கடந்த ஜூலை மாதம் பஞ்சாப், ஹரியனா, ராஜஸ்தான் விவசாயிகள் தனது டிராக்டர்களை நடுரோட்டில் நிறுத்தி ஒன்றிய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் தலை எழுத்தையே மாற்றப்போகும் அந்த சட்டங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.
- The Farmers’ Produce Trade and Commerce (Promotion and Facilitation) Ordinance, 2020,
- The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Ordinance, 2020 and
- The Essential Commodities (Amendment) Ordinance, 2020.
விவசாயப் பொருட்களின் வர்த்தகம், விவசாயப் பொருட்களின் விலை உத்தரவாதம், பண்ணை நிர்வாகம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் குறித்தான விவகாரம் போன்ற அனைத்தையும் மாற்றியமைக்கும் சட்டங்கள் இவை. விவசாயத்தின் அடிப்படையை மாற்றப்போகும் இதுபோன்ற சட்டங்களுக்கு ஐரோப்பிய விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு
இந்த சூழ்நிலையில்தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் அமெரிக்க வணிகக் கூட்டமைப்பு சார்பாக நடந்த சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற கூட்டத்தில் Atmanirbhar Bharat (தற்ச்சார்பு இந்தியா) சார்பாக இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“இந்தியாவில் கொண்டுவந்துள்ள விவசாய சீர்திருத்தங்கள் வணிகம் செய்ய ஏதுவாக இருக்கும். வரும் 2025-க்குள் இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறையின் வர்த்தகம் 50,000 கோடியை எட்டும்” என்று மோடி தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் உள்ளூர் விவசாயிகள் தனது வாழ்வாதரம் அழிக்கப்படுவதாக போராட்டத்தல் ஈடுபடுகின்றனர். மறுபக்கத்தில் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய உணவுத் துறையில் முதலீடு செய்ய உகந்த வாய்ப்பு உருவாகியுள்ளதாக மோடி அழைப்பு விடுக்கிறார். இந்தப் போக்கு உள்ளுர் உற்பத்தியாளர்களை அப்புறப்படுத்திவிட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய விவசாயத்தையும், உணவுத் துறையையும் தாரைவார்ப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்
MSP மற்றும் மண்டி முறைகளில் உருவாக்கும் மாற்றம்
மேலே குறிப்பிடப்பட்ட அவசர சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் இந்திய விவசாயிகள் மேம்படுவார்கள் என்றும் விவசாயத் துறைக்கு ஒரு செழிப்பான எதிர்காலம் உருவாகும் என்றும் மோடி பேசுகிறார். ஆனால் விவசாயிகளும், விவசாய சங்கங்களும் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். விவசாயத்தை பலப்படுத்தும் குறைந்தபட்ச ஆதரவு விலை Minimum Support Price (MSP) மற்றும் மண்டி முறையான விவசாயப் பொருட்களின் சந்தைக் குழுவையும் Agriculture Produce Market Committee (APMC) அகற்றிட இந்த சட்டங்கள் பரிந்துரைக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் குறைந்த நிலம் வைத்துள்ள இந்திய விவசாயிகள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில்
இந்திய விவசாயிகளில் பெரும் பகுதியினர் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள். அவர்கள் அரசின் சலுகைகளை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் கூட்டுறவு வங்கிகள் கொடுத்த கடன்கள்தான் அவர்களுக்கு பெரும் பாதுகாப்பாக இருந்தது. அதையும் மோடி அரசு அழித்துவிட்டது. மாநில கட்டுப்பாட்டில் இருந்த கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பல மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த போக்கு இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெரும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.
விவசாயிகளுக்கும் அரசுக்குமான தொடர்பு முறிப்பு
Trade and Commerce (Promotion and Facilitation) Ordinance எனும் அவசர சட்டம், விவசாயப் பொருட்களை விற்பனை செய்வதற்கு இதுவரை நடைமுறையில் இருந்த மண்டி முறையிலிருந்து மாற்றுகிறது. முதலாளிகள் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் முறையைக் கொண்டுவருகிறது. இச்சட்டத்தின் 6 வது பிரிவானது, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் முதலாளிகளுக்கு “சந்தைக் கட்டணம், விற்பனை வரி” போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்கிறது. மண்டி முறையிலிருந்து விவசாயிகள் திசைதிருப்பப் படுவதால், அரசு விவசாயிகளுடனான தொடர்பை முறித்துக் கொள்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாததால், மண்டிகளுக்கு வெளியே முதலாளிகளுடன் போடப்படும் ஒப்பந்தங்களில் விவசாயிகளுக்கு பேரம்பேசும் வலிமை இருக்காது.
கேள்விக்குள்ளாகும் கூட்டாட்சி தத்துவம்
மேலும் வடமாநில விவாசாயிகளும் கூட தமிழ்நாட்டில் தங்கள் விவசாயப் பொருட்களை இறக்கி விற்பனை செய்ய முடியும் என்ற நிலையை இந்த அவசர சட்டங்கள் உருவாக்கியிருக்கிறது. இது அடிப்படையில் மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானதாக இருக்கிறது. இதனால்தான் இச்சட்டம் அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
விலையையும் சாகுபடியையும் கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவு செய்யும்
2015-16ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் 86.2% சிறு மற்றும் குறு விவசாயிகள் 2 ஹெக்டேருக்கு குறைவான நிலம் வைத்துள்ளனர். இவர்களைப் பொறுத்தவரையில் குறைந்தபட்ச ஆதரவு விலை(MSP) என்பது இல்லாமல், மண்டிக்கு வேளியே நேரடி சந்தையில் விற்பது என்பது சாத்தியமாகாத காரியம். இந்த நடைமுறையானது உற்பத்திக்கான நியாயமான விலை கிடைக்காமல் சந்தை முடிவுசெய்யும் விலைக்குதான் விற்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளும்.
எதிர்காலத்தில் ஒட்டுமொத்த சந்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு வரும்பட்சத்தில் ஒரு சில நிறுவனங்கள் முடிவு செய்யும் விலைக்குதான் விவசாயப் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும். அதேபோல் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களையும் சந்தை ஏற்றுக் கொள்ளாது. சந்தையின் தட்டுப்பாட்டை அறிந்து என்ன பொருட்கள் விளைவிக்கப்பட வேண்டும் என்று விளைச்சலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும். எளிமையாக சொல்லவேண்டுமென்றால் நமது விவசாயிகள் என்ன பயிர் செய்ய வேண்டும் என்பதை இனி கார்ப்பரேட் முதலாளிகள் முடிவு செய்யும் நிலை உருவாகும்.
6% விவசாயிகள்தான் குறைந்தபட்ச ஆதரவு விலையை நேரடியாக நம்பியுள்ளனர். மீதமுள்ள 94% விவசாயிகள் ஏற்கனவே நேரடி சந்தையில் ஈடுபடுகின்றனர். ஆனால் அரசு ஆதரவு விலைதான் சந்தைக்கும் அடிப்படையாக அமைகிறது. எனவே சந்தையின் ஏற்ற இறக்கம் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு ஆதரவு விலை உதவுகிறது. எனவே நேரடி சந்தையில் பொருட்களை விற்கும் விவசாயிகளும், குறைந்தபட்ச ஆதரவு விலையை நீக்கக் கூடாது என்பதற்கு ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.
உலக வர்த்தகக் கழகத்தின் ஒப்பந்தமே இந்த அவசர சட்டங்களுக்கு காரணம்
கொரோனா பாதிப்பால் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஏன் அரசு இவ்வளவு வேகமாக அவசர சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது ?
உலக வர்த்தக கழகத்தின் விவசாய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியா, அதன் கட்டளைக்கு இணங்க விவசாய உற்பத்தியில் அரசின் தலையீடு இல்லாமல், எந்தவித மானியமும் கொடுக்கப்படாமல் நேரடி சந்தைப் போட்டிக்கு விவசாயத்தினை திறந்துவிட்டுள்ளது. எந்தவித உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பும் இல்லாமல், சர்வதே சந்தையில் இந்திய விவசாயிகளை நிறுத்தியுள்ளது மோடி அரசு.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளும் தனது விவசாயத் துறையை தடையற்ற சர்வதேச வணிகத்திற்கு திறந்துவிட்டுள்ளன. இந்த போக்கு இந்தியாவை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். இந்தியாவின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நேரடியாக கார்ப்பரேட் நிறுவனங்களால் சுரண்டப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியாவின் பாஜக அரசு போட்டுள்ள விவசாய ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியில் 10% விவசாயிகளின் அளவுக்கு மட்டுமே MSP போன்ற குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். அதை இந்திய அரசு மீற முடியாது. இந்த போக்கு உள்நாட்டு விவசாயிகளை நசுக்குவது மட்டுமல்லாது, உணவுத் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தும். பருவநிலை மாற்றம் அல்லது பேரிடர் காலக்கட்டத்தில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டால், தனது சொந்த குடிமக்களுக்கு உணவு தானியங்களை வினியோகம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளிவிடும்.
எனவே விவசாய ஒப்பந்தங்கள் குறித்து இந்தோனேசிய நாட்டின் தலைநகரான பாலி-யில் நடந்த WTO கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பாலி(Bali) தொகுப்பை மோடி அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்கிறது. ஆனால் ஒபாமாவுடன் நடந்த சில பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஒரு Peace clause-னூடாக இந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இருந்து WTO-ல் சில விலக்குகளைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த விவசாய ஒப்பந்தத்தின் சாராம்சங்களை படிப்படியாக நிறைவேற்ற ஆரம்பித்துள்ளது.
வளர்ந்த நாடுகளுக்கு மட்டும் இக்கட்டுப்பாடுகள் இல்லை
வளர்ந்த நாடுகளோ தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு மட்டும் Direct support to producers, Income support, Insurance schemes and Non-Product Specific and Decoupled Policies போன்ற நேரடி மானியங்களை கொட்டிக் குவிக்கிறது. அவர்களுக்கு மட்டும் இந்த மானியங்களைக் கொடுப்பதற்கு எந்த தடையும் இல்லை. வளர்ந்த நாடுகளில் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் 3% சதவீதத்தில் இருந்து 5% சதவீதத்தினர் மட்டுமே. அதுவும் பெரும் பண்ணை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள். இதுபோன்ற பெரும்பண்ணை விவசாயமுறை ஒருவகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றது. இதுபோன்ற முறைக்கு ஏற்ற மானியங்கள்தான் மேலே குறிப்பிடப்படும் நேரடி மானியங்கள்.
அமெரிக்க விவசாயியும், இந்திய விவசாயியும்
அமெரிக்க விவசாயி ஒருவர் ஆண்டுக்கு 61,286 டாலர் மானியமாக பெறுகிறார். அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு விவசாயி 8,588 டாலர் மானியம் பெறுகிறார். ஆனால் இந்தியாவில் இதுபோன்ற நேரடி மானியங்கள் வெறும் 282 டாலர் மட்டுமே கிடைக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகள், பெரும் தொகையை இதுபோன்ற நேரடி மானியமாகக் கொடுக்க முடியாது.
உலக வர்த்தகக் கழகம் மிக சூழ்ச்சிகரமாக, வளர்ந்த நாடுகளுக்கு உகந்த நேரடி மானியத்துக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. ஆனால் ஏழை நாடுகளுக்குப் பொருந்தும் MSP போன்ற மானிய முறையில் பெரும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த சூழ்ச்சிக்கு கட்டுப்பட்டுதான் இன்று இந்திய அரசு விவசாய சட்டங்களை வடிவமைத்துள்ளது.
இந்த சட்டங்கள் WTO ஒப்பந்தத்தின் முழுவடிவம் பெறும்போது என்ன நடக்கும்?
இந்த சட்டங்கள் இந்திய விவசாயத்தை அடியோடு மாற்றியமைக்கும் தன்மையுடையவை. சர்வதேச சந்தையில் போட்டிபோட முடியாமல், இந்திய விவசாயிகள் தூக்கி எறியப்படுவார்கள். இந்தியாவில் 58% மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பெரும் பகுதியினர் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள். இவர்களின் நிலமும், விவசாயமும் நேரடியாக கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்தபிறகு, அவர்கள் முடிவு செய்யும் பயிரைத்தான் விளைவிக்க முடியும். அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்குதான் விற்க முடியும். பெரும் எண்ணிக்கையிலான இந்திய உழவர்கள் பழைய ஜமீன்தாரி முறைக்கு தள்ளப்படுவார்கள். இங்கு ஜமீன்தாரர்களாக கார்ப்பரேட் முதலாளிகள் வலம் வருவார்கள்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் (Essential Commodities Act) கீழ் செய்யப்பட்ட மாற்றங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. இந்த போக்கின் மூலமாக இந்திய விவசாயிகள் மட்டுமல்லது, இந்திய ஏழை மக்களின் வாழ்க்கையையும் பாஜக அரசு பெரும் இக்கட்டிற்குள் தள்ளியிருக்கிறது. இந்தியர்களின் பசியைவிட கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே உலக வர்த்தகக் கழகத்தின் ஒப்பந்தத்திற்கு இணங்க மோடி அரசு புதிய சட்டங்களை வடிவமைத்துள்ளது.
இவைகள் முழுமையாக நடைமுறைக்கு வந்தால் இந்திய பாரம்பரிய விவசாயமுறை அழிந்துபோகும். அதனால் அரசு கொள்முதல் செய்யத் தேவையில்லாத போக்கு உருவாகும். எனவே அரசு தானியக் கிடங்குகள் தனியாருக்கு விற்கப்படும் நிலை ஏற்படும். நியாய விலைக் கடைகளில் கிடைக்கும் பொருட்களுக்கு பதிலாக குறைந்த பணம் ஏழைகளுக்கு கொடுக்கப்படும். இந்திய விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறும் அவலம் நிகழும். மீதம் இருப்பவர்கள் கார்ப்பரேட் பண்ணைக் குத்தகை முறைக்கு கட்டுப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். உணவு உற்பத்தியானது பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய தரகு வணிகர்களின் கைக்குள் சிக்கும் மோசமான அபாயமிருக்கிறது.
அமெரிக்க பெருவணிகர்களும், இந்திய தரகு முதலாளிகளும் அதன் விலையை உயர்த்தி லாபம் சம்பாதிப்பார்கள். அரசு கொடுக்கும் சொற்பக் காசை வைத்துக் கொண்டு, சந்தை விலைக்கு வாங்கமுடியாத ஏழைகள் திண்டாடுவார்கள். விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும் தொகையான இந்திய மக்கள் கார்ப்பரேட் கம்பெனியின் பெரும் பண்ணையில் அடிமைக் கூலிகளாக வேலை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள்.
இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் காலக்கட்டத்தில் கூட, தனியார் கார்ப்பரேட் தானியக் கிடங்குகளையும், வெளிநாட்டு இறக்குமதியையும் எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவோம்.