கள் 9 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 23 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மே 13, 2020 – குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து உத்திரபிரதேசத்தின் கான்பூரை நோக்கி மினி ட்ரக் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களில் 3 பேர் விபத்தில் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
சட்டீஸ்கரில் இருந்து மிதிவண்டியில் உத்திரப் பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு தொழிலாளர் லார் மோதி உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
மே 12, 2020 – ஜார்க்கண்ட் மாநிலத்தை நோக்கி ஒரே ட்ரக்கில் அளவுக்கு அதிகமான தொழிலாளர்கள் ஏறிச் சென்ற வண்டி தெலுங்கானாவின் கம்மாரெட்டி மாவட்டத்தில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
ஹரியானாவில் அம்பாலா காண்ட் பகுதியில் நடந்து ஊருக்கு சென்று கொண்டிருந்த போது, சாலையில் கார் மோதி ஒருவர் உயிரிழந்தார்.
உத்திரப்பிரதேசத்தின் ஃபதேபூர் பகுதியில் கார் சாலை விபத்தில் அம்மா-மக்கள் இருவரும் உயிரிழந்தனர்.
மே 11, 2020 – ஜார்க்கண்டில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ரேபரேலியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
ஹைதராபாத்திலிருந்து உத்திரபிரதேசத்தை நோக்கி நடந்து சென்று, பிற்கு உத்திரப் பிரதேச மாநிலத்தின் காசர்வால் பகுதியில் மணல் லாரி ஒன்றின் மீது ஏறிச் சென்ற போது கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
மே 10, 2020 – டெல்லியிலிருந்து இருசக்கர வாகனத்தில் தங்களுக்கு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த 2 பேர் லாரி மோதி பலியானார்கள்.
மே 9, 2020 – ஹைதராபாத்திலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கும், உத்திரப் பிரதேசத்திற்கும் சென்று கொண்டிருந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.
டெல்லியிலிருந்து பீகாருக்கு 1000 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணித்து சென்ற தொழிலாளர் கார் மோதி உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் தனது குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு சென்றவர் விபத்தில் பலியானார். குழந்தை படுகாயத்துடன் உயிர்பிழைத்தது. மற்றொரு விபத்தில் இன்னொருவர் பலியானார்.
மே 6, 2020 – உத்திரப்பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கருக்கு மிதிவண்டியில் பயணித்த தம்பதி 2 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
மே 5, 2020 – உத்திரப்பிரதேசத்திலிருந்து ஜார்க்கண்டிற்கு 200 கி.மீ நடந்து பின்னர் ஒரு லாரியில் ஏறிச் சென்ற போது, அந்த லாரி ஒரு பாலத்தின் மீது இடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
மே 4, 2020 – உத்திரப் பிரதேசத்திலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த ஆட்டோ விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
மே 2, 2020 – குஜராத்திலிருந்து ஒரிசாவுக்கு திரும்பிய பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
மே 1, 2020 – ஜார்க்கண்டிலிருந்து மிதிவண்டியில் பயணித்து வந்த தம்பதியினர் பின்னர் ஒரு லாரியில் ஏறி பயணித்த போது நடந்த விபத்தில் அத்தம்பதியினர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
ஏப்ரல் 30, 2020 – பீகாரில் ரயில்வே பாதையின் வழியே நடந்து சென்ற இருவர் ரயில் மோதி உயிரிழந்தனர்.
உத்திரப்பிரதேசத்தில் நடந்து சென்றவர்கள் விபத்துக்குள்ளாகி 3 பேர் உயிரிழந்தனர்.
ஏப்ரல் 21, 2020 – சட்டீஸ்கரில் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்ற இருவர் ரயில் மோதி உயிரிழந்தனர்.
ஏப்ரல் 14, 2020 – சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு நடந்து சென்ற போது ரயில் தண்டவாளத்தில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.
ஏப்ரல் 12, 2020 – அகமதாபாத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து சாலையில் உயிரிழந்தார்.
ஏப்ரல் 1, 2020 – தெலுங்கானாவிலிருந்து ஆந்திராவைக் கடக்க முயன்று காவல்துறை தடுப்புகளை வேகமாக கடந்து சென்றதால் இரு சக்கர வாகன விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்தார்.
மார்ச் 31, 2020 – காஷ்மீரில் சுரங்கம் மூடப்பட்டதால் நடந்து சென்ற போது இரவில் குளிரில் ஒருவர் உயிரிழந்தார்.
ஹரியானாவில் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்.
மார்ச் 30, 2020 – டெல்லியிருந்து குவாலியரில் நடந்து வந்து கொண்டிருந்த போது சாலை விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்.
மார்ச் 29, 2020 – உத்திரப் பிரதேசத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
ஜெய்ப்பூரில் அதிகமாக நடந்ததன் காரணமாக உடல்நிலை குன்றி ஒருவர் உயிரிழந்தார்.
ஹரியானாவில் சாலை விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மார்ச் 28, 2020 – உத்தர பிரதேச விபத்தில் ஒருவரும், ஹரியானாவில் நடந்த மற்றுமொரு விபத்தில் 5 பேரும் உயிரிழந்தனர்.
குஜராத்தில் ரயில் தண்டவாளத்தில் நடந்து கொண்டிருந்த தம்பதியினர் இறந்தனர்.
மும்பையில் டீ கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் குஜராத்திற்கு நடந்து திரும்பிக் கொண்டிருந்த போது லாரி மோதி உயிரிழந்தனர்.
மார்ச் 27, 2020 – உத்திரப் பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் மரணித்தார்.
சூரத்திலிருந்து நடந்தே சென்று கொண்டிருந்த ஒரு தொழிலாளி வழியிலேயே இறந்தார்.
தெலுங்கானாவிலிருந்து கர்நாடகாவிலுள்ள சொந்த ஊருக்கு ஒரு சிறிய ட்ரக் வண்டியில் பயணித்த 8 தொழிலாளர்கள் விபத்தில் இறந்தனர்.
மார்ச் 26, 2020 – நொய்டாவிலிருந்து நடந்தே ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளி அடையாளம் தெரியாத வாகனம் அடித்துச் சென்றதில் உயிரிழந்தார்.
ஹரியானாவில் நடந்த மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மார்ச் 24, 2020 – கேரளாவிலிருந்து தேனிக்கு மலைப்பாதை வழியாக திரும்பிய போது, காட்டுத்தீயில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் இன்று வரையில் சாலை வழியாக சென்ற போது நடந்த விபத்துகளில் மட்டும் பலியான 126 புலம் பெயர் தொழிலாளர்களின் இறப்பு குறித்த விவரம் மட்டும்தான் இது.
ஊரடங்கால் பலியான புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர்?
ஆனால் இதுவரையில் ஊரடங்கு காரணமாக பசி, தாகம், நடந்து சென்ற களைப்பு, அலைச்சல் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு, வேலை இல்லாததால் குடும்ப சூழல் காரணமாக தற்கொலை, சில இடங்களில் அடித்துக் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் என பல்வேறு காரணங்களினால் 516 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணித்துள்ளனர்.
இவர்களின் மரணங்கள் நமது தொலைக்காட்சி செய்திகளின் பிரேக்கிங் நியூஸ் பகுதிகளுக்கு வராமலேயே கேட்பாரின்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சரியான முன் திட்டமின்றி, அவர்களுக்கான நிதியினை ஒதுக்காமல், அவர்களுக்கான பயண ஏற்பாட்டினை செய்யாமல் அவர்களை மரணத்திற்கு தள்ளியதற்கு யார் பொறுப்பேற்பது?
புலம் பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பது இந்திய ஒன்றிய அரசின் பட்டியலுக்கு கீழே வருகிறது. இந்த 516 பேரின் குடும்பத்திற்கும் இந்திய அரசு என்ன பதிலை சொல்லப்போகிறது?