கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை எலிகளா நாம்? பரிசோதனை முடியும் முன்னே ஏன் அவசரம்?

ஜீவா நடிப்பில் வெளிவந்த ஈ படத்தில் உலக நாடுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மருத்துவ மாபியாக்கள் பற்றி விரிவாக பேசியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பல லட்சம் கோடிகள் புழங்கும் இந்த மருத்துவ உலகில் மருந்து கம்பெனிகளே நோய்க் கிருமிகளை உருவாக்கி அதற்கான தடுப்பு மருந்துகளையும் சந்தைக்கு கொண்டுவருவார்கள், அதற்க்கு முன்னதாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஏழை மக்களிடம் பிரயோகித்து அதன் திறனை அறிந்துகொள்வார்கள் என்பது குறித்த உள் அரசியலை அத்திரைப்படம் கேள்வி எழுப்பியது.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்

சரி விசயத்திற்கு வருவோம். கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் 16ம் தேதி முதல் நாடு முழுவதும் முதல்கட்டமாக 3 கோடி பேருக்கு போடப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், கோவிஷீல்டு – இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. கோவேக்சின் ஐதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து தயாரித்துள்ளது.

சேப்டி புரொபைல் எனப்படும் 3 கட்ட சோதனைகளை முடித்த பிறகே தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், மூன்றாம்கட்ட பரிசோதனைகள் முழுமையாக முடியாத நிலையில், 2 கட்ட சோதனைகளிலேயே தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவரச அவசரமாக கொண்டுவர முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. மூன்றாம் கட்ட சோதனையை முடித்துவிட்டதாக சொல்லும் அந்நிறுவனம் அச்சோதனையின் முடிவுகளை இன்னும் வெளியிடவே இல்லை.

ஏற்கனவே முடிந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகளில் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்று சொல்லப்பட்டாலும் கூட, அந்த முடிவுகள் கூட இன்னும் முழுமையாக வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

மூன்று கட்ட சோதனைகள் என்ன?

Phase 1 எனும் முதல்கட்ட சோதனையானது மிகக் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலான ஆட்களிடம் நடத்தப்படும். தடுப்பூசி அவர்களுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துகிறதா, பாதுகாப்பாக இருக்கிறதா என்பதே இந்த கட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Phase 2 எனும் இரண்டாம் கட்ட சோதனையில் அதிக நபர்களுக்கு அளித்து பரிசோதிக்கப்படும். இப்பரிசோதனையில்தான் தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத் தன்மை குறித்து சோதிக்கப்படும்.

Phase 3 எனும் மூன்றாம் கட்ட சோதனை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் மனிதர்கள் மீது சோதிக்கப்படும். தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் இந்த சோதனையின் போதுதான் உறுதி செய்யப்படும்.

எழுந்துள்ள எதிர்ப்புகள்

கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையின் 3-ம் கட்ட சோதனையின் முடிவுகளை வெளியிடாமல் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அகில இந்திய மக்கள் அறிவியல் வலையமைப்பு (All India Peoples science Network) கடிதம் எழுதியிருக்கிறது. 

3-ம் கட்ட சோதனையின் முடிவுகளை வெளியிடாமால் கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்தும் முடிவிற்கு சட்டீஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ்.சிங் டியோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

போபாலில் கோவாக்சின் 3-ம் கட்ட பரிசோதனையில் பங்கேற்ற 42 வயது நபர் அறிய முடியாத காரணங்களால் டிசம்பர் 21, 2020 அன்று இறப்பை சந்தித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் கோவாக்சின் 3-ம் கட்ட சோதனையின் ஒரு அங்கமாக தடுப்பூசி போடப்பட்ட ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றுக்கு உள்ளானதும் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.

தடுப்பூசியை தேசபக்தி கருவியாக்குகிறதா பாஜக?

ஏற்கனவே கடந்த வருடம் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் கூட தொடங்கப்படாத நிலையில் ஆகஸ்ட் 15  சுதந்திர தினத்தன்று தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்து பின் கைவிட்டது மத்திய அரசு, பிறகு அக்டோபர் மாதம் பீகார் தேர்தலின் போது கொரோனா தடுப்பூசிக்கான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியது. 

இப்போது குடியரசுதின கொண்டாட்டங்களுக்கு முன்பாக பரிசோதனை கட்டங்கள் முழுமையாக முடியாத நிலையில் அவசர அவசரமாக கொரனோ தடுப்பூசிக்கான அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். தொடர்ந்து தேர்தல் நேர யுக்திகளாகவும் மோடியின் விளம்பரங்களுக்காகவும் கோடிக்கணக்கான மக்களோடு விளையாடுகிறது மத்திய பாஜக அரசு.

ஒருவகையில் மூன்றாம் கட்ட பரிசோதனைகளையே கோடிக்கணக்கான மக்களின் மீது செய்ய துணிந்திருப்பதற்கு சமமானதாகவே இந்நடவடிக்கை பலராலும் விமர்சிக்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்த நாடுமுழுவதும் உள்ள 5 வயதிற்குட்பட்ட 75 லட்சம் குழந்தைகளுக்கான போலியோ சொட்டுமருந்தையும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

கொரோனாவை எதிர்கொள்வதை அரசியல் லாபமாக பார்க்காமல், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, முழுமையான ஆய்வுகளுக்குப் பிற்கே தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பது மக்கள் மீது அக்கறை கொண்ட மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *