நவம்பர் 19 உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் கருத்தரங்கில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகஸ்ட் 2021-ம் ஆண்டிற்குள் கையால் மலம் அள்ளும் பணியை நாடு முழுவதும் நிறுத்துவதே எங்களின் நோக்கம் என்று அறிவித்துள்ளார்.
இனி, ”பொது நலன் கருதி முற்றிலும் தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர்த்து யரோருவரும் சாக்கடை அல்லது மலக்குழிகளுக்குள் நுழையத் தேவையிருக்காது” என அவர் கூறியுள்ளார்.
இதுமட்டுமன்றி இத்திட்டம் செயல்படுவதை உறுதி செய்ய மே 2021-ல் எல்லா நகரங்களிலும் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் முடிவுகள் சுதந்திர தினத்தில் அறிவிக்கப்படும் என்றும், வெற்றிகரமாக செயல்படுத்திய நகரங்களுக்கு பரிசாக பெரும் நிதித்தொகை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
புதிய சட்டம் பழைய நடைமுறை
2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை கடுமையாக்கும் விதமாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு “கையால் மலம் அள்ளும் வேலைகளுக்கு தடை மற்றும் மறுவாழ்வு (திருத்த) மசோதா 2020”-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இழப்பீடு வழங்குவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த புதிய மசோதா துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்த முக்கிய சிக்கலான சாதி பிரச்சினை குறித்து முற்றிலும் மௌனம் காத்துள்ளது. கையால் மலம் அள்ளுதளை தடுத்து இயந்திரமயமாக்குவது முக்கியமான விடயமாக இருந்தாலும், துப்புரவுத் தொழில் என்பது சாதி சார்ந்த தொழிலாகவே தொடர்வதை நீக்கும் விவாதம் எதுவும் இச்சட்டத்தில் இடம்பெறாதது எப்படி முழுமையான அணுகுமுறையாக இருக்கும்?
வரலாற்றில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சாதி ரீதியாக நிகழ்த்தப்பட்ட அநீதிகளை துடைக்கும் விதமாகவே இச்சட்டத்தின் பிரிவுகள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
கையால் மலம் அள்ளுவது ஒரு ‘மனிதத்தன்மையற்ற’ செயல் என்பதை 2013 ஆண்டின் சட்டம் தெரிவித்துள்ளது. மேலும் இது சுகாதாரமற்ற கழிவறைகள் காரணமாகவும், அக்கிரமமான சாதி அமைப்பின் காரணமாகவும் தொடர்ந்து நடைபெறுவதை ஒப்புக் கொண்ட போதிலும், புதிய மசோதாவில் சாதியத் தொழிலாக தொடர்வதை சரி செய்வதற்கான வழிமுறைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
மேலும் ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களை துறை ரீதியாக வகைப்படுத்தவும் இச்சட்டம் தவறியுள்ளது. கையால் மலம் அள்ளுபவர்கள் குறித்த வரையறையானது தெளிவான வகைப்படுத்தல்களுடன் உருவாக்கப்பட வேண்டும்.
நகர்ப்புறங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளில் தேவையான வசதிகள் இல்லாததால், துப்புரவுத் தொழிலாளர்கள் மனிதக் கழிவுகளை கைகளாலேயே துடைத்து அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் வீசுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் உயிரிழந்தவர்கள்
2010 முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 631 சாக்கடை மற்றும் கையால் மலம் அள்ளுபவர்கள் உயிர் இழந்துள்ளார்கள். 2019-ம் ஆண்டில் தான் அதிக எண்ணிக்கையிலான (115) பணியாளர்கள் உயிரிழந்திருப்பதாக தேசிய சஃபாய் கரம்ச்சாரி(தூய்மைப் பணியாளர்கள்) ஆணையம் தெரிவித்துள்ளது.
சமூக நீதி அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி, 1989-ம் ஆண்டு கையால் மலம் அள்ளும் சட்டம் அமல்படுத்தப்பட்ட போதிலும் மலக் குழிகளில் இறப்பவர்கள் தொடர்பான வழக்குகளில் போதிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு 10 லட்சம் நட்ட ஈடாகக் கொடுப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் பல குடும்பங்களுக்கு அவை வழங்கப்படுவதில்லை என அறிக்கை தெரிவிக்கின்றது.
இச்சட்டத்தின் கீழ் வழக்கே பதியப்படுவதில்லை!
கடந்த 2019-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த 25 வயதான ஒரு இளம் தொழிலாளி மலகுழியில் நச்சுவாயு தாக்கி மூச்சுத் திணறி இறந்தார். அப்போதுதான் சென்னையில் முதன்முதலாக கைகளால் மலம் அள்ளும் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 1993-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 206 கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அரசாங்கத்தின் கணக்கெடுப்பு சொல்கிறது. ஆனால் கையால் மலம் அள்ளுதலை தடுக்கும் சட்டத்தின் கீழ் முதல் வழக்கே 2019-ம் ஆண்டில் தான் பதியப்பட்டுள்ளது. வழக்கே பதியாத இடத்தில் சட்டத்தை மட்டும் திருத்துவதால் எப்படி இதனை ஒழிக்க முடியும்? அச்சட்டத்தின் வழக்கு பதியப்படுவது கண்காணிக்கப்பட வேண்டும்.
கைகளால் மலம் அள்ளும் பணிகளில் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் ஒப்பந்த வேலைவாய்ப்பு முறையை நீக்குவதில் சட்டம் கவனம் செலுத்த வேண்டும் எனும் கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.