லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்

காதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜக

”இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்”: ஆர்.எஸ்.எஸ் என்று தொடங்கப்பட்டதோ, அன்றிலிருந்து இன்று வரை இடைவிடாது சொல்லிக்கொண்டிருக்கும் வாசகம்தான் இது.

சங் பரிவார அமைப்புகளின் பிரச்சாரங்களில் மையக் கருத்தாக இதுவே இருந்து வருகிறது. இந்த துணைக்கண்டத்தில் வாழும் பெரும்பான்மை இந்து மக்களிடையே இந்து மதமே அழியப் போகிறது, அதைக் காப்பாற்ற வேண்டும், இந்து மக்கள் அனைவரும் வஞ்சிக்கப்படுகிறார்கள், அவர்கள் உரிமையை இந்து ராஷ்டிரம் அமைந்தால் மட்டுமே மீட்க முடியும் போன்ற பொய் பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக நடை பெறுகிறது. 

மதச் சிறுபான்மையினர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் லிபரல் சக்திகள் பெரும்பான்மை மக்களின் எதிரிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதே மண்ணின் மைந்தர்களான கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும்  அந்நியர்களாகவும், அவர்கள் பிறரைப் போல் சமமான உரிமையுடன் வாழத் தகுதியற்றவர்கள் என்பதுமே ஹிந்துத்துவ சிந்ததாந்தத்தின் கோட்பாடாக இருக்கிறது.

சட்டமாக்கப்படும் ஹிந்துத்துவ பிரச்சாரங்கள்

இவை பிரச்சாரங்கள் அளவில் மட்டும் நிற்பது இல்லை. வாய்ப்புகள் கிடைக்கும் போது எல்லாம் அவை சட்டமாக்கப்பவும் படுகின்றன. மதமாற்றத் தடைச் சட்டங்கள் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த பல்வேறு மாநிலங்களில் இன்றளவிலும் சட்டமாக உள்ளன. பசு வதைத் தடுப்புச் சட்டங்கள், CAA மற்றும் Uniform Civil Code சட்டங்கள் ஆகியவை வெளிப்படையாகவே மதச் சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதைக் காண்கிறோம்.

அந்த வரிசையில், பாஜக ஆளும் மாநிலங்கள் கொண்டு வர நினைத்திருக்கும் புதிய சட்டம் தான் “லவ் ஜிகாத்” தடுப்புச் சட்டம். நவம்பர் 1-ம் தேதி நடந்த ஒரு மாநாட்டில், உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இப்படி ஒரு சட்டத்தை இயற்ற தன் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிவித்தார். அத்தோடு நிற்காமல், அப்படி திருமணம் செய்யும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு மேடையிலேயே கொலை மிரட்டலும் விடுத்தார். 

லவ் ஜிகாத் எனும் பேய்க் கதை

இஸ்லாமிய இளைஞர்கள், தங்கள் மத அடையாளத்தை மறைத்து, இந்துப் பெண்களை காதலித்து, திருமணத்திற்கு முன்பு கட்டாயப்படுத்தி, மதம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதே ஹிந்துத்துவ சக்திகள் கூறும் இந்த ”லவ் ஜிகாத்” பேய்க் கதை. 

இப்படியே திருமணங்கள் நடந்து கொண்டிருந்தால் இந்துக்கள் சிறுபான்மை மக்களாக ஆகிவிடுவார்கள், சொந்த நாட்டிலேயே அவர்கள் உரிமையற்றவர்களாக மாறிவிடுவார்கள் என்பதுதான் பல ஆண்டுகளாக நடக்கும் வி.எச்.பி முதலான ஹிந்துத்துவ சக்திகளின் பிரச்சாரம். தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் போன்ற சாதியத் தலைவர்கள் கூறும் ”நாடகக் காதல்” கதைக்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதே உண்மை.

விசாரிக்க தனிப்படை அமைத்துள்ள யோகி ஆதித்யநாத் அரசு

சமூகத்தில் நடக்கும் சில குற்றங்களை மட்டும் மையப்படுத்தியே இதுபோன்ற போலிப் பிரசாரங்களை ஆர்.எஸ்.எஸ் முன்னெடுக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத் மாவட்டத்தில், ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொலை செய்து அவரின் உடமைகளை ஒருவர் கொள்ளையடித்து விடுகிறார். கொன்றவர் இஸ்லாமியர் என்பதாலும், கொல்லப்பட்டவர் ஹிந்துப் பெண் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இதை லவ் ஜிகாத் என்று பிரச்சாரம் செய்கின்றன ஹிந்துத்வ அமைப்புகள். 

கான்பூரில், கடந்த இரண்டு வருடங்களாக நடந்த இந்து-முஸ்லிம் திருமணமங்கள் அனைத்தையும் விசாரிக்க அந்த ஒன்பது காவலர்கள் கொண்ட ஒரு தனிப்படையை, கடந்த செப்டம்பர் மாதம் அமைத்துள்ளது ஆதித்யநாத் அரசாங்கம். காதல் திருமணம் செய்துகொண்ட இஸ்லாமிய இளைஞர்களுக்கு இந்துப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ள வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறதா என்றும், அவர்களின் தொலைபேசி அழைப்புப் பட்டியல் முதற்கொண்டு, இடைத்தரகர்கள் யாரேனும் இதுபோன்ற திருமணங்களை நடத்திவைக்க ஏற்பாடு செய்கிறார்களா என்பதை எல்லாம் விசாரிக்க உள்ளதாக அந்த தனிப்படையை தலைமை தாங்கும் மோகித் அகர்வால் தெரிவித்துள்ளார்.

திருமணம் குறித்த ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

அரசு கல்வி நிறுவனமான “International Institute for Population Sciences” என்ற கல்லூரி, 2013-ம் ஆண்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 15 – 49 வயதுப் பிரிவில் இருக்கும் பெண்களில் 2.1% பெண்களே வேறு மதங்களில் உள்ள ஆண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கண்டறிந்து தெரிவித்தது. அதிலும் கிறித்தவ மதப் பெண்கள் தான் அதிக அளவில் வேறு மதத்தவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றும், இந்து பெண்களில் 1.5% பேர் மட்டுமே வேறு மதத்தவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது. இவர்கள் அனைவரும் இஸ்லாமியர் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதில்லை. இந்த 1.5% சதவீதத்திலும் மிகச் சொற்பமான சதவிகிதப் பெண்களே இஸ்லாமிய இளைஞர்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.

உத்திரப்பிரதேசத்திலே கூட, இஸ்லாமிய இளைஞர்களை திருமணம் செய்து கொண்ட இந்து பெண்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர்கள் எல்லாம் அறிந்தே, தங்கள் விருப்பத்தின் பெயரிலேயே திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். மிகச் சிலர் மட்டுமே தங்கள் பெற்றோரின் வற்புறுத்தலின் காரணமாக மாற்றிச் சொல்லி தங்கள் பெற்றோருடன் திருபியுள்ளனர். 

நாடகக் காதல் – லவ் ஜிகாத் சொல்லாடல்கள்

தமிழ்நாட்டில் நடந்த சாதி மறுப்புத் திருமணங்களில், சாதிய அமைப்புத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்களின் வற்புத்தல் காரணமாக திருமணம் முடிந்த பிறகும் பெண்களை கணவனிடம் இருந்து பிரித்ததை எல்லாம் நாமும் பார்த்திருக்கிறோம் தானே!? இன்னும் சாதியாக இயங்கும் இந்த சமூகத்தில், தங்கள் பெண்கள் தங்கள் சாதியைத் தாண்டி திருமணம் செய்யும் போது, தங்களை சுற்றி இருக்கும் சமூகத்தில் தங்களுக்கு ஏற்படும் நெருக்கடிக்கு அஞ்சியே பெற்றோர்கள் நாடகக் காதல், லவ் ஜிகாத் போன்ற ஹிந்துத்துவ-சாதிய சொல்லாடல்களுக்கு பலியாகின்றனர். இதை ஹிந்துத்துவ-சாதிய சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.

யோகி ஆதித்யாநாத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதேபோன்ற சட்டங்களைக் கொண்டு வர ஆலோசிப்பதாக அறிவித்துள்ளன. 

தனிஷ்க் விளம்பரத்திற்கு எழுப்பப்பட்ட எதிர்ப்பு

இந்த சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும், தங்கள் கருத்தியல் படியே, தங்கள் ஒப்புதலைப் பெற்றே நடை பெற வேண்டும் என்று ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகள் நினைக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு தனிஷ்க் நகைக் கடை நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்திற்கு, ஹிந்துத்துவவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்து, அச்சுறுத்தல் விடத் தொடங்கினர்.  ஒரு இஸ்லாமிரை திருமணம் செய்த இந்துப் பெண்ணிற்கு, வளைகாப்பு சடங்குகளை அந்த இஸ்லாமிய குடும்பம் ஏற்பாடு செய்வதை சித்தரிக்கும் அந்த விளம்பரத்திற்குத் தான் இத்தனை எதிர்ப்புகள். 

குஜராத்தில் உள்ள தனிஷ்க் கடையில் இந்த விளம்பரத்திற்கு வருத்தம் தெரிவித்து பதாகை வைக்கப்பட்டது. பிறகு ஒட்டுமொத்தமாக இந்த விளம்பரம் பின்வாங்கப்பட்டது. 

