லவ் ஜிகாத் சட்டம்

லவ் ஜிகாத் சட்டம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே முதல் வழக்கை பதிந்த உ.பி காவல்துறை

உத்திரப்பிரதேச மாநில காவல்துறை புதிதாக அமல்படுத்தப்பட்ட ‘லவ் ஜிஹாத்’ தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அச்சட்டத்தின் கீழ் முதல் வழக்கை பதிவு செய்துள்ளது.

இசுலாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகவும், மதம் மாற்றுவதற்காக இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதாகவும், இதனால் மதம் மாறி திருமணம் செய்வதை தடுக்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து ஒரு மதத்துவேச பிரச்சாரத்தினை மேற்கொண்டு வந்தனர். அந்த பிரச்சாரத்தினை தற்போது சட்டமாகவே உத்திரப் பிரதேச யோகி ஆதித்யாத்தின் அரசு கொண்டுவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (27/11) உத்திரப் பிரதேச ஆளுநர் அனந்த்தீபன் பட்டேல் கையெழுத்திட்டு நடைமுறைக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் ஷெரீப் நகரைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞர் அவிஷ் அகமதுக்கு எதிராக பரேலி(Bareilly) மாவட்டத்தில் வசித்து வரும் டிக்காரம் என்பவர் தனது மகளை மதம் மாற்ற வற்புறுத்துவதாக தியோரானியா(Deorania) காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து புதிதாக இயற்றப்பட்டுள்ளன ‘லவ் ஜிஹாத்’ தடைச் சட்டம் (திருமணத்திற்காக மதம் மாறுவதை தடுக்கும் சட்டம்) 3 மற்றும் 5 ஆகிய பிரிவுகளின் கீழ் தியோரானியா காவல்துறை வழக்கு பதிவு செய்ததுள்ளதுள்ளதாக பரேலி பகுதியின் மண்டல துணை ஆய்வாளர் ராஜேஷ் பாண்டே தெரிவித்தார்.

இதையும் படிக்க: காதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜக

குற்றம் சாட்டப்பட்டுள்ள அகமது மற்றும் தனது மகள் இருவரும் மாணவர்களாக இருந்த காலத்தில் அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டதாகவும், அவர்கள் இருவரும் அடிக்கடி ஒருவருக்கொருவர் பேசி வந்ததாகவும் திகாராம் தெரிவித்துள்ளார். திகாராம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலமுறை இது தொடர்பாக அகமதை எச்சரித்ததாகவும், ஆனால் அகமது கேட்கவில்லை எனவும் திகாராம் தெரிவித்துள்ளார். மேலும் அகமது தனது மகள் மற்றும் குடும்பத்தினரை திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் திகாரம் புகாரில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அகமது மற்றும் சம்பந்தப்பட்ட பெண் இருவரும் திருமணம் செய்ய இருந்த நிலையில், அந்த இளைஞர் மீது பெண் வீட்டார் கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பெண்ணை இழுத்துச் சென்று பெண் வீட்டார் அப்பெண்மணிக்கு வேறு திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது மீண்டும் அந்த இளைஞர் பிரச்சனை ஏற்படுத்துவதாக தெரிவித்து ‘லவ் ஜிஹாத்’ சட்டத்தின் கீழ் புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘லவ் ஜிஹாத்’ தடைச் சட்டம்

கடந்த செவ்வாய் கிழமை (24/11) பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்திரப் பிரதேச மாநில அரசு திருமணத்திற்காக மதம் மாறுவதை தடை செய்யும் விதமாக புதிய அவசர சட்டத்தை பிறப்பித்தது.

இனி திருமணத்திற்காக சட்டவிரோதமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதமாற்றம் செய்தால் 1 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டமானது அரசியல் சாசனத்திற்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிரானது என்றும், பெண்களின் அடிப்படை உரிமையான சாதி, மதம் கடந்து தனது துணையத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இச்சட்டம் மீறுவதாகவும், நாடு முழுதும் மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வந்தனர். ஆனாலும் இச்சட்டம் அவசர கதியில் பாஜக அரசினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதுபோன்ற சட்டங்கள் நாட்டின் மதச்சார்பின்மையை இல்லாதாக்கிவிடும் என்று ஜனநாயகவாதிகள் கவலை தெரிவிக்கின்றனர். தனது இணையைத் தானே தெர்ந்தெடுக்கும் பெண்களின் உரிமையைப் பறித்து, மீண்டும் பழைய காலத்திற்கு பின்னோக்கி இழுக்கும் செயலாகும் என்றும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த சட்டத்தில் எஸ்.சி/எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றினால் குறைந்தபட்சம் ரூ.15,000 அபராதம் மற்றும் 3-10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்க சட்டம் அனுமதித்துள்ளது.

இரு மதங்களுக்குள் திருமணம் செய்ய விரும்பும் தம்பதியினர் இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட நீதிபதிகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், அவ்வாறு தெரிவிக்கத் தவறினால் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ.10,000 அபராதம் விதிக்கலாம் எனவும் சட்டம் தெரிவித்துள்ளது.

கட்டாயமாக மதம் மாற்றி திருமணத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் அத்திருமண பந்தம் செல்லாததாக அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு

உத்திரப்பிரதேசத்தில் அண்மையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் “திருமணம் செய்வதற்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது” என வழங்கப்பட்ட பழைய தீர்ப்பை உறுதி செய்யும் விதமாக “அது சட்டத்துக்கு ஏற்புடையதல்ல” என குறிப்பிட்டு வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி முதல்வர் யோகி ஆதித்யநாத்  ‘லவ் ஜிஹாத்’ சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அறிவித்தார். 

ஆனால் அதே வழக்கில் “சலாமத் அன்சாரி மற்றும் பிரியங்கா கர்வாரை  நாங்கள் முஸ்லிம், ஹிந்துவாக பார்க்கவில்லை. திருமண வயதை எட்டியவர்களாகவே பார்க்கிறோம்.தங்களுக்கு விருப்பமானவர்களுடன் வாழ்வதற்கு அரசியல் சாசனத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிடுவது, அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும்” எனவும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உத்திரப்பிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்த சலாமத் அன்சாரி மற்றும் பிரியங்கா கர்வார் தம்பதியினர் மதம் மாற்றி திருமணம் செய்ததை எதிர்த்து அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்திருந்தார். தன் மகளை கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்தாக பெண்ணின் தந்தை புகார் அளித்து இருந்தார். இந்த வழக்கு குறித்தான தீர்ப்பில் தான் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: தனிநபரின் தனிப்பட்ட தேர்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது அரசியலமைப்பை மீறுவதாகும்-அலகாபாத் உயர்நீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *