Job loss Corona

ஊரடங்கால் இந்தியாவில் வேலை இழந்தோர் 12.2 கோடி பேர்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக, முதல் ஊரடங்கை மார்ச் 22-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். வெகு சிறு தளர்வுகளுடன் 50 நாட்களுக்கும் மேலாக மூன்று கட்டங்களாக இந்த ஊரடங்கு நீடித்து வருகிறது. இதுவரையில் இந்தியாவில் 75,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நான்காம் கட்டமாக புதிய விதிகளுடன் மே 17-ம் தேதி முதல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நான்காம் கட்ட ஊரடங்கிற்கான புதிய விதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில், தற்சார்புக் கொள்கை இல்லாத அனைத்து நாடுகளும் தங்களது ஊரடங்குகளால் பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்தியாவிலும் பொருளாதாரம் பெருமளவு பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் மட்டும் 12.2 கோடி பேர் இந்த ஊரடங்கால் தங்களது வேலைகளை இழந்துள்ளனர் என CMIE (Center for Monitoring Indian Economy) அமைப்பின் புள்ளிவிவர வெளியீட்டில் தெரியவந்துள்ளது. இது குறித்து தனியார் நாளிதழ் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ள CMIE அமைப்பின் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஷ் ”மே11 காலை நிலவரப்படி  இந்தியாவில் கொரோனாவால் 62939 பேர் பாதிப்படைந்து 2109 பேர் உயிர்யிழந்துள்ளனர். இதனை, ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட 12.2 கோடி வேலையிழப்புகளுடன் ஒப்பிட்டு பாருங்கள். வேலை இழப்புகளால்  இதுவரை எத்தனை பேர் உயிர் இழந்துள்ளனர் என நமக்கு தெரியாது. ஆனால், வேலை இழந்து நடந்தே வீடு திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எத்தனையோ உயிர்களை ரயில் தண்டவாளங்களிலும், சாலைகளிலும் இழக்கிறோம் என்பது நமக்கு தெரியும். அநேகமாக எத்தனை பேர் பசியால் இறந்துள்ளனர் என்றோ எத்தனை குழந்தைகள் ஊரடங்கின் காரணமாக ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்கள் என்றோ நமக்கு தெரிய வாய்ப்புகளே இல்லை. ஊரடங்கால் மானம் இழந்தவர்களை நம்மால் எண்ணிவிடவே இயலாது. ஊரடங்கில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள காத்துக்கிடக்கும் எத்தனையோ மக்கள் முகத்தில் பசி, பயம், கோபம், விரக்தி முதலியன அரசாங்கத்தால் பெரியதாக எழுதபட்டுள்ளது.”

இது குறித்து மேலும் விவரிக்கும் அவர் ”இந்த ஊரடங்கால், குழந்தைகள் உயிர் பறிக்கும் ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் இந்த ஊட்டசத்து குறைபாடு தங்களது வாழ்க்கை முழுக்க அவர்களது சம்பாதிக்கும் திறனை பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இவர்கள் மேலும் மேலும் தொடர்ச்சியாக வறுமையின் பிடியில் மாட்டிக்கொள்கின்றனர். அனேகமாக இந்த ஊரடங்கு காரணமாக ஏற்படகூடிய நீண்டகால பாதிப்பு என்பது, இன்று நாம் பார்பதை விட மிக மோசமாக இருக்கபோகிறது. CMIE அமைப்பின் Consumer Pyramids Household Survey என்னும் புள்ளிவிவர தகவலின் படி இந்த ஊரடங்கு காரணமாக 20 முதல் 24 வயதினர் 1.3 கோடி பேர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். 2019-2020ல் 20-24 வயதினர் 3.4கோடி பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும் 25-29 வயதுடைய 1.04 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். மொத்தமாக இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும்  தங்களது இருபது வயதுகளில் உள்ள 2.7 கோடி இளைஞர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். இது நாம் விரும்பதாகாத நீண்ட கால பாதிப்புகளை கொண்டது. இவற்றால் பாதிப்படைந்துள்ள இளைஞர்கள் தங்களது வாழ்கைக்கு தேவையான சேமிப்பினை அவர்களது வாழ்நாள் முழவதிலுமே கூட சேகரிக்க இயலாது. 3.3கோடி 30 வயதினர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். அனைத்து தரப்பு வயதினரும் வேலை இழப்பை சந்தித்திருந்தாலும் இளைஞர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களின் வேலை இழப்பு அவர்களது வீடுகளின் கடனை அதிகரித்துவிடும். இளைஞர்களின் வேலை இழப்பு அவர்களது சேமிப்புகளை பாதித்துவிடும். இளைஞர்களின் இந்த வேலையிழப்பு என்பது பெரும்பாலான குடும்பங்களில் தாங்கள் வீடு கட்டவோ, பணிஒய்வு காலத்திற்காகவோ சேர்த்துள்ள சேமிப்புகளை அழித்துவிடும்.” என தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் நடவடிக்கைகள்

இந்தியாவில் வேலையிழந்துள்ள முறைசார் தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் பயன் அடையும் வகையில் இந்திய அரசு கொரோனா கால பாதிப்புக்கான சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளது. அதன்படி ’தொழிலாளர் மாநிலக் காப்பீடு’  (ESI – Employess State Insurance) திட்டத்தின் கீழ் பதிவு செய்து வேலை இழந்த தொழிலாளர்களுக்கு இந்திய அரசின் ‘அடல் பீமா வியாக்தி கல்யாண் யோஜனா’ என்ற அமைப்பின் மூலம் இதனை செயல்படுத்த உள்ளது. 2018 ஜூன் முதல் நடைமுறையில் இருக்கும் இந்த திட்டத்தின் படி, தங்களது வேலையை இழக்கும் தொழிலாளர்கள் அடுத்த 3 மாதத்திற்கு இழப்பீடு பெறுவர். வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே இதனை பெற இயலும். இதனை நீட்டித்து கொரோனா காலத்தில் பாதிப்படையும் தொழிலாளர்கள் இந்த இழப்பீட்டை மேலும் ஒருமுறை பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதனை பெற வேண்டும் என்றால் ESIC அமைப்பில் ஒரு தொழிலாளி குறைந்தது 2 வருடம் பதிவு செய்திருக்க வேண்டும். இதன் மூலம் கடந்த 2 வருடங்களில் தான் பெற்ற சராசரி மாத சம்பளத்தில் 25 சதவீதத்தினை இழப்பீடாக பெற முடியும்,

உதாரணமாக ESIC-ல் பதிவு செய்து, 2018ஆம் வருடம் ரூ.18,000 பெற்றுவந்து, 2020ஆம் வருடம் ரூ.22,000 மாத சம்பளமாக பெற்று வரும் ஒரு தொழிலாளி வேலை இழந்தால், அடுத்த 3 மாதங்களுக்கு ஏறத்தாழ ரூ.4000 அவர் இழப்பீடாக பெறுவார். மேலும் இந்த இழப்பீடானது முறைசார் தொழிலாளர்களில் ESIC அமைப்பில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ஆகும். பத்து நபர்களுக்கு அதிகமாகப் பணிபுரியும் நிறுவனங்களுக்கு மட்டுமே ESI திட்டம் செல்லும். இந்தியாவில் இருக்கும் 98 சதவீத நிறுவனங்கள் 10-க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது, இந்த திட்டம் முறைசாரா தொழிலாளர்களை உள்ளடக்கவில்லை, இந்தியாவில் 93 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் முறைசாரா தொழில்களில் பணிபுரிபவர்கள் என இந்திய அரசு வெளியிட்டுள்ள 2018-2019 ‘ECONOMIC SURVEY’-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கான இந்திய அரசின் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முனைவர்.சியாம் சுந்தர் ”இந்த திட்டம் மிக குறுகிய பயனாளிகளை மட்டுமே கொண்டதாக உள்ளது. இது சந்தையில் கொரோனா பாதிப்பு கொண்டுவரும் அளவினை எதிரொலிப்பதாக இல்லை. இது அரசின் மோசமான கணிப்பையே காட்டுகிறது. வேலை இழந்தோர் பயன் அடையும் வகையில் பரந்துபட்ட திட்டத்தை நோக்கி அரசு செயல்படவேண்டும்’’ என தெரிவித்துள்ளார். இவர் XLRI பல்கலைகழகத்தின் மனிதவள துறை பேராசிரியர் ஆவார்.

தொழிலாளர் நல சட்டங்களை நீக்கிய பா.ஜ.க. அரசு

மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநில அரசுகள் தொழிலாளர் நல சட்டத்தின் பல முக்கிய சரத்துகளை நீக்கி உள்ளது. மேலும் இந்தியாவில் ஏழுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும் குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட அரசுகள் தொழிலாளர்களின் கூடுதல் நேர பணிக்கும் வழக்கமான ஊதியமே தொடரும் என தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் அரசு ஊதியம் குறித்தான எந்த முடிவினையும் இதுவரை வெளியிடவில்லை. பல்வேறு மாநிலங்களிலும் பலதரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை நிரந்தர தொழிலாளர்களாக்க வெவ்வேறு வடிவங்களில் போராடிக் கொண்டிருந்த காலத்தில் இவ்வாறான அறிவிப்புகள் அவர்களுக்கும் பலத்த பின்னடைவை கொடுத்துள்ளன. இவ்வாறு அரசின் அனைத்து செயல்களுமே தொழிலாளர்களை மேலும் கவலைக்குள்ளாக்கும் செயல்களாகவே அமைந்துள்ளது. தொழில்களின் வளர்ச்சிக்காக என்று ஒரு சாக்குபோக்கினை சொல்லி, இந்தியாவில் வகுக்கப்படும் தொழில்வளர்ச்சிக்கான திட்டத்தின் மொத்த சுமையையும் ஏழை தொழிலாளர்கள் மீது மட்டுமே சுமத்துவது மனிதநேயமற்றது என்றுதான் கருதமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *