கல்வெட்டு ரவி, குண்டாஸ் சத்யராஜ், ரவுடி முரளிதரன், புளியந்தோப்பு தாதா அஞ்சலை, ரவுடி ஜோஷ்வா – காவல்துறையின் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கும் இவர்கள் சமீபத்தில் பா.ஜ.க வில் உறுப்பினராக இணைந்தவர்கள். இதில் முரளிதரன் பா.ஜ.க மாநில இளைஞரணி செயலாளர், புளியந்தோப்பு அஞ்சலை வடசென்னை மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் என சிலர் முக்கிய பொறுப்புகளிலும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி திட்டமிடப்பட்ட கலவரங்கள் மூலமும் வன்முறையாலும் தனது வாக்கு வங்கியை பெருக்கிக் கொள்கிறது என பா.ஜ.க-வின் மீது குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், தற்போது அந்த குற்றச்சாட்டை வலுப்படுத்தும் வகையில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்ற வழக்குகளில் பதிவான மற்றும் பல முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடிகளையெல்லாம் பா.ஜ.க தொடர்ந்து உறுப்பினராக இணைத்துக்கொள்வதோடு பதவியும் வழங்கி வருகிறது.
எதற்காக இணைக்கப்படுகிறார்கள் ரவுடிகள்?
காவல்துறையால் கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளை கட்சியில் இணைப்பதில் என்ன நோக்கம் இருக்க முடியும்? அவர்களை எதற்காக பயன்படுத்தப் போகிறது பா.ஜ.க? வடஇந்தியாவில் நிகழ்த்திய வன்முறைகள் போல தமிழ்நாட்டிலும் கலவரங்களை உருவாக்க பார்க்கிறதா பா.ஜ.க என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது அக்கட்சியின் இத்தகைய செயல்பாடுகள்.
இந்த போக்கு மக்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்படுவதோடு ஏற்கனவே கட்சிக்காக பணி செய்பவர்களை விட்டுவிட்டு புதிதாக இணைபவர்களுக்கு பதவி வழங்குவது பா.ஜ.க தொண்டர்கள் மத்தியிலுமே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
பா.ஜ.க வில் இணைந்த ரவுடிகள் சிலர்
- ரவி (எ) ரவிசங்கர் (42) – 6 கொலை உட்பட 36 வழக்குகள், ஏ பிளஸ் பிரிவில் இருக்கும் ரவுடி.
- சத்யராஜ் (28) – 10 வழக்குகள், 2 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்.
- முரளிதரன் (42) – வழிப்பறி, ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடையவர், 5 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்.
- அஞ்சலை – ஆள்கடத்தல், கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற 10 க்கும் மேற்பட்ட வழக்குகள்.
- ஜோஷ்வா – கூடுவாஞ்சேரி, படப்பை உள்ளிட்ட இடங்களில் நடந்த 3 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் கொண்ட எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள்
2019-ம் ஆண்டு ’இந்தியா டுடே’வில் வெளிவந்த செய்தியின்படி இருப்பதிலேயே அதிகமான பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதியப்பட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. ஆசிபா பாலியல் வன்கொடுமை வழக்கு தொடங்கி உத்திரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குவரை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி அல்லது அதனைச் சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகவே போராட்டம் நடத்தி வந்திருப்பதை காணமுடிந்தது.
தமிழ்நாட்டில் வட சென்னை வடக்கு மாவட்ட பா.ஜ.க-வின் செயற்குழு உறுப்பினரான ராஜேந்திரன் சென்ற வாரம் 13 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்படி தொடர்ந்து பல சட்டவிரோத செயல்களில் சரச்சைக்குள்ளாகும் கட்சியில் மேலும் ரவுடிகளை இணைப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.
பாஜகவில் இணைய வந்தபோது காவல்துறையைக் கண்டு ஓடிய ரவுடி
கடந்த ஆகஸ்ட் 31அன்று, வண்டலூரில் நடைபெற்ற பா.ஜ.க நிகழ்ச்சி ஒன்றில், 6 கொலை வழக்கு உட்பட 38 வழக்குகள் பதியப்பட்டு காவல்துறையால் தேடப்படும் ரவுடியான “Red Hills” சூர்யா (எ) சூர்யா பா.ஜ.க-வில் இணைவதற்காக வந்து பின்னர் காவல்துறையைக் கண்டவுடன் அங்கிருந்து ஓடியிருக்கிறார். அங்கு கத்தியுடன் இருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்ததும், அவர்களில் இருவர் பா.ஜ.க வின் உறுப்பினர்கள் அதனால் அந்த இருவரையும் விடுவிக்க வேண்டுமென அக்கட்சியினர் போராட்டம் நடத்தியதும் செய்திகளில் வந்தது.
அபின் கடத்தல் வழக்கில் பெரம்பலூர் நிர்வாகி
அதே ஆகஸ்ட் மாதம், அபின் கடத்திய வழக்கில் பெரம்பலூர் பா.ஜ.க நிர்வாகி அடைக்கலராஜ் கைது செய்யப்பட்டார். அப்போது பா.ஜ.க அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியது. இதேபோல முன்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அருண் என்பவர் தற்போது அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பதவியேற்று இருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கொள்கை அரசியல் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டில் புது கலாச்சாரத்தை உருவாக்கும் பாஜக
பா.ஜ.க உள்ளிட்ட எந்த கட்சிகளும் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற கொலை, கொள்ளை, கடத்தல் குற்றவாளிகளை எல்லாம் கட்சிக்குள் சேர்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பா.ஜ.கவில் இணைத்த ரவுடிகளை நீக்குவதோடு அவர்கள் மேல் இருக்கும் வழக்குகளை போலீசார் முறையாக விசாரித்து தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே மக்களின் நியாயமான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பெரும்பாலான அரசியல் கட்சிகளில் இப்படி குற்ற வழக்குகள் பதியப்பட்ட பலர் உறுப்பினர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் கொலை குற்ற வழக்குகளில் பதியப்பட்ட பிரபல ரவுடிகள் எல்லாம் ஒரு கட்சி பக்கம் தொடர்ச்சியாக ஈர்க்கப்பட்டு, அதில் சென்று இணைவதும் அக்கட்சியில் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவதும் தமிழக அரசியல் வட்டத்தில் புதியதாகவும் ஆபத்தான போக்காகவுமே அறியப்படுகிறது.
கொள்கைகளையும், வாக்குறுதிகளையும், நலத்திட்டங்களையும் பேசி வாக்கு சேகரித்த கட்சிகளை பார்த்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இப்படி ரவுடிகளைக் கொண்டு அரசியல் செய்து விட முடியும் என நம்புவது எத்தகைய பலனை தருகிறது என்று தேர்தல் முடிவில் மக்கள் தான் தெரிவிப்பார்கள்.
முகப்புப் படம்: பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜக-வில் இணைந்த புகைப்படம்