1) சிரியா போர் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை
கடந்த ஆண்டில் (2020) சிரியாவில் போரினால் 6,800 பேர் இறந்திருக்கிறார்கள். 2019-ம் ஆண்டை ஒப்பிடும் பொழுது இந்த எண்ணிக்கை குறைவானதாகும்; மேலும், போர் தொடங்கிய காலத்திலிருந்து, ஒராண்டில் போரினால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இதுவே குறைவானதாகும். 2011-லிருந்து நடக்கும் போரில் இதுவரை 3,87,000 பேர் இறந்திருக்கிறார்கள்.
2) கொரோனா பரவலைத் தடுக்க ஜப்பானில் அவசரநிலையை பிரகடனப்படுத்த கோரிக்கை
கடந்த 2-ம் தேதி, மூன்றாம் அலை கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அவசர நிலையைப் பிரகடனப்படுத்துமாறு டோக்கியோ கவர்னர் ஜப்பான் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். டோக்கியோவுக்கு அருகாமையிலுள்ள மூன்று மாகாணங்களின் கவர்னர்களும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவதற்கான கோரிக்கை விடுத்துள்ளனர்.
3) கத்தார் மீதான தடையை நீக்க முடிவெடுத்துள்ள அரபு நாடுகள்
கத்தார் மீதான தடைடையை அரபு நாடுகள் நீக்கவுள்ளன. கடந்த 5-ம் தேதி சவுதி அரேபியாவில் நடந்த அரபு நாடுகளின் கூட்டத்தில், சவுதி அரேபியா, யூனைட்டட் அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் மீது விதித்திருந்த தடையை விலக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு, ஈரான் மீது அரசியல் அழுத்தம் கொடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க சார் அரபு நாடுகளை கத்தார் மீது தடை விதிக்க வைத்தார். தற்போது டிரம்பின் பதவி காலம் முடிவடையும் நிலையில், அதற்கேற்றார் போல் அரபு நாடுகளின் புவிசார் அரசியல் சூழலும் மாறி வருகிறது.
4) டிரம்ப்பை கைது செய்ய ஈராக்கில் பதியப்பட்ட கைது ஆணை
அதிபர் பதவிக் காலம் முடியப் போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கைது செய்ய ஈராக் நீதியமைப்பு கைது ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த 7-ம் தேதி வியாழக் கிழமை பாக்தாத் நீதிமன்றத்தால், ஈரான் ராணுவ ஜெனரலும், உயர்மட்டத் தலைவர்களில் ஒருவருமான சுலைமானி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், டிரம்ப்பிற்கு எதிரான கைது ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில், ஆளில்லா விமான குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டார். இப்படுகொலையின் பின்னனியில் அமெரிக்கா இருந்தது. இதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்காவிடையே போர் மூளும் சூழல் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
5) அணு ஆயுதப் பயன்பாட்டிற்கான யுரேனியம் செறிவூட்டலை மீளத் தொடங்கிய ஈரான்
அணு ஆயுதப் பயன்பாட்டிற்காக ஈரான், யுரேனியம் செறிவூட்டலை மீளத் தொடங்கியிருக்கிறது. 4.5 சதவீதத்திலிருந்து, 20 சதவீதம் தூய யுரேனியத்திற்கான செறிவூட்டல் அளவை அதிகப்படுத்தியிருக்கிறது. 2015-ம் ஆண்டு, அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்க – ஈரான் இடையேயான ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவுடைய யுரேனிய செறிவூட்டலில் ஈரான் ஈடுப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டின் ஒப்பந்தத்தை 2018-ம் ஆண்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முறித்துக் கொண்டது. தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. தொடர்ந்து, அமெரிக்கா- ஈரான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றச் சூழலையடுத்து, ஈரான் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
முன்னதாக ஜனவரி 4-ம் தேதி தென்கொரியாவின் எண்ணெய்க் கப்பலை, ஈரான் தடுத்து நிறுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பெர்சிய வளைகுடாவின் சூழலியல் நிலைத்தன்மையைக் குலைப்பதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
6) ஜாவா கடலில் விழுந்த இந்தோனேசிய விமானம்
ஜனவரி 9-ம் தேதி இந்தோனேசியாவிலிருந்து 62 பேருடன் புறப்பட்ட ஸ்ரீ விஜ்யா போயிங் விமானம் கடலில் வீழ்ந்தது. குறிப்பிட்ட விமானம், ஜகர்த்தா விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சில மணித்துளிகளில், ஜாவா கடலில் வீழ்ந்தது. விமானத்தின் கறுப்பு பெட்டியைத் தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.
7) அமெரிக்க செனட் சபையில் ட்ரம்ப் ஆதரவாளர்களின் வன்முறை
அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள், கேபிடல் என்றழைக்கக்கூடிய அமெரிக்காவின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபைக்குள் புகுந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த வன்முறை வெறியாட்டம் காரனமாக நான்கு பேர் இறந்துள்ளனர். தேர்தலில் நடந்த முறைகேடுகளின் மூலனே ஜோ பிடன் வெற்றிப் பெற்றிருக்கிறார், அவரது வெற்றியை செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை அங்கீகரிக்கக் கூடாது என்று டிரம்பின் ஆதரவாளர்கள் இவ்வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.
இதனை ஆதரித்து அதிபர் டிரம்ப் ட்வீட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக ட்வீட்டர் நிர்வாகம் டிரப்பின் ட்வீட்டர் கணக்கை ஒரு நாள் தடை செய்துள்ளது; பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிரந்தரமாக தடை செய்துள்ளது.