துப்புரவுப் பணியாளர்கள்

தலைகுனிய வேண்டியவர்கள் நாம்; 2020-21இல் சென்னையில் மட்டும் 13 துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் மரணித்திருக்கிறார்கள்

2020-21 காலப்பகுதியில் சென்னையில் மட்டும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 13 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக Safai Karamchari Andolan அமைப்பு தெரிவித்துள்ளது. Safai Karamchari Andolan என்பது கையால் மலம் அள்ளுதல் மற்றும் கையால் கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட சமூக அவலங்களை ஒழிப்பதற்காக இயங்கும் அமைப்பாகும். 

ஒரு மரணம் கூட இல்லை என்று மறுக்கும் மாநகராட்சி

பாதாள சாக்கடைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், செப்டிக் டேங்குகள் போன்றவற்றில் இக்காலகட்டத்தில் இறந்த 13 தொழிலாளர்களில் அனைவரும் 27 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். ஆனால் சென்னை மாநகராட்சி கையால் கழிவுநீர் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் நிகழ்வுகளே சென்னையில் எங்கும் இல்லை என்று மறுத்து வருகிறது. சரியான விழிப்புணர்வு இல்லாத கிராமப்புற பகுதிகளில் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறுகிறது.

ஆனால் இப்படிப்பட்ட மரணங்கள் தொடர் கதையாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இத்தேர்தலில் திமுக உள்ளிட்ட சில எதிர்கட்சிகள் கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிப்போம் என்று தேர்தல் வாக்குறுதியைக் கொடுத்திருப்பது சிறு ஆறுதலான விடயமாக இருக்கிறது. 

2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தடை சட்டம்

கையால் மலம் அள்ளுவதை தடை செய்து ஒழித்திட வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் விளைவாக 2013-ம் ஆண்டு அதற்கான கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே 1993-ம் ஆண்டு நடைமுறையில் இருந்த சட்டத்தில் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளித்து கையால் மலம் அள்ளும் தொழிலை முற்றிலும் ஒழிப்பதற்கான விடயங்களில் போதாமை இருந்ததன் காரணமாகவே இப்புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. 

2013-ம் ஆண்டின் சட்டமான கையால் மலம் அள்ளும் பணியில் தொழிலாளர்களை பணியமர்த்துவதைத் தடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சட்டம் (Prohibition of Employment of Manual Scavengers and their Rehabilitation Act) நடைமுறைக்கு வந்து 8 ஆண்டுகள் ஆன பிறகும் இத்தகைய மரணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சட்டத்தின் பிரிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததே இத்தகைய மரணங்களுக்கான முக்கிய காரணமாக இருக்கிறது. 

2013-ம் ஆண்டின் சட்டம் சொல்வது என்ன?

கையால் மலம் அள்ளுவது ஒரு ‘மனிதத்தன்மையற்ற’ செயல் என்பதை 2013 ஆண்டின் சட்டம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் மலம் அள்ளும் பணியில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபடுவது தெரியவந்தால், அவர்களின் குடும்பத்திற்கு 40,000 ரூபாய் நிதி உதவியை உடனடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என சொல்கிறது. இதன்மூலம் அவர்களின் குடும்ப வாழ்வை மேம்படுத்தும் தொகையாக அதை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும். அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்கு உதவித்தொகை அளிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.

அவர்கள் மாற்றுத் தொழில் மேற்கொள்வதற்கான நிதி உதவியும், தொழில் பயிற்சியும், மாற்று வேலைவாய்ப்புக்கான அனைத்து உதவிகளும் செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறது அச்சட்டம்.

அதேபோல் இந்த பணியில் ஈடுபட்டு யாராவது விபத்தில் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படவேண்டும், அவரின் வாரிசுதாரருக்கு உரிய வேலைவாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறது.

பெரும்பாலும் துப்புரவுப் பணியாளர்களின் மரணங்களில் 2013-ம் ஆண்டின் சட்டத்தினைப் பயன்படுத்தாமல், விபத்து என்று வழக்கினைப் பதிந்து விடுவதால் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைப்பதில்லை. 

300 ரூபாய்க்கு உயிரை அடமானம் வைக்கும் நிலை

கையால் மலம் அள்ளுதல் மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் இறங்கும் பணிகளைச் செய்பவர்கள் பெரும்பாலும் பட்டியலின SC மற்றும் ST பிரிவினைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரைதான் சம்பளமாக வழங்கப்படுகிறது. 300 ரூபாய் சம்பளத்திற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் நிலையில் தான் அவர்களின் வாழ்வாதாரம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் 40 மரணங்கள்

2020-21 காலப்பகுதியில் தமிழ்நாடு முழுவதும் கழிவுநீர் தொட்டிகளில் 40 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக safai kamramchari Andolan டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் தெரிவித்துள்ளது. இவை மரணம் நிகழ்ந்த சம்பவங்கள் மட்டுமே. இதைத் தவிர்த்து பிற விபத்துகளுக்கும், உடல்நலக் கோளாறுகளுக்கும் ஆளானோர் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. சென்னையில் மட்டும் 700-க்கு மேற்பட்டோரும், தமிழ்நாடு முழுதும் 3,000-க்கும் மேற்பட்டோரும் பல்வேறு உடலியல் சிக்கல்களுக்கும், விபத்துகளுக்கும் உள்ளாகியிருப்பதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது. 

பெயர் மாற்றம் போதாது

துப்புரவுப் பணியாளர்களின் காலில் விழுந்து வணங்கி புகைப்படங்கள் எடுப்பதோ, அவர்களை கடவுளுக்கு நிகரானவர்கள் என்று அழைப்பதோ, ஹெலிகாப்டரில் வந்து மலர்கள் தூவுவதோ அவர்களின் நிலையை ஒருபோதும் மாற்றப்போவதில்லை. அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான, மாண்புடன் வாழக்கூடிய வாழ்நிலையை உருவாக்கித் தருவதே ஒரு அரசின் முக்கிய கடமையாகும். துப்புரவுப் பணியாளர்களின் பெயரை தூய்மை பணியாளர்கள் என்று மட்டும் மாற்றிவிட்டு, அவர்களின் வாழ்வில் ஒளியை ஏற்றிவைத்ததைப் போல பேசுவதால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. 

தரவுகள் மறைக்கப்படக் கூடாது

கழிவுநீர் தொட்டிகளில் நிகழும் மரணங்கள், செப்டிக் டேங்க் மரணங்கள், பாதாள சாக்கடை மரணங்கள் போன்றவை 2013-ம் ஆண்டின் சட்டத்தின்படி பதியப்பட வேண்டும். கையால் மலம் பணியாளர்களே இல்லை என்று காட்டிக் கொள்வதற்காக தரவுகளை மறைக்கும் வேலை நடக்கும் வரை இந்த மரணங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். தரவுகளை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டு தடுப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கையை நோக்கி அரசு நகர்வதே இப்போதைய முக்கியத் தேவையாக இருக்கிறது. 

இதையும் படிக்க: ஆகஸ்ட் 2021-க்குள் கையால் மலம் அள்ளுதலை ஒழிப்போம் என்கிறது ஒன்றிய அரசு! புதிய திருத்தம் என்ன சொல்கிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *