விவசாயிகள் போராட்டம்

விவசாய மசோதாக்கள்: விவசாயிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. அகில இந்திய விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் யூனியன், அகில இந்திய கிசான் மகாசங்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து பாரத் பந்த் நடத்துவதற்கு இன்று இணைந்திருக்கின்றன. 

ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தேசிய அளவிலான பல்வேறு தொழிற்சங்கங்களும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்துள்ளன. பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இரண்டு விவசாய சங்கங்களான பாரதிய கிசான் சங், சுவதேசி ஜக்ரான் மன்ச் ஆகியவை மட்டும் விவசாயிகளின் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. 

ஏற்கனவே பாராளுமன்றத்தில் வேளாண் மசோதாக்கள் ஜனநாயகமற்ற முறையில் நிறைவேற்றப்பட்டதாக மாநிலங்களவை உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி கூட்டத்தொடரை புறக்கணித்து வெளியேறிய நிலையில் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் தொடர் ரயில் மறியல் போராட்டங்கள் விவசாயிகளால் இன்று நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு சாலைகளில் விவசாயிகள் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அமிர்தசரஸ் நகர் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ரயில்வே தண்டவாளங்களில் கூடாரமிட்டு அமர்ந்திருக்கும் பஞ்சாப் விவசாயிகள்

விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு, இந்த விவசாய மசோதாக்கள் தவறானவை என்றும், விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை கைவிடச் சொல்லி அனைவரும் இணைந்து பேச வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். மேலும் போராடும் விவசாயிகளை சட்ட ஒழுங்கு விதிகளை பாதுகாக்குமாறு தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர், போராடும் விவசாயிகள் மீது வழக்குகள் பதியப்படாது என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். 

 பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் உள்ள சிரோமனி அகாளி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கெளர் பாதல் வேளாண் மசோதக்களை எதிர்த்து ஒன்றிய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அக்கட்சியும் விவசாய மசோதாக்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளது. மூன்று நாட்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தினை அக்கட்சி அறிவித்துள்ளது. 

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் டெல்லி-ஹரியானா எல்லைப் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று விவசாயிகள் போராட்டத்தினைக் கலைப்பதற்காக ஹரியானவில் அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. டெல்லியின் எல்லையில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் அவர்களின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ட்ராக்டரில் வந்து விவசாயிகளுடன் போராட்டத்தில் பங்கேற்றார். 

பீகாரில் மாடுகளின் மீதும், ட்ராக்டர்களின் மீதும் அமர்ந்து வந்து போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்

கர்நாடகா-தமிழ்நாடு நெடுஞ்சாலையில் கர்நாடகாவின் விவசாய சங்கங்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நெடுஞ்சாலை முடக்கப்பட்டுள்ளது. 

14 ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இணைந்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து செப்டம்பர் 28-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தினை அறிவித்திருக்கின்றன. 

’ஒரே நாடு, ஒரே விவசாய சந்தை’ என்று சொல்லி ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதாக்கள், நாடு முழுவதும் ஒன்றாகப் போராடுவதற்கு விவசாயிகளை ஒருங்கிணைத்திருக்கிறது.

இதையும் படிக்க:

  1. WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்
  2. விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *