இந்திய சமூகத்தில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில் கூட சமூக, பொருளாதார அடிப்படையில் மட்டுமே முக்கியத்துவப்படுத்தும் ஒரு இரட்டைத்தனம் இருந்து வருகிறது. அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டது உலகத்தையே உலுக்கியது. உலகத்தையே உலுக்கிய அந்த மனிதாபிமானம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் #BlackLivesMatter போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து நீதிக்காக குரல் எழுப்பினர். மனித சமத்துவத்தை நோக்கிய அவர்களின் குரல் பாராட்டுக்குரியதே. ஆனால் உத்திரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்து கடவுளை வணங்க முற்பட்டதற்காக விகாஸ் ஜாதவ் என்ற 17 வயது தலித் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டது இவர்களில் எவரின் மனசாட்சியையும் உலுக்காதது மிகவும் வருத்தமான விடயமே.
ஜூன் 10ம் தேதி குழந்தைகளிடையே ஏற்பட்ட சண்டைக்காக, உத்திரப் பிரதேசத்தின் ஜவுன்பூர் பகுதியில் தலித்துகளின் குடிசைகள் கொளுத்தப்பட்டன. அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டது. ஆனால் இச்சம்பவம் பாலிவுட்டின் மனிதநேயர்களிடையே எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை.
கடைசியாக வெளிவந்த தேசிய குற்றப் புலனாய்வு அறிக்கை(NCRB) 2018ம் ஆண்டில் மட்டும் தலித்துகளுக்கு எதிராக இந்தியாவில் 42748 குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் 25 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. 2018-ம் ஆண்டில் மட்டும் 2956 தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு நாளும் 8 தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தலித்துகள் மீதான குற்றங்களுக்கான விசாரணைகள் நீதிமன்றங்களில் கிடப்பில் இருப்பது 2006 மற்றும் 2016-க்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில் மட்டும் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. 2006ம் ஆண்டு 85624 வழக்குகள் கிடப்பில் இருந்தது, 2016-ல் 1,29, 831 ஆக உயர்ந்தது. இந்தியாவின் ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் மீது இத்தனை வன்முறைகள் நிகழ்த்தப்படுவது ஏன் பாலிவுட் அல்லது பொது சமூகத்தின் மனசாட்சியை உலுக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானது.
இந்தியாவின் பிரதான ஊடகங்களில் குறிப்பாக வட இந்திய ஆங்கில ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுகிற விவாதங்கள் அனைத்திற்கும் பின்னணியில் ஒரு சமூகப் பின்புலத்தின் முக்கியம் இருக்கவே செய்கிறது. எந்த தாக்குதல் விவாதமாக வேண்டும், எந்த பாலியல் வன்முறை விவாதமாக வேண்டும் என்பதில் சாதியும், பொருளாதார பின்புலமும் முக்கியமான காரணிகளாக இருக்கின்றன. இது ஒரு விதமான மோசமான இரட்டை நிலைப்பாடு என்பதை பலரும் உணர்ந்து கொள்வதே இல்லை.
டெல்லியில் நிர்பயா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட போதும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட போதும் அதற்காகப் போராடி குரல் கொடுத்த தமிழ் சினிமா பிரபலங்களுக்கும், சுஹாசினி மணிரத்னம் போன்றோருக்கும் அரியலூரில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நந்தினி என்ற தலித் சிறுமிக்கான நீதி கண்களுக்கு தெரியாததான் பின்னணியில் ஒரு மிகப் பெரிய சமூகக் கட்டுமானம் இருக்கிறது. நிர்பயாவுக்கோ, சுவாதிக்காகவோ போராடியதை குறை சொல்லவில்லை. நந்தினிக்காக போராடாத சமூக உளவியலைப் புரிந்து கொள்ளவேண்டும்.
வெள்ளை நிறத்தவர்களின் இனவெறி கருப்பின மக்களை ஒடுக்குகிறது என்பதனை உலகம் முதலில் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்பது கருப்பின மக்களின் முக்கியக் கோரிக்கையாக இருக்கிறது. அப்படித்தான் சாதிய ஒடுக்குமுறையின் இருப்பை ஏற்றுக் கொள்ளாமல் சாதியம் குறித்த கண்ணோட்டத்தின் புரிதலை பொது சமூகத்திற்கு ஏற்படுத்த முடியாது. சமூகத்தின் ஒவ்வொரு கட்டமைப்பிலும், ஒவ்வொரு அணுகுமுறையிலும் சாதிய அடிப்படையிலான பார்வை ஒவ்வொரு சராசரி நபருக்குள்ளும் இயல்பான ஒன்றாகவே புகுத்தப்பட்டிருக்கிறது.
”கருப்பினத்தவர்களின் உயிர் முக்கியம்” என்ற போராட்டம் வெறுமனே ஜார்ஜ் ஃப்ளாய்டினை படுகொலை செய்த காவல்துறையினரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே நடக்கவில்லை. அதனையும் தாண்டி ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் உரிமை மீட்பினை அப்போராட்டம் கோருகிறது. வரலாற்றின் வேர்களை தேடியெடுத்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்களை வெட்டி எறிய முனைகிறது. தங்களின் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளுக்கு காரணமாய் அமைந்த வெள்ளையினத்தவர்களின் நாயகர்களின் சிலைகளை அவமானச் சின்னங்கள் என்று சொல்லி உடைத்தெறியத் துணிகிறது. கொலம்பஸ், வின்ஸ்டன் சர்ச்சில் போன்றோரின் சிலைகள் இனவெறியின் அடையாளங்களாக குறிக்கப்பட்டு தகர்க்கப்படுகின்றன. #BlackLivesMatter என்ற போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாய் சொல்கிற அனைவருக்கும் இப்போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்த புரிதல் அவசியம்.
இங்கே #BlackLivesMatter போராட்டத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவளிப்பதாய் காட்டிக் கொண்டு நெல்சன் மண்டேலா, மால்கம் எக்ஸ் போன்றோரின் வாசகங்களை எல்லாம் பதிவிடும் இந்திய பிரபலங்கள், இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடு முறையை ஒவ்வாமையுடனேயே பார்க்கின்றனர். இட ஒதுக்கீட்டினைப் பயன்படுத்தி திறமையில்லாதவர்கள் எல்லாம் வேலைக்கு வந்துவிட்டார்கள் என்று புலம்பித் தள்ளுகிறார்கள். ஆனால் 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியிருக்கும் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது என்ற உண்மையை இவர்கள் ஏற்றுக் கொள்வதே இல்லை. இவர்களின் கண்கள் சாதியத் துணியினால் கட்டப்பட்டிருக்கிறது. அதனால் தான் சமூக எதார்த்தத்தினை இவர்கள் பேசுவதே இல்லை.
SC/ST, OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு பெறுவதை, நன்றாக படித்த முன்னேறிய வகுப்பு மாணவர்களிடமிருந்து திருடப்பட்ட சீட்டு என்பதாக பேசுகிறார்கள். இடஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறார்கள். ஆனால் IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயிலச் செல்கிற SC/ST மற்றும் OBC மாணவர்கள் பலர் தற்கொலைக்கு தள்ளப்படுவதன் பின்னணியில் சாதிய மேலாதிக்கம் இருப்பதனை பார்க்கத் தவறுகிறார்கள் அல்லது பார்க்க மறுக்கிறார்கள். மருத்துவ உயர்கல்வியில் OBC மாணவர்கள் பெற்று வந்த இட ஒதுக்கீடு மறைமுகமாக பறிக்கப்பட்டு, தேசிய கல்வி நிறுவனங்கள் பலவற்றில் OBC இட ஒதுக்கீடு இல்லாமல் செய்யப்படுவதைப் பற்றிக் கூட இவர்கள் கவலைப்படுவதில்லை.
கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் தேர்வு போன்ற முறைகள் எந்தவிதமான அதிகாரப்பூர்வ சட்டங்களும் இன்றி நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் இடைவிடாது கற்பதை மேம்படுத்தும் என வாதிடும் இவர்களுக்கு சமூகப் பொருளாதார யதார்த்தம் புரிவதில்லை. இந்த டிஜிட்டல் இந்தியாவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரமே இல்லை என்பது உயர் வர்க்கத்தினருக்கோ, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கோ புரிவதில்லை. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) 2017-18 ம் ஆண்டு ஆய்வு இந்தியாவில் 9 சதவீத வீடுகளில் தான் கணினியும், இணையதள வசதியும் இருப்பதாக சொல்கிறது. அதிலும் கிராமப் புறங்களில் வெறும் 4 சதவீதத்தினரின் வீடுகளில் தான் இவ்வசதிகள் இருக்கின்றன. தலித் மற்றும் பழங்குடிகளின் குடும்பங்களில் வெறும் 4 சதவீதத்தினர் தான் கணினி மற்றும் இணையதள வசதியினைப் பெற்றிருக்கிறார்கள். ஜார்க்கண்ட், பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் எண்ணிக்கை இன்னும் குறைவு. இந்த மாநிலங்கள் தலித், பழங்குடிகள் அதிகம் வசிக்கிற மாநிலங்களாகும்.
மேலும் ஊரடங்கினால் பெரும்பாலான விளிம்பு நிலை மக்கள் வேலை வாய்ப்பினை இழந்து, மூன்று வேளை உணவிற்கே வழி இல்லாத நிலையில் இருக்கிறார்கள். ஊரடங்கின் காரணமாக மே மாதத்தின் முதல் வாரம் வரை மட்டும் 12.2 கோடி பேர் வேலை இழந்ததாக CMIE அறிக்கை தெரிவித்தது. அப்படியிருக்க இந்த சூழலில் அவர்களால் கணினிக்கோ, இணையதளத்திற்கோ செலவழிக்க முடியாது. தனி அறை வசதிகள் இல்லாத வீடுகளில் வசிக்கும் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை நேர்த்தியாக கவனிக்கும் வாய்ப்புகளும் இல்லை. முன்னேறிய சாதிப் பிரிவு மற்றும் உயர் வர்க்கத்தினைச் சேர்ந்த எண்ணிக்கையில் மிக சிறுபான்மையான மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஆன்லைன் நடைமுறைகள் பலனளிக்க முடியும்.
இந்த தேவையற்ற ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வு முறைகளால் இத்தனை கோடி மாணவர்கள் பாதிக்கப்படுவது இந்த பிரபலங்களின் கண்களுக்கு புலப்படுவதில்லை. காரணம் முன்பே சொன்னதைப் போல இவர்களது கண்கள் சாதிய சமூக, பொருளாதார கட்டுத் துணியால் கட்டப்பட்டிருக்கிறது.
அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக நிற்பதே மனிதநேயம். ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதில் எந்தெந்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பது, எவற்றை எதிர்க்காமல் கடந்து செல்வது என்ற வகையிலான தேர்ந்தெடுத்த நடைமுறை இருக்க முடியாது. #BlackLivesMatter என்ற போராட்டத்தை ஆதரிக்கும் போது, அவர்களின் உள்ளார்ந்த நியாயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவில் ஒடுக்கப்படும் கருப்பினத்தவர்களைப் போலவே, இந்தியாவில் ஒடுக்கப்படும் தலித்துகளின் கோரிக்கைகளை புரிந்து கொள்ளும் நேர்மை வேண்டும். தலித்துகளை ஒடுக்கிய கலாச்சார வரலாற்று அவமானச் சின்னங்களை புறந்தள்ள வேண்டிய புரிதல் நமக்கு இருப்பது அவசியம். காலம்காலமாய் சமூக அடிப்படையில் கல்வியும், வேலை வாய்ப்பும் மறுக்கப்பட்டவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய இட ஒதுக்கீடு தேவை என்பதை ஏற்கிற பக்குவம் அனைவருக்கும் அவசியம்.
சாதியின் காரணமாக நிகழ்த்தப்படும் தாக்குதல்களை எதிர்க்கும் அறம் அவசியம். பிற்படுத்தப்பட்ட OBC சமூகத்தில் பிறந்திருந்தாலும், தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மனநிலையில் இருந்து கொண்டு சாதிமறுப்பு திருமணங்கள் செய்பவர்களை ஆணவப் படுகொலை செய்யும் சாதிய மனநிலை அழிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு, சாதிய மனோபாவத்தினை வழங்குகிற வரலாற்று பின்புலங்களையும், கதைகளையும், புராணங்களையும் அச்சமூகங்களை சேர்ந்தவர்களுமே எதிர்த்து நிற்கும் சமூக உளவியல் அவசியம். ஏனென்றால் நாமெல்லாம் நாகரிகப்பட்ட மனிதர்கள். நிறத்தின் அடிப்படையிலோ, சாதியின் அடிப்படையிலோ, வர்க்கத்தின் அடிப்படையிலோ, வேறெந்த பிரிவின் அடிப்படையிலோ மனிதர்களின் உரிமைகள் நசுக்கப்படுவதனை எதிர்ப்பதே நாகரீகம், அதுவே மனித நேயம். சாதிக் கொடுமைகளை ஒழிக்க வேண்டுமென்றால் சாதி இருக்கிறது, சாதிக் கொடுமைகள் இருக்கிறது என்பதை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், முன்னேறிய வகுப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
தலித்துகளின் வாழ்வும் முக்கியமே. #DalitLivesMatterToo