கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
கவிஞர் விக்கிரமாதித்யன் செப்டம்பர் 25, 1947 அன்று பிறந்தார். திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், குற்றாலம், தென்காசி, சென்னை, கல்லாத்தா என்று நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர். துணிக்கடை முதல் பத்திரிக்கைகள் வரை வேலை செய்தார். சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறார்.
தமிழில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக விக்ரமாதித்யன் நவீன தமிழ்க்கவிதையில் புறக்கணிக்க முடியாத ஆளுமையாக இருக்கிறார். விக்ரமாதித்யன் அளவுக்கு தமிழில் இயல்பெழுச்சியுடன் கவிதை எழுதியவர்கள் குறைவு. அவரது கவிதையின் முக்கியமான கூறு என்பது அவரது வாழ்வில், அனுபவத்தில், கழிவிரக்கத்தில், இயல்பில் இருந்து வரும் சரளமான எழுத்துதான்.
இரண்டு சிறுகதை தொகுப்பும், ஏழு கட்டுரை தொகுப்பும் வெளியிட்டுள்ளார். தமிழில் இதுவரை 16 தொகுப்புகள் வரை வெளியிட்டுள்ளார். விக்ரமாதித்தனைப் போல மிக அதிகமாக எழுதுபவரும் மிகச் சரளமாக எழுதுபவரும் கூட தமிழில் குறைவுதான்.
சமகால தமிழ் வாழ்வின் சிக்கல்களையும் அதில் அகப்பட்டுத் திணறும் மனிதர்களின் பாடுகளையும் விக்ரமாதித்யன் அதிகமாக எழுதியிருக்கிறார். அதை அவர் எழுதும் விதத்தை நோய்மை’யானது என்று அவரே வரையறுப்பார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான ’ஆகாசம் நீலநிறம்’ பாரதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 1982-ல், கவிஞர் மீரா வெளியிட்ட நவகவிதை நூல் வரிசையில் முதல் நூலாக வெளியிடப்பட்டது.
மரபிலிருந்து நவீனத்துக்கு வந்த கவிஞனின் கவிதைகள் என்ற முன்னுரையுடன் துவங்கும் அதன் முதல் கவிதை.
சுதந்திர இந்தியா
”இங்கே
பைத்தியக்காரர்களும்
குழந்தைகளும் மட்டுமே
நிம்மதியாக இருக்கிறார்கள்
பெரிய அரசியல்வாதிகளும்
முதலாளிகளும் மட்டுமே
பாதுகாப்பாக இருக்கிறார்கள்
மடாதிபதிகளும்
கதாகாலட்சேபக்காரர்களும் மட்டுமே
கவலையில்லாமல் இருக்கிறார்கள்
எழுத்தாளர்களும்
சினிமாக்காரர்களும் மட்டுமே
சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
சராசரி இந்தியர்களின்
சகிப்புத்தன்மையில் மட்டுமே
தேசம்
தீப்பற்றியெரியாமல் இருக்கிறது.”
என்று எழுதுவார்.
முதல் தொகுப்பில் உள்ள வாழ்க்கை எனும் கவிதை
வாழ்க்கை
”பறத்தல் சந்தோஷமானது
ஆனால்
பட்டுப் பூச்சிகள்
மல்பரி இலைகளில் தூங்கும்”
’தமிழ்க்கவிதை மரபும் நவீனமும்’ என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு தமிழின் கவிதைகள் மற்றும் அதன் பாடுபொருள் குறித்தும், கவிதை கட்டுமான மரபின் வலுவான பிடிமானங்கள் குறித்தும் பேசிய தொகுப்பாகும்.
“சங்கக் கவிதைகளிலிருந்து கவிதை நுணுக்கமும் கூர்மையும் கற்றுக் கொள்ளலாம். காவியங்களிலிருந்து, பலவகைப்பட்ட சொல்லும் விதமும் கவிதையை வளர்த்தெடுத்துச் செல்லும் வழிவகையும் விரிவான கதைசொல்லும் முறையையும் தெரிந்துகொள்ளலாம் பக்திப் பாடல்களிலிருந்து உணர்ச்சி பாவமும் ஒலிநயமும் எளிமையும் படித்துக்கொள்ளலாம். சிற்றிலக்கிய வகைகளிலிருந்து வெவ்வேறுபட்ட கவிதையாக்க உத்திகளைப் பயின்று கொள்ளலாம்.”
என்று தமிழ் மரபை பேசியிருப்பார்
அதே போல தமிழ் கவிதைகளில் மனித உணர்வும் அனுபவமும் வாழ்வையும் பாடுவதுதான் தமிழ் கவிதைகளின் இயல்பு என்றும் எழுதுவார்.
“முதல் தமிழ் கவிஞனிலிருந்து பாரதி வரை கவிதை மனசு சம்பந்தப்பட்டதென்றே எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அனுபவங்களும் உணர்வுகளும் மட்டுமே கவிதையாகும் என்று ஓர்மை கொண்டிருந்திருக்கிறார்கள். கவிதையென்ற நுட்பமான ஊடகத்தில் வாழ்வைத்தான் சொல்லமுடியும் என்று கண்டுகொண்டிருக்கிறார்கள். வாழ்வைத்தான் சொல்ல வேண்டும் என்று மனம் கொண்டிருந்தார்கள். வாழ்வு அனுபவங்களாலானது, உணர்வுகள் நிரம்பியது. கவிதையும் அப்படித்தான் என்று முடிவுகொண்டது தமிழ்மனம், தமிழ்மரபு, தமிழ்மண்.”
என்று எழுதினார்.
காரைக்கால் அம்மையாரின் கவிதைகள் குறித்து எழுதும்போது, தமிழ் பெண் கவிஞர்களின் நீண்ட மரபையும் பாடுபொருளையும், இன்றைய நவீன பெண் கவிஞர்கள் தொடர்ச்சி குறித்தும் எழுதியிருப்பார்.
”பெண் கவிஞர்களில் பெருங்கவிஞராக விளங்கும் ஒளவை, கனவு காணும் பெண்ணாக வாழும் ஆண்டாள், பேய் வடிவம் வேண்டிப் பெறும் காரைக்காலம்மையார் ஆகிய மூவருமே, நீண்ட நெடிய தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தில் – இன்று அதன் நீட்சியாக விளங்கும் நவீனகவிதை வரையிலும் – ஆகச் சிறந்த பெண் கவிஆளுமைகள். இவர்களின் கவித்துவம் ஏற்படுத்திக்கொண்டதோ எழுதி எழுதிப் பழகி உருவாக்கிக்கொண்டதோ அல்ல. காலத்தின் கொடை; இயற்கையே தந்த பேறு. இப்படிச் சொல்வது ஒன்றும் மிகையில்லை. அலங்காரம் ஆகாது. உண்மை. இதனால்தான் ஒளவை, ஆண்டாள், காரைக்காலம்மையார் ஆகியோருக்கு இணையாக இன்னொருவர் வர இயலவில்லை. இவர்களைத் தாண்டி வருவதும் கடந்துபோவதும் சாத்தியம் இல்லாதது.”
அவரது கவிதைகளின் பாடுபொருள்கள் வறுமையும், பட்டினியும் இயல்பென சபிக்கப்பட்ட மக்களில் தானும் ஒருவன் எனும்படியே இருக்கும். நாடோடியாக வீதிகளில் அலைந்து திரியும், எப்போதும் துக்கத்தைச் சுமந்து, கூடு திரும்பும் கனவுகளோடு வாழும் ஒரு விளிம்புநிலை மனிதனின் ஏக்கங்களைக் கொண்டவை அவரது கவிதைகள். அதேபோல தான் ஒரு நீண்ட மரபைக் கொண்ட தமிழ் கவிகளின் தொடர்ச்சி என்ற உணர்வுடன் நொடிப்பொழுதும் கர்வத்துடனும் வாழ்கிற கம்பீரமான படைப்பாளி விக்ரமாதித்யன் என்றே கூறலாம்.
தனது கவிதை குறித்து,
”இருக்கிற ஸ்திதியைச் சொல்வதுதான் என் வேலை. நம்பிக்கையையோ நம்பிக்கையின்மையையோ பரப்புவது அல்ல” என்று அவரே எழுதுவார் .
