பறவை காய்ச்சல்

ஒன்பது மாநிலங்களில் தீவிரமாகிய பறவை காய்ச்சல்; கொத்துக் கொத்தாக சாகும் பறவைகள்

பறவை காய்ச்சல் தீவிர நோய் பரவலானது மஹாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலபிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை பரவியுள்ளது. இவ்வாறு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவிவரும் நிலையில் மேலும் நேற்று நாட்டின் பல்வேறு இடங்களில் பறவைகள் இறப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

டெல்லி

சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநிலமும், டெல்லியும் பறவை காய்ச்சல் நோய்த்தொற்றை உறுதி செய்துள்ளது. டெல்லியின் புகழ்பெற்ற சஞ்சய் ஏரியில் 17-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறப்பை அடுத்து, அம்மாநில அதிகாரிகள் அப்பகுதியை எச்சரிக்கை மண்டலமாக அறிவித்துள்ளனர். 10-க்கும் மேற்பட்ட வாத்துகளின் இறப்பையடுத்து புகழ்பெற்ற நீர்நிலைகளையும் பூங்காக்களையும் டெல்லி மேம்பாட்டு ஆணையம் மூடியுள்ளது. இறந்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டும் வருகிறது. 

இது தவிர கடந்த சில நாட்களில் மட்டும் 91 காகங்கள் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள 14 பூங்காக்களில் இறந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நோய்த் தொற்றின் காரணமாக புதிய பறவைகள் வருகையையும் தடை செய்துள்ளது அம்மாநில அரசு. 

இமாச்சலப் பிரதேசம்

இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரவில் பாங் டாம் வனவிலங்கு சரணாலயத்தில் 215 இடம்பெயர் பறவைகளின் சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை நோய்த்தொற்றால் மட்டும் இறந்த மொத்த பறவைகளின் எண்ணிக்கை 4,235 ஆக இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

தொடர்ந்து நான்காம் நாட்களாக பெரும் எண்ணிக்கையிலான இறந்த கோழிகள் சொலன் மாவட்டத்தின் சண்டிகர் – சிம்லா நெடுச்சாலையில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த இறந்த கோழிகளின் எச்சங்கள் பாதுகாப்பு வழிமுறைகளின் படி புதைக்கப்பட்டும் சில மாதிரிகள் ஜலந்தரில் உள்ள நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பட்டும் வருகிறது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் 400-க்கும் அதிகமான காகங்கள் இறந்துள்ளது. 428 ( 326 – காகம், 18 – மயில், 34 – புறாக்கள் ) புதிய இறப்புகளோடு கடந்த சில நாட்களில் அதிகரித்துள்ள இறப்புகளின் எண்ணிக்கை 2950-யை தொட்டுள்ளது. 

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தில் 13 மாவட்டங்களில் (இந்தோர், மண்டசர், அகர் மால்வா, நீமூச், டிவாஸ், உஜ்ஜைன், காடவா, கார்கோன், குணா, சிவபுரி, ராஜ்கர், ஷாஜப்பூர், விஸ்தார்) இதுவரை பறவை காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டதில் இருந்து 27 மாவட்டங்களில் சுமார் 1,100 காகங்கள் மற்றும் பிற காட்டு பறவைகள் இறந்து கிடந்தன என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். 

கட்டுப்பாடு மற்றும் கட்டுப்படுத்தல் பணி முடிவடைந்து வருவதாகவும், கண்காணிப்பும் அதற்குப் பிறகான பாதுகாப்பு வழிமுறைகளையும் அரசு வழங்கி வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிரா

கடந்த இரண்டு நாட்களில் 128 கோழிகள் உட்பட 180 பறவைகள் இறந்து கிடந்ததை அடுத்து, மகாராஷ்டிராவின் லாத்தூரில் உள்ள அகமத்பூர் பகுதியைச் சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவில் “எச்சரிக்கை மண்டலம்” அறிவிக்கப்பட்டது.  அவுரங்காபாத்திலிருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேந்திருவாடி கிராமத்தைச் சுற்றி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை மண்டலமாக குறிக்கப்பட்டுள்ளது. 

லாத்தூர் மாவட்ட நிர்வாக அறிவிப்பின்படி, எச்சரிக்கை மண்டல விதிமுறைகள் படி எந்த வாகனமும் அந்த இடத்திற்குள் நுழையவோ அல்லது இடத்திலிருந்து வெளியேறவோ கூடாது என்றும் கோழி, பறவைகள், விலங்குகள், தீவனம், உரம் போன்றவற்றை கொண்டு செல்வது தடைசெய்யப்படும் எனவும் அவ்வறிவிப்பில் கூறியுள்ளனர். 

மஹாராஷ்டிராவின் பார்பணி பகுதி நோய்த்தொற்றின் மையப்பகுதியாக இருப்பதால் அங்கு மட்டும் இந்த வார இறுதிக்குள் 800-க்கும் மேற்பட்ட கோழிகள் இறக்க வாய்ப்பிருப்பதாக NDTV ஆய்வு கூறுகிறது. 

குஜராத்

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபாணி கூறுகையில் இதுவரையிலும் பறவை காய்ச்சல் குறித்தான இந்த சூழலை சமாளிக்க அரசு தயார் நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார். கிர் கோமந்த் மாவட்டத்தின் சிக்கில் கிராமத்தில் கடத்த 9 நாட்களில் மட்டும் அங்குள்ள கோழிப் பண்ணைகளில் 18 கோழிகள் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல 30-க்கும் மேற்பட்ட காகங்கள் டாங் மாவட்டத்தின் வாகை பகுதியிலும், பீமசார் மாவட்டத்திலும் மற்றும் வதோரா பகுதியில் சில புறாக்களும் இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உத்திரப்பிரதேசம்

உத்திரப்பிரதேசத்தில் கான்பூர் விலங்கியல் பூங்காவிலிருந்து எடுக்கப்பட்ட பறவையின் மாதிரியில் பறவை காய்ச்சல் உறுதியானதையடுத்து பூங்கா பார்வையாளருக்கு மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 5 நாட்களில் இறந்த 4 கோழிகள் மற்றும் 2 கிளைகளின் மாதிரிகளில் 2 பறவைக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதி தொற்று உறுதிசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள தொற்று உறுதியான பறவைகள் கொல்லப்பட்டும் வருகிறது. 

லக்னோவில், விலங்கியல் தோட்டத்தின் இயக்குனர் நவாப் வாஜித் அலி ஷா ஆர்.கே சிங் கூறுகையில், இங்கு எந்தவொரு பறவைக் காய்ச்சலும் ஏற்படவில்லை எனவும், ஆனாலும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் எனவும், புலம்பெயர்ந்த பறவைகளின் வெளியேற்றத்திலிருந்து இந்த வைரஸ் பரவுகிறது எனவே அது இங்கு வராமல் பார்த்துக் கொள்ள போதிய முயற்சிகளை எடுத்து வருகிறோம் எனவும் அவர் கூறினார்.

அமேதியின் சங்கிரம்பூர் பகுதியில் மர்மமான சூழ்நிலையில் ஆறு காகங்கள் இறந்து கிடந்தன. அதுமட்டுமின்றி சங்கிராம்பூர் காவல் நிலைய பகுதியில் கைட்டி கிராமத்தின் வெவ்வேறு இடங்களில் காகங்கள் இறந்து கிடந்தன என்று மாவட்ட கால்நடை அதிகாரி டாக்டர் எம்.பி. சிங் கூறியுள்ளார்.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலத்தின் பலோடு நகரத்தில் எடுக்கப்பட்ட மாதிரியில் பறவை காய்ச்சல் இல்லை என அம்மாநில கால்நடை மற்றும் பால்வள அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சுற்றுசூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மிருகக்காட்சி சாலையின் அதிகாரி வெளியிட்டுள்ள குறிப்பாணையில்  விலங்குகள் தொற்று மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 2009-ன் கீழ் பறவை காய்ச்சல் நோயானது பட்டியல்படுத்தப்பட்ட நோயாகும். எனவே அனைத்து மிருகக்காட்சி சாலை நிர்வாகங்களும் தனது தினசரி அறிக்கைகளை மத்திய மிருககாட்சிசாலை அதிகாரிக்கு அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *