எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாட்டின் கனிம வளங்களை மையப்படுத்திய சுரங்கத் துறையில் தனியார் முதலீட்டினை அறிமுகப்படுத்தும் மசோதாவினை ராஜ்யசபாவில் நிறைவேற்றியிருக்கிறது பாஜக அரசு. இந்த மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2021 (Mines and Minerals (Development and Regulation) Amendment Bill, 2021)
இந்த மசோதாவினை அனுமதிப்பதனால், நாட்டில் விவசாய சட்டங்களால் ஏற்பட்ட சிக்கலைப் போல ஏற்படக்கூடும் என்று எதிர்கட்சிகள் எச்சரித்தன. விவசாய சட்டங்களையும் ராஜ்யசபாவில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவினை பாராளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் அதை நிராகரித்த நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி, இந்த மசோதாவினால் சுரங்கத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், மேலும் நாட்டின் GDP-ல் சுரங்கத் துறையின் பங்கு உயரும் என்றும் தெரிவித்தார்.
தற்போது நாட்டின் GDP-ல் சுரங்கத் துறையின் பங்களிப்பானது 1.75% சதவீதமாக இருப்பதாகவும், அதனை 2.5% சதவீதமாக உயர்த்துவதே நோக்கம் என்று தெரிவித்தார்.
தேசிய கனிமவள ஆராய்ச்சி அறக்கட்டளை
மேலும் இந்த மசோதாவின் மூலமாக கனிமங்களை எடுப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் தேசிய கனிமவள ஆராய்ச்சி அறக்கட்டளை (National Mineral Exploration Trust) என்ற சுதந்திர அதிகாரம் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது.
அரசால் கனிம வளங்களை எடுக்க முடியவில்லையா?
இது குறித்து பேசிய அமைச்சர் ஜோஷி, ”நம் நாட்டில் நிலக்கரி, தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த கனிமங்கள் இருக்கின்றன. ஆனால் நம்மால் அவற்றை வெளியே கொண்டுவர முடியவில்லை. அதனால்தான் நாம் தனியார் நிறுவனங்களை உள்ளே கொண்டு வருகிறோம்.” என்று பேசினார்.
மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்பும் கோரிக்கை நிராகரிப்பு
எதிர்கட்சி தரப்பிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் பேசியபோது, ”11 கட்சிகள் இந்த மசோதா தேர்வு குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால் அனைவரின் இந்த ஒருமித்த கருத்தை அரசாங்கம் ஏற்பதாகவோ, மதிப்பதாகவோ இல்லை.” என்றார்.
எதிர்கட்சிகளின் எதிர்ப்பு
- காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், “விவசாய சட்டங்கள் விவகாரத்தில் நடந்து கொண்டதைப் போலவே இந்த மசோதா விடயத்திலும் நடந்து கொள்ளாதீர்கள்” என்றார்.
- தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.பி.கேசவ ராவும், விவசாய சட்டங்களில் செய்த அதே தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று எச்சரித்தார்.
- YSR காங்கிரஸ் கட்சியின் தலைவர் விஜயசாய்ரெட்டி, இந்த மசோதா பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிரான மசோதா என்றும், இது இந்த வடிவத்தில் நிறைவேற்றப்படக் கூடாது என்றும் தெரிவித்தார்.
மாநிலங்கள் செயல்படவில்லை என்று கூறிய ஒன்றிய அமைச்சர்
மசோதாவை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு, ஏற்கனவே அரசாங்கம் பல்வேறுபட்ட கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்திவிட்டதாகவும், அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மசோதா சுற்றுக்கு விடப்பட்டு, 10500 கருத்துகள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். ”உலகத்தின் நான்காவது பெரிய உற்பத்தியாளராக இருந்தாலும், இந்தியா நிலக்கரியினை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. A 143 சுரங்கங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டிலிருந்து அந்த சுரங்கங்கள் மாநிலங்களிடம் உள்ளன. அவை ஏலம் விடப்படவும் இல்லை. யாருக்கும் ஒதுக்கப்படவும் இல்லை. இதனால் இழப்பு யாருக்கு?” என்றார்.
மாநில உரிமை பறிக்கப்படுகிறது
அதிமுகவின் பாராளுமன்ற உறுப்பினரான தம்பிதுரை, இந்த மசோதா சுரங்கங்களை நேரடியாக மத்திய அரசு ஏலம் விடுவதற்கு அனுமதிக்கிறது. இதன் காரணமாக மாநிலங்களின் உரிமை பறிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆனாலும் எல்லா எதிர்ப்பையும் மீறி சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2021 -னை ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கிறது.
இதன் மூலம் மிக உயர்ந்த கனிம வளங்களின் மீது மாநில அரசுகள் கொண்டிருந்த உரிமையை இழக்கப் போகின்றன என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
மேலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிலக்கரி சுரங்கத் துறையில் மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள அதானி குழுமத்தின் நிறுவனங்கள் இதன் மூலம் மிகப் பெரும் பணத்தினை சம்பாதிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. மோடி அரசு பதவியேற்றதிலிருந்து எல்லாவற்றையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொண்டிருப்பதாக கடுமையான விமர்சனம் இருக்கும் சூழலில், தற்போது நாட்டின் கனிம வளங்களையும், சுரங்கத் துறையினையும் கார்ப்பரேட்டுகளுக்கு அளித்திடும் மசோதாவினை நிறைவேற்றியிருக்கிறது.