”விக்கிரமாதித்யனின் கவிதை குறித்து அவருடைய படைப்புகளில் விஞ்சி நிற்பது நம்பிக்கையா அவநம்பிக்கையா என்று பட்டிமன்றம் நடத்துவது வீண்வேலை. ஒரு கலைஞன் இச்சமூகம் இருக்கும் நிலையைக் கூர்மையாகப் பதிவு செய்தால் கூடப்போதும். அதுவே ஒரு முற்போக்கான பணிதான். அது ஏன் இப்படி இருக்கிறது என்று ஆய்வதும் அதற்கான மாற்றுகளை உருவாக்குவதும் அரசியலார் வேலை. தமிழில் அரசியலார் இம்மாதிரி படைப்புகளை வாசிக்காமலும் ஏறெடுத்தும் பாராமல் இருப்பதுமே ஆகப்பெரும் வியாதியாகும்”
என்று எழுத்தாளர் ச.தமிழ் செல்வன் எழுதியிருப்பார்.
சமகால தமிழ் இலக்கிய உலகம் குறித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்கையில், ”இலக்கிய அரசியல், இலக்கிய வியாபாரம், பலநோக்குத் திட்டங்கள், அதிகார மையம் இவை எதிலும் சம்பந்தமில்லாதவன்தான் கவிஞன். இன்றையதினமோ இலக்கிய உலகம் இவற்றால் ஆனதாகவே இருக்கிறது. இதில் என்னதான் செய்ய முடியும் கவிஞன். பத்து, முப்பது நல்லகவிதை எழுதினால் போதும் என்று இருக்கவேண்டியதுதான். ஆமென்!” என்று முடித்திருப்பார் விக்ரமாதித்தியன்
அவரது கவிதைகளில் சில
முதுமை
பார்த்த முகங்கள்
பழகிய நெஞ்சங்கள்
எல்லாமே ஏனோ மறந்துபோயின
சிரித்த வேளைகள்
சுற்றிய பொழுதுகள்
எல்லாமே
ஏனோ மறந்துபோயின
நேற்றைய நினைவுகளை|
இன்றே மறந்தால்…
நாளையப் பொழுதுகளில்
யாரையும் சந்தித்தால்..
எல்லாமே தவறுகள்… தவறுகள்
‘வண்ணங்கள்’
ஆடுவளர்ப்பு
ஆடுவளர்ப்பு
அவ்வளவும் காசு
கோழிவளர்ப்பு
கொள்ளை பணம்
நாய்வளர்த்தால்
நன்றி விசுவாசமுண்டு
தென்னைவளர்த்தால்
துட்டுமேல் துட்டு
தமிழ்க்கவிதை வளர்த்தால்
ததிங்கிணத்தோம் தாளம்தான்
‘நிகழ்’ – 14 மே 1990
” நெஞ்சு படபடக்கிறது
நீர் வீழ்ச்சியென்று
அருவியை
யாராவது சொல்லிவிட்டால்”
“சௌந்தர்யக் கூச்சம்
சாப்பாட்டுக்குத் தரித்திரம்”
“எஜமானனைவிட
ஊழியனுக்கு நல்லது
எஜமான விசுவாசம்”.
“விலைகூவி விற்கலாம்
இருக்கிறது சரக்கு எல்லோருக்குமாக
ஒருசிறு பிரச்சனை
வியாபாரி அல்ல நான்
வீணாக அழிந்தாலும் கலைஞன் தான்”
“முழுதாய் வாழ்ந்து முடிக்க
முன்னூறு வார்த்தைகள் போதும்
இவனோ வார்த்தைகளின் ஊர்வலத்தில்
வழிதவறிய குழந்தை”
“ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
திருடிப் பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழநேர்கிறது எனக்கு
கூட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு
காட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக் கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு
பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதோ சாபம் கவியாதோ”.
என்பது அவரது சுய புலம்பல் கவிதைக்கு ஒரு எடுத்துகாட்டு.
கூண்டுப் புலிகள்
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக்கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்து இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்குத் தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்|
சுற்றிச்சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவிக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்.