கொரட்டூர் ஏரி

சென்னை கொரட்டூர் மண்ணில் ஆபத்தான அளவிற்கு கன உலோகங்கள்!

பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தலின் பேரில் அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கை மூலம் கொரட்டூர் ஏரி  மண்ணில் ஆபத்தான அளவிற்கு கன உலோகங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்படும் கழிவுகளின் காரணமாக குரோமியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் ஈயம் போன்ற அபாயகரமான கனரக உலோகங்கள் கலந்து ஏரி மண் மாசுபட்டுள்ளது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (National Green Tribunal – NGT) சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரட்டூர் மக்கள் நலன் மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளையினால் கொடுக்கப்பட்ட மனுவை அடிப்படையாகக் கொண்டு தெற்கு மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த ஒரு நிபுணர் கூட்டுக் குழு கொரட்டூர் ஏரியில் பரிசோதனை நடத்தியது. கழிவுநீரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிழக்குப் பகுதியில் இருந்து மேல் மண்ணை சேகரித்து அக்குழு பரிசோதனை நடத்தியதில் இது தெரியவந்துள்ளது.

அரசியல் அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கவில்லை

இதுகுறித்து கொரட்டூர் மக்கள் நல அமைப்பினர் கூறுகையில், அரசியல் அழுத்தம் காரணமாக சில தொழிற்சாலைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இந்த ‘அங்கீகரிக்கப்படாத’ அலகுகள் தொடர்ந்து மண்ணையும் நீரையும் மாசுபடுத்துகின்றன என்று குற்றம் சாட்டினர்.

153 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

அம்பத்தூர் மழைநீரானது கால்வாய் வழியாக கொரட்டூர் ஏரியை அடையும் வடிகால்களில், சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றுவதாக 153 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயத்தில் கூறியுள்ளது.

தொடர்ந்து கொட்டப்படும் கழிவுகள்

இது ஒருபுறமிருக்க, சில கழிவுப்பொருட்களைத் தவிர, சில தொழிற்சாலைகள் குளிரூட்டும் எண்ணெய், அரவை மண், எண்ணெயில் தோய்ந்த பஞ்சு போன்ற அபாயகரமான கழிவுகளை அம்பத்தூர் தொழில்துறை வளாகத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கொட்டி வருகின்றன.

தமிழ்நாடு சிறுதொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (SIDCO) நிர்வகிக்கும் தொழில்துறை வளாகத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நடத்திய  பரிசோதனையில் குறைந்தது 10 டன்  திடக்கழிவுகள் சட்டவிரோதமாக தெருக்களில் கொட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தொடர்பாக சிட்கோ அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, நீர்நிலைகளை சென்றடையும் முன்பு கழிவுநீரை சுத்திகரிக்க பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் சில நிறுவனங்கள் இந்த வழியில் எண்ணெயை கலந்துவிடுகின்றன. இது சுத்திகரிப்பு முறையை பாதிப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

இதன் விளைவாக அம்பத்தூர் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு வளாகத்தில் 160 டன் கழிவு குவிந்துள்ளது. தெருக்களில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மற்றும்  திடக்கழிவு மாதிரிகள் கன உலோகங்களைக் கொண்டிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

2017-ம் ஆண்டிலிருந்து தொழிற்சாலைகளில் இருந்து இடைக்கால சுற்றுச்சூழல் இழப்பீடாக மொத்தம் 1.09 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நவம்பர் 19 அன்று தேசிய பசுமை தீர்பாயத்தில் தெரிவித்துள்ளது. 

வடிகால் அமைப்புகள் இல்லாததால் வீட்டுக் கழிவுகளும் நீர்நிலைகளில் கலக்கின்றன

தொழில்துறை கழிவுகள் மட்டுமல்லாமல், தேசிய பசுமை தீர்ப்பாய ஆய்வுக் குழுவு நடத்திய சோதனையில் ஜோதி நகர், அன்னை சத்யா நகர்,  ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் மற்றும் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அம்பத்தூர் மண்டலம் ஆகிய பகுதிகளில் நாள் ஒன்றுக்கு வீடுகளில் இருந்து 45.59 மில்லியன் லிட்டர் கழிவுநீரானது, கழிவுநீர் வடிகால் அமைப்பு முறையாக இல்லாததால் நேரடியாக நீர்நிலைகளில் கலப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *