காவல்துறை என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கருத்தில் எடுத்துக் கொண்டு எந்த ஒரு நபரையும் நீதிபதிகள் சிறைக்கு அனுப்ப உத்தரவிடக் கூடாது, வழக்கின் முகாந்திரங்களை சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் தெரிவித்துள்ளார். குறிப்பாக காவல்துறை அதிகார மீறலில் ஈடுபடுவதை தடுக்கும் அரணாக நீதித்துறை செயல்பட வேண்டும், FIR-னை ஆராய வேண்டும், வழக்கு குறிப்புகளை ஆராய்ந்திட வேண்டும், அதற்குப் பிறகு தேவை இருந்தால் மட்டுமே ஒருவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். Live Law என்கிற இணையதளம் நடத்திய ஊடகங்கள் மீதான வழக்குகள் குறித்தான கருத்தரங்கில் அவர் கலந்துகொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடத்தப்பட்ட இரட்டைப் படுகொலை குறித்து குறிப்பிட்டுப் பேசிய அவர், இந்த சம்பவத்தில் தந்தையும், மகனும் உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாகக் கூறி பல்வேறு விடயங்களை காவல்துறையினர் மூடி மறைத்திருக்கிறார்கள். இறந்தவர்கள் இருதயக் கோளாறுடன் இருந்ததாக கூறியிருக்கிறார்கள். ஆனால் காவல்துறையினர் பல ஆதாரங்களை அழித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இப்படியான நிகழ்வுகள் நடக்கும்போது காவல்துறையினரையும் அவர்களது விசாரணைகளையும் அப்படியே நம்புவது கடினமான ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுதும் பல்வேறு ஊடகவியலாளர்கள் மீது பதியப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகள் (124-A) மற்றும் பல்வேறு வழக்குகள் குறித்து அந்த கருத்தரங்கத்தில் பேசப்பட்டது. இத்தகைய வழக்குகள் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவான 19 (1)(a) வினை அச்சுறுத்துவதாக இருக்கிறது. இப்படிப்பட்ட சட்டமீறல்கள் நடப்பது ஊடகவியலாளர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதை தடுப்பதாக இருக்கிறது. தேசத்துரோக வழக்குகள் குறித்த விசாரணை எப்படி நடைபெற்றது என்ற கேள்வி எழுப்பப்படாமலேயே, தேசத்துரோகம் நிகழ்த்தப்பட்டதாக காண்பிக்கப்படுகிறது. ஒருவர் தேசத்துரோகம் செய்திருப்பதாக காவல்துறை சொல்வதைக் கேட்டு மட்டுமே, நீதிபதியும், அதையே சொல்லி அந்த நபரை சிறைக்கோ, காவல்துறை விசாரணைக்கோ அனுப்ப உத்தரவிடக் கூடாது. தெளிவான சிந்தனையுடன் ஆராய்வது முக்கியம்.
சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்தில் தந்தை, மகன் இருவரையும் பார்க்காமலேயே நீதிபதி அவர்களை சிறைக்கு அனுப்பியுள்ளார். விசாரணையின் போதும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் போதும் பல்வேறு சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதால் அவற்றை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது நீதிபதியின் கடமையாகும்.
UAPA (Unlawful Activities Prevention Act 1967) சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் ”சட்டவிரோத நடவடிக்கை” என்று குறிப்பிட்டுவிட்டால் நீதிபதி அந்த வழக்கினை குறித்து எதுவும் ஆராயமல் விட்டுவிடமுடியும் என்று அர்த்தம் கிடையாது. 43D(5)ன் படி ஒரு வழக்கில் சிறைக்கு அனுப்புவதற்கோ, பிணை வழங்குவதற்கோ, பிணையை மறுப்பதற்கோ முகாந்திரம் காண்பிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் சுட்டிக் காட்டியிருக்கிறது. எனவே வழக்கின் முகாந்திரம் குறித்து கவனமாக ஆராய்வது நீதிபதியின் கடமையாகும். இதனை அவர்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று நீதிபதி லோக்கூர் தெரிவித்தார்.