தனிஷ்க் விளம்பரத்தின் ஒரு காட்சி

இதேபோன்று ஹோலி பண்டிகை காலகட்டத்தில், சர்ஃப் எக்ஸல் நிறுவனம் தயாரித்த விளம்பரம் ஒன்றில் ஒரு இஸ்லாமிய சிறுவனை ஹோலி பண்டிகையின் போது கரைபடாமல் ஒரு இந்து சிறுமி கூட்டிச் செல்வது போல எடுக்கப்பட்ட விளம்பரத்திற்கும் இணையதளத்தில் சங்கிகள் எதிர்ப்புத் தெரிவித்து பரப்பினர். ஒரு சிறுவனையும் சிறுமியையும் சித்தரிக்கும் இந்த விளம்பரத்தைக் கூட லவ் ஜிகாத் என்று வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தது சங்கி கும்பல்.

சர்ஃப் எக்ஸ்ல் விளம்பரத்தின் ஒரு காட்சி

லவ் ஜிகாத் சட்டம் இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதா?

உத்திரப்பிரதேச அரசாங்கம் இத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என்பதால் செல்லுபடியாகாது என்று சட்ட வல்லுனர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். மதமாற்றத் தடைச் சட்ட விவகாரத்தில் நடந்ததைக் கொண்டு பார்த்தால் அதற்கான உத்திரவாதம் இல்லை என்றே தோன்றுகிறது. 

கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் முதன்முதலாக  ஒரிசாவில் தான் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஒரிசாவின் உயர் நீதிமன்றம் அந்த சட்டம் செல்லுபடியாகது என்று தீர்ப்பளித்தது. ஆனால் மத்தியப்பிரதேசத்தில் அதே சட்டம் கொண்டு வரப்பட்ட போது, மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் அந்த சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தது. வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. உயர் நீதிமன்றமோ அரசியல் சாசனப்படி இந்த சட்டம் செல்லுபடியாகும் என்றே அறிவித்தது. லவ் ஜிகாத் சட்டங்களுக்கும் இதே நிலை ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒவ்வொரு திருமணமும், ஒவ்வொரு காதலும், ஒவ்வொரு நட்பும் தங்களுடைய கண்காணிப்பில், ஒப்புதலில் தான் நடைபெற வேண்டும் என்பதே இந்த ஃபாசிஸ்டுகளின் கனவாக இருக்கிறது.

மாற்று மதத்தவர்களை மதமாற்றம் செய்யும் பாஜக

இந்துக்கள் பிற மதங்களுக்கு மாறுவதை மட்டும் தடுக்க இத்தனை சட்டங்களை இயற்றும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல், கர் வாப்ஸி என்ற பெயரில் சிறுபான்மையின மக்களையும், ஆதிவாசிகளையும் மிரட்டி இந்து மதத்திற்கு மாற்றுவது இன்றளவும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆக்ராவில் இல்ஸாமிய கூலித் தொழிலாளர்களை, இந்து மதத்திற்கு மாறினால் தான், வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கான அடையாள அட்டையை (Below Poverty Line, BPL)வழங்குவோம் என்று மிரட்டி வி.எச்.பி அமைப்பு அவர்களை மதம் மாற்றியது.

ஒரிசாவில் உள்ள பஸ்டார் மாவட்டத்தில், கிறித்தவ மத்தத்திற்கு மாறிய ஆதிவாசிகளுக்கு BPL அடையாள அட்டை வழங்க முடியாது என்று பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக பிரமுகர்கள் முடிவு செய்தனர். எங்காவது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இதற்காக கைது செய்யப்பட்டதோ அல்ல குறைந்த பட்சம் விசாரிக்கப்பட்டதோ உண்டா? இல்லை தானே!

காங்கிரசிலும் ஹிந்துத்துவக் கொள்கையின் தாக்கம்

பாஜக மட்டுமல்லாமல் காங்கிரஸ் அரசாங்கமும் ஹிந்துத்துவ கொள்கைகளுக்கு துணைபோன வரலாறும் இருக்கவே செய்கின்றன. ஹிமாச்சலப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசுகள் தான். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பசு வதைத் தடுப்புச் சட்டத்தை இயற்றியதும் காங்கிரஸ் அரசாங்கம் தான்.  இந்திய முதலாளித்துவ கட்சிகள் எல்லாவற்றிலும் ஹிந்துத்துவக் கருத்தியல் ஏதோ ஒரு வகையில் தன்னுடைய தாக்கத்தை கொண்டுள்ளது என்பதே நிதர்சனம்.

பாஜக அரசின் மோசமான கொள்கைகளால், நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எக்காரணம் கொண்டும் அவை பேசு பொருளாக மக்களிடையே மாறிவிடக் கூடாது என்பதில் பாஜக கவனமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *