தெற்கு ரயில்வேயில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் புதன்கிழமை செப்டம்பர் 23 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 16 ரயில்வே மண்டலங்கள் இயங்குகிறது. அதில் தெற்கு ரயில்வே பிரிவில் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடமாக உள்ளது.
கடந்த வருடம் மட்டும் 980 குற்ற வழக்குகள் தெற்கு ரயில்வேயில் பதிவாகியுள்ளது என்றும், அதற்கு அடுத்தபடியாக தெற்கு மத்திய ரயில்வேயில் 414 குற்ற வழக்குகளும், மூன்றாவதாக வடக்கு ரயில்வேயில் 388 குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளன.
தெற்கு ரயில்வே பிரிவின் கீழ் அதிவிரைவு ரயில் முதல் பயணிகள் ரயில் வரை 1313 ரயில்கள் இயங்குகின்றன. கடந்த சில வருடங்களாகவே தெற்கு ரயில்வேயில் திருட்டு குற்றங்களும் அதிகரித்தே வந்துள்ளது. 2014-ம் ஆண்டு 640 ஆக இருந்த திருட்டு தொடர்பான குற்றங்கள் 2018-ம் ஆண்டு 2986 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல பெண்களுக்கு எதிரான குற்றமும் 2014-ம் ஆண்டு 160-ல் இருந்தது. ஆனால் 2018-ம் ஆண்டு அது 980 ஆக உயர்ந்துள்ளது.
இந்த குற்றங்கள் படிப்படியாக உயர்ந்து வந்திருப்பது தகவல்களைப் பார்க்கும் போது தெரியவந்துள்ளது.
2015-ல் மொத்த 646 குற்றங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 121,
2016-ல் 581 குற்றங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 164,
2017-லிருந்து குற்றங்கள் இரண்டு மடங்காக பெருகிவிட்டன.
2017-ல் 1350 குற்றங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 197.
2018-ல் 2986 குற்றங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 980.
ஆண்டு | மொத்த குற்றங்கள் | பெண்களுக்கு எதிரான குற்றங்கள் |
2015 | 646 | 121 |
2016 | 581 | 164 |
2017 | 1350 | 197 |
2018 | 2986 | 980 |
ஒரே ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 197 என்ற எண்ணிக்கையில் இருந்து 980 என்று உயர்ந்திருக்கிறது. ஒரே ஆண்டில் திருட்டு குற்றங்கள் இரண்டு மடங்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மூன்று மடங்கும் அதிகரித்திருக்கிறது.
இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 2017-ம் ஆண்டு 117 பேரும், 2018-ல் 121 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2018-ம் ஆண்டில் மொத்த 980 வழக்குகளில் வெறும் 121 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
2019-ம் ஆண்டு 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் 20 வரை மட்டுமே ரயில்கள் இயங்கிய போதும், தெற்கு ரயில்வேயில் 29 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வே அதிகாரிகள், “கல்வி அறிவின் விழிப்புணர்வு காரணமாக இங்கு குற்றச்சாட்டுகளை மக்கள் சொல்கிறார்கள். நாட்டின் மற்ற பகுதிகளில் தயக்கத்தின் காரணமாக சொல்ல முன்வருவது இல்லை. அதனால் அதிகளவில் குற்றச் சம்பவங்கள் தெற்கு ரயில்வே பிரிவில் பதிவு செய்யப்படுகிறது. இங்கு நடைபெறும் அனைத்தும் வழக்குகளாக பதிந்து முதல் தகவல் அறிக்கை பதியப்படுகிறது” என்று கூறினர். மேலும் இந்த வழக்குகளில் 1000-க்கும் மேற்பட்ட வழக்குகள் செல்போன் திருட்டு வழக்குகள்தான் என்றும் கூறியுள்ளனர்.