டிராக்டர் பேரணி விவசாயிகள்

நீதிமன்றம் அமைத்த குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் விவசாயிகள் போராட்டம் – இந்த வார அப்டேட்ஸ்

கடந்த 48 நாட்களாக ஒன்றிய அரசு அமல்படுத்தி மூன்று விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஒரு குழு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மேலும் மூன்று சட்டங்களையும் தடை செய்வதற்கான அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்து இருந்த சூழலில், இன்று உச்சநீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவை அமைத்ததோடு, தற்காலிமாக 3 மூன்று விவசாய சட்டத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு

இந்த குழுவில் பூபிந்தர் சிங் மான், விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி, தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை அகாடமியின் முன்னாள் இயக்குநர் டாக்டர் பிரமோத் குமார் ஜோஷி  மற்றும் ஷெட்கரி சங்கத்தை சேர்ந்த அனில் கன்வத் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து உள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பிற்கு தடை விதிக்கக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம்

மேலும் குடியரசு தினத்தன்று திட்டமிடப்பட்டு இருந்த இருந்த டிராக்டர் / டிராலி / வாகன அணிவகுப்புக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க தில்லி காவல்துறை மூலம் உச்சநீதிமன்றம் அறிவிக்கை செய்துள்ளதுள்ளதாகவும் ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

அரசு தரப்பில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாகவும், “தற்போது வரை இந்த சட்டங்கள் நன்மை பயக்கும் என என்று ஒரு மனு கூட எங்கள் முன் வரவில்லை என உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்து உள்ளதாக” ‘நியூஸ்18’ செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் தொடர்ச்சியாக விவசாய சட்டங்களை ஆதரிப்பவர்கள்

“உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல, ஏனெனில் அவர்கள் விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவானவை என்று தொடர்ச்சியாக எழுதி வருபவர்கள். எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடருவோம்” என்று விவசாய சங்க தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் அவர் “எங்கள் போராட்டத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே அரசாங்கம் இது போன்ற குழுக்களை நீதிமன்றங்களின் பின்னால் இருந்து அமைக்கிறது” எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற நிலைக்குழு சந்திப்பிலிருந்து வெளியேறிய எம்.பி-க்கள்

கடந்த திங்களன்று பாராளுமன்ற நிலைக் குழு சந்திப்பில் விவசாயிகளின் போராட்டம் குறித்தும் விவசாய சட்டம் தொடர்பாகவும் பேச அனுமதி வழங்கததைத் தொடர்ந்து, அந்த கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பார்த்தாப் சிங் பஜ்வா மற்றும் சாயா வர்மா, மற்றும் அகாலி தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சா ஆகியோர் வெளியேறிதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

60-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் மரணம் வீண்போகாது

“விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் மரணம் வீணாகாது, நாங்கள் தொடர்ந்து எங்கள் உரிமைகளுக்காக போராடுவோம். எந்தவொரு முடிவையும் தராத பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து விவசாயிகளின் பொறுமையை அரசாங்கம் சோதித்து வருகிறது” என விவசாயி ஜாஸ் கிரண் ‘ANI’ செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் விவசாயிகளின் போராட்ட செய்திகளைப் பார்த்து தனது அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்து வந்த சுக்விந்தர் சிங், தற்போது டெல்லி எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர்  தெரிவித்தாவது “எனது மூன்று நாட்கள் பயணத்தின்போது, ​​நிறைய விவசாயிகளையும், அவர்களது குடும்பத்தினரையும், வயல்களில் பணிபுரிந்தவர்களையும் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் இந்த வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்” என ‘ தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் வாழ்வில் 2 நாட்களை விவசாயிகளுக்காக பங்களியுங்கள் என கோரிக்கை

“காலிஸ்தானி மற்றும் பயங்கரவாதி என்று குறிப்பிட்டு எங்கள் போராட்டத்தை தவறான பிம்பத்தில் காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அரசாங்கம் அதில் வெற்றி பெற முடியவில்லை. வரும் ஜனவரி 26-ம் தேதி ராஜ்பாத்தில் அணிவகுப்பு நடத்த அணியமாக உள்ளோம். எல்லோரும் திரண்டு வந்து போராட்டத்தில் பங்கு கொள்ளவும் உங்கள் வாழ்க்கையில் இரண்டு நாட்களை விவசாயிகளுக்காக பங்களிக்க நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று விவசாயி லக்விந்தர் பால் தெரிவித்தாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடி தீர்வு கொண்டுவர பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சி எம்.பி. தன்மன்ஜீத் சிங் தேசி, “அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு எதிராக நீர் பீரங்கி, கண்ணீர்ப்புகை மற்றும் மிருகத்தனமான படைகளை பயன்படுத்தும் காட்சிகள்  இங்கிலாந்தில் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விவசாயிகள் நடத்திய ஒத்திகைப் பேரணி

கடந்த வியாழக்கிழமை காலை, ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் மற்றும் ஹரியானாவில் ரேவாசன்,அதிவேக கிழக்கு மற்றும்  மேற்கு நெடுஞ்சாலைகளில் பேரணி நடைபெற்றது. 

வரும் ஜனவரி 26 அன்று இதேபோன்று மாபெரும் பேரணி அணிவகுப்பு நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்கான ஒத்திகையாக வியாழக்கிழமை பேரணி நடைபெற்றதாகவும் விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்தன. மேலும் வரும் 26-ம் தேதி ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேசிய தலைநகருக்கு பேரணியாக செல்ல இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்தனர்.

நடந்து முடிந்த எட்டு சுற்று பேச்சுவார்த்தைகள்

தற்போது வரை ஒன்றிய அரசு மற்றும் விவசாய சங்கங்களுக்கிடையில் எட்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அதில் வைக்கோல்களை எரிப்பது தண்டனைக்குரிய குற்றமில்லை மற்றும் மின்சார மானியங்களைப் பாதுகாப்பது குறித்து மட்டுமே தற்போது வரை ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளது. இருப்பினும், விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிரந்தரமாக்கும் சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகியவற்றுக்கு தீர்வுக்கான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ளதாக ‘ANI’ செய்தி வெளியிட்டு உள்ளது.

விவசாயிகள் சங்கத் தலைவருக்கு எதிராக வழக்கு பதிந்த ஆர்.எஸ்.எஸ்

நாக்பூரில் செயல்பட்டு வரும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் (RSS) தலைமை விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒரு விவசாய சங்க தலைவர் ஒருவருக்கு எதிராக மத்திய பிரதேச மாநிலம் பெத்துல் மாவட்ட காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவோம்; சட்டங்களை நீக்கவே கோருவோம்

“அரசாங்கம் திருத்தங்களைப் பற்றி மட்டுமே பேச விரும்புகிறது. தனித்தனியாக விவாதங்களை நடத்த நாங்கள் விரும்பவில்லை, வேளாண் சட்டங்களை முற்றிலுமாக ரத்து செய்யவே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் மீண்டும் 15-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருவோம்” என்று பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் ‘ANI’ செய்தியில் தெரிவித்தார்.

விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவர் “வேளாண்மை தொடர்பான அதிகாரம் அரசியலமைப்பில் மாநில அதிகார வரம்பிற்குள் மட்டுமே இருப்பதால் விவசாயம் தொடர்பான விஷயத்தில் ஒன்றிய அரசு தலையிடக்கூடாது” என்று தெரிவித்தார். 

“பல நாட்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் அரசாங்கம் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை என்று தெரிகிறது” எனவும் அவர் தெரிவித்தாக ‘ANI’ செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எந்தவொரு குழுவின் நடவடிக்கைகளிலும் பங்கேற்க போவதில்லை என்று திங்கள்கிழமை இரவே விவசாய தலைவர்கள் முடிவெடுத்துள்ளதால், விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் குழு செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என பல்பீர் சிங் தெரிவித்தார். “நாங்கள் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் முன் ஆஜராக மாட்டோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் ”என்று விவசாய சங்க தலைவர் பல்பீர் சிங் ராஜேவால்  ‘ தி இந்து ‘ செய்தியில